Old/New Testament
எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு ஆசாபின் பாடல்களுள் ஒன்று
77 தேவனே நோக்கி உதவிக்காக நான் உரக்கக் கூப்பிடுகிறேன்.
தேவனே, நான் உம்மிடம் ஜெபிக்கிறேன்.
நான் சொல்வதைக் கேளும்.
2 என் ஆண்டவரே, தொல்லைகள் வரும்போது நான் உம்மிடம் வருகிறேன்.
இரவு முழுவதும் நான் உம்மை நெருங்க முயன்றேன்.
என் ஆத்துமா ஆறுதல் அடைய மறுத்தது.
3 நான் தேவனைப்பற்றி நினைக்கிறேன்,
நான் உணரும் விதத்தை அவருக்குச் சொல்ல முயல்கிறேன், ஆனால் என்னால் முடியவில்லை.
4 நீர் என்னை உறங்கவொட்டீர்.
நான் ஏதோ சொல்ல முயன்றேன், ஆனால் மிகவும் வருத்தமடைந்தேன்.
5 நான் நீண்ட காலத்தில் நடந்ததைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.
முற்காலத்தில் நிகழ்ந்தவற்றைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.
6 இரவில், எனது பாடல்களைப்பற்றி நினைக்க முயல்கிறேன்.
நான் என்னோடு பேசி, புரிந்துகொள்ள முயல்கிறேன்.
7 நான், “எங்கள் ஆண்டவர் என்றைக்கும் எங்களை விட்டு விலகிவிட்டாரா?
மீண்டும் அவர் எப்போதும் நம்முடன் மகிழ்ச்சியோடு இருப்பாரா?
8 தேவனுடைய அன்பு என்றென்றும் விலகிவிட்டதா?
அவர் நம்மோடு மீண்டும் பேசுவாரா?
9 இரக்கம் என்னெவென்பதை தேவன் மறந்துவிட்டாரா?
அவரது நீடிய பொறுமை கோபமாயிற்றா?” என்று வியக்கிறேன்.
10 பின்பு நான், “என்னை உண்மையிலேயே பாதிப்பது இது.
‘மிக உன்னதமான தேவன்’ அவரது வல்லமையை இழந்துவிட்டாரா?” என எண்ணினேன்.
11 கர்த்தர் செய்தவற்றை நான் நினைவுகூருகிறேன்.
தேவனே, நீர் முற்காலத்தில் செய்த அற்புதமான காரியங்களை நான் நினைவுகூருகிறேன்.
12 நீர் செய்தவற்றைக்குறித்து யோசித்தேன்.
அக்காரியங்களை நான் நினைத்தேன்.
13 தேவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை.
தேவனே, உம்மைப்போன்று உயர்ந்தவர் (மேன்மையானவர்) எவருமில்லை.
14 அற்புதமானக் காரியங்களைச் செய்த தேவன் நீரே.
நீர் ஜனங்களுக்கு உமது மிகுந்த வல்லமையைக் காண்பித்தீர்.
15 உமது வல்லமையால் உமது ஜனங்களைக் காத்தீர்.
நீர் யாக்கோபையும் யோசேப்பின் சந்ததியினரையும் காத்தீர்.
16 தேவனே, தண்ணீர் உம்மைக் கண்டு பயந்தது.
ஆழமான தண்ணீர் பயத்தால் நடுங்கிற்று.
17 கருமேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன.
உயர்ந்த மேகங்களில் உரத்த இடிமுழக்கத்தை ஜனங்கள் கேட்டார்கள்.
அப்போது மின்னல்களாகிய உமது அம்புகள் மேகங்களினூடே பிரகாசித்தன.
18 உரத்த இடிமுழக்கங்கள் உண்டாயின.
உலகத்தை மின்னல் ஒளியால் நிரப்பிற்று.
பூமி அதிர்ந்து நடுங்கிற்று.
19 தேவனே, நீர் ஆழமான தண்ணீரில் (வெள்ளத்தில்) நடந்து சென்றீர்.
நீர் ஆழமான கடலைக் கடந்தீர்.
ஆனால் உமது பாதச்சுவடுகள் அங்குப் பதியவில்லை.
20 உமது ஜனங்களை மந்தைகளைப்போல் வழி நடத்துவதற்கு
நீர் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தினீர்.
ஆசாபின் ஒரு மஸ்கீல்
78 என் ஜனங்களே, என் போதனைகளுக்கு செவிக்கொடுங்கள்.
நான் கூறுவனவற்றைக் கவனித்துக் கேளுங்கள்.
2 நான் உங்களுக்கு இந்தக் கதையைக் கூறுவேன்.
நான் உங்களுக்கு இப்பழங்கதையைக் கூறுவேன்.
3 நாங்கள் இக்கதையைக் கேட்டோம், அதை நன்றாக அறிந்தோம்.
எங்கள் தந்தையர் இக்கதையைக் கூறினார்கள்.
4 நாங்கள் இக்கதையை மறக்கவும்மாட்டோம்.
இறுதி தலைமுறை வரைக்கும் எங்கள் ஜனங்கள் இக்கதையைச் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்.
நாம் அனைவரும் கர்த்தரைத் துதிப்போம்.
அவர் செய்த அற்புதமான காரியங்களைக் குறித்துச் சொல்வோம்.
5 கர்த்தர் யாக்கோபோடு ஒரு உடன்படிக்கையைச் செய்தார்.
தேவன் இஸ்ரவேலருக்குச் சட்டத்தை (நீதிமுறையை) கொடுத்தார்.
நம் முற்பிதாக்களுக்கு தேவன் கட்டளைகளை அளித்தார்.
தமது பின் சந்ததியினருக்கு அந்தச் சட்டங்களைப் போதிக்குமாறு அவர் நம் முற்பிதாக்களுக்குக் கூறினார்.
6 புது குழந்தைகள் பிறப்பார்கள், அவர்கள் இனைஞராக வளருவார்கள்.
அவர்கள் அக்கதைகளைத் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்கள்.
இவ்வகையில் கடைசி தலைமுறையினர் வரைக்கும் எல்லோரும் சட்டத்தை அறிந்திருப்பார்கள்.
7 எனவே அந்த ஜனங்கள் எல்லோரும் தேவனை நம்புவார்கள்.
தேவன் செய்தவற்றை அவர்கள் மறக்கமாட்டார்கள்.
அவர்கள் கவனமாக அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவார்கள்.
8 தங்கள் தேவனுடைய கட்டளைகளை ஜனங்கள் அவர்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்களானால், அந்தக் குழந்தைகள் அவர்களின் முற்பிதாக்களைப்போல் இருக்கமாட்டார்கள்.
அவர்கள் முற்பிதாக்கள் தேவனுக்கு எதிராகத் திரும்பினார்கள்.
அவர்கள் அவருக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள்.
அந்த ஜனங்கள் பிடிவாதமாக இருந்தார்கள்.
அவர்கள் தேவ ஆவியானவருக்கு உண்மையாக இருக்கவில்லை.
9 எப்பிராயீமின் மனிதர்கள் ஆயுதங்களைத் தாங்கியிருந்தார்கள்,
ஆனால் அவர்கள் யுத்தத்திலிருந்து ஓடிப்போனார்கள்.
10 அவர்கள் தேவனோடு செய்த உடன்படிக்கையைப் பின்பற்றவில்லை.
அவரது போதனைகளுக்குக் கீழ்ப்படிய அவர்கள் மறுத்தார்கள்.
11 தேவன் செய்த பெரிய காரியங்களை எப்பிராயீமின் மனிதர்கள் மறந்துவிட்டார்கள்.
அவர் காட்டிய அற்புதமான காரியங்களை அவர்கள் மறந்துப்போனார்கள்.
12 எகிப்தின் சோவானில் தேவன்
அவர்களின் தந்தையருக்குத் தனது மிகுந்த வல்லமையை வெளிப்படுத்தினார்.
13 தேவன் செங்கடலைப் பிளந்து ஜனங்களை அதனூடே நடத்திச்சென்றார்.
இருபுறங்களிலும் தண்ணீரானது உறுதியான சுவராய் எழுந்து நின்றது.
14 ஒரு உயர்ந்த மேகத்தினால் தேவன் அவர்களை ஒவ்வொரு பகலிலும் வழிநடத்தினர்.
ஒவ்வோர் இரவும் ஒரு நெருப்புத் தூணின் ஒளியினால் தேவன் அவர்களை வழிநடத்தினர்.
15 பாலைவனத்தின் பாறையை தேவன் பிளந்தார்.
நிலத்தின் ஆழத்திலிருந்து அவர் அந்த ஜனங்களுக்கு தண்ணீரைக் கொடுத்தார்.
16 கன்மலையிலிருந்து
ஆறாகப் பெருக்கெடுக்கும் தண்ணீரை தேவன் வரவழைத்தார்!
17 ஆனால் ஜனங்கள் தேவனுக்கெதிராகத் தொடர்ந்து பாவம் செய்தனர்.
பாலைவனத்திலும் அவர்கள் மிக உன்னதமான தேவனுக்கெதிராகத் திரும்பினார்கள்.
18 பின் அந்த ஜனங்கள் தேவனை சோதிக்க விரும்பினார்கள்.
தங்கள் இச்சையை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் தேவனிடம் உணவைக் கேட்டார்கள்.
19 அவர்கள் தேவனைக்குறித்து முறையிட்டு,
“பாலைவனத்தில் தேவன் நமக்கு உணவைக் கொடுக்கக்கூடுமா?
20 தேவன் பாறையை அடித்தார், பெருவெள்ளம் வெளிப்பட்டது.
நிச்சயமாக, அவர் நமக்கு ரொட்டியும் (அப்பமும்) இறைச்சியும் கொடுக்க முடியும்” என்றார்கள்.
21 அந்த ஜனங்கள் கூறியவற்றை கர்த்தர் கேட்டார்.
யாக்கோபிடம் தேவன் கோபமடைந்தார்.
தேவன் இஸ்ரவேலிடம் கோபமடைந்தார்.
22 ஏனெனில் ஜனங்கள் அவரை நம்பவில்லை.
தேவன் அவர்களைக் காக்கக்கூடுமென அவர்கள் நம்பவில்லை.
23-24 ஆனால் தேவன் மேலேயுள்ள மேகங்களைத் திறந்தார்.
உணவுக்கான மன்னா அவர்கள் மீது பொழிந்தது.
வானில் கதவுகள் திறக்கப்பட்டு வானிலுள்ள கிடங்கிலிருந்து
தானியங்கள் கீழே கொட்டினாற்போல காட்சி தந்தது.
25 தேவதூதர்களின் உணவை ஜனங்கள் உண்டார்கள்.
அவர்கள் திருப்தியடையும்வரை தேவன் மிகுதியான உணவை அனுப்பினார்.
26-27 தேவன் கிழக்கிலிருந்து ஒரு பெருங்காற்று வீசுமாறு செய்தார்.
காடைகள் மழையைப்போன்று அவர்கள் மீது வீழ்ந்தன.
தேமானிலிருந்து தேவன் காற்றை வீசச்செய்தார்.
பறவைகள் மிகுதியாக இருந்தமையால் நீல வானம் இருண்டது.
28 பாளையத்தின் நடுவே
கூடாரங்களைச் சுற்றிலும் அப்பறவைகள் வீழ்ந்தன.
29 அவர்களுக்கு உண்பதற்கு மிகுதியான உணவு இருந்தது.
ஆனால் தங்களின் பசியால் தாங்களே பாவம் செய்யும்படி தங்களை அவர்கள் ஆட்படுத்திக்கொண்டார்கள்.
30 அவர்கள் தங்கள் பசியை அடக்கிக்கொள்ளவில்லை.
எனவே அவர்கள் பறவைகளின் இரத்தம் வடிந்து போகும்வரை காத்திராது அக்காடைகளை உண்டார்கள்.
31 தேவன் அந்த ஜனங்களிடம் மிகவும் கோபங்கொண்டார்.
அவர்களில் பலரைக் கொன்றுபோட்டார்.
பல ஆரோக்கியமான இளைஞர்கள் இறக்கும்படி செய்தார்.
32 ஆனால் ஜனங்களோ இன்னும் பாவம் செய்தார்கள்!
தேவன் செய்ய வல்ல அற்புதமான காரியங்களை அவர்கள் சார்ந்திருக்கவில்லை.
33 எனவே தேவன் அவர்கள் பயனற்ற வாழ்க்கையைச்
சில அழிவுகளினால் முடிவுறச் செய்தார்.
34 தேவன் சிலரைக் கொன்றபோது மற்றோர் அவரைப் பின்பற்றினார்கள்.
அவர்கள் தேவனுக்குப் பின்னே விரைந்தோடி வந்தார்கள்.
35 தேவனே அவர்கள் கன்மலையென்று அந்த ஜனங்கள் நினைவுக்கூர்ந்தார்கள்.
மிக உன்னதமான தேவன் அவர்களைக் காப்பாற்றினார் என்பதை நினைத்து பார்த்தார்கள்.
36 அவர்கள் அவரை நேசித்ததாக கூறினார்கள், ஆனால் பொய் கூறினார்கள்.
அவர்கள் உறுதியாக இருக்கவில்லை.
37 அவர்கள் இருதயங்கள் உண்மையாகவே தேவனோடு இருக்கவில்லை.
ஆண்டவர் அவர்களோடு செய்த உடன்படிக்கைக்கு நம்பிக்கைக்குரியவர்களாக நடந்துக்கொள்ளவில்லை.
38 ஆனால் தேவன் இரக்கமுள்ளவராயிருந்தார்.
அவர்கள் பாவங்களுக்காக அவர் அவர்களை மன்னித்தார்.
அவர் அவர்களை அழிக்கவில்லை. பலமுறை தேவன் அவரது கோபத்தை அடக்கிக் கொண்டார்.
தேவன் தாம் மிகுந்த கோபமடையாதபடி பார்த்துக்கொண்டார்.
39 அவர்கள் ஜனங்களே என்பதை தேவன் நினைவுக்கூர்ந்தார்.
ஜனங்கள் வீசும் காற்றைப் போன்றவர்கள், பின்பு அது மறைந்துப்போகும்.
40 ஓ! அந்த ஜனங்கள் பாலைவனத்தில் தேவனுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தினார்கள்!
அவருக்கு மிகுந்த விசனமடையச் செய்தார்கள்.
41 மீண்டும் மீண்டும் அந்த ஜனங்கள் தேவனுடைய பொறுமையை சோதித்தார்கள்.
இஸ்ரவேலின் பரிசுத்தரை அவர்கள் உண்மையாகவே புண்படுத்தினார்கள்.
42 தேவனுடைய வல்லமையை அந்த ஜனங்கள் மறந்துவிட்டார்கள்.
பகைவரிடமிருந்து பலமுறை தேவன் அவர்களைக் காத்தார் என்பதை அவர்கள் மறந்தார்கள்.
43 எகிப்தில் ஆண்டவர் நடத்திய அற்புதங்களையும்,
சோவானின் களங்களில் (வயல்களில்) நடந்த அற்புதங்களையும் அவர்கள் மறந்தார்கள்.
44 தேவன் ஆறுகளை இரத்தமாக்கினார்.
எகிப்தியர்கள் அந்த தண்ணீரைப் பருக முடியவில்லை.
45 தேவன் கூட்டமாக வண்டுகளை அனுப்பினார், அவை எகிப்தியரைக் கடித்தன.
தேவன் தவளைகளை அனுப்பினார். அவை எகிப்தியரின் வாழ்க்கையைக் கெடுத்தன.
46 தேவன் அவர்கள் பயிர்களைப் புழு பூச்சிகளுக்குக் கொடுத்தார்.
அவர்களின் பிற தாவரங்களை வெட்டுக்கிளிகளுக்குக் கொடுத்தார்.
47 தேவன் அவர்களின் திராட்சைக் கொடிகளைக் கல்மழையால் அழித்தார்.
அவர்களின் மரங்களை அழிக்கப் பெருங்கல்மழையைப் பயன்படுத்தினார்.
48 கல்மழையால் தேவன் அவர்கள் விலங்குகளைக் கொன்றார்.
அவர்கள் மந்தைகள் (ஆடு, மாடுகள்) மின்னலால் தாக்குண்டு மடிந்தன.
49 தேவன் எகிப்தியருக்கு அவரது கோபத்தைக் காண்பித்தார்.
அவர்களுக்கு எதிராக அழிக்கும் தேவதூதர்களை அனுப்பினார்.
50 தேவன் தமது கோபத்தைக் காட்ட ஒரு வழியைக் கண்டார்.
அவர் அந்த ஜனங்கள் வாழ அனுமதிக்கவில்லை.
கொடிய நோயால் அவர்கள் மடியச் செய்தார்.
51 எகிப்தின் முதற்பேறான ஆண் குழந்தைகளை தேவன் கொன்றார்.
காமின் குடும்பத்தில் முதற்பேறான எல்லாவற்றையும் அவர் கொன்றார்.
52 அப்போது தேவன் இஸ்ரவேலரை ஒரு மேய்ப்பனைப்போல் வழிநடத்தினார்.
அவர் தமது ஜனங்களை மந்தைகளைப் போல் பாலைவனத்தினூடே வழிநடத்திச் சென்றார்.
53 அவர் தமது ஜனங்களைப் பத்திரமாக வழிகாட்டி நடத்தினார்.
தேவனுடைய ஜனங்கள் அஞ்ச வேண்டியது எதுவுமில்லை.
தேவன் அவர்களது பகைவர்களைச் செங்கடலில் அமிழச் செய்தார்.
54 தேவன் அவரது ஜனங்களை அவரது பரிசுத்த தேசத்திற்கு வழிநடத்தினார்.
தமது வல்லமையால் எடுத்துக்கொண்ட மலைக்கு அவர்களை அழைத்துச் சென்றார்.
55 பிற தேசத்தினரை அந்நாட்டிலிருந்து போகும்படியாக தேவன் கட்டாயப்படுத்தினார்.
தேவன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தேசத்தில் அவரவர்களின் பங்கைக் கொடுத்தார்.
தேவன் ஒவ்வொரு இஸ்ரவேல் கோத்திரத்தினருக்கும் வசிப்பதற்கு வீட்டைத் தந்தார்.
56 ஆனால் அவர்கள் மிக உன்னதமான தேவனை சோதித்து அவரை விசனத்திற்குள்ளாக்கினார்கள்.
அந்த ஜனங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை.
57 இஸ்ரவேலர் தேவனிடமிருந்து விலகிச் சென்றார்கள். அவர்கள் தந்தையர் செய்தாற்போன்று அவர்கள் அவருக்கெதிராகத் திரும்பினார்கள்.
எறியும் வில்லைப்போன்று அவர்கள் தங்கள் போக்கினை மாற்றிக்கொண்டார்கள்.
58 இஸ்ரவேலர் உயர்ந்த பீடங்களைக் கட்டி, தேவனை கோபமடையச் செய்தார்கள்.
அவர்கள் பொய் தெய்வங்களுக்குச் சிலைகளை எழுப்பி, தேவனை பொறாமை அடையச் செய்தார்கள்.
59 தேவன் இதைக் கேட்டு மிகுந்த கோபமடைந்தார்.
அவர் இஸ்ரவேலரை முற்றிலும் தள்ளினார்.
60 தேவன் சீலோவிலுள்ள பரிசுத்தக் கூடாரத்தை விட்டு நீக்கினார்.
ஜனங்களோடு கூட தேவன் அக்கூடாரத்தில் வாழ்ந்திருந்தார்.
61 பிற தேசங்கள் அவரது ஜனங்களைச் சிறை பிடிக்க, தேவன் அனுமதித்தார்.
பகைவர்கள் தேவனுடைய “அழகிய நகையை” எடுத்துக்கொண்டார்கள்.
62 தேவன் அவரது ஜனங்களுக்கெதிராகத் தமது கோபத்தைக் காட்டினார்.
அவர்கள் போரில் கொல்லப்படும்படியாக அனுமதித்தார்.
63 இளைஞர்கள் மரணமடையும்படியாக எரிக்கப்பட்டார்கள்.
அவர்கள் மணக்க வேண்டிய இளம் பெண்கள் திருமணப்பாடல் எதையும் பாடவில்லை.
64 ஆசாரியர்கள் கொல்லப்பட்டார்கள்.
ஆனால் அவர்களின் விதவைகள் அவர்களுக்காக அழவில்லை.
65 இறுதியாக, தூக்கத்திலிருந்து விழித்தெழும் ஒரு மனிதனைப்போல நம் ஆண்டவர் எழுந்திருந்தார்.
அவர் மிகுதியாகத் திராட்சைரசத்தைப் பருகிய வீரனைப்போல காணப்பட்டார்.
66 தேவன் தமது பகைவர்களை பின்வாங்கச் செய்து, அவர்களை முறியடித்தார்.
தேவன் தமது பகைவர்களைத் தோற்கடித்து, என்றென்றும் அவர்கள் அவமானமுறும்படி செய்தார்.
67 ஆனால் தேவன் யோசேப்பின் குடும்பத்தை நிராகரித்தார்.
எப்பிராயீமின் குடும்பத்தாரை தேவன் ஏற்கவில்லை.
68 இல்லை, தேவன் யூதாவின் கோத்திரத்தினரைத் தேர்ந்தெடுத்தார்.
தேவன், தாம் நேசிக்கும் சீயோன் மலையைத் தேர்ந்துக் கொண்டார்.
69 அம்மலையின் மேல் உயரத்தில் தேவன் அவரது பரிசுத்த ஆலயத்தைக் கட்டினார்.
பூமியைப் போல என்றென்றும் இருக்கும்படியாக தேவன் அவரது பரிசுத்த ஆலயத்தைக் கட்டினார்.
70 தனது விசேஷ பணியாளாக தேவன் தாவீதைத் தேர்ந்தெடுத்தார்.
தாவீது ஆட்டுத் தொழுவங்களைக் காத்துக்கொண்டிருந்தான்.
ஆனால் தேவன் அவனை அப்பணியிலிருந்து அகற்றினார்.
71 தாவீது மந்தை ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் தேவன் அவனை அவ்வேலையிலிருந்து அகற்றினார்.
தேவன் அவரது ஜனங்களைக் கவனிக்கும் வேலையை தாவீதுக்குக் கொடுத்தார்.
தேவனுடைய சொத்தாகிய யாக்கோபின் ஜனங்களையும் இஸ்ரவேலரின் ஜனங்களையும் கவனிக்கும் பொறுப்பை அவனுக்கு அளித்தார்.
72 தாவீது அவர்களை பரிசுத்த இருதயத்தோடும்,
மிகுந்த ஞானத்தோடும் வழிநடத்தினான்.
10 சகோதர சகோதரிகளே, அனைத்து யூதர்களும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதையே நான் மிகவும் விரும்புகிறேன். அதைத் தான் தேவனிடம் வேண்டி பிரார்த்தனை செய்கிறேன். 2 யூதர்களைப் பற்றி என்னால் இவ்வாறு கூற முடியும். அவர்கள் உண்மையில் தேவனைப் பின்பற்ற விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்குச் சரியான வழி தெரியவில்லை. 3 தேவனுக்கேற்ற நீதிமான்களாகும் தேவனுடைய வழி அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் தம் சொந்த வழியிலேயே நீதிமான்களாக முயன்றனர். எனவே அவர்கள் தேவனுடைய வழியை ஏற்றுக்கொள்ளவில்லை. 4 கிறிஸ்து சட்டவிதியின் முடிவாய் இருக்கிறார். அதனால் அவரிடம் நம்பிக்கையாக இருக்கிற எவரும் தேவனுக்கேற்ற நீதிமானாக இயலும்.
5 மோசே சட்டவிதிகளைப் பின்பற்றி நீதிமானாகும் வழியைப் பற்றி எழுதியிருக்கிறார்: “சட்டவிதியைப் பின்பற்றி வாழ நினைக்கிறவன், சட்டவிதியின்படி காரியங்களையும் செய்ய வேண்டும்,” [a] 6 ஆனால் விசுவாசத்தினாலே நீதிமானாவதைப் பற்றி வேதவாக்கியம், “யார் மோட்சத்துக்குப் போகக் கூடியவன் என்று நீ உனக்குள்ளே சொல்லாதே.” (இதற்கு “எவனொருவன் மோட்சத்துக்குப் போய் கிறிஸ்துவை பூமிக்கு அழைத்து வரக்கூடியவன்?” என்று பொருள்) 7 “எவனொருவன் உலகத்துக்கும் கீழே போகக் கூடியவன் என்றும் சொல்லாதே” (இதற்கு “எவனொருவன் கீழே போய் கிறிஸ்துவை மரணத்தில் இருந்து ஏறி வரப்பண்ணுபவன்” என்று பொருள்) என்று எழுதப்பட்டுள்ளது.
8 மேலும் “தேவனுடைய போதனைகள் உங்களுக்கு அருகில் உள்ளது. அவை உங்கள் வாயிலும் இதயத்திலும் உள்ளன” என்றும் எழுதப்பட்டிருக்கின்றது. அப்போதனைகள் மக்களிடம் நாம் சொல்லத்தக்க நம்பிக்கையைப் பற்றிய போதனைகளாகும். 9 உனது வாயால் நீ “இயேசுவே கர்த்தர்” என்று சொல்வாயானால் இரட்சிக்கப்படுவாய். உனது இதயத்தில் நீ “தேவன் இயேசுவை மரணத்திலிருந்து உயிர்த்தெழச் செய்தார்” என்று நம்புவாயானால் இரட்சிக்கப்படுவாய். 10 நாம் இதயத்தில் விசுவாசித்தால் தேவனுக்கேற்ற நீதிமானாகிறோம். நாம் விசுவாசிப்பதை வாயால் சொன்னால் இரட்சிக்கப்படுகிறோம்.
11 “கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிற எவரும் வெட்கப்படுவதில்லை” [b] என்று எழுதப்பட்டிருக்கிறது. 12 இதில் “எவரும்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதற்குக் காரணம் உண்டு. அவர்கள் யூதர்களாகவோ, யூதரல்லாதவர்களாகவோ இருக்கலாம். அவர் ஒருவரே அனைவருக்கும் உரிய கர்த்தராவார். தன்னிடம் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் ஆசீர்வாதம் தருகிறார். 13 “கர்த்தர் மேல் விசுவாசம் வைக்கும் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவர்” [c] என்று எழுதப்பட்டிருக்கிறது.
14 மக்கள் கர்த்தர் மீது விசுவாசம் வைப்பதற்கு முன்னர் அவர்கள் அவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். கர்த்தரிடம் அவர்கள் நம்பிக்கை வைப்பதற்கு முன்னால் அவரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். எனவே மக்கள் கர்த்தரைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு மற்றவர்கள் செய்தியைப் பரப்பவேண்டும். 15 ஒருவன் சென்று அவர்களிடம் செய்தியைப் பரப்புவதற்கு முன்பு, அவன் அனுப்பப்பட வேண்டும். “நற்செய்தியைச் சொல்ல வருகின்றவர்களின் பாதங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன” [d] என்று எழுதப்பட்டிருக்கிறது.
16 நற்செய்தியை யூதர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதைப்பற்றி ஏசாயா, “ஆண்டவரே, அவர்களுக்கு நாங்கள் சொன்னதையெல்லாம் யார் விசுவாசிக்கிறார்கள்?” [e] என்று கேட்கிறார். 17 எனவே நற்செய்தியைக் கேட்பதன் மூலமே விசுவாசம் பிறக்கிறது. ஒருவன் கிறிஸ்துவைப் பற்றிக் கூறும்போது மக்கள் நற்செய்தியைக் கேட்கிறார்கள்.
18 ஆனால் “மக்கள் நற்செய்தியைக் கேட்டதில்லையா?” என்று நான் கேட்கிறேன். ஆமாம்.
“அவர்களின் சப்தங்கள் உலகம் முழுவதும் சென்றன.
அவர்களின் வார்த்தைகள் உலகின் கடைசிவரை பரவின” (A)
என்று எழுதப்பட்டது போல் அவர்கள் கேட்டார்கள்.
19 “இஸ்ரவேல் மக்கள் அதனைப் புரிந்துகொள்ளவில்லையா?” என்று மீண்டும் நான் கேட்கிறேன். ஆமாம். அவர்கள் புரிந்துகொண்டனர்.முதலில் மோசே இதனைச் சொன்னார்.
“நீங்கள் பொறாமைப்படும் வகையில் அந்நாட்டுக்குரிமை இல்லாத மக்களைப் பயன்படுத்துவேன்.
உங்களுக்குக் கோபம் வரும் வகையில் புரிந்துகொள்ள இயலாத நாட்டு மக்களை உபயோகப்படுத்துவேன்.” (B)
20 ஏசாயாவும் தைரியத்தோடு தேவனுக்காக இதைச் சொன்னார்.
“என்னைத் தேடியலையாத மக்களால் கண்டு பிடிக்கப்பட்டேன்.
என்னை விசாரித்து வராதவர்களுக்கு என்னை வெளிப்படுத்தினேன். (C)
21 இவ்வளவு நாட்களும்
“நான் அவர்களுக்காகக் காத்திருந்தேன்.
அவர்களோ எனக்குக் கீழ்ப்படிய மறுத்து விட்டார்கள்.
என்னைப் பின்பற்றவும் மறுத்துவிட்டனர்” (D)
என்று யூத மக்களைப் பற்றி ஏசாயா வழியாக தேவன் கூறுகிறார்.
2008 by World Bible Translation Center