Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எசேக்கியேல் 1-2

முன்னுரை

நான் ஆசாரியன், பூசியின் மகனான எசேக்கியேல், நான் நாடு கடத்தப்பட்டு பாபிலோனின் கேபார் ஆற்றின் அருகில் இருந்தபோது வானங்கள் திறந்தன. நான் தேவதரிசனங்களைக் கண்டேன். இது முப்பதாம் ஆண்டின் நான்காம் (ஜூலை) மாதத்தில் ஐந்தாம் தேதியாக இருந்தது. யோயாக்கீன் அரசன் சிறையிலிருந்து ஐந்தாவது ஆண்டில் ஐந்தாவது மாதத்தில் கர்த்தருடைய வார்த்தை எசேக்கியேலிடம் வந்தது. அந்த இடத்தில் கர்த்தருடைய வல்லமை அவன் மேல் வந்தது.

கர்த்தருடைய இரதம் தேவனுடைய சிங்காசனம்

நான் (எசேக்கியேல்) வடக்கிலிருந்து பெரிய புயல் வருவதைப் பார்த்தேன். அது பெரும் மேகமாய் பலமான காற்றையுடையதாய் இருந்தது. அதிலிருந்து நெருப்பு பளிச்சிட்டது. அதைச் சுற்றிலும் வெளிச்சமும் இருந்தது. இது நெருப்புக்குள்ளே பழுத்துக்கொண்டிருக்கும் உலோகம்போல் இருந்தது. அதற்குள்ளே நான்கு ஜீவன்கள் இருந்தன. அவை மனிதர்களைப்போன்று காணப்பட்டன. ஆனால், ஒவ்வொரு ஜீவன்களுக்கும் நான்கு முகங்களும் நான்கு சிறகுகளும் இருந்தன. அவற்றின் கால்கள் நேராக இருந்தன. அவற்றின் பாதங்கள் பசுக்களின் பாதங்களைப்போன்றிருந்தன. அவை துலக்கப்பட்ட வெண்கலத்தைப்போன்று பளபளப்பாக இருந்தன. அவற்றின் சிறகுகளுக்கடியில் மனித கைகள் இருந்தன. அங்கே நான்கு ஜீவன்கள் இருந்தன. ஒவ்வொன்றிற்கும் நான்கு முகங்களும் நான்கு சிறகுகளும் இருந்தன. ஒவ்வொரு ஜீவனின் இறக்கைகளும் மற்ற ஜீவனின் இறக்கைகளை ஒவ்வொரு பக்கமும் தொட்டன. ஜீவன்கள் அசையும்போது அவை திரும்பவில்லை. அவை எந்தத் திசையைப் பார்த்துக்கொண்டிருந்தனவோ அத்திசையிலேயே சென்றன.

10 ஒவ்வொரு ஜீவனுக்கும் நான்கு முகங்கள் இருந்தன. முன்பக்கத்தில் ஒவ்வொன்றுக்கும் மனித முகம் இருந்தது. வலது பக்கத்தில் உள்ளவை சிங்கங்களின் முகங்களாக இருந்தன. இடது பக்கத்தில் உள்ளவை காளைகளின் முகங்களாக இருந்தன. பின்பக்கத்தில் அவற்றிற்கு கழுகின் முகங்களாக இருந்தன. 11 ஜீவன்கள் தம்மை சிறகுகளால் மூடிக்கொண்டன. அவை இரண்டு சிறகுகளால் தம் அருகிலிருக்கும் ஜீவனைத் தொட நீட்டின. இரண்டு சிறகுகளால் தம் உடலை மறைத்துக்கொண்டன. 12 அவை எந்தத் திசையைப் பார்த்துக்கொண்டிருந்தனவோ அந்தச் திசையிலேயே சென்றன. காற்று அவற்றை எத்திசையில் செலுத்துகின்றதோ அத்திசையிலேயே சென்றன. அந்த ஜீவன்கள் நகரும்போது திரும்புவதில்லை. 13 அந்த ஜீவன்கள் அப்படித்தான் காணப்பட்டன.

ஜீவன்களுக்குள் இருந்த இடைவெளியில் ஏதோ எரிகின்ற நெருப்பு கரிதுண்டுகளைப் போலிருந்தது. இந்த நெருப்பானது சிறு தீபங்களைப்போல ஜீவன்களைச் சுற்றி அசைந்துகொண்டிருந்தது. அது பிரகாசமாக மின்னலைப்போன்று ஒளியைப் பரப்பிக்கொண்டிருந்தது! 14 அந்த ஜீவன்கள் மின்னலைப்போன்று ஓடித்திரிந்தன!

15-16 நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நான்கு சக்கரங்களைக் கண்டேன். ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு சக்கரம் இருந்தது. அச்சக்கரங்கள் தரையைத் தொட்டுக்கொண்டிருந்தன. அச்சக்கரங்கள் மஞ்சள் நகையால் செய்யப்பட்டதுப்போன்று தோன்றின. சக்கரத்திற்குள் சக்கரம் இருப்பதுப்போன்று அவை தோன்றின. 17 சக்கரங்கள் எத்திசையிலும் (திரும்ப) அசைய முடிந்தது, ஆனால் ஜீவன்களோ அவை அசைந்தபோது திரும்பவில்லை.

18 இப்பொழுது நான் அவற்றின் பின்பாகத்தைப்பற்றி சொல்லுவேன்! சக்கரங்களின் ஓரங்கள் உயரமாகவும் பயங்கரமாகவும் இருந்தன. நான்கு சக்கரங்களின் ஓரங்கள் முழுவதிலும் கண்கள் இருந்தன.

19 அச்சக்கரங்கள் எப்பொழுதும் ஜீவன்களோடேயே நகர்ந்தன. ஜீவன்கள் காற்றில் மேலேறிப் பறந்தால் அச்சக்கரங்களும் அவற்றோடு சென்றன. 20 காற்றானது அவற்றை எங்கெங்கு செலுத்த விரும்புகிறதோ அங்கே அவற்றோடு சக்கரங்களும் சென்றன. ஏனென்றால், ஜீவன்களின் வல்லமையானது அவற்றின் சக்கரத்தில் உள்ளன. 21 எனவே, ஜீவன்கள் நகர்ந்தால் சக்கரங்களும் நகர்ந்தன. ஜீவன்கள் நின்றால் சக்கரங்களும் நின்றன. சக்கரங்கள் காற்றில் பறந்து போனால் ஜீவன்களும் அவற்றோடு போயின. ஏனென்றால், சக்கரங்களுக்குள் காற்று இருந்தது.

22 ஜீவன்களின் தலைகளின்மேல் வியப்படையச்செய்யும் ஒன்று இருந்தது. அது தலை கீழாகத் திருப்பப்பட்ட ஒரு கிண்ணம்போல் இருந்தது. அப்பாத்திரம் படிகக்கட்டியைப்போன்று தெளிவாக இருந்தது. இது ஜீவன்களின் தலைக்குமேல் காற்றில் தொங்கிக்கொண்டிருந்தது! 23 பாத்திரத்திற்குக் கீழே, ஒவ்வொரு ஜீவனுக்கும் நான்கு நேரான சிறகுகள் இருந்தன. இரண்டு சிறகுகள் விரிக்கபட்டு அருகிலிருக்கும் ஜீவனின் சிறகுகளை நோக்கி நீட்டப்பட்டிருந்தன. இரண்டு சிறகுகள் மற்ற திசையில் விரிக்கப்பட்டு ஜீவனின் உடலை மூடியிருந்தன.

24 பிறகு, நான் சிறகுகளின் சத்தம் கேட்டேன். ஜீவன்கள் ஒவ்வொருமுறை நகரும்போதும் அதன் சிறகுகள் பெருஞ்சத்தத்தை எழுப்பின. அச்சத்தம் வெள்ளப்பெருக்கின் சத்தத்தைப் போன்றிருந்தது. சர்வ வல்லமையுள்ள தேவனுடைய குரல் போல் இருந்தது. அது ஒரு படை அல்லது ஜனங்கள் கூட்டத்தின் சத்தத்தைப் போலவும் இருந்தது. ஜீவன்கள் நகர்வதை நிறுத்தும்போது தம் சிறகுகளை பக்கவாட்டில் வைத்துக்கொள்ளும்.

25 ஜீவன்கள் நகர்வதை நிறுத்தின. தமது சிறகுகளைத் தாழ்த்தின. இன்னொரு பெருஞ்சத்தம் கேட்டது, அது அவற்றின் தலைக்கு மேலிருந்த கிண்ணத்திலிருந்து கேட்டது. 26 பாத்திரத்திற்கு மேலே ஏதோ இருந்தது. அது சிங்காசனத்தைப்போல் இருந்தது. அது நீல வண்ணத்தில் ரத்தினம்போல் இருந்தது. அந்தச் சிங்காசனத்தில் யாரோ ஒரு மனிதர் உட்கார்ந்திருப்பதுபோன்று தோன்றியது. 27 நான் அவரை இடுப்பிலிருந்து மேல்நோக்கிப் பார்த்தேன். அவர் சூடான உலோகத்தைப்போன்று இருந்தார். அவரைச் சுற்றிலும் நெருப்பு இருப்பதைப் போன்றிருந்தது. நான் அவரை இடுப்பிலிருந்து கீழ் நோக்கிப் பார்த்தேன். அது நெருப்பைப் போன்றிருந்தது. அவரைச் சுற்றிலும் அது மின்னியது. 28 அவரைச் சுற்றிலும் மின்னிக்கொண்டிருந்த வெளிச்சமானது வானவில்லைப் போன்றிருந்தது. அது கர்த்தருடைய மகிமை. அதைப் பார்த்த உடனே நான் தரையிலே விழுந்தேன். என் முகம் தரையிலே படும்படிக் குனிந்தேன். பின்னர் ஒரு குரல் என்னோடு பேசுவதைக் கேட்டேன்.

குரலானது, மனுபுத்திரனே, [a] எழுந்து நில், நான் உன்னோடு பேசப்போகிறேன் என்று சொன்னது.

பிறகு, ஒரு காற்று வந்து என்னை நிற்கும்படி செய்தது. என்னோடு பேசிய அந்த நபருக்கு (தேவன்) செவிசாய்த்தேன். அவர் என்னிடம் “மனுபுத்திரனே, இஸ்ரவேல் குடும்பத்தோடு பேசுவதற்கு நான் உன்னை அனுப்புகிறேன். அந்த ஜனங்கள் எனக்கு எதிராகப் பலமுறை திரும்பினார்கள். அவர்களது முற்பிதாக்களும் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் எனக்கு எதிராகப் பலமுறை பாவம் செய்திருக்கின்றனர். அவர்கள் இன்றும் பாவம்செய்துகொண்டிருக்கின்றனர். அந்த ஜனங்களோடு பேசவே உன்னை நான் அனுப்புகிறேன். ஆனால் அவர்கள் மிகக் கடினமானவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கடினமான மனதை உடையவர்கள். ஆனால் நீ அந்த ஜனங்களோடு பேசவேண்டும். நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று நீ சொல்லவேண்டும். ஆனால் அந்த ஜனங்கள் நீ சொல்வதைக் கவனிக்கமாட்டார்கள். அவர்கள் எனக்கு எதிராகப் பாவம் செய்வதை நிறுத்தமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் மோசமான கலகக்காரர்கள். அவர்கள் எப்பொழுதும் எனக்கு எதிராக திரும்புகின்றார்கள். ஆனால் நீ அவற்றைச் சொல்லவேண்டும். எனவே, அவர்கள் மத்தியில் ஒரு தீர்க்கதரிசி இருப்பதை அறிந்துக்கொள்வார்கள்.

“மனுபுத்திரனே, அந்த ஜனங்களுக்குப் பயப்படாதே, அவர்கள் சொல்கின்றவற்றுக்கும் பயப்படாதே. இது உண்மை. அவர்கள் உனக்கு எதிராகத் திரும்பி உன்னைக் காயப்படுத்த விரும்புவார்கள். அவர்கள் முட்களைப் போன்றிருப்பார்கள். நீ தேள்களோடு இருப்பதைப்போன்று நினைப்பாய். ஆனால் அவர்கள் சொல்கின்றவற்றுக்கு நீ பயப்படாதே. அவர்கள் கலகக்காரர்கள். அவர்களுக்குப் பயப்படாதே! நான் சொல்கின்றவற்றை நீ அவர்களிடம் சொல்லவேண்டும். அவர்கள், நீ சொல்வதைக் கவனிக்க மாட்டார்கள் என்பதை நான் அறிவேன். எனக்கு எதிராகப் பாவம் செய்வதை நிறுத்தமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் கலகக்காரர்கள்.

“மனுபுத்திரனே நான் உனக்குச் சொல்கின்றவற்றை நீ கவனிக்கவேண்டும். அக்கலகக்கார ஜனங்களைப்போன்று நீ எனக்கு எதிராகத் திரும்பவேண்டாம். உன் வாயைத் திறந்து நான் தரும் வார்த்தைகளை ஏற்றுக்கொள். பின்னர் அவ்வார்த்தைகளை அந்த ஜனங்களிடம் பேசு, இவ்வார்த்தைகளை சாப்பிடு” என்றார்.

பின்னர் நான் (எசேக்கியேல்) என்னிடம் ஒரு கை நீட்டப்படுவதைக் கண்டேன். அதனிடம் எழுதப்பட்ட சுருள் ஒன்று இருந்தது. 10 நான் அச்சுருளைத் திறந்து முன்னும் பின்னும், எழுதப்பட்டிருப்பதைப் பார்தேன். அனைத்தும் துக்கப் பாடல்களாகவும் துக்கக் கதைகளாகவும் எச்சரிக்கைகளாகவும் இருந்தன.

எபிரேயர் 11:1-19

விசுவாசம்

11 நாம் நம்புகிறவற்றின் மீது கொண்டுள்ள உறுதிதான் விசுவாசம் ஆகும். நாம் கண்ணால் பார்க்காவிட்டாலும் கூட உண்மையான ஒன்றை நம்புவது தான் விசுவாசம். முன்பு வாழ்ந்தவர்களை தேவன் பெரிதும் விரும்பினார். ஏனென்றால் அவர்கள் இது போன்ற விசுவாசம் கொண்டவர்களாய் இருந்தார்கள்.

தேவன் தமது ஆணையால் இந்த முழு உலகையும் படைத்தார் என்று நாம் நம்ப விசுவாசம் உதவுகிறது. அதாவது நாம் பார்க்கின்ற பொருட்கள் எல்லாம் பார்க்கப்படாத ஒன்றால் உருவாக்கப்பட்டதை உணர்ந்துகொள்கிறோம்.

காயீனும் ஆபேலும் தேவனுக்குப் பலி கொடுத்தார்கள். ஆனால் ஆபேலின் பலி, அவனது விசுவாசம் காரணமாக உயர்வாகக் கருதப்பட்டது. தேவனும் அதையே விரும்பி ஏற்றுக்கொண்டார். ஆகவே அவனை நல்லவன் என்று அழைத்தார். அவன் இறந்து போனான். எனினும் அவன் தன் விசுவாசத்தின் வழியே இன்னும் பேசிக்கொண்டிருக்கிறான்.

ஏனோக்கு இறக்கவில்லை. இந்த பூமியில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டான். அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன் தேவனுக்கு விருப்பமானவனாக இருந்தான். தேவன் அவனைத் தன்னிடம் எடுத்துக்கொண்டார். அதனால் மக்கள் அதன் பிறகு அவனைக் கண்டுகொள்ள முடியவில்லை. இது அவனது விசுவாசத்தினாலேயே ஆயிற்று. விசுவாசம் இல்லாமல் எவனும் தேவனுக்கு விருப்பமானவனாக இருக்கமுடியாது. தேவனிடத்தில் வருகிறவன் அவர் உண்மையாகவே இருக்கிறார் என நம்பிக்கை கொள்கிறான். அதோடு தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுப்பார் என்றும் நம்பிக்கை கொள்ளவேண்டும்.

நோவா, இதுவரை அவன் காணாததைப் பற்றி தேவனால் எச்சரிக்கை செய்யப்பட்டான். ஆனால் நோவா தேவன் மீது விசுவாசமும், மரியாதையும் கொண்டிருந்தான். எனவே அவன் பெரிய கப்பலைச் செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றிக்கொண்டான். தனது விசுவாசத்தின் மூலமாக இந்த உலகம் தவறானது என்பதை நோவா நிரூபித்தான். இதனால் விசுவாசத்தின் வழியாக தேவனுக்கு முன் நீதிமான்களாகக் கருதப்பட்ட சிலருள் ஒருவனானான்.

தேவன் ஆபிரகாமை அழைத்தார். அவர் வாக்களித்தப்படி ஒரு இடத்துக்குப் பயணம் போகச் சொன்னார். அவனுக்கு அந்த இடம் எங்கே உள்ளது என்று தெரியாது. எனினும் அவனுக்கு விசுவாசம் இருந்ததால், தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவர் சொன்னபடி பயணம் செய்தான். தேவன் தருவதாக வாக்களித்த நாட்டில் ஆபிரகாம் வாழ்ந்தான். அங்கே ஒரு பரதேசியைப் போல அலைந்தான். எனினும் அவன் விசுவாசம் வைத்திருந்தான். ஈசாக்கு, யாக்கோபு, ஆகியோரோடு கூடாரத்தில் குடியிருந்தான். அவர்களும் தேவனுடைய வாக்குறுதியைப் பெற்றார்கள். 10 ஆபிரகாம், உண்மையான அஸ்திபாரம் இடப்பட்ட தேவனுடைய நகரத்துக்காகக் [a] காத்திருந்தான்.

11 ஆபிரகாம் மிகவும் முதியவன். குழந்தைப் பேற்றுக்கான வாய்ப்பு இல்லாதவன். சாராளும் அப்படியே. ஆபிரகாம் தேவனிடம் விசுவாசம் வைத்ததால் அவர்களுக்குக் குழந்தை பிறந்தது. 12 அவன் ஏறக்குறைய இறந்து போகின்றவனைப் போன்று இருந்தான். ஆனால் அவனிடமிருந்து முதுமைப் பருவத்தில் ஒரு பரம்பரை தோன்றி வானத்து நட்சத்திரங்களைப் போன்று விளங்கியது. கடற்கரையில் உள்ள மணலைப்போன்று ஏராளமான மக்கள் அவனிடமிருந்து வெளிப்பட்டனர்.

13 இந்த மாபெரும் மனிதர்கள் அனைவரும் இறுதிவரை தங்கள் விசுவாசத்துடனேயே வாழ்ந்தனர். இவர்கள் வாக்களிக்கப்பட்டதைப் பெற்றுக்கொள்ளாமல், வெகுதூரத்திலே அவற்றைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டனர். பூலோகத்தில் தாம் அந்நியர்களாகவும், பரதேசிகளாகவும் இருந்ததை அவர்கள் வெளிப்படையாக ஒத்துக்கொண்டனர். 14 அவர்கள் தம் சொந்த தேசத்தை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையே இத்தகைய விஷயங்களைப் பேசுகிறவர்கள் உணர்த்துகிறார்கள். 15 அவர்கள் தாங்கள் விட்டுவந்த நாட்டைப் பற்றி நினைத்திருந்தார்களேயானால் அவர்கள் அதற்குத் திரும்பிப் போக சமயம் கிடைத்திருக்குமே. 16 ஆனால் அவர்கள் பரலோகம் என்னும் சிறப்பான நாட்டிற்குப் போகக் காத்திருக்கிறார்கள். எனவே தேவன் தன்னை அவர்களது தேவன் என்று அழைத்துக்கொள்வதில் வெட்கப்படுவதில்லை. தேவன் அவர்களுக்காக ஒரு நகரத்தை உருவாக்கியிருக்கிறார்.

17-18 தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை சோதித்தார். ஆபிரகாமிடம் ஈசாக்கைப் பலி கொடுக்கும்படி தேவன் சொன்னார். ஆபிரகாமும் விசுவாசத்தின் காரணமாக அந்தக் கட்டளையைப் பின்பற்றினான், ஏனென்றால் ஏற்கெனவே தேவன் ஆபிரகாமுக்கு வாக்களித்துள்ளார். “ஈசாக்கு மூலம் உன் பரம்பரை வளரும்” என்றும் கூறியுள்ளார். ஆனாலும் ஒரே மகனான அந்த ஈசாக்கைப் பலிகொடுக்க ஆபிரகாம் முன் வந்தான். 19 தேவன் மக்களை மரணத்திலிருந்து எழுப்புவார் என ஆபிரகாம் நம்பினான். உண்மையில் அதுபோன்றே ஆபிரகாம் அவன் மகனைக் கொல்லாதபடி தேவன் தடுத்துவிட்டார். இதுவும் மரணத்திலிருந்து எழுப்பியது போலாயிற்று.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center