Old/New Testament
சமாரியாவும் இஸ்ரவேலும் தண்டிக்கப்பட வேண்டும்
1 கர்த்தருடைய வார்த்தை மீகாவிடம் வந்தது. இது யோதாம், ஆகாஸ், எசேக்கியா எனும் அரசர்களின் காலங்களில் நிகழ்ந்தது. இவர்கள் யூதாவின் அரசர்கள். மீகா, மொரேசா என்னும் ஊரைச் சேர்ந்தவன். மீகா இந்தத் தரிசனத்தைச் சமாரியாவையும் எருசலேமையும் குறித்துப் பார்த்தான்.
2 அனைத்து ஜனங்களே, கவனியுங்கள்!
பூமியே அதிலுள்ள உயிர்களே, கவனியுங்கள்,
எனது கர்த்தராகிய ஆண்டவர் அவரது பரிசுத்த ஆலயத்திலிருந்து வருவார்.
எனது ஆண்டவர் உங்களுக்கு எதிரான சாட்சியாக வருவார்.
3 பாருங்கள், கர்த்தர் அவரது இடத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறார்.
அவர் இறங்கி வந்து பூமியிலுள்ள உயர்ந்த மேடைகளை மிதிப்பார்.
4 அவருக்குக் கீழே மலைகள் உருகும்.
அவை நெருப்புக்கு முன்னாலுள்ள
மெழுகைப் போன்று உருகும்.
பள்ளத்தாக்குகள் பிளந்து மலைகளிலிருந்து தண்ணீர் பாயும்.
5 ஏனென்றால், இதற்கு காரணம் யாக்கோபின் பாவம்.
இதற்கு இஸ்ரவேல் நாடு செய்த பாவங்களும் காரணமாகும்.
சமாரியா, பாவத்தின் காரணம்
யாக்கோபு செய்த பாவத்திற்கு காரணம் என்ன?
அது சமாரியா,
யூதாவிலுள்ள, வழிபாட்டிற்குரிய இடம் எங்கே?
அது எருசலேம்.
6 எனவே, நான் சமாரியாவை வயலிலுள்ள குன்றுகளின் குவியலாக்குவேன்.
அது திராட்சைக் கொடி நடுவதற்கான இடம்போல் ஆகும்.
நான் சமாரியவின் கற்களைப் பள்ளத்தாக்கில் புரண்டு விழப் பண்ணுவேன்.
நான் அவளது அஸ்திபாரங்களைத் தவிர எல்லாவற்றையும் அழிப்பேன்.
7 அவளது அனைத்து விக்கிரகங்களும் துண்டுகளாக உடைக்கப்படும்.
அவள் வேசித்தனத்தின் சம்பளம் (விக்கிரகங்கள்) நெருப்பில் எரிக்கப்படும்.
நான் அவளது அந்நிய தெய்வங்களின் விக்கிரகங்கள் அனைத்தையும் அழிப்பேன்.
ஏனென்றால் சமாரியா எனக்கு விசுவாசமற்ற முறையில் அச்செல்வத்தைப் பெற்றாள்.
எனவே அவை எனக்கு விசுவாசம்
அற்றவர்களாலேயே எடுத்துக்கொள்ளப்படும்.
மீகாவின் பெருந்துக்கம்
8 என்ன நிகழும் என்பதைப்பற்றி நான் மிகவும் துக்கப்படுவேன்.
நான் பாதரட்சையும் ஆடையும் இல்லாமல் போவேன்.
நான் ஒரு நாயைப்போன்று அழுவேன்.
நான் ஒரு பறவையைப்போன்று துக்கங்கொள்வேன்.
9 சமாரியாவின் காயங்கள் குணப்படுத்தப்பட இயலாது.
அவளது (பாவம்) நோய் யூதா முழுவதும் பரவியிருக்கிறது.
இது எனது ஜனங்களின் நகரவாசலை அடைந்திருக்கிறது.
எருசலேமின் எல்லா வழிகளிலும் பரவியிருக்கிறது,
10 இதனைக் காத்திடம் சொல்லவேண்டாம்.
அக்கோ என்னுமிடத்தில் கதறவேண்டாம்.
பெத்அப்ராவிலே
புழுதியில் நீ புரளு.
11 சாப்பீரில் குடியிருக்கிறவர்களே வெட்கத்துடன்
நிர்வாணமாய் உங்கள் வழியிலே போங்கள்.
சாயனானில் குடியிருக்கிறவர்கள் வெளியே வரமாட்டார்கள்.
பெத்ஏசேலில் வாழ்கிறவர்கள் கதறுவார்கள்.
உங்களின் உதவியை எடுத்துக்கொள்வார்கள்.
12 மாரோத்தில் குடியிருக்கிறவளே பலவீனமாகி
நல்ல செய்தி வருமென்று எதிர்ப்பார்த்திருந்தார்கள்.
ஏனென்றால், துன்பமானது
கர்த்தரிடமிருந்து எருசலேமின் நகர வாசலுக்கு வந்திருக்கிறது.
13 லாகீசில் குடியிருக்கிறவளே,
உங்கள் இரதத்தில் விரைவாகச் செல்லும் குதிரையைப் பூட்டு.
சீயோனின் பாவம் லாகீசில் தொடங்கியது.
ஏனென்றால் நீ இஸ்ரவேலின் பாவங்களைப் பின்பற்றுகிறாய்.
14 எனவே, நீ மோர்ஷேக் காத்தினிடத்திற்கு கட்டாயமாக பிரிவு உபச்சார
வெகுமதிகளைக் கொடுக்கவேண்டும்.
அக்சீபின் வீடுகள் இஸ்ரவேல் அரசர்களிடம்
வஞ்சனை செய்யும்.
15 மரேஷாவில் குடியிருக்கிறவளே,
நான் உனக்கு எதிராக ஒருவனைக் கொண்டு வருவேன்.
அவன் உனக்கு உரிய பொருட்களை எடுத்துக்கொள்வான்.
அதுல்லாமிற்குள் இஸ்ரவேலின் மகிமை (தேவன்) வரும்.
16 எனவே உனது முடியை வெட்டு, உன்னை மொட்டையாக்கிக்கொள்.
ஏனென்றால், நீ அன்பு செலுத்துகிற உன் குழந்தைகளுக்காக நீ கதறுவாய்.
நீ கழுகைப்போன்று முழுமொட்டையாக இருந்து உனது துக்கத்தைக் காட்டு.
ஏனென்றால் உனது பிள்ளைகள் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.
ஜனங்களின் தீயத்திட்டங்கள்
2 பாவம் செய்யத் திட்டமிட்டிருந்த ஜனங்களுக்குத்
துன்பங்கள் வரும்.
அந்த ஜனங்கள் தம் படுக்கையில் கிடந்த வண்ணம் தீய திட்டங்களைத் தீட்டினார்கள்.
பிறகு காலை வெளிச்சம் வந்ததும் தங்களது திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தனர்.
ஏனென்றால், அவர்களுக்குத் தாங்கள் விரும்பியதைச் செய்யும் வல்லமை இருந்தது.
2 அவர்கள் வயல்களை விரும்பினார்கள்,
எடுத்துக்கொண்டனர்.
அவர்கள் வீடுகளை விரும்பினார்கள்,
அதை எடுத்துக்கொண்டனர்.
அவர்கள் ஒரு மனிதனை ஏமாற்றி அவனது வீட்டை எடுத்தனர்.
அவர்கள் ஒரு மனிதனை ஏமாற்றி அவனது நிலத்தை எடுத்தனர்.
அந்த ஜனங்களைத் தண்டிக்கக் கர்த்தருடைய திட்டங்கள்
3 அதனால், கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்:
“பார், நான் இந்தக் குடும்பத்திற்கு எதிராக துன்பத்தைக் கொடுக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது.
நீங்கள் வீண் பெருமைகொள்வதை விடுவீர்கள்.
ஏனென்றால் தீமைகள் வந்துகொண்டிருக்கின்றன.
4 பிறகு ஜனங்கள் உன்னைப்பற்றி பாட்டு இயற்றுவார்கள்.
ஜனங்கள் இந்தச் சோகப் பாடலைப் பாடுவார்கள்:
நாங்கள் அழிக்கப்படுகிறோம்.
கர்த்தர் எங்களது நிலத்தை எடுத்துக் அதனை மற்றவர்களுக்குக் கொடுத்தார்.
ஆமாம், அவர் எனது நிலங்களை என்னிடமிருந்து எடுத்தார்.
கர்த்தர் நமது வயல்களைப் பகைவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்திருக்கிறார்.
5 எனவே நாம் நிலத்தை அளந்து, கர்த்தருடைய
ஜனங்களுக்குள் பகிர்ந்துக்கொள்ள இயலாது.”
பிரசங்கம் செய்ய வேண்டாம் என மீகா கேட்டுக்கொள்ளப்படுகிறான்
6 ஜனங்கள் கூறுகிறார்கள்: “எங்களுக்குப் பிரசங்கிக்க வேண்டாம்.
எங்களைப் பற்றிய அந்தத் தீயவற்றைச் சொல்லவேண்டாம்.
எங்களுக்குத் தீயவை எதுவும் ஏற்படாது”
7 ஆனால் யாக்கோபின் ஜனங்களே,
நான் இவற்றை கட்டாயம் சொல்ல வேண்டும்.
கர்த்தர் அவரது பொறுமையை இழந்துக்கொண்டிருக்கிறார்.
ஏனென்றால் நீங்கள் தீமை செய்திருக்கிறீர்கள்.
நீங்கள் சரியானபடி வாழ்ந்தால்
பிறகு நான் உங்களிடம் இனிமையாகப் பேசமுடியும்.
8 ஆனால் என் ஜனங்களுக்கு, அவர்கள் விரோதியைப்போல் ஆகிறார்கள்.
நீங்கள் கடந்து செல்லுகிறவர்களின் ஆடைகளைக் களவாடுகிறீர்கள்.
அந்த ஜனங்கள் தாங்கள் பாதுகாப்பாய் இருப்பதாக நினைக்கிறீர்கள்.
ஆனால் நீங்கள் அவர்களிடமிருந்து யுத்தத்தின் கைதிகளிடமிருந்து எடுப்பது போல பொருள்களைப் பறித்துக்கொள்கிறீர்கள்.
9 நீங்கள் எனது ஜனங்களிலுள்ள பெண்களிடமிருந்து
அழகான வீடுகளை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் எனது செல்வத்தை
அவர்களின் சிறிய பிள்ளைகளிடமிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
10 எழுங்கள், புறப்பட்டுப்போங்கள்.
இது நீங்கள் ஓய்வெடுக்கும் இடமாக இராது. ஏனென்றால், இந்த இடத்தை நீங்கள் அழித்தீர்கள்.
இதனை நீங்கள் அசுத்தம் செய்தீர்கள். எனவே, இது அழிக்கப்படும்.
இது பயங்கரமான அழிவாக இருக்கும்.
11 இந்த ஜனங்கள், நான் சொல்வதைக் கேட்க விரும்புவதில்லை.
ஆனால் ஒருவன் பொய்களைச் சொல்லிக்கொண்டு வந்தால் பிறகு, அவனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
அவர்கள் ஒரு பொய் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொண்டு, அவன் வந்து,
“அப்பொழுது வருங்காலம் நல்லகாலமாக தோன்றும், திராட்சைரசமும் மதுபானமும் ஏராளமாக கிடைக்கும்” என்று சொன்னதும் அவனையும் ஏற்றுக்கொள்வார்கள்.
கர்த்தர் தனது ஜனங்களை ஒன்று சேர்ப்பார்
12 ஆமாம், யாக்கோபின் ஜனங்களே,
நான் உங்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பேன்.
இஸ்ரவேலின் தப்பிப் பிழைத்தவர்கள் அனைவரையும் நான் ஒன்று சேர்ப்பேன்.
நான் அவர்களை ஆட்டு மந்தையில் உள்ள ஆடுகளைப்போன்றும்
தொழுவத்தில் உள்ள மந்தைகளைப்போன்றும்
ஒன்று சேர்ப்பேன்.
பிறகு அந்த இடமானது அநேக ஜனங்களின் ஓசைகளால் நிறைந்திருக்கும்.
13 “தடைகளை உடைப்பவர்” அவர்களை நடத்தி அவர்கள் முன்னே நடந்து செல்கிறார்.
அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் நுழைந்து கடந்து போவார்கள்.
அவர்களின் அரசன் அவர்களின் முன்பு நடந்து போவான்.
கர்த்தர் அவரது ஜனங்களுக்கு முன்னால் இருப்பார்.
இஸ்ரவேலின் தலைவர்கள் தீயச் செய்லகளை செய்தக் குற்றவாளிகள்
3 பிறகு நான் சொன்னேன்: “இஸ்ரவேல் நாட்டின் தலைவர்களே! மற்றும் இஸ்ரவேல் நாட்டின் அதிகாரிகளே,
இப்போது கவனியுங்கள் நீதி என்றால் என்ன என்று உங்களுக்கு தெரிய வேண்டும்.
2 ஆனால் நீங்கள் நல்லவற்றை வெறுத்து தீமையை நேசிக்கிறீர்கள்.
நீங்கள் ஜனங்களின் தோலை உரிப்பீர்கள்.
அவர்களின் எலும்புகளில் உள்ள தசையைப் பிடுங்குவீர்கள்.
3 நீங்கள் எனது ஜனங்களை அழித்தீர்கள்.
அவர்களின் தோலை நீக்குவீர்கள்.
அவர்களின் எலும்பை உடைத்தீர்கள்.
நீங்கள் அவர்களது சதையை பானையில் போடப்படும் மாமிசத்தைப்போன்று துண்டு பண்ணினீர்கள்.
4 எனவே, நீங்கள் கர்த்தரிடம் பிரார்த்தனை செய்யலாம்.
ஆனால் அவர் பதில் சொல்லமாட்டார்.
இல்லை, கர்த்தர் உங்களிடமிருந்து தன் முகத்தை மறைத்துக்கொள்வார்.
ஏனென்றால் நீங்கள் தீயவற்றைச் செய்கிறீர்கள்!”
பொய்த் தீர்க்கதரிசிகள்
5 சில பொய்த் தீர்க்கதரிகள் கர்த்தருடைய ஜனங்களிடம் பொய் சொல்கிறார்கள். கர்த்தர் அந்தத் தீர்க்கதரிசிகளைப் பற்றி இதனைச் சொல்கிறார்.
“இந்தத் தீர்க்கதரிசிகள் வயிற்றுக்காக உழைக்கிறவர்கள்.
உணவு கொடுக்கும் ஜனங்களுக்குச் சமாதானம் வரும் என்று உறுதி கூறுவார்கள்.
ஆனால் உணவு கொடுக்காதவர்களிடத்தில் அவர்களுக்கு எதிராக போர் வரும் என்று உறுதி கூறுவார்கள்.
6 “அதனால்தான் இது உங்களுக்கு இரவைப் போன்றது.
அதனால்தான் உங்களுக்குத் தரிசனம் கிடைப்பதில்லை.
எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதைப் பற்றிய தரிசனத்தை நீங்கள் பார்க்க முடியாது.
எனவே இது உனக்கு அந்தகாரம் போன்றது.
இந்தச் சூரியன் தீர்க்கதரிசிகள் மேல் அஸ்தமித்திருக்கிறது.
அவர்களால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று பார்க்க முடியாது.
எனவே, இது அவர்களுக்கு அந்தகாரம் போன்றிருக்கும்.
7 தீர்க்கதரிசிகள் வெட்கப்படுகிறார்கள்.
திர் காலத்தை குறித்து சொல்கிறவர்கள் அவமானப்படுகிறார்கள்.
அவர்கள் எதுவும் சொல்லமாட்டார்கள்.
ஏனென்றால் தேவன் அவர்களோடு பேசமாட்டார்.”
மீகா ஆண்டவரின் ஒரு நேர்மையான தீர்க்கதரிசி
8 ஆனால் கர்த்தருடைய ஆவி என்னை
நன்மையினாலும், பலத்தினாலும், வல்லமையினாலும் நிரப்பியிருக்கிறது.
ஏன்? அதனால் நான் யாக்கோபிடம் அவனது பாவங்களைச் சொல்லுவேன்.
ஆமாம், நான் இஸ்ரவேலிடம் அவனது பாவங்களைச் சொல்லுவேன்!
இஸ்ரவேலின் தலைவர்கள் பழி சொல்லல்
9 யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேலின் ஆள்வோர்களே, என்னைக் கவனியுங்கள்.
நீங்கள் முறையான வாழ்வை வெறுக்கீறீர்கள்.
ஏதாவது ஒன்று நேராக இருந்தால்
நீங்கள் அதை கோணலாக மாற்றுகிறீர்கள்.
10 நீங்கள் ஜனங்களைக் கொன்று, சீயோனைக் கட்டுகிறீர்கள்.
ஜனங்களை ஏமாற்றி எருசலேமைக் கட்டுகிறீர்கள்.
11 எருசலேமில் உள்ள நீதிபதிகள் வழக்கு மன்றத்தில் யார் வெல்வார்கள்
என்று சொல்ல உதவிட லஞ்சம் பெறுகிறார்கள்.
எருசலேமில் உள்ள ஆசாரியர்கள் ஜனங்களுக்குக் கற்பிப்பதற்கு முன்னால் பணம் பெறுகிறார்கள்.
ஜனங்களின் தீர்க்கதரிசிகளுக்கு எதிர்காலம் பற்றி தெரிந்துக்கொள்வதற்கு முன்னால் பணம் கொடுக்கவேண்டும்.
பிறகு அந்தத் தலைவர்கள் கர்த்தருடைய உதவியை எதிர்ப்பார்க்கிறார்கள்.
அவர்கள், “எங்களுக்கு தீயவை எதுவும் நடக்காது. கர்த்தர் எங்களோடு வாழ்கிறார்” என்றனர்.
12 தலைவர்களே, உங்களால், சீயோன் அழிக்கப்படும்.
இது உழப்பட்ட வயல் போன்றிருக்கும்.
எருசலேம் கற்களின் குவியலாய் மாறும்.
ஆலயம் உள்ள மலைகள் காட்டு முட்புதர்கள் அதிகம் வளர்ந்து வெறுமையான மலையாகும்.
இரண்டு சாட்சிகள்
11 பிறகு கைக்கோல் போன்ற ஒரு அளவு கோல் என்னிடம் கொடுக்கப்பட்டது. அப்போது தேவதூதன் நின்று என்னிடம், “போ, போய் தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும் அளந்து பார், அதற்குள் வழிபட்டுக்கொண்டிருப்பவர்களையும் அளந்து பார். 2 ஆலயத்திற்கு வெளியே இருக்கிற பிரகாரம் யூதர் அல்லாதவர்களுக்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை அளக்காதே. அந்த மக்கள் பரிசுத்த நகரத்தில் 42 மாதங்கள் நடமாடுவார்கள். 3 நான் எனது இரண்டு சாட்சிகளுக்கும் 1,260 நாட்களின் அளவிற்குத் தீர்க்கதரிசனம் சொல்ல அதிகாரம் கொடுப்பேன். அவர்கள் முரட்டுத் துணியாலான ஆடையை அணிந்திருப்பார்கள்” என்றான்.
4 இரண்டு ஒலிவ மரங்களும் பூமியின் கர்த்தருக்கு முன்னிலையில் இருக்கிற இரு விளக்குத்தண்டுகளும் இந்த இரு சாட்சிகளாகும். 5 எவராவது சாட்சிகளைச் சேதப்படுத்த முயற்சித்தால், சாட்சிகளின் வாயில் இருந்து நெருப்பு வந்து எதிரிகளை அழித்துவிடும். எவரொருவர் சாட்சிகளைச் சேதப்படுத்த முயன்றாலும் அவர்கள் இது போலவே அழிக்கப்படுவர். 6 அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லி வருகிற நாள்களில் மழை பெய்துவிடாதபடி வானத்தை அடைக்க அவர்களுக்கு வல்லமை உண்டு. அவர்களுக்குத் தண்ணீரை இரத்தம் ஆக்குகிற வல்லமையும் உண்டு. விரும்பும்போதெல்லாம் அடிக்கடி பூமியைச் சகலவிதமான வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு எல்லாவிதமான அதிகாரமும் உண்டு.
7 அந்த இரு சாட்சிகளும் தங்களது செய்திகளைச் சொல்லி முடித்தபின், பாதாளத்தில் இருந்து வெளிவருகிற மிருகம் அவர்களை எதிர்த்துச் சண்டையிடும். அம்மிருகம் அவர்களைத் தோற்கடித்து அவர்களைக் கொல்லும். 8 பிறகு ஞானார்த்தமாக சோதோம் என்றும் எகிப்து என்றும் அழைக்கப்படுகிற அந்த மகா நகரத்தின் தெருக்களில் அச்சாட்சிகளின் சடலங்கள் கிடக்கும். கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டு, மரணமடைந்த நகரமும் இது தான். 9 ஒவ்வொரு இனத்திலும், பழங்குடியிலும், மொழியிலும், நாட்டிலும் உள்ள மக்கள், மூன்றரை நாட்களுக்கு நகர வீதிகளில் அப்பிணங்களைக் காண்பார்கள். அவற்றை அடக்கம் செய்ய அவர்கள் மறுப்பர். 10 அந்த இருவரும் இறந்துபோனதற்காக, பூமியில் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சி அடைவர். அவர்கள் விருந்து நடத்தி தமக்குள் பரிசுகளை அளிப்பர். அச்சாட்சிகள் உலகில் உள்ள மக்களுக்கு மிகுதியாகத் துன்பம் அளித்ததால்தான் அம்மக்கள் இவ்வாறு நடந்துகொள்வார்கள்.
11 ஆனால் மூன்றரை நாட்களுக்குப்பின், அந்த இருவரின் சடலங்களுக்கும் தேவனிடமிருந்து வெளிப்பட்ட ஓர் உயிர்மூச்சு ஜீவனைக் கொடுத்தது. அவர்கள் எழுந்து நின்றார்கள். இதைப் பார்த்தவர்கள் அச்சத்தால் நடுங்கினர். 12 பின்னர் அவ்விரு சாட்சிகளும் பரலோகத்தில் இருந்து வந்த ஒரு குரலைக் கேட்டனர். அது “இங்கே வாருங்கள்” என்று அழைத்தது. அவர்கள் மேகங்களின் வழியாகப் பரலோகத்துக்குப் போனார்கள். அவர்கள் போவதை அவர்களுடைய பகைவர்கள் கவனித்தனர்.
13 அதே நேரத்தில் ஒரு பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது. அந்நகரின் பத்தில் ஒரு பகுதி அழிந்துபோனது. அந்நில நடுக்கத்தால் ஏழாயிரம் மக்கள் இறந்து போயினர். இறந்து போகாத மற்றவர்கள் மிகவும் பயந்துபோனார்கள். அவர்கள் பரலோகத்தில் உள்ள தேவனை மகிமைப்படுத்தினர்.
14 இரண்டாவது பேராபத்து நடந்து முடிந்தது. மூன்றாம் பேராபத்து விரைவில் வர இருக்கிறது.
ஏழாவது எக்காளம்
15 ஏழாவது தேவதூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது பரலோகத்தில் உரத்த சத்தங்கள் கேட்டன. அவை:
“உலகத்தின் இராஜ்யம் இப்போது கர்த்தருக்கும் அவருடைய கிறிஸ்துவுக்கும் சொந்தமாயிற்று.
அவர் எல்லாக் காலங்களிலும் ஆள்வார்”
என்றன.
16 பிறகு தம் சிம்மாசனங்களில் தேவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்த 24 மூப்பர்களும் தரையில்படும்படி தலைகுனிந்து தேவனை வழிபட்டனர். 17 அந்த மூப்பர்கள்,
“சகல வல்லமையும் வாய்ந்த கர்த்தராகிய தேவனே, நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.
நீரே இருக்கிறவரும் இருந்தவரும் ஆவீர்.
உம் மிகப் பெரிய வல்லமையைப் பயன்படுத்தி
ஆளத் தொடங்கியதால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
18 உலகில் உள்ள மக்கள் எல்லாம் கோபமாக இருந்தனர்.
ஆனால், இது உம் கோபத்துக்குரிய காலம்.
இதுவே இறந்துபோனவர்கள் நியாயம் தீர்க்கப்படும் காலம்.
உங்கள் ஊழியர்களாகிய தீர்க்கதரிசிகளும் உங்கள் பரிசுத்தவான்களும் பலன்பெறும் காலம்.
சிறியோராயினும் பெரியோராயினும் சரி,
உம்மீது மதிப்புடைய மக்கள் சிறப்பு பெறுகிற காலம்.
உலகை அழிக்கிறவர்கள் அழிந்துபோகிற காலமும் இதுவே” என்று சொன்னார்கள்.
19 பிறகு தேவனுடைய ஆலயம் பரலோகத்தில் திறக்கப்பட்டது. அந்த ஆலயத்தில் தேவனுடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது. பின்னர் மின்னலும், இடி முழக்கங்களும், நிலநடுக்கங்களும், பெருங்கல்மழையும் உண்டாயிற்று.
2008 by World Bible Translation Center