Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எசேக்கியேல் 30-32

பாபிலோன் படை எகிப்தைத் தாக்கும்

30 கர்த்தருடைய வார்த்தை மீண்டும் என்னிடம் வந்தது. அவர் சொன்னார், “மனுபுத்திரனே, எனக்காகப் பேசு. ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்.

“‘அழுதுகொண்டே சொல்:
    “அந்தப் பயங்கரமான நாள் வருகிறது.”
அந்த நாள் அருகில் உள்ளது!
ஆம், கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு நாள் அருகில் உள்ளது.
    அது மேகமூடிய நாள்.
    இது நாடுகளை நியாயந்தீர்க்கும் காலமாக இருக்கும்!
எகிப்திற்கு எதிராக ஒரு வாள் வருகிறது!
    எத்தியோப்பியாவிலுள்ள ஜனங்கள் பயத்தால் நடுங்குவார்கள், அந்த நேரத்தில் எகிப்து விழும்.
பாபிலேனின் படை எகிப்திய ஜனங்களைச் சிறை பிடித்துச் செல்லும்.
    எகிப்தின் அடித்தளம் உடைந்து போகும்!

“‘பல ஜனங்கள் எகிப்தோடு சமாதான உடன்படிக்கை செய்தனர். ஆனால் எத்தியோப்பியா, பூத், லூத், அரேபியா, லிபியா மற்றும் இஸ்ரவேலர்கள் அழிக்கப்படுவார்கள்!

“‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
எகிப்திற்கு ஆதரவளிக்கும் ஜனங்கள் வீழ்வார்கள்!
    அவளது பலத்தின் பெருமை அழியும்.
மிக்தோல் முதல் செவெனே வரைக்குமுள்ள எகிப்திய ஜனங்கள் போரில் கொல்லப்படுவார்கள்.
    எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்!
எகிப்து அழிக்கப்பட்ட மற்ற நாடுகளோடு சேரும்.
    எகிப்தும் வெறுமையான நாடுகளில் ஒன்றாகும்.
நான் எகிப்தில் ஒரு நெருப்பைக் கொளுத்துவேன்.
    அவளது ஆதரவாளர்கள் எல்லோரும் அழிக்கப்படுவார்கள்.
பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்!

“‘அந்த நேரத்தில், நான் தூதுவர்களை அனுப்புவேன். அவர்கள் கெட்ட செய்தியோடு எத்தியோப்பியாவிற்குக் கப்பலில் போவார்கள். எத்தியோப்பியா இப்போது பாதுகாப்பை உணர்கிறது. எகிப்து தண்டிக்கப்படும்போது, எத்தியோப்பியர்கள் பயத்தினால் நடுங்குவார்கள்! அந்த நேரம் வருகிறது!’”

10 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
“நான் பாபிலோன் அரசனைப் பயன்படுத்துவேன்.
    நான் நேபுகாத்நேச்சாரை எகிப்து ஜனங்களை அழிக்கப் பயன்படுத்துவேன்.
11 நேபுகாத்நேச்சாரும் அவனது ஜனங்களும்
    நாடுகளிலேயே மிகவும் கொடூரமானவர்கள்.
    நான் எகிப்தை அழிக்க அவர்களைக் கொண்டுவருவேன்.
அவர்கள் தம் வாள்களை எகிப்திற்கு எதிராக உருவுவார்கள்.
    அவர்கள் அத்தேசத்தை மரித்த உடல்களால் நிரப்புவார்கள்.
12 நான் நைல் நதியை வறண்ட நிலமாக்குவேன்.
    பிறகு நான் வறண்ட நிலத்தைத் தீயவர்களுக்கு விற்பேன்.
நான் அந்நியர்களைப் பயன்படுத்தி அந்நாட்டைக் காலி பண்ணுவேன்!
    கர்த்தராகிய நான் பேசியிருக்கிறேன்.”

எகிப்தின் விக்கிரகங்கள் அழிக்கப்படும்

13 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்.
“நான் எகிப்திலுள்ள விக்கிரகங்களை அழிப்பேன்.
    நான் நோப்பின் சிலைகளை வெளியே அப்புறப்படுத்துவேன்.
எகிப்து நாட்டில் இனிமேல் ஒரு தலைவனும் இருக்கமாட்டான்.
    நான் எகிப்து நாட்டில் அச்சத்தை வைப்பேன்.
14 நான் பத்ரோசைக் காலி பண்ணுவேன்.
    நான் சோவானில் நெருப்பைக் கொளுத்துவேன்.
    நான் நோ நகரைத் தண்டிப்பேன்.
15 நான் எகிப்தின் கோட்டையான சீனுக்கு விரோதமாக எனது கோபத்தை ஊற்றுவேன்.
    நான் நோ ஜனங்களை அழிப்பேன்!
16 நான் எகிப்தில் நெருப்பைக் கொளுத்துவேன்.
    சீன் என்னும் பெயருள்ள நகரம் துன்பத்தில் இருக்கும்.
நோ நகரத்திற்குள் வீரர்கள் நுழைவார்கள்.
    நோ ஒவ்வொரு நாளும் புதிய துன்பங்களை அனுபவிக்கும்.
17 ஆவென், பிபேசெத் ஆகிய நகரங்களின் இளைஞர்கள் போரில் மரிப்பார்கள்.
    பெண்கள் சிறைபிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்படுவார்கள்.
18 நான் எகிப்தின் நுகங்களை முறிக்கும்போது தக்பானேசிலே பகல் இருண்டு போகும்.
    எகிப்தின் பெருமையான பலம் முடிந்துபோகும்!
எகிப்தை ஒரு மேகம் மூடும்.
    அவளது மகள்கள் சிறைபிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்படுவார்கள்.
19 எனவே நான் எகிப்தைத் தண்டிப்பேன்.
    பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்!”

எகிப்து என்றென்றும் பலவீனமாகும்

20 சிறைபிடிக்கப்பட்ட பதினொன்றாவது ஆண்டின் முதல் மாதத்து (ஏப்ரல்) ஏழாம் நாள் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 21 “மனுபுத்திரனே, நான் எகிப்து மன்னனான பார்வோனின் கையை (பலம்) உடைத்திருக்கிறேன். எவரும் அவனது கையில் கட்டுப்போட முடியாது. அது குணமாவதில்லை. எனவே அவனது கையானது வாளைத் தாங்கும் அளவிற்குப் பலம் பெறுவதில்லை.”

22 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் எகிப்து மன்னனான பார்வோனுக்கு விரோதமானவன். அவனது இரண்டு கைகளையும் நான் உடைப்பேன். அவற்றில் ஒன்று ஏற்கெனவே உடைந்தது; இன்னொன்று பலமுள்ளது. நான் அவனது கையிலிருந்து வாளானது விழும்படிச் செய்வேன். 23 நான் எகிப்தியர்களை நாடுகளிடையே சிதறடிப்பேன். 24 நான் பாபிலோன் அரசனது கையைப் பலப்படுத்துவேன். நான் எனது வாளை அவனது கையில் கொடுப்பேன். ஆனால் நான் பார்வோனின் கைகளை உடைப்பேன். பிறகு பார்வோன் வலியால் கதறுவான். அவனது கதறல் மரிக்கிறவனின் கதறல் போன்றிருக்கும். 25 எனவே நான் பாபிலோன் அரசனின் கைகளைப் பலப்படுத்துவேன். ஆனால் பார்வோனின் கைகள் கீழே விழும். பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்!

“நான் பாபிலோன் அரசனது கையில் என் வாளைக் கொடுப்பேன். பிறகு அவன் எகிப்து நாட்டிற்கு எதிராக வாளை நீட்டுவான். 26 நான் நாடுகளில் எகிப்தியர்களைச் சிதறடிப்பேன், பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்.”

அசீரியா கேதுரு மரத்தைப் போன்றது

31 சிறைபிடிக்கப்பட்ட பதினொன்றாவது ஆண்டின் மூன்றாவது மாதத்து (ஜூன்) முதல் நாளில் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, எகிப்திய அரசனான பார்வோனிடமும் அவனது ஜனங்களிடமும் இவற்றைக் கூறு:

“‘உனது மகத்துவத்தில்,
    உன்னுடன் யாரை நான் ஒப்பிட முடியும்?
அசீரியா, அழகான கிளைகளுடன், காட்டு நிழலோடு உயரமாக உள்ள லீபனோனின் கேதுரு மரம்.
    அதன் உச்சி மேகங்களுக்கிடையில் உள்ளது!
தண்ணீர் மரத்தை வளரச் செய்கிறது.
    ஆழமான நதி மரத்தை உயரமாக்கியது.
நதிகள் நடப்பட்ட மரத்தை சுற்றி ஓடுகின்றன.
    ஒரு மரத்திலிருந்து மற்ற மரங்களுக்கு சிறு ஓடைகள் மட்டுமே பாய்கின்றன.
எனவே காட்டிலுள்ள மற்ற மரங்களைவிட அம்மரம் உயரமாக இருக்கின்றது.
    இதில் பல கிளைகள் வளர்ந்துள்ளன.
அங்கே தண்ணீர் மிகுதியாக உள்ளது.
    எனவே கிளைகள் பரந்து வளர்ந்துள்ளன.
அம்மரத்தின் கிளைகளில் வானத்துப் பறவைகள்
    எல்லாம் தம் கூடுகளைக் கட்டிக்கொண்டன.
காட்டிலுள்ள விலங்குகள் எல்லாம் அம்மரத்துக்
    கிளைகளின் அடியிலேயே குட்டிபோட்டன.
அம்மரத்தின் அடியிலேயே
    எல்லா பெருநாடுகளும் வாழ்ந்தன.
அந்த மரம் அழகாக இருந்தது.
    அது பெரிதாக இருந்தது,
    அதற்கு அவ்வளவு பெரிய கிளைகள் இருந்தன.
    அதன் வேர்களுக்கு மிகுதியான நீர் இருந்தது!
தேவனுடைய தோட்டத்தில் உள்ள கேதுரு மரங்கள் கூட
    இம்மரத்தைப்போன்று இவ்வளவு பெரிதாக இல்லை.
தேவதாரு மரங்களுக்கு இவ்வளவு கிளைகள் இல்லை.
    அர்மோன் மரங்களுக்கு அதைப்போன்று கிளைகள் இல்லை.
இந்த மரத்தைப்போன்று தேவனுடைய தோட்டத்தில் உள்ள
    எந்த மரமும் அழகானதாக இல்லை.
நான் இதற்குப் பல கிளைகளைக் கொடுத்தேன்,
    அதனை அழகுடையதாக ஆக்கினேன்.
தேவன் தோட்டமான ஏதேனிலுள்ள
    அனைத்து மரங்களும் பொறாமைப்பட்டன!’”

10 எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “இம்மரம் உயரமாக வளர்ந்திருக்கிறது. இது தனது உச்சியை மேகங்களிடையே வைத்தது. இம்மரத்திற்குத் தான் வளர்ந்திருந்ததால் பெருமை இருந்தது! 11 எனவே ஒரு பலம் வாய்ந்த அரசன் அந்த மரத்தைக் கைப்பற்றும்படிச் செய்தேன். அந்த அரசன் மரம் செய்த தீமைகளுக்காக அதனைத் தண்டித்தான். நான் அந்த மரத்தை என் தோட்டத்தில் இருந்து வெளியேற்றினேன். 12 உலகிலேயே மிகக் கொடூரமான ஜனங்கள் அதனை வெட்டிப்போட்டார்கள். அந்த மரக்கிளைகள் மலைகளின் மீதும் பள்ளத்தாக்குகளின் மீதும் விழுந்தன. அதன் முறிந்த கிளைகள் ஆறுகளால் பல இடங்களுக்கும் இழுத்துச் செல்லப்பட்டன. இனி மேல் மரத்தின் கீழே நிழல் இருக்காது. எனவே எல்லா ஜனங்களும் வெளியேறினர். 13 இப்பொழுது விழுந்த மரத்தில் பறவைகள் வாழ்கின்றன. காட்டு மிருகங்கள் விழுந்த கிளைகளின் மேல் நடக்கின்றன.

14 “இப்பொழுது, தண்ணீர்க் கரையிலுள்ள எந்த மரமும் பெருமை கொள்ளமுடியாது. அவை மேகங்களைத் தொட முயற்சி செய்வதில்லை. தண்ணீரைக் குடித்துப் பலம் கொண்ட எந்த மரமும் தான் உயரமாக இருப்பதைப்பற்றி பெருமை கொள்வதில்லை. ஏனென்றால், அனைத்தும் மரிக்க ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளன. அவை எல்லாம் உலகத்திற்குக் கீழே சீயோல் என்னும் மரண இடத்திற்குப் போகும். அவை மரித்து ஆழமான குழிகளுக்குள் போன மற்ற ஜனங்களோடு போய் சேரும்.”

15 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “அந்த மரம் சீயோலுக்குள் இறங்கும் நாளிலே எல்லோரையும் அதற்காகத் துக்கப்படும்படிச் செய்தேன். லீபனோன் அதற்காகத் துக்கப்பட்டது. வயல்வெளியிலுள்ள எல்லா மரங்களும் அதன் வீழ்ச்சியைக் கேட்டு துக்கமும் அதிர்ச்சியும் அடைந்தன. ஆழ்கடல் தன் தண்ணீர் ஓட்டத்தையும் அதன் ஆறுகளையும் நிறுத்தியது. 16 நான் அந்த மரத்தை விழச் செய்தேன். நாடுகள் அது விழும் சத்தத்தைக் கேட்டு பயத்தால் நடுங்கின. நான் அந்த மரத்தை மரண இடத்திற்குப் போகும்படிச் செய்தேன். அது ஏற்கெனவே மரித்தவர்கள் சென்ற ஆழமான இடத்திற்குப் போனது. கடந்த காலத்தில், ஏதேனில் உள்ள அனைத்து மரங்களும் லீபனோனின் சிறந்த மேன்மையான மரங்களும் அந்த தண்ணீரைக் குடித்தன. அம்மரங்கள் கீழ் உலகத்தில் ஆறுதல் அடைந்தன. 17 ஆம், அம்மரங்கள் கூட, பெரிய மரத்தோடு மரண இடத்திற்குச் சென்றன. போரில் கொல்லப்பட்டவர்களோடு அவை சேர்ந்தன. அந்தப் பெரிய மரம் மற்ற மரங்களைப் பலமடையச் செய்தது. அம்மரங்கள் அப்பெரிய மரத்தின் நிழலில் நாடுகளுக்கிடையில் வாழ்ந்தன.

18 “எனவே எகிப்தே, ஏதேனில் உள்ள பெரிய வல்லமையுள்ள மரங்களில் எதனோடு உன்னை ஒப்பிடவேண்டும்? ஏதேனின் மரங்களோடு நீயும் பூமியின் தாழ்விடங்களில் மரிக்கப்படுவாய்! அந்த அந்நிய மனிதர்களோடும் போரில் மரித்தவர்களோடும் மரணத்தின் இடத்தில் நீ படுத்திருப்பாய்.

“ஆம் அது பார்வோனுக்கும் அவனது அனைத்து ஜனங்களுக்கும் ஏற்படும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

பார்வோன்: ஒரு சிங்கமா அல்லது முதலையா?

32 சிறைபிடிக்கப்பட்ட பன்னிரெண்டாம் ஆண்டு பன்னிரண்டாம் மாதம் (மார்ச்) முதலாம் தேதியில் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் கூறினார்: “மனுபுத்திரனே, எகிப்து அரசனான பார்வோனைப்பற்றிய இச்சோகப் பாடலைப் பாடு. அவனிடம் கூறு:

“‘நீ நாடுகளிடையில் பெருமையோடு நடைபோட்ட பலம் வாய்ந்த இளம் சிங்கம் என்று உன்னை நினைத்தாய்.
    ஆனால் உண்மையில் நீ ஏரிகளில் கிடக்கிற முதலையைப் போன்றவன்.
நீ உனது வழியை ஓடைகளில் தள்ளிச்சென்றாய்.
    நீ உன் கால்களால் தண்ணீரைக் கலக்குகிறாய்.
    நீ எகிப்து நதிகளை குழப்புகிறாய்.’”

எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:

“நான் பல ஜனங்களை ஒன்று கூட்டினேன்.
    இப்போது நான் என் வலையை உன் மேல் வீசுவேன்.
    அந்த ஜனங்கள் உன்னை உள்ளே இழுப்பார்கள்.
பிறகு நான் உன்னை வெறுந்தரையில் விடுவேன்.
    நான் உன்னை வயலில் எறிவேன்.
எல்லாப் பறவைகளும் வந்து உன்னைத் உண்ணும்படிச் செய்வேன்.
    காட்டு மிருகங்கள் எல்லா இடங்களிலுமிருந்து வந்து வயிறு நிறையும்வரை உன்னை உண்ணும்.
நான் உனது உடலை மலைகளில் சிதற வைப்பேன்.
    நான் பள்ளத்தாக்குகளை உனது மரித்த உடலால் நிரப்புவேன்.
நான் உனது இரத்தத்தை மலைகளில் சிதறுவேன்.
    அது தரைக்குள் ஊறிச்செல்லும்.
    நதிகள் உன்னால் நிறையும்.
நான் உன்னை மறையும்படி செய்வேன்.
    நான் வானத்தை மூடி நட்சத்திரங்களை இருளச் செய்வேன்.
    நான் சூரியனை மேகத்தால் மூடுவேன், நிலவு ஒளிவிடாது.
நான் வானத்தில் ஒளிவிடும் எல்லா விளக்குகளையும் உன்மேல் இருண்டுப்போகச் செய்வேன்.
    நான் உன் நாடு முழுவதும் இருண்டுப்போகக் காரணம் ஆவேன்.
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

“நான் உன்னை அழிக்கப் பகைவரைக் கொண்டுவரும்போது பல ஜனங்கள் வருந்தி கலக்கமடையும்படிச் செய்வேன். உனக்குத் தெரியாத நாடுகள் கூடத் துக்கப்படும். 10 உன்னைப்பற்றி பல ஜனங்கள் அறிந்து திகைக்கும்படி நான் செய்வேன். அவர்களின் அரசர்கள் நான் அவர்கள் முன் வாள் வீசும்போது பயங்கரமாக அஞ்சுவார்கள். நீ விழுகின்ற நாளில் அரசர்கள் ஒவ்வொரு நிமிடமும் பயத்தால் நடுங்குவார்கள். ஒவ்வொரு அரசனும் தன் சொந்த வாழ்க்கைக்காகப் பயப்படுவான்.”

11 ஏனென்றால், எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “பாபிலோன் அரசனது வாள் உனக்கு எதிராகச் சண்டையிட வரும். 12 நான் அவ்வீரர்களை உன் ஜனங்களைப் போரில் கொல்லப் பயன்படுத்துவேன். அவ்வீரகள் மிகக் கொடூரமான நாடுகளிலிருந்து வருகின்றனர். அவர்கள் எகிப்து பெருமைப்பட்டுக்கொண்டிருப்பவற்றைக் கொள்ளையடிப்பார்கள். எகிப்து ஜனங்கள் அழிக்கப்படுவார்கள். 13 எகிப்தில் ஆற்றங்கரையில் பல மிருகங்கள் உள்ளன. நான் அந்த மிருகங்களையும் அழிப்பேன். ஜனங்கள் இனிமேல் தங்கள் கால்களால் தண்ணீரைக் கலக்கமுடியாது. இனிமேல் பசுக்களின் குளம்புகளும் தண்ணீரைக் கலக்கமுடியாது. 14 எனவே நான் எகிப்தில் உள்ள தண்ணீரை அமைதிப்படுத்துவேன். நான் நதிகளை மெதுவாக ஓடச் செய்வேன். அவை எண்ணெயைப்போன்று ஓடும்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: 15 “நான் எகிப்து நாட்டைக் காலி பண்ணுவேன். அத்தேசம் எல்லாவற்றையும் இழக்கும். எகிப்தில் வாழ்கிற எல்லா ஜனங்களையும் தண்டிப்பேன். பிறகு அவர்கள் நானே கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிவார்கள்!

16 “ஜனங்கள் எகிப்திற்காகப் பாடவேண்டிய சோகப் பாடல் இதுதான். வேறு நாடுகளில் உள்ள மகள்கள் (நகரங்கள்) எகிப்திற்காக இச்சோகப் பாடலைப் பாடுவார்கள். இது அவர்கள் எகிப்திற்காகவும் அதன் ஜனங்களுக்காகவும் பாடுகிற சோகப் பாடல்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைக் கூறினார்.

எகிப்து அழிக்கப்படும்

17 சிறைபிடிக்கப்பட்ட பன்னிரண்டாவது ஆண்டு அந்த மாதத்தின் பதினைந்தாம் தேதியன்று, கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 18 “மனுபுத்திரனே, எகிப்து ஜனங்களுக்காக புலம்பு. எகிப்தையும் அந்த மகள்களையும் பலம் வாய்ந்த நாடுகளிலிருந்து கல்லறைக்கு வழிநடத்து. அவர்களைக் கீழ் உலகத்திற்கு ஏற்கெனவே ஆழமான குழிகளில் இருக்கிறவர்களோடு அனுப்பு.

19 “எகிப்தே, வேறு எவரையும்விட நீ சிறந்ததில்லை! மரண இடத்திற்கு இறங்கிப்போ. அந்த அந்நியர்களோடு படுத்துக்கொள்.

20 “எகிப்து போரில் கொல்லப்பட்ட மனிதர்களோடு சேரும். பகைவன் அவளையும் அவளது ஜனங்களையும் வெளியே இழுத்துக்கொண்டான்.

21 “போரில் பலமும் ஆற்றலுமிக்க மனிதர்கள் கொல்லப்பட்டனர். அந்த அந்நியர்கள் மரண இடத்திற்குச் சென்றனர். அந்த இடத்திலிருந்து, அந்த மனிதர்கள் எகிப்தோடும் அதன் ஆதரவாளர்களோடும் பேசுவார்கள், அவர்களும் போரில் கொல்லப்படுவார்கள்.

22-23 “அசூரும் அதன் படையும் மரண இடத்தில் இருக்கும். அவர்களின் கல்லறைகள் ஆழமான குழிக்குள் செல்லும். அந்த அசூரிய வீரர்கள் போரில் கொல்லப்படுவார்கள். அசூரியப் படையானது அதன் கல்லறையைச் சுற்றி உள்ளது. அவர்கள் உயிரோடிருந்தபோது ஜனங்களை பயப்படுத்தினார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் அமைதியாகிவிட்டது. அவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர்.

24 “ஏலாமும் இங்கே இருக்கிறது. அதன் படை அவள் கல்லறையைச் சுற்றியிருக்கிறது. அவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர். அந்த அந்நியர்கள் பூமிக்குக் கீழே போய்விட்டார்கள். அவர்கள் உயிரோடு இருந்தபோது ஜனங்களை பயப்படுத்தினார்கள். ஆனால் அவர்கள் தம்மோடு அவமானத்தை எடுத்துக்கொண்டு ஆழமான குழிகளுக்குள் சென்றுவிட்டார்கள். 25 அவர்கள் ஏலாமுக்கும் போரில் மரித்த அவர்களின் அனைத்து வீரர்களுக்கும் படுக்கை போட்டிருக்கிறார்கள். ஏலாமின் படை அதன் கல்லறையைச் சுற்றியிருக்கிறது. அந்த அந்நியர்கள் அனைவரும் போர்க்களத்தில் கொல்லப்பட்டார்கள். அவர்கள் உயிரோடு இருந்தபோது, ஜனங்களை பயப்படுத்தினார்கள். ஆனால் அவர்கள் தம் அவமானத்தை எடுத்துக்கொண்டு ஆழமான குழிக்குள் சென்றார்கள். அவர்கள் கொல்லப்பட்ட மற்ற ஜனங்களோடு சேர்த்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

26 “மேசேக், தூபால் மற்றும் அவற்றின் படைகளும் அங்கே உள்ளன. அவர்களின் கல்லறைகள் அதைச் சுற்றியுள்ளன. அந்த அந்நியர்களும் போரில் கொல்லப்பட்டார்கள். அவர்கள் உயிரோடு இருந்தபோது ஜனங்களை பயப்படுத்தினார்கள். 27 ஆனால், இப்பொழுது நீண்ட காலத்துக்கு முன்னால் மரித்துப்போன, வல்லமையான மனிதர்களோடு படுத்துக்கிடக்கிறார்கள். அவர்கள் தம் போர்க்கருவிகளோடு புதைக்கப்பட்டார்கள். அவர்களின் வாள்கள் அவர்களின் தலைகளுக்குக் கீழ் வைக்கப்படும். ஆனால் அவர்களின் பாவங்கள் அவர்களின் எலும்பில் உள்ளன. ஏனென்றால், அவர்கள் உயிரோடு இருக்கும்போது ஜனங்களை பயப்படுத்தினார்கள்.

28 “எகிப்தே, நீயும் அழிக்கப்படுவாய். அந்த அந்நியர்களால் நீ வீழ்த்தப்படுவாய். போரில் கொல்லப்பட்ட வீரர்களோடு கிடப்பாய்.

29 “ஏதோமும் அங்கே இருக்கிறது. அவனோடு அரசர்களும் மற்ற தலைவர்களும் அங்கே இருக்கிறார்கள். அவர்கள் பலம் பொருந்திய வீரர்களாகவும் இருந்தனர். ஆனால் இப்பொழுது போரில் கொல்லப்பட்ட மற்றவர்களோடு கிடக்கிறார்கள். அவர்கள் அந்த அந்நியர்களுடன் கிடக்கிறார்கள். அவர்கள் ஆழமான குழிக்குள் கிடக்கும் மற்ற ஜனங்களுடன் இருக்கின்றனர்.

30 “வடக்கில் உள்ள அரசர்கள் அனைவரும் அங்கே இருக்கின்றனர்! சீதோனில் உள்ள அனைத்து வீரர்களும் அங்கே இருக்கின்றனர். அவர்களது பலம் ஜனங்களைப் பயப்படுத்தியது. ஆனால், அவர்கள் அதனால் அவமானமடைகிறார்கள். அந்த அந்நியர்கள் போரில் கொல்லப்பட்டவர்களோடு கிடக்கிறார்கள். அவர்கள் தம் அவமானத்தோடு அக்குழிக்குள் சென்றார்கள்.

31 “பார்வோன் மரண இடத்திற்குச் சென்ற ஜனங்களை பார்ப்பான். அவனும் அவனோடுள்ள அனைத்து ஜனங்களும் ஆறுதல் பெறுவார்கள். ஆம், பார்வோனும் அவனது அனைத்துப் படைகளும் போரில் கொல்லப்படுவார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

32 “பார்வோன் உயிரோடு இருக்கும்போது, ஜனங்கள் அவனுக்குப் பயப்படும்படிச் செய்தேன். ஆனால் இப்போது, அவன் அந்த அந்நியர்களோடு விழுந்துகிடக்கிறான். பார்வோனும் அவனது படையும் ஏற்கெனவே போரில் கொல்லப்பட்ட வீரர்களோடு விழுந்துகிடப்பார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.

1 பேதுரு 4

மாற்றப்பட்ட வாழ்க்கை

கிறிஸ்து தம் சரீரத்தில் இருக்கும்போது துன்புற்றார். கிறிஸ்துவையொத்த சிந்தனையை மேற்கொண்டு நீங்கள் உங்களை பலப்படுத்திக்கொள்ள வேண்டும். சரீரத்தில் மரணமுறுகிற மனிதனோ பாவத்தினின்று நீங்குகிறான். தேவன் விரும்புகிறவற்றைச் செய்யும் மனிதர்கள் செய்ய விரும்புகிறவற்றை இனிமேலும் செய்யாமல் இருக்கவும் உங்கள் உலக வாழ்வின் மீதியான காலத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். பாலுறவுப் பாவங்களில் ஈடுபடுதல், தீயவிருப்பங்கள், குடிப்பழக்கம், மது அருந்தும் விருந்துகள், தடைசெய்யப்பட்ட உருவ வழிபாடு ஆகிய நம்பிக்கை அற்றோர் செய்ய விரும்புகிற காரியங்களைச் செய்வதில் ஏற்கெனவே உங்களின் பெரும்பாலான நேரத்தைச் செலவழித்துவிட்டீர்கள்.

இந்தக் குரூரமும் பாவமும் நிறைந்த வாழ்க்கை முறையில் நீங்கள் ஈடுபடாததை அந்த நம்பிக்கையற்றோர் விநோதமாகக் கருதுகிறார்கள். உங்களைக் குறித்து மோசமான முறையில் பேசுகிறார்கள். வாழ்கிறவர்களையும் இறந்துபோனவர்களையும் நியாயம் தீர்க்கத் தயாராய் இருக்கிற ஒருவருக்கு செய்த காரியங்களுக்கு அவர்கள் விளக்கமளிக்கவேண்டும். இக்காரணங்களுக்காக இப்போது இறந்துவிட்ட விசுவாசிகளுக்கும் நற்செய்தியானது போதிக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களின் உலக வாழ்க்கையின்போது மோசமான வகையில் மனிதர்களால் நியாயம் தீர்க்கப்பட்டாலும், ஆவியால் தேவன் முன்னிலையில் அவர்கள் வாழ்ந்தார்கள்.

தேவனுடைய வரங்கள்

எல்லாம் முடிகிற காலம் நெருங்குகிறது. எனவே உங்கள் மனங்களைத் தெளிவுடையதாக வைத்திருங்கள். நீங்கள் பிரார்த்தனை செய்ய அது உதவும். அன்பு எத்தனையோ பாவங்களை மூடி விடுவதால் ஒருவரையொருவர் ஆழமாக நேசியுங்கள். எல்லாவற்றிலும் மிக முக்கியமானது இதுவே ஆகும். குற்றம் சாட்டாமல் உங்கள் வீடுகளை ஒருவரோடொருவர் பகிர்ந்துகொள்ளுங்கள். 10 உங்களில் ஒவ்வொருவரும் தேவனிடமிருந்து வரங்களைப் பெற்றுக்கொண்டீர்கள். பல வகையான வழிகளில் தேவன் தம் இரக்கத்தை உங்களுக்குக் காட்டியுள்ளார். தேவனுடைய வரங்களைப் பயன்படுத்தும் பொறுப்புக்கு உரியவர்களான பணியாட்களைப் போல நீங்கள் இருக்கிறீர்கள். எனவே நல்ல பணியாட்களாக இருந்து தேவனுடைய வரங்களை ஒருவருக்கொருவர் சேவை செய்வதற்குப் பயன்படுத்துங்கள். 11 பேசுகிற மனிதன் தேவனிடமிருந்து வார்த்தைகளைக் கொண்டு வருவதுபோல பேசவேண்டும். சேவை செய்யும் மனிதன் தேவன் தரும் வல்லமையோடு சேவை புரிதல் வேண்டும். இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவன் எல்லாவற்றிலும் மகிமையுறும்படி நீங்கள், இக்காரியங்களைச் செய்ய வேண்டும்.

கிறிஸ்தவனாகத் துன்புறுதல்

12 எனது நண்பர்களே, நீங்கள் தற்சமயம் அனுபவிக்கிற வருத்தங்களையும் இன்னல்களையும் கண்டு ஆச்சரியப்படாதீர்கள். இவை உங்கள் விசுவாசத்தை சோதிப்பன. ஏதோ விசித்திரமான செயல் உங்களுக்கு நிகழ்வதாக நினைக்காதீர்கள். 13 கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்வதால், நீங்கள் சந்தோஷப்பட வேண்டும். இதன் மூலம் கிறிஸ்து தம் மகிமையைக் காட்டும்போது நீங்கள் மகிழ்ச்சி அடைந்து, சந்தோஷத்தால் மனம் நிறைவீர்கள். 14 நீங்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுவதால், மக்கள் உங்களைப் பற்றிப் தீயன கூறும்போது, நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். தேவனுடைய மகிமைமிக்க ஆவியானவர் உங்களோடிருப்பதால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள். 15 உங்களில் யாரும் கொலைக்காரர்களாகவோ, திருடர்களாகவோ, அடுத்தவர்களின் காரியங்களில் தலையிடுகிறவர்களாகவோ, இக்காரியங்களுக்கான தண்டனையை அனுபவிக்கிறவர்களாகவோ இருக்கக் கூடாது. 16 ஒருவன் கிறிஸ்துவுக்காகத் துன்புறுவதற்காக வெட்கப்படக்கூடாது. அப்பெயருக்காக நீங்கள் தேவனை வாழ்த்தவேண்டும். 17 நியாயந்தீர்க்கப்படுதல் ஆரம்பமாகும் காலம் இது. தேவனுடைய குடும்பத்தில் அந்நியாயத்தீர்ப்பு ஆரம்பமாகும். நியாயத்தீர்ப்பு நம்மிடத்தில் ஆரம்பித்தால் தேவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாத மக்களுக்கு என்ன நிகழும்?

18 “ஒரு நல்ல மனிதனே இரட்சிக்கப்படுவது மிகவும் கடுமையானது என்றால், தேவனுக்கு எதிரானவனும்,
    பாவத்தால் நிரம்பியவனுமான மனிதனுக்கு என்ன நேரிடக்கூடும்?” (A)

19 தேவனுடைய விருப்பப்படி துன்புறுகிற மக்கள் தங்கள் ஆன்மாக்களை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். தேவன் அவற்றை உண்டாக்கினார், எனவே அவர்கள் அவரை நம்பலாம். ஆகையால் அவர்கள் தொடர்ந்து நன்மை செய்ய வேண்டும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center