Old/New Testament
3 தேவன் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, நீ எதைப் பார்க்கிறாயோ அதை சாப்பிடு. இச்சுருளையும் சாப்பிடு. பின்னர் போய் இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் இவற்றைச் சொல்.”
2 எனவே, நான் எனது வாயைத் திறந்தேன். அவர் என் வாய்க்குள் சுருளைப் போட்டார். 3 பின்னர் தேவன், “மனுபுத்திரனே, நான் இந்தச் சுருளைக் கொடுக்கிறேன், இதை விழுங்கு. இது உன் உடலை நிரப்பட்டும்” என்றார்.
எனவே நான் சுருளைச் சாப்பிட்டேன். அது வாயிலே தேனைப்போன்று சுவையாக இருந்தது.
4 பின்னர் தேவன் என்னிடம், “மனுபுத்திரனே, இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் செல். என் வார்த்தைகளை அவர்களிடம் பேசு. 5 நீ புரிந்துகொள்ள இயலாத அந்நிய நாட்டுக்காரர்களிடம் உன்னை அனுப்பவில்லை. நீ இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. நான் உன்னை இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் அனுப்புகிறேன்! 6 நான் உன்னை உன்னால் புரிந்துகொள்ள முடியாத மொழிகளைப் பேசுகிற பல்வேறு நாடுகளுக்கு அனுப்பவில்லை. நீ அந்த ஜனங்களிடம் சென்று அவர்களோடு பேசினால் அவர்கள் நீ சொல்வதைக் கவனிப்பார்கள். ஆனால் நீ அந்த கடினமான மொழியைக் கற்க வேண்டியதில்லை. 7 இல்லை! நான் உன்னை இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் அனுப்புகிறேன். இந்த ஜனங்கள் மட்டுமே கடினமான மனங்களை உடையவர்கள். அவர்கள் மிகவும் பிடிவாதமுள்ளவர்கள். இஸ்ரவேல் ஜனங்கள் நீ சொல்வதை கவனிக்க மறுப்பார்கள். அவர்கள் என்னைக் கவனிக்க விரும்புவதில்லை. 8 ஆனால் அவர்களைப்போன்று உன்னையும் அவ்வளவு கடினமுள்ளவனாகச் செய்வேன். அவர்களுடையதைப் போன்றே உனது மனமும் அவ்வளவு கடினமானதாக இருக்கும். 9 வைரமானது கன்மலையைவிடக் கடினமானது. அதைப்போலவே உனது மனமானது அவர்களைவிடக் கடினமாகும். நீ அதைவிட மிகக்கடினமாக இருப்பாய். எனவே, அந்த ஜனங்களுக்கு நீ பயப்படமாட்டாய். எப்பொழுதும் எனக்கு எதிராகத் திரும்புகிற அந்த ஜனங்களுக்குப் பயப்படமாட்டாய்” என்றார்.
10 பின்னர் தேவன் என்னிடம், “மனுபுத்திரனே, நான் உன்னிடம் சொல்லுகிற ஒவ்வொரு வார்த்தையையும் நீ கவனிக்கவேண்டும். நீ அவ்வார்த்தைகளை நினைவுகொள்ளவேண்டும். 11 பிறகு, நீ நாடு கடத்தப்பட்ட உனது ஜனங்களிடம் சென்று, ‘நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்’ என்று சொல்லவேண்டும். அவர்கள் நீ சொல்வதைக் கேட்கமாட்டார்கள். அவர்கள் பாவம் செய்வதை நிறுத்தமாட்டார்கள். ஆனால், நீ அவர்களிடம் இவற்றைச் சொல்லவேண்டும்” என்றார்.
12 பிறகு காற்று என்னைத் தூக்கியது. பிறகு நான் எனக்குப் பின்னால் ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது இடியைப்போன்று பெருஞ்சத்தமாக இருந்தது. அது “கர்த்தருடைய மகிமை ஆசீர்வதிக்கப்படுவதாக” என்று சொன்னது. 13 பின்னர் ஜீவன்களின் சிறகுகள் நகரத் தொடங்கின. சிறகுகள் ஒன்றை ஒன்று தொட்டு விடுவதுபோன்று பெருஞ்சத்தத்தை எழுப்பின. அவற்றின் முன்னால் இருந்த சக்கரங்கள் இடியைப்போன்று பெருஞ்சத்தத்தை எழுப்பின. 14 காற்று என்னைத் தூக்கிக்கொண்டு போய்விட்டது. நான் அந்த இடத்தை விட்டுவிலகினேன். எனது ஆவி மிகவும் துக்கமும் கலக்கமுமடைந்தது. கர்த்தருடைய வல்லமை என்மீது மிகவும் பலமாக இருந்தது. 15 இஸ்ரவேலை விட்டு கட்டாயமாக, தெலாபீபிலே, கேபார் கால்வாய் அருகில் வாழச் சென்ற ஜனங்களிடம் போனேன். அவர்களுடன் நான் ஏழு நாட்கள் தங்கினேன். அந்த நாட்களில் நான் அதிர்ச்சி அடைந்த நிலையில் பேச முடியாதவனாக இருந்தேன்.
16 ஏழு நாட்கள் ஆன பிறகு, கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர், 17 “மனுபுத்திரனே, நான் உன்னை இஸ்ரவேலின் காவல்காரனாக ஆக்கினேன். அவர்களுக்கு ஏற்படப்போகும் தீயவற்றைப்பற்றி நான் உனக்குச் சொல்வேன். நீ அவற்றைப்பற்றி இஸ்ரவேலை எச்சரிக்க வேண்டும். 18 ‘இந்தக் கெட்ட மனிதன் மரிப்பான்!’ என்று நான் சொன்னால் பிறகு, நீ அவனை எச்சரிக்க வேண்டும். அவன் தனது வாழ்வை மாற்றி தீமை செய்வதை நிறுத்தவேண்டும். நீ அவனை எச்சரிக்காவிட்டால் அவன் மரிப்பான். அவன் தனது பாவத்தால் மரிப்பான்! ஆனால் நான் அவனது மரணத்திற்கு உன்னையும் பொறுப்பாளி ஆக்குவேன். ஏனென்றால், நீ அவனிடம் சென்று அவனது வாழ்க்கையைக் காப்பாற்றவில்லை.
19 “ஒருவேளை அந்த மனிதனை நீ எச்சரித்து அவன் தனது வாழ்வை மாற்றிக்கொண்டு தீயவற்றைச் செய்வதை நிறுத்தும்படிச் சொல்லியிருக்கலாம். அவன் நீ சொல்வதைக் கவனிக்க மறுத்ததால் அவன் மரிப்பான். அவன் பாவம் செய்ததால் மரிப்பான். நான் அவன் மரணத்திற்கு உன்னைப் பொறுப்பாளியாக்கமாட்டேன். ஏனென்றால், நீ அவனை எச்சரித்தாய், நீ உனது வாழ்க்கையைக் காப்பாற்றினாய்.
20 “அல்லது ஒரு நல்லவன் தனது நற்செயலை நிறுத்திவிடலாம். அவனுக்கு முன்னால் நான் சில தடைகளை வைப்பேன். அது அவன் விழக் (பாவஞ்செய்ய) காரணமாகலாம். அவன் தீயவற்றைச் செய்யத் தொடங்கலாம். அவன் பாவம் செய்வதால் மரிப்பான். நீ அவனை எச்சரிக்கவில்லை. அவனது மரணத்திற்கு உன்னைப் பொறுப்பாளியாக்குவேன். ஜனங்கள் அவன் செய்த நன்மைகளை நினைக்கமாட்டார்கள்.
21 “ஆனால், நீ ஒரு நல்ல மனிதனை எச்சரித்து பாவத்தை நிறுத்தும்படிச் சொல்ல அவனும் பாவம் செய்வதை நிறுத்திவிட்டால் பின்னர் அவன் மரிக்கமாட்டான். ஏனென்றால், நீ அவனை எச்சரித்தாய், அவனும் உன்னைக் கவனித்தான். இவ்வழியில் நீ உனது சொந்த உயிரைக் காப்பாற்றினாய்” என்றார்.
22 பின்னர் கர்த்தருடைய வல்லமை என்னிடம் அங்கு வந்தது. அவர் என்னிடம், “எழுந்து பள்ளத்தாக்குக்குப் போ, அங்கே நான் உன்னிடம் பேசுவேன்” என்றார்.
23 எனவே, நான் எழுந்து பள்ளத்தாக்குக்குப் போனேன். கர்த்தருடைய மகிமை அங்கே இருந்தது. கேபார் ஆற்றங்கரையில் இருந்தது போன்றிருந்தது. எனவே, நான் தரையில் என் முகம் படும்படிக் குனிந்தேன். 24 ஆனால் காற்று வந்து நான் நிற்குமாறு என்னைத் தூக்கியது. அவர் என்னிடம் “உன் வீட்டிற்குப் போய் உனது வீட்டிற்குள் அங்கே உன்னைப் பூட்டிகொள். 25 மனுபுத்திரனே, ஜனங்கள் கயிறுகளோடு வந்து உன்னைக் கட்டிப்போடுவார்கள். ஜனங்களிடம் போக உன்னை அனுமதிக்கமாட்டார்கள். 26 நான் உனது நாக்கை மேல் அண்ணத்தோடு ஒட்டிக்கொள்ளும்படிச் செய்வேன். உன்னால் பேசமுடியாமல் போகும். எனவே அந்த ஜனங்கள், அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று கற்றுத் தர ஆள் இல்லாமல் போவார்கள். ஏனென்றால், அந்த ஜனங்கள் எப்பொழுதும் எனக்கு எதிராகத் திரும்புகின்றனர். 27 ஆனால் நான் உன்னிடம் பேசுவேன். பின்னர் நான் உன்னைப் பேச அனுமதிப்பேன். ஆனால் நீ அவர்களிடம் பேச வேண்டும். ‘நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்.’ ஒருவன் இதனைக் கேட்க விரும்பினால் நல்லது. ஒருவன் கேட்க விரும்பாவிட்டாலும் நல்லது. ஆனால் அந்த ஜனங்கள் எப்பொழுதும் எனக்கு எதிராகத் திரும்புகின்றனர்.
4 “மனுபுத்திரனே, ஒரு செங்கல்லை எடு. அதன் மீது எருசலேம் நகரத்தின் படத்தை வரை. 2 பிறகு நகரத்தைச் சுற்றி முற்றுகையிடும் படை போல நடி. நகரத்தைத் தாக்க உதவுவதற்கு, அதைச் சுற்றி மதிலைக் கட்டு. நகரத்தின் சுவர்வரை போகும் ஒரு மண் பாதையைப் போடு, இடிக்கும் கருவிகளைக் கொண்டு வா. நகரத்தைச் சுற்றிப் படை முகாம்களை ஏற்படுத்து. 3 பிறகு ஒரு இரும்பு தகட்டினை எடுத்து உனக்கும் நகரத்திற்கும் இடையில் வை, அது உன்னையும் நகரத்தையும் பிரிக்கின்ற இருப்புச் சுவரைப் போன்றது. இவ்வாறு நீ நகரத்திற்கு எதிரானவன் என்பதைக் காட்டுவாய். நீ முற்றுகையிட்டு நகரத்தைத் தாக்குவாய். ஏனென்றால், இது இஸ்ரவேல் குடும்பத்தாருக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். நான் (தேவன்) எருசலேமை அழிப்பேன் என்பதை இது காட்டும்.
4 “பின்னர் நீ உனது இடதுபக்கத்தில் படுக்க வேண்டும். உனக்குக் காட்டுகிறபடி நீ செய்ய வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் செய்த பாவத்தை நீயே சுமக்கவேண்டும். நீ இடதுபுறமாக எவ்வளவு நாட்கள் படுத்திருக்கிறாயோ அத்தனை நாட்கள் நீ அவர்களின் குற்றத்தைச் சுமப்பாய். 5 நீ 390 நாட்கள் இஸ்ரவேலரின் குற்றங்களைச் சுமக்கவேண்டும். இவ்வாறு, நான் இஸ்ரவேல் எவ்வளவு காலம் தண்டிக்கப்படும் என்பதை ஒரு நாள், ஒரு ஆண்டுக்குச் சமமாகக் கணக்கிட்டுச் சொல்வேன்.
6 “அதற்குப் பிறகு, 40 நாட்கள் நீ உனது வலதுபுறமாகப் படுப்பாய். இம்முறை நீ யூதாவின் குற்றங்களை சுமப்பாய். ஒரு நாள் ஓராண்டுக்குச் சமம். எவ்வளவு காலத்திற்கு யூதா தண்டிக்கப்படும் என்பதை நான் சொல்கிறேன்” என்றார்.
7 தேவன் மீண்டும் பேசினார். அவர், “இப்பொழுது, நீ உனது சட்டை கைகளைச் சுருட்டிக்கொள், செங்கலுக்கு மேலாக உன் கரத்தை உயர்த்து. எருசலேம் நகரத்தைத் தாக்குவதுபோன்று நடி. நீ ஜனங்களிடம் எனது தூதுவனைப்போன்று பேசுகிறாய் என்பதைக் காட்ட இதனைச் செய். 8 இப்பொழுது பார். நான் உன் மேல் கயிற்றைக் கட்டுகிறேன். நகரத்திற்கு எதிராக உனது தாக்குதல் முடியுமட்டும் உன்னால் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு உருளமுடியாது” என்றார்.
9 தேவன் மேலும் சொன்னார்: “நீ ரொட்டி செய்வதற்கு கொஞ்சம் தானியத்தைப் பெறவேண்டும். கொஞ்சம் கோதுமை, வாற்கோதுமை, மொச்சை, அவரைக்காய், தினை, கம்பு ஆகியவற்றையும் பெறு, ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு கலந்து மாவாக்கு. நீ இதனை ரொட்டி செய்யப் பயன்படுத்து. நீ 390 நாட்கள் ஒரு பக்கமாகப் படுத்திருக்கும்போது இந்த ரொட்டியையே உண்பாய். 10 இம்மாவில் ஒரு நாளைக்கு ஒரு கோப்பை மட்டுமே ரொட்டி செய்யப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவாய். நீ வேளாவேளைக்கு அந்த உணவை உண்பாய். 11 நீ ஒவ்வொரு நாளும் 3 கோப்பை தண்ணீரைமட்டுமே குடிக்க அனுமதிக்கப்படுவாய். இதை நீ ஒவ்வொரு நாளும் வேளாவேளைக்குக் குடிக்க அனுமதிக்கப்படுவாய். 12 உனது உணவை நீயே ஒவ்வொரு நாளும் தயாரிக்கவேண்டும். நீ காய்ந்த மனித மலத்தை எரித்து ரொட்டியைச் சுட வேண்டும். இந்த ரொட்டியை நீ ஜனங்களுக்கு முன்னால் சுட்டு உண்ணவேண்டும்”. 13 பின்னர் கர்த்தர் சொன்னார்: “இஸ்ரவேல் குடும்பத்தார் வெளி நாடுகளில் சுத்தமற்ற ரொட்டியை உண்பார்கள்” என்பதை இது காட்டும். அவர்கள் அத்தகைய நாடுகளுக்குப் போகும்படி நான் பலவந்தப்படுத்தினேன்.
14 பிறகு நான் (எசேக்கியேல்) சொன்னேன் “ஓ, எனது கர்த்தராகிய ஆண்டவரே, நான் என்றைக்கும் அசுத்தமான உணவை உண்டதில்லை. நான் இது வரை நோயால் மரித்த அல்லது காட்டுமிருகத்தால் கொல்லப்பட்ட மிருகத்தின் இறைச்சியைத் தின்றதில்லை. நான் சிறுவனாய் இருந்த நாள் முதல் இன்றுவரை அசுத்தமான இறைச்சியைத் தின்றதில்லை. இத்தகைய மோசமான இறைச்சி என் வாய்க்குள் நுழைந்ததில்லை”.
15 பிறகு தேவன் என்னிடம் சொன்னார் “சரி! நான் உனது அப்பத்தை சுடுவதற்கு உலர்ந்த மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்த அனுமதிக்கிறேன். நீ காய்ந்த மனிதமலத்தைப் பயன்படுத்த வேண்டாம்.”
16 பிறகு தேவன் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, எருசலேமிற்கு விநியோகம் ஆகும் உணவை அழிக்கிறேன். ஜனங்களிடம் உண்பதற்குச் சிறிதளவு உணவு உள்ளது. அவர்கள் தமது உணவு விநியோகத்தைப்பற்றிக் கவலையோடு இருப்பார்கள். அவர்களிடம் குடிப்பதற்குச் சிறிது அளவு தண்ணீர் மட்டுமே இருக்கும். அவர்கள் அந்தத் தண்ணீரைக் குடிக்கும்போது மிகவும் பயப்படுவார்கள். 17 ஏனென்றால், ஜனங்களுக்குப் போதிய அளவு உணவும் தண்ணீரும் இருக்காது. ஜனங்கள் தமது பாவங்களுக்காக, ஒருவருக்கொருவர் பயந்து வாடிப் போவார்கள்.
20 யாக்கோபையும் ஏசாவையும் ஈசாக்கு ஆசீர்வதித்தான். ஈசாக்கு இதனை விசுவாசத்தின் அடிப்டையில் செய்தான். 21 யாக்கோபு யோசேப்பின் மகன்களில் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தான். யாக்கோபு தான் இறந்துகொண்டிருக்கும்போது இதனைச் செய்தான். அவன் தனது கோலின் முனையில் சாய்ந்துகொண்டு தொழுதான். யாக்கோபு இப்படிச் செய்ததற்கும் அவனது விசுவாசமே காரணமாகும்.
22 யோசேப்பு இறந்துகொண்டிருந்த நேரத்தில் இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டுப் போவதைப் பற்றி பேசினான். அவன் இதனை விசுவாசத்தால் சொன்னான். தனது சரீரத்தை என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் மக்களிடம் சொன்னான்.
23 மோசே பிறந்த பிறகு, அவன் அழகாக இருந்ததை அவன் பெற்றோர்கள் கண்டு மூன்று மாத காலத்திற்கு மறைத்து வைத்தார்கள். விசுவாசத்தின் அடிப்படையிலேயே இதைச் செய்தனர். அரச கட்டளைக்குப் பயப்படாமல் இதை செய்தனர்.
24 மோசே வளர்ந்து பெரியவன் ஆனான். பார்வோனுடைய மகளின் மகன் என அழைக்கப்படுவதை மறுத்தான். 25 பாவத்துக்குரிய தற்காலிக சந்தோஷத்தை அனுபவிப்பதைவிட தேவனுடய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே அவன் தேர்ந்தெடுத்தான். 26 எகிப்தின் கருவூலத்தைவிட கிறிஸ்துவுக்காகத் தாங்கிக்கொண்ட பாடுகளை மதிப்புமிக்கதாக அவன் நினைத்தான். ஏனெனில் வர இருக்கிற பலனுக்காக அவன் பார்த்திருந்தான்.
27 மோசே எகிப்திலிருந்து வெளியேறினான். தன் விசுவாசத்தின் அடிப்படையில் அப்படிச் செய்தான். அவன் அரசனின் கோபத்துக்கும் அஞ்சவில்லை. அவன் தொடர்ந்து உறுதியாக இருந்தான். ஒருவராலும் பார்க்க இயலாத தேவனை அவனால் பார்க்க முடிந்தது. 28 அவன் பஸ்காவைத் தயார் செய்தான். கதவின் மீது இரத்தத்தைப் பூசினான். யூதமக்களின் முதல் ஆண் குழந்தையை மரண தூதன் [a] கொல்லாதபடிக்கு இதைச் செய்தான். மோசே இதனை விசுவாசத்தோடு செய்தான்.
29 மோசே தன் மக்களை அழைத்துக்கொண்டு போனான். அப்போது செங்கடல் காய்ந்த தரையைப் போலாயிற்று. அவர்களின் விசுவாசமே இதற்குக் காரணமாகும். எகிப்தியர்களும் அவ்வாறே கடலைக் கடக்க முனைந்து அமிழ்ந்துபோனார்கள்.
30 எரிகோவின் சுவர்கள், தேவனது மக்களின் விசுவாசத்தினால் விழுந்துபோனது. அவர்கள் ஏழு நாட்கள் அந்தச் சுவர்களைச் சுற்றி வந்தனர். அப்புறம் அச்சுவர்கள் விழுந்தன.
31 ராகாப் என்னும் விலைமாதும் இஸ்ரவேல் ஒற்றர்களை நண்பர்களைப்போல வரவேற்றாள். அவளது விசுவாசத்தின் காரணமாகக் கீழ்ப்படியாதவர்கள் கொல்லப்பட்டபோது அவள் தன் வீட்டாருடன் சேதமடையாமல் தப்பினாள்.
32 பின்னும் வேறு எடுத்துக்காட்டுகளை நான் சொல்லவேண்டுமா! கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும் தீர்க்கதரிசிகளையும் குறித்து விளக்கிச் சொல்லக் காலம் போதாது. 33 விசுவாசத்தாலேயே அவர்கள் அரசுகளை வெற்றிகொண்டார்கள். நீதியை வலியுறுத்தினார்கள். தேவனுடைய வாக்குறுதிகளை பெற்றுக்கொண்டார்கள். சிலர் சிங்கங்களின் வாய்களை மூடினார்கள். 34 சிலர் நெருப்பின் உக்கிரத்தைக் குறைத்தார்கள். வாளின் சாவிலிருந்து தப்பினார்கள். பலவீனத்திலிருந்து அவர்கள் பலம் பெற்று அந்நியப் படைகளைத் தோற்கடித்து யுத்தத்தில் ஆற்றல்மிக்கவர்களாக இருந்தார்கள். 35 இறந்துபோன தங்களுடையவர்களை பெண்கள் மீண்டும் அடைந்தார்கள். மற்றவர்கள் வாதைக்குள்ளானபோதும் விடுபட மறுத்தார்கள். மரணத்திலிருந்து ஒரு சிறந்த வாழ்விற்கென உயிரோடு எழுப்பப்படுவதற்காக இதனைச் செய்தார்கள். 36 வேறு சிலர் கேலிசெய்யப்பட்டனர்; அடிக்கப்பட்டனர்; கட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர். 37 சிலர் கல்லால் எறியப்பட்டார்கள்; வாள்களினால் இரண்டு துண்டாகக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். சிலர் செம்மறியாட்டுத் தோலையும், வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக்கொண்டு திரிந்து ஏழ்மையையும், துன்பத்தையும், கசப்புகளையும் அனுபவித்தனர். 38 உலகம் அந்த உத்தமர்களுக்கு உகந்ததாக இல்லை. அவர்கள் மலைகளிலும் பாலைவனங்களிலும் அலைந்து திரிந்தனர். மலைக் குகைகளிலும் பூமியில் உள்ள பொந்துகளிலும் வாழ்ந்தார்கள்.
39 தம் விசுவாசத்தாலேயே அவர்கள் புகழப்படுகின்றனர். ஆனால் இவர்களில் எவரும் தேவனுடைய வாக்குறுதியை அடையவில்லை. 40 தேவன் நமக்குச் சிறந்த சிலவற்றைத் தரத் திட்டமிட்டிருந்தார். பிறகு நம்மோடு சேர்ந்து மட்டுமே அவர்களும் முழுமைபடுத்தப்படுவார்கள்.
2008 by World Bible Translation Center