Book of Common Prayer
106 கர்த்தரைத் துதியுங்கள்!
கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்!
தேவனுடைய அன்பு என்றென்றைக்குமுள்ளது!
2 உண்மையாகவே கர்த்தர் எவ்வளவு பெரியவர் என்பதை ஒருவரும் விவரிக்க முடியாது.
ஒருவரும் போதுமான அளவு தேவனை துதித்துவிட இயலாது.
3 தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியானவர்கள்.
எப்போதும் அந்த ஜனங்கள் நல்ல காரியங்களையே செய்கிறார்கள்.
4 கர்த்தாவே, உம்முடைய ஜனங்களிடம் இரக்கமாயிருக்கும்போது
என்னை நினைவுகூர்ந்து இரட்சியும்.
5 கர்த்தாவே, நீர் தேர்ந்தெடுத்த உமது ஜனங்களுக்கு
நீர் செய்யும் நன்மைகளை நானும் பகிர்ந்துக்கொள்ளச் செய்யும்.
என்னையும் உம் ஜனங்களோடு மகிழ்ச்சியாய் இருக்கும்படி செய்யும்.
உம்மைப் புகழ்வதில் என்னையும் உம் ஜனங்களோடு இணையச் செய்யும்.
6 எங்கள் முற்பிதாக்கள் பாவம் செய்ததுப்போல் நாங்களும் பாவம் செய்தோம்.
நாங்கள் தவறு செய்தோம், நாங்கள் தீயவற்றைச் செய்தோம்.
7 கர்த்தாவே எகிப்திலுள்ள எங்கள் முற்பிதாக்கள் நீர் செய்த அதிசயங்களிலிருந்து எதையும் கற்கவில்லை.
செங்கடலின் அருகே எங்கள் முற்பிதாக்கள் உமக்கெதிராகத் திரும்பினார்கள்.
8 ஆனால் தேவன் நம் முற்பிதாக்களை அவரது சொந்த நாமத்தின் காரணமாகக் காப்பாற்றினார்.
அவரது மிகுந்த வல்லமையைக் காட்டும் பொருட்டு தேவன் அவர்களைக் காப்பாற்றினார்.
9 தேவன் கட்டளையிட்டார், செங்கடல் வறண்டு போனது.
ஆழமான கடலினூடே, பாலைவனத்தைப் போன்ற உலர்ந்த தரையின்மேல் தேவன் நம் முற்பிதாக்களை வழிநடத்தினார்.
10 தேவன் நமது முற்பிதாக்களை அவர்கள் பகைவர்களிடமிருந்து காப்பாற்றினார்.
அவர்கள் பகைவரிடமிருந்து தேவன் அவர்களைப் பாதுகாத்தார்.
11 தேவன் அவர்கள் பகைவர்களைக் கடலால் மூடினார்.
அவர்கள் பகைவர்களில் ஒருவன் கூட தப்பவில்லை.
12 அப்போது நம் முற்பிதாக்கள் தேவனை நம்பினார்கள்.
அவர்கள் அவருக்குத் துதிகளைப் பாடினார்கள்.
13 ஆனால் நம் முற்பிதாக்கள் தேவன் செய்த காரியங்களை விரைவில் மறந்துபோனார்கள்.
அவர்கள் தேவனுடைய அறிவுரைக்குச் செவிசாய்க்கவில்லை.
14 பாலைவனத்தில் நம் முற்பிதாக்களுக்குப் பசியுண்டாயிற்று.
மனிதர்களில்லாத இடத்தில் அவர்கள் தேவனைப் பரிசோதித்தார்கள்.
15 ஆனால் தேவனோ நம் முற்பிதாக்களுக்கு அவர்கள் கேட்ட பொருள்களைக் கொடுத்தார்.
கொடிய நோயையும் தேவன் அவர்களுக்குக் கொடுத்தார்.
16 ஜனங்கள் மோசேயிடம் பொறாமை கொண்டார்கள்.
அவர்கள் கர்த்தருடைய பரிசுத்த ஆசாரியனாகிய ஆரோனிடம் பொறாமை கொண்டார்கள்.
17 எனவே தேவன் பொறாமையுள்ள அந்த ஜனங்களைத் தண்டித்தார்.
தரை பிளந்து தாத்தானை விழுங்கியது.
தரை ஒன்று சேர்ந்தபோது அபிராமின் கூட்டத்தாரை மூடிக்கொண்டது.
18 பின்பு ஜனங்கள் கூட்டத்தை நெருப்பு எரித்தது.
அத்தீயோரை நெருப்பு எரித்தது.
19 ஓரேப் மலையில் அந்த ஜனங்கள் பொன்னினால் ஒரு கன்றுக்குட்டியைச் செய்தார்கள்.
அவர்கள் ஒரு சிலையைத் தொழுதுகொண்டார்கள்.
20 அந்த ஜனங்கள் புல் தின்னும் காளையின் சிலைக்காக
மகிமைபொருந்திய தங்கள் தேவனை விட்டுவிட்டார்கள்.
21 தேவன் நமது முற்பிதாக்களைக் காப்பாற்றினார்.
ஆனால் அவர்கள் அவரை முற்றிலும் மறந்துபோனார்கள்.
எகிப்தில் அதிசயங்கள் செய்த தேவனை அவர்கள் மறந்துபோனார்கள்.
22 காமின் தேசத்தில் தேவன் வியக்கத்தக்கக் காரியங்களைச் செய்தார்.
செங்கடலின் அருகே ஆச்சரியமான காரியங்களை தேவன் செய்தார்.
23 தேவன் அந்த ஜனங்களை அழிக்க விரும்பினார்.
ஆனால் அவர் தேர்ந்தெடுத்த மோசே அவரைத் தடுத்தான்.
மோசே தேவன் தேர்ந்தெடுத்த பணியாள்.
தேவன் மிகுந்த கோபங்கொண்டார், ஆனால் மோசே தடுத்து, தேவன் ஜனங்களை அழிக்காதபடி செய்தான்.
24 ஆனால் பின்பு அந்த ஜனங்கள் அற்புதமான கானான் தேசத்திற்குள் நுழைய மறுத்தார்கள்.
தேவன் அத்தேசத்தில் வாழும் ஜனங்களை முறியடிப்பதில் அவர்களுக்கு உதவுவார் என்பதை அவர்கள் நம்பவில்லை.
25 அவர்களின் கூடாரங்களிலிருந்து ஆண்டவருக்கு எதிராகக் குறைகூறி
தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர்.
26 எனவே அவர்கள் பாலைவனத்தில் மடிவார்கள்
என்று தேவன் சபதமிட்டார்.
27 அவர்கள் சந்ததியினரை அந்நியர் தோற்கடிக்க அனுமதிப்பதாக தேவன் கூறினார்.
தேசங்களிலெல்லாம் நம் முற்பிதாக்களைச் சிதறடிப்பதாக தேவன் ஆணையிட்டார்.
28 பின்பு பாகால்பேயோரில், தேவனுடைய ஜனங்கள் பாகாலைத் தொழுதுகொள்ள கூடினார்கள்.
தேவனுடைய ஜனங்கள் தீய விருந்துகளில் கலந்து மரித்தோரைப் பெருமைப்படுத்தும் பலிகளை உண்டார்கள்.
29 தமது ஜனங்களிடம் தேவன் மிகுந்த கோபமடைந்தார்.
தேவன் அவர்களை மிகவும் நோயுறச் செய்தார்.
30 ஆனால் பினெகாஸ் தேவனிடம் ஜெபம் செய்தான்.
தேவன் அந்நோயைத் தடுத்தார்.
31 பினெகாஸ் செய்தது மிக நல்ல காரியம் என்பதை தேவன் அறிந்தார்.
தேவன் நோயைத் தடுத்தார்.
தேவன் இதை என்றென்றைக்கும் நினைவுக்கூருவார்.
32 மேரிபாவில் ஜனங்கள் கோபமடைந்தனர்.
மோசே தவறு செய்வதற்கு ஜனங்கள் காரணமாயினர்.
33 மோசே மிகவும் குழப்பமடையும்படி அந்த ஜனங்கள் செய்தனர்.
எனவே சரியாக சிந்திக்காமல் மோசே பேசினான்.
34 கானானில் வாழும் பிற தேசத்தினரைத் தோற்கடிக்குமாறு கர்த்தர் ஜனங்களுக்குக் கூறினார்.
ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை.
35 அவர்கள் பிற ஜனங்களோடு கலந்தார்கள்.
அந்த ஜனங்கள் செய்தவற்றையெல்லாம் செய்தார்கள்.
36 தேவனுடைய ஜனங்களுக்கு அவர்கள் கண்ணியாக அமைந்தார்கள்.
பிறஜனங்கள் தொழுதுகொண்ட தெய்வங்களை அவர்களும் தொழுதுகொள்ளத் தொடங்கினார்கள்.
37 தேவனுடைய ஜனங்கள் தங்கள் சொந்த பிள்ளைகளையே கொன்று
பிசாசிற்குக் காணிக்கையாக்கினார்கள்.
38 தேவனுடைய ஜனங்கள் களங்கமற்றோரைக் கொன்றார்கள்.
அவர்கள் தங்கள் சொந்த பிள்ளைகளையேக் கொன்று அவர்களைப் பொய் தெய்வங்களுக்குக் காணிக்கையாக்கினார்கள்.
39 எனவே தேவனுடைய ஜனங்கள் பிற ஜனங்களின் பாவங்களால் அழுக்கடைந்தார்கள்.
தேவனுடைய ஜனங்கள் தங்கள் தேவனிடம் அவநம்பிக்கை கொண்டு, பிறர் செய்த காரியங்களையேச் செய்தார்கள்.
40 தேவன் அவரது ஜனங்களிடம் கோபங்கொண்டார்.
தேவன் அவர்களிடம் வெறுப்படைந்தார்.
41 தேவன் அவரது ஜனங்களைப் பிற தேசத்தாரிடம் கொடுத்தார்.
தேவன் அவர்களது பகைவர்கள் அவர்களை ஆளுமாறு செய்தார்.
42 தேவனுடைய ஜனங்களின் பகைவர்கள் அவர்களை அடக்கியாண்டு
அவர்களின் வாழ்க்கை கடினமாகும்படி செய்தார்கள்.
43 தேவன் அவரது ஜனங்களைப் பலமுறை காப்பாற்றினார்.
ஆனால் அவர்கள் தேவனுக்கெதிராகத் திரும்பி, தாங்கள் விரும்பியவற்றையெல்லாம் செய்தார்கள்.
தேவனுடைய ஜனங்கள் பற்பல தீயகாரியங்களைச் செய்தார்கள்.
44 ஆனால் தேவனுடைய ஜனங்கள் துன்பத்திலிருந்தபோதெல்லாம் தேவனிடம் உதவிக்காக ஜெபித்தனர்.
ஒவ்வொரு முறையும் தேவன் அவர்கள் ஜெபங்களுக்குச் செவிகொடுத்தார்.
45 தேவன் எப்போதும் அவரது உடன்படிக்கையை நினைவுக்கூர்ந்து
தமது மிகுந்த அன்பினால் அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்.
46 பிற தேசத்தார் அவர்களைச் சிறைவாசிகளாக்கினார்கள்.
ஆனால் தம் ஜனங்களிடம் அவர்கள் இரக்கம் காட்டும்படி தேவன் செய்தார்.
47 நம் தேவனாகிய கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்!
தேவன் அத்தேசங்களிலிருந்து மீண்டும் நம்மை அழைத்து வந்தார்.
எனவே நாம் அவரது பரிசுத்த நாமத்தைத் துதிப்போம்,
எனவே நாம் அவருக்குத் துதிகளைப் பாடுவோம்.
48 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிக்கப்படட்டும், தேவன் எப்போதும் வாழ்கிறவர்.
அவர் என்றென்றும் வாழ்வார்.
எல்லா ஜனங்களும், “ஆமென்!
கர்த்தரைத் துதியுங்கள்” என்று சொல்லக்கடவர்கள்.
கர்த்தரிடம் திரும்பு
14 இஸ்ரவேலே, நீ விழுந்தாய், தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தாய். எனவே உனது தேவனாகிய கர்த்தரிடம் திரும்பி வா. 2 நீ சொல்லப் போவதைப் பற்றி நினைத்துப் பார். கர்த்தரிடம் திரும்பி வா. அவரிடம்,
“எங்கள் பாவங்களை எடுத்துவிடும்.
நாங்கள் செய்யும் நன்மைகளை ஏற்றுக்கொள்ளும்.
நாங்கள் எங்கள் உதடுகளிலிருந்து துதிகளை செலுத்துகிறோம்.
3 அசீரியா எங்களைக் காப்பாற்றாது.
நாங்கள் போர்க் குதிரைகளில் சவாரி செய்யமாட்டோம்.
நாங்கள் மீண்டும் ஒருபோதும்
‘எங்கள் தேவன்’
என்று எங்கள் கைகளால் செய்யப்பட்டப் பொருட்களைக் கூறமாட்டோம்.
ஏனென்றால் நீர் ஒருவர் தான் அனாதைகள் மீது இரக்கங்காட்டுகிறவர்.”
கர்த்தர் இஸ்ரவேலை மன்னிப்பார்
4 கர்த்தர் கூறுகிறார்:
“என்னைவிட்டு அவர்கள் விலகியதை நான் மன்னிப்பேன்.
நான் அவர்களைத் தடையின்றி நேசிப்பேன்.
ஏனெனில் அவர்களுடன் கோபங்கொண்டதை நிறுத்திவிட்டேன்.
5 நான் இஸ்ரவேலுக்குப் பனியைப் போலிருப்பேன்.
இஸ்ரவேல் லீலிப் புஷ்பத்தைப் போன்று மலருவான்.
அவன் லீபனோனின் கேதுரு மரங்களைப்போன்று வளருவான்.
6 அவனது கிளைகள் வளரும்.
அவன் அழகான ஒலிவ மரத்தைப் போன்றிருப்பான்.
அவன் லீபனோனின் கேதுரு மரங்களிலிருந்து வரும்
இனிய மணத்தைப் போன்று இருப்பான்.
7 இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் எனது பாதுகாப்பின் கீழ் வாழ்வார்கள்.
அவர்கள் தானியத்தைப் போன்று வளருவார்கள்.
அவர்கள் திராட்சைக் கொடியைப் போன்று மலருவார்கள்.
அவர்கள் லீபனோனின் திராட்சைரசம் போல் இருப்பார்கள்.”
கர்த்தர் விக்கிரகங்களைப் பற்றி இஸ்ரவேலை எச்சரிக்கிறார்
8 “எப்பிராயீமே, நான் (கர்த்தர்) இனி விக்கிரகங்களோடு எந்தத் தொடர்பும் கொள்ளமாட்டேன்.
நான் ஒருவனே உங்களது ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறவர்.
நான் ஒருவனே உன்னைக் கவனித்து வருபவர். நான் எப்பொழுதும் பசுமையாக இருக்கும் தேவதாரு மரத்தைப் போன்றவர்.
உன் கனி என்னிடமிருந்து வருகிறது.”
இறுதி அறிவுரை
9 அறிவுள்ள ஒருவன் இவற்றைப் புரிந்துக்கொள்கிறான்.
விழிப்புள்ள ஒருவன் இவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும்.
கர்த்தருடைய வழிகள் சரியாக இருக்கின்றன.
அவற்றில் நல்லவர்கள் நடப்பார்கள். பாவிகளோ அவற்றில் இடறிவிழுந்து மரிப்பார்கள்.
பவுலும்-யூதத்தலைவர்களும்
30 மறுநாள் யூதர்கள் பவுலுக்கு எதிராகப் பேசும் உறுதியான காரணத்தைக் கண்டறிய அந்த அதிகாரி முடிவு செய்தான். எனவே தலைமை ஆசாரியரையும் யூதர்களையும் அழைத்து பவுலின் விலங்குகளைக் கழற்றக் கட்டளையிட்டான். பின் பவுலை வெளியே அழைத்து வந்து, அக்கூட்டத்தின் முன்பாக நிறுத்தினான்.
23 யூத சங்கக் கூட்டத்தினரைப் பார்த்துப் பவுல், “சகோதரர்களே! தேவனுக்கு முன்பாக நல்ல வகையில் என் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். சரியென்று நான் நினைத்ததையே எப்போதும் செய்துகொண்டிருக்கிறேன்” என்றான். 2 தலைமை ஆசாரியனான அனனியா அங்கிருந்தான். பவுல் கூறுவதைக் கேட்ட அனனியா, பவுலின் அருகே நின்ற மனிதரை நோக்கிப் பவுலின் வாயில் அடிக்குமாறு கூறினான். 3 பவுல் அனனியாவைப் பார்த்து, “தேவன் உன்னையும் அடிப்பார்! அழுக்கான சுவர் வெள்ளையடிக்கப்பட்டது போன்று நீ காணப்படுகிறாய்! நீ அங்கு அமர்ந்து மோசேயின் சட்டப்படி என்னை நியாயந்தீர்க்கிறாய். ஆனால் என்னை அடிக்குமாறு அவர்களிடம் கூறிக்கொண்டிருக்கிறாய். அது மோசேயின் சட்டத்திற்கு எதிரானது” என்றான்.
4 பவுலின் அருகில் நின்றிருந்த மனிதர்கள் அவனை நோக்கி, “தேவனுடைய தலைமைஆசாரியனிடம் நீ இவ்வாறு பேசக்கூடாது. நீ அவரை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறாய்!” என்றனர்.
5 பவுல், “சகோதரர்களே, இம்மனிதன் தலைமை ஆசாரியன் என்பது எனக்குத் தெரியாது. வேதவாக்கியங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, ‘உன் மக்களின் தலைவர்களைக் குறித்துத் தீயவற்றைக் கூறலாகாது’ [a] என்று எழுதப்பட்டள்ளது” என்றான்.
6 அக்கூட்டத்தில் சிலர் சதுசேயராகவும், சிலர் பரிசேயராகவும் இருந்தார்கள். எனவே பவுலுக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. அவன் அவர்களிடம் உரக்க, “எனது சகோதரரே, நான் ஒரு பரிசேயன். எனது தந்தையும் ஒரு பரிசேயர். மரணத்திலிருந்து மக்கள் எழுவர் என்று நான் நம்புவதால் என்னை இங்கு நியாயந்தீர்க்கின்றனர்!” என்றான்.
7 பவுல் இதைக் கூறியதும், சதுசேயருக்கும் பரிசேயருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. குழுவில் ஒரு பிரிவினை ஏற்பட்டது. 8 (மக்கள் இறந்தபிறகு, மீண்டும் வாழ இயலாது என்று சதுசேயர் நம்புகிறார்கள். தேவதூதர்களோ, ஆவிகளோ இருப்பதில்லை என்று சதுசேயர்கள் போதிக்கிறார்கள். ஆனால் பரிசேயர்கள் இவற்றையெல்லாம் நம்புகிறார்கள்.) 9 எல்லா யூதர்களும் உரக்கச் சத்தமிட ஆரம்பித்தனர். பரிசேயரான சில வேதபாரகர்கள் எழுந்து நின்று, இவ்வாறு விவாதித்தனர், “நாங்கள் இந்த மனிதனிடம் எந்தக் குற்றத்தையும் காணவில்லை. தமஸ்குவுக்கு வரும் வழியில் தேவதூதனோ ஆவியோ அவனோடு பேசியிருக்க வேண்டும்!” என்றனர்.
10 விவாதம் சண்டையாக மாறிற்று. யூதர்கள் பவுலை நார் நாராகக் கிழித்து விடுவார்கள் என்று அதிகாரி அஞ்சினான். எனவே அவன் கீழே சென்று யூதர்களிடமிருந்து பவுலை விலக்கி அழைத்து வந்து படைக் கூடத்தில் வைத்திருக்குமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.
11 மறுநாள் இரவு கர்த்தர் பவுலின் அருகே வந்து நின்றார். அவர், “தைரியமாக இரு. என்னைக் குறித்து எருசலேமின் மக்களுக்கு நீ கூறியிருக்கிறாய். நீ ரோமுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்கு என்னைக் குறித்துச் சொல்லவேண்டும்” என்றார்.
39 இயேசு அவர்களுக்கு ஓர் உவமையைக் கூறினார். “ஒரு குருடன் இன்னொரு குருடனுக்கு வழிகாட்ட முடியுமா? இல்லை. இருவரும் குழிக்குள் விழுவார்கள். 40 ஆசிரியரைக் காட்டிலும் மாணவன் நன்கு கற்றுத் தேர்ந்தபோது, தனது ஆசிரியரைப்போல் விளங்குவான்.
41 “உன் கண்ணில் இருக்கிற பெரிய மரத்துண்டைக் கவனிக்க முடியாதபோது, உன் சகோதரன் கண்ணில் இருக்கிற சிறு தூசியை நீ கவனிப்பது ஏன்? 42 நீ உன் சகோதரனை நோக்கி, ‘சகோதரனே! உன் கண்ணில் இருக்கிற சிறு தூசியை எடுத்துப் போடட்டுமா?’ என்கிறாய். ஏன் இதைச் சொல்கிறாய்? நீ உன் கண்ணில் இருக்கிற பெரிய மரத்துண்டைப் பார்ப்பதில்லை. நீ வேஷமிடுகின்றாய். முதலில் உன் கண்ணில் இருக்கும் மரத்துண்டை எடுத்துவிடு. அப்போது உன் சகோதரன் கண்ணிலிருக்கும் தூசியை எடுத்துப்போடுவதற்கு நீ தெளிவாகப் பார்க்க முடியும்.
இருவகைப் பழங்கள்(A)
43 “ஒரு நல்ல மரம் கெட்ட பழத்தைக் கொடுக்காது. அவ்வாறே ஒரு கெட்ட மரமும் நல்ல பழத்தைக் கொடுக்காது. 44 ஒவ்வொரு மரமும் அது கொடுக்கிற பழத்தினால் அறியப்படும். முட்செடிகளில் இருந்து மக்கள் அத்திப் பழங்களைச் சேர்ப்பதில்லை. புதர்களிலிருந்து திராட்சைப் பழங்களை அவர்கள் பெறுவதில்லை. 45 நல்ல மனிதனின் இதயத்தில் நல்ல காரியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். எனவே அவன் இதயத்தில் இருந்து நல்ல காரியங்களையே வெளிப்படுத்துவான். ஆனால், தீய மனிதனின் இதயத்தில் தீய காரியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். எனவே அவன் தீய காரியங்களை வெளிப்படுத்துவான். ஏனெனில் ஒருவனின் வாய் வழியே வெளிப்படும் வார்த்தைகள் அவனுடைய இதயத்தில் இருப்பவற்றின் வெளிப்பாடே ஆகும்.
இருவகை மனிதர்கள்(B)
46 “நான் கூறுவதை நீங்கள் செய்யாமல் என்னை ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று ஏன் அழைக்கிறீர்கள்? 47 என்னிடம் வந்து, என் போதனைகளைக் கேட்டு, அதன்படி கீழ்ப்படிகிற ஒவ்வொரு மனிதனும், 48 வீட்டைக் கட்டுகிற ஒரு மனிதனைப் போல் இருக்கிறான். அவன் ஆழமாகத் தோண்டி, உறுதியான பாறையின் மீது அவனுடைய வீட்டைக் கட்டுகிறான். வெள்ளப்பெருக்கின்போது, அவ்வீட்டை வெள்ளம் அடித்துச் செல்ல முற்படும். ஆனால் வெள்ளப்பெருக்கு அவ்வீட்டை அசைக்க முடியாது. ஏனெனில் அவ்வீடு உறுதியாகக் கட்டப்பட்டுள்ளது.
49 “ஆனால் என் வார்த்தையைக் கேட்டு, அவற்றின்படி செய்யாத ஒவ்வொரு மனிதனும் பாறையின் மேல் தன் வீட்டைக் கட்டாத மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான். வெள்ளப் பெருக்கின்போது அவ்வீடு எளிதில் இடிந்து போகும். அவ்வீடு முழுக்க நாசமாகிவிடும்” என்றார்.
2008 by World Bible Translation Center