Old/New Testament
இஸ்ரவேலும் யூதாவும் பாவஞ்செய்ய தலைவர்களே காரணமாகுதல்
5 “ஆசாரியர்களே, இஸ்ரவேல் தேசமே, அரச குடும்பத்து ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் குற்றவாளிகளாக நியாய்ந்தீர்க்கப்பட்டுள்ளீர்கள்.
நீங்கள் மிஸ்பாவில் கண்ணியைப் போன்றிருந்தீர்கள். நீங்கள் தாபோரில் தரை மேல் விரிக்கப்பட்ட வலையைப் போன்றிருக்கிறீர்கள். 2 நீங்கள் பல தீமைகளைச் செய்திருக்கிறீர்கள். எனவே நான் உங்கள் அனைவரையும் தண்டிப்பேன். 3 நான் எப்பிராயீமை அறிவேன். இஸ்ரவேல் செய்திருக்கிற செயல்களையும் நான் அறிவேன். எப்பிராயீமே, இப்பொழுது நீ ஒரு வேசியைப்போல் நடந்துக்கொள்கிறாய். இஸ்ரவேல் பாவங்களால் அழுக்கடைந்தது. 4 இஸ்ரவேல் ஜனங்கள் பல தீமைகளைச் செய்திருக்கின்றார்கள். அத்தீமைகள் அவர்களை அவர்களுடைய தேவனிடம் மறுபடியும் வராமல் தடுக்கின்றன. அவர்கள் எப்பொழுதும் அந்நிய தெய்வங்களைத் பின்பற்றும் வழிகளையே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கர்த்தரை அறியாதிருந்தார்கள். 5 இஸ்ரவேலின் அகந்தை அவர்களுக்கு எதிரான சாட்சியாக உள்ளது. எனவே, இஸ்ரவேலும் எப்பிராயீமும் தமது பாவங்களில் இடறி விழுவார்கள். ஆனால் யூதாவும் அவர்களோடு இடறி விழும்.
6 “ஜனங்களின் தலைவர்கள் கர்த்தரைத் தேடி போவார்கள். அவர்கள் தங்களோடு ஆடுகளையும் பசுக்கைளையும் எடுத்துச் செல்வார்கள். ஆனால் அவர்கள் கர்த்தரைக் கண்டுக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், அவர் அவர்களைவிட்டு விலகினார். 7 அவர்கள் கர்த்தருக்கு விசுவாசமானவர்களாக இல்லை. அவர்களின் பிள்ளைகள் ஏதோ அந்நியனிடமிருந்து வந்தவர்கள். இப்பொழுது அவர் மீண்டும் அவர்களையும் அவர்களது நாட்டையும் அழிப்பார்.”
இஸ்ரவேலின் அழிவு பற்றிய தீர்க்கதரிசனம்
8 “கிபியாவிலே பூரிகையை ஊதுங்கள்.
ராமாவிலே எக்காளத்தை ஊதுங்கள்.
பெத்தாவேனிலே எச்சரிக்கைக் கொடுங்கள்.
பென்யமீனே, பகைவன் உனக்குப் பின்னால் உள்ளான்.
9 எப்பிராயீம் தண்டனை காலத்தில் வெறுமையாகிவிடும்.
நான் (தேவன்)
இஸ்ரவேல் குடும்பங்களுக்கு
நிச்சயமாக வரப்போவதைக் கூறி எச்சரிப்பேன்.
10 யூதாவின் தலைவர்கள் திருடர்களைப் போன்று
மற்றவர்களின் சொத்துக்களைத் திருட முயற்சிக்கிறார்கள்.
எனவே நான் (தேவன்) தண்ணீரைப்
போன்று எனது கோபத்தை அவர்கள்மீது ஊற்றுவேன்.
11 எப்பிராயீம் தண்டிக்கப்படுவான்.
அவன் திராட்சைப் பழத்தைப் போன்று நசுக்கிப் பிழியப்படுவான்.
ஏனென்றால் அவன் அருவருப்பானவற்றைப் பின்பற்ற முடிவுசெய்தான்.
12 நான் எப்பிராயீமை
பொட்டரிப்பு துணியை அழிப்பது போன்று அழிப்பேன்.
நான் யூதாவை
மரத்துண்டை அழிக்கும் உளுப்பைப் போன்று அழிப்பேன்.
13 எப்பிராயீம் தனது நோயைப் பார்த்தான், யூதா தனது காயத்தை பார்த்தான்.
எனவே அவர்கள் அசீரியாவிடம் உதவிக்குச் சென்றார்கள். அவர்கள் பேரரசனிடம் தங்கள் பிரச்சனைகளைச் சொன்னார்கள்.
ஆனால் அந்த அரசன் உங்களைக் குணப்படுத்த முடியாது.
அவன் உங்கள் புண்களை குணப்படுத்த முடியாது.
14 ஏனென்றால் நான் எப்பிராயீமுக்கு
ஒரு சிங்கத்தைப் போன்றிருப்பேன்.
நான் யூதா நாட்டிற்கு ஒரு இளம் சிங்கத்தைப் போன்று இருப்பேன்.
நான், ஆம், நான் (கர்த்தர்) அவர்களைத் துண்டு துண்டாக்குவேன். நான் அவர்களை எடுத்துச் செல்வேன்.
அவர்களை என்னிடமிருந்து எவரும் காப்பாற்ற முடியாது.
15 அவர்கள் தங்களைக் குற்றவாளிகளென்று ஏற்றுக்கொள்ளும்வரை,
அவர்கள் என்னைத் தேடும்வரை
நான் எனது இடத்திற்குத் திரும்பிப்போவேன்.
ஆம், அவர்கள் தம் ஆபத்தில் என்னைத் தேடக் கடுமையாக முயற்சி செய்வார்கள்.”
கர்த்தரிடம் திரும்பி வருவதன் பலன்கள்
6 “வா, நாம் கர்த்தரிடம் திரும்பிப் போவோம்.
அவர் நம்மைப் புண்படுத்தினார்.
ஆனால் அவர் நம்மைக் குணப்படுத்துவார்.
அவர் நம்மைக் காயப்படுத்தினார்.
ஆனால் அவர் நமக்குக் கட்டுகளைப் போடுவார்.
2 இரண்டு நாட்களுக்குப் பிறகு நமக்கு அவர் திரும்பவும் உயிரைக் கொண்டுவருவார்.
அவர் மூன்றாவது நாள் நம்மை எழுப்புவார்.
பிறகு நாம் அவரருகில் வாழ முடியும்.
3 கர்த்தரைப்பற்றி கற்றுக்கொள்வோம்.
கர்த்தரை அறிந்துக்கொள்ள மிகக் கடுமையாக முயல்வோம்.
அவர் வந்துக்கொண்டிருக்கிறார் என்பதை நாம் காலைநேரம் வந்துக்கொண்டிருக்கிறது என்பதைப் போன்று அறிகிறோம்.
கர்த்தர் நம்மிடம் பூமியை நனைக்க வரும் மழையைப்போன்று வருவார்.”
ஜனங்கள் விசுவாசமற்றவர்கள்
4 “எப்பிராயீமே. நான் உன்னை என்ன செய்வது?
யூதா, நான் உன்னை என்ன செய்வது?
உனது விசுவாசம் காலை மூடுபனியைப் போன்று உள்ளது.
உனது விசுவாசத் தன்மை காலையில் மறையும் பனித்துளியைப் போன்று உள்ளது.
5 நான் தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி
ஜனங்களுக்காக சட்டங்களைச் செய்தேன்.
எனது கட்டளைகளால் ஜனங்கள் கொல்லப்பட்டார்கள்.
ஆனால் அந்த முடிவுகளிலிருந்து நன்மைகள் வரும்.
6 ஏனென்றால் நான் பலிகளை அல்ல.
விசுவாசமுள்ள அன்பையே விரும்புகிறேன்.
நான் ஜனங்கள் தகன பலிகளை கொண்டு வருவதையல்ல
ஜனங்கள் தேவனை அறிந்துகொள்வதையே விரும்புகிறேன்.
7 ஆனால் ஜனங்கள் ஆதாமைப்போன்று உடன்படிக்கையை உடைத்தார்கள்
அவர்கள் தமது நாட்டில் எனக்கு விசுவாசம் இல்லாதவர்களாய் இருந்தார்கள்.
8 கீலேயாத். தீமை செய்கிறவர்களின் நகரமாயிருக்கிறது.
அங்கு ஜனங்கள் மற்றவர்களைத் தந்திரம் செய்து கொல்லுகிறார்கள்.
9 வழிப்பறிக்காரர்கள் மறைந்திருந்து மற்றவர்களைத் தாக்கக் காத்திருக்கிறார்கள்.
அதைப் போலவே, சீகேமுக்குப் போகும் சாலையில் அவ்வழியில் செல்லும்
ஜனங்களைத் தாக்க ஆசாரியர்கள் காத்திருக்கின்றார்கள்.
அவர்கள் தீமைகளைச் செய்திருக்கிறார்கள்.
10 நான் இஸ்ரவேல் நாட்டில் பயங்கரமானவற்றைப் பார்த்திருக்கிறேன்.
எப்பிராயீம் தேவனுக்கு விசுவாசம் இல்லாமல் போனான்.
இஸ்ரவேல் பாவத்தால் அழுக்கானது.
11 யூதா, உனக்கும் அறுவடைகாலம் இருக்கிறது.
நான் எனது ஜனங்களைச் சிறைமீட்டு வரும்போது இது நிகழும்”
7 “நான் இஸ்ரவேலைக் குணப்படுத்துவேன்.
பிறகு ஜனங்கள் எப்பிராயீம் பாவம் செய்ததை அறிவார்கள்.
ஜனங்கள் சமாரியாவின் பொய்களை அறிவார்கள்.
ஜனங்கள் நகரத்திற்குள் வந்துபோகிற திருடர்களைப் பற்றி அறிவார்கள்.
2 அந்த ஜனங்கள் நான் அவர்களின் குற்றங்களை நினைப்பேன் என்பதை நம்பமாட்டார்கள்.
அவர்கள் செய்த கெட்டவைகளெல்லாம் சுற்றிலும் உள்ளன.
நான் அவர்களது பாவங்களைத் தெளிவாகப் பார்க்கமுடியும்.
3 அவர்களது தீமை அவர்களின் அரசனை மகிழ்ச்சிப்படுத்துகிறது.
அவர்களது அந்நியத் தெய்வங்கள் அவர்களின் தலைவர்களை மகிழ்ச்சிப்படுத்தும்.
4 அப்பம் சுடுகிறவன் அப்பம் சுடுவதற்காக அடுப்பை எரிக்கிறான்.
அவன் அடுப்பில் அப்பத்தை வைக்கிறான்.
அப்பத்தின் மாவு புளித்துகொண்டிருக்கும்போது அப்பம் சுடுபவன் அடுப்பில் அளவுக்கு அதிகமான நெருப்பைப் போடமாட்டான்.
ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் அவ்வாறு இல்லை.
இஸ்ரவேல் ஜனங்கள் எப்பொழுதும் தம் நெருப்பை மேலும் சூடாக்குகின்றனர்.
5 நம்முடைய அரசனின் நாளில் அவர்கள் தம் நெருப்பை மேலும் சூடாக்குகின்றனர். அவர்கள் குடி விருந்துகளைக் கொடுக்கிறார்கள்.
தலைவர்கள் திராட்சைரசத்தின் சூட்டால் நோயடைகின்றனர். எனவே அரசர்கள் தேவனைப் பரிகாசம் செய்யும் ஜனங்களோடு சேருகின்றார்கள்.
6 ஜனங்கள் தமது இரகசிய திட்டங்களைப் போடுகிறார்கள்.
அவர்களது இதயங்கள் சூட்டடுப்பைப் போன்று கிளர்ச்சியடைகின்றன.
அவர்களின் ஆர்வம் இரவு முழுவதும் எரியும்.
காலையில் அது நெருப்பாய் எரியும்.
7 அவர்கள் அனைவரும் எரியும் சூட்டடுப்பாய் இருக்கிறார்கள்.
அவர்கள் தமது ஆட்சியாளர்களை அழித்தார்கள்.
அவர்களின் அரசர்கள் அனைவரும் விழுந்தார்கள்.
அவர்களில் ஒருவரும் என்னை உதவிக்கு அழைக்கவில்லை.”
இஸ்ரவேலும் மற்ற தேசங்களும்
8 “எப்பிராயீம் மற்ற தேசங்களோடு கலந்திருக்கிறான்.
எப்பிராயீம் இரண்டு பக்கமும் வேகாத அப்பத்தைப் போன்று இருக்கிறான்.
9 அந்நியர்கள் எப்பிராயீமின் பலத்தை அழிக்கிறார்கள்.
ஆனால் எப்பிராயீம் இதை அறியவில்லை எப்பிராயீம் மேல் நரை மயிர்கள் தெளிக்கப்பட்டுள்ளன.
ஆனால் எப்பிராயீம் இதனை அறியவில்லை.
10 எப்பிராயீமின் பெருமை அவனுக்கு எதிராகப் பேசுகிறது.
ஜனங்களுக்குப் பற்பல தொல்லைகள் இருக்கின்றன.
ஆனால் அவர்கள் இன்னும் தமது தேவனாகிய கர்த்தரிடம் திரும்பிப் போகவில்லை.
ஜனங்கள் உதவிக்கு அவரை நோக்கிப் பாக்கவில்லை.
11 எனவே, எப்பிராயீம் புரிந்துக்கொள்ளாத பேதையான சிறிய புறாவைப் போலானான்.
ஜனங்கள் எகிப்திடம் உதவிக் கேட்டார்கள்.
ஜனங்கள் அசீரியாவிடம் உதவி கேட்டுப்போனார்கள்.
12 அவர்கள் அந்நாடுகளுக்கு உதவிக் கேட்டுப் போனார்கள்.
ஆனால் நான் அவர்களை கண்ணியில் சிக்கவைப்பேன்.
நான் எனது வலையை அவர்கள் மேல் வீசுவேன்.
நான் அவர்களை வானத்துப் பறவைகளைப் போன்று பிடித்து அவர்களை கிழே கொண்டு வருவேன்.
நான் அவர்களை அவர்களது உடன்படிக்கைகளுக்காகத் தண்டிப்பேன்.
13 இது அவர்களுக்குக் கேடாகும். அவர்கள் என்னை விட்டு விலகினார்கள்.
அவர்கள் எனக்கு அடிபணிய மறுத்தார்கள்.
எனவே அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
நான் அந்த ஜனங்களைக் காப்பாற்றினேன்.
ஆனால் எனக்கு எதிராக அவர்கள் பொய்களைப் பேசுகின்றார்கள்.
14 அவர்கள் தம் மனப்பூர்வமாக என்னை எப்பொழுதும் அழைக்கிறதில்லை.
ஆம் அவர்கள் தங்கள் படுக்கையிலிருந்து அழுகின்றார்கள்.
தானியத்திற்காகவும் புதுத் திராட்சை ரசத்திற்காகவும் கேட்கும்போது தங்களைத் தாங்களே வெட்டிக்கொள்கிறார்கள்.
ஆனால் அவர்களின் இதயங்களில் அவர்கள் என்னிடமிருந்து விலகியிருக்கிறார்கள்.
15 நான் அவர்களுக்குப் பயிற்சியளித்து அவர்கள் கைகளை பலப்படுத்தினேன்.
ஆனால் அவர்கள் எனக்கு எதிராகத் தீய திட்டங்களைப் போட்டிருக்கிறார்கள்.
16 ஆனால் அவர்கள் வளைந்த தடியைப் போல இருந்தார்கள்.
அவர்கள் தங்கள் திசைகளை மாற்றிக்கொண்டார்கள்.
ஆனால் என்னிடம் திரும்பி வரவில்லை. அவர்கள் தலைவர்கள் தங்கள் பலத்தைப்பற்றி பெருமை பேசுகிறார்கள்.
ஆனால் அவர்கள் வாள்களால் கொல்லப்டுவார்கள்.
பிறகு எகிப்து ஜனங்கள்
அவர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.”
விக்கிரக ஆராதனை அழிவுக்கு வழி நடத்தும்
8 “உன் வாயிலே எக்காளத்தை வை. எச்சரிக்கை செய். கர்த்தருடைய வீட்டின் மேல் ஒரு கழுகைப் போன்றிரு. இஸ்ரவேலர்கள் எனது உடன்படிக்கையை உடைத்து விட்டார்கள். அவர்கள் எனது சட்டங்களுக்கு அடிபணியவில்லை. 2 அவர்கள், ‘எங்கள் தேவனே, இஸ்ரவேலில் உள்ள நாங்கள் உம்மை அறிவோம்!’ என்று கூப்பிடுகின்றார்கள். 3 ஆனால் இஸ்ரவேல் நன்மைகளை மறுத்தான். எனவே பகைவன் அவனைத் துரத்துகிறான். 4 இஸ்ரவேலர்கள் அவர்களது அரசர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அவர்கள் என்னிடம் ஆலோசனைக்கு வரவில்லை. இஸ்ரவேலர்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அவர்கள் நானறிந்த மனிதர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. இஸ்ரவேலர்கள் தமது வெள்ளியையும். பொன்னையும் பயன்படுத்தி தங்களுக்கு விக்கிரகங்கைளைச் செய்தார்கள். எனவே அவர்கள் அழிக்கப்படுவார்கள். 5-6 சமாரியாவே, கர்த்தர் உனது கன்றுகுட்டியை மறுத்துவிட்டார். தேவன் சொன்னார்: ‘நான் இஸ்ரவேலர்களுக்கு எதிராக மிகவும் கோபத்துடன் இருக்கிறேன்.’ இஸ்ரவேல் ஜனங்கள் தமது பாவத்திற்காகத் தண்டிக்கப்படுவார்கள். யாரோ வேலைக்காரன் அச்சிலைகளைச் செய்தான். அவை தேவன் அல்ல. சமாரியாவின் கன்றுகுட்டி துண்டுதுண்டாக உடைக்கப்படும். 7 இஸ்ரவேலர்கள் காற்றில் விதை விதைக்க முயல்வதுபோன்ற ஒரு முட்டாள்தனமான வேலையைச் செய்தார்கள். ஆனால் அவர்கள் தெல்லைகளை மட்டுமே பெறுவார்கள். அவர்கள் சூறைக் காற்றை அறுவடை செய்வார்கள். வயல்களில் பயிர்கள் வளரும். ஆனால் அது தானியத்தைக் கொடுக்காது. அதில் ஏதாவது தானியம் விளைந்தாலும் அந்நியர்கள் அதனைத் தின்றுவிடுவார்கள்.
8 “இஸ்ரவேல் அழிக்கப்பட்டிருந்தது.
இதனுடைய ஜனங்கள் தங்கள் நாடுகளுக்குள்ளே தேவையற்ற கிண்ணத்தை வெளியே தூக்கி எறியப்படும் கிண்ணத்தைப்போல சிதறடிக்கப்பட்டார்கள்.
9 எப்பிராயீம் அவனுடைய ‘நேசர்களிடம்’ சென்றான்.
அவன் ஒரு காட்டுக்கழுதையைப் போன்று அசீரியாவில் அலைந்துத் திரிந்தான்.
10 இஸ்ரவேல் பல நாடுகளில் உள்ள தனது நேசர்களிடம் சென்றான்.
ஆனால் நான் இஸ்ரவேலர்களை ஒன்று சேர்ப்பேன்.
ஆனால் வல்லமையான அரசன் சுமத்தும் சுமைகளினால்
அவர்கள் சிறிது துன்பப்பட வேண்டும்.
இஸ்ரவேல் தேவனை மறந்து விக்கிரகங்களை வணங்குகிறது
11 எப்பிராயீம் மேலும் மேலும் பலிபீடங்களைக் கட்டியது.
அது பாவமானது.
அப்பலிபீடங்கள் எப்பிராயீமின் பாவப் பலி பீடங்களாக இருந்திருக்கின்றன.
12 நான் எப்பிராயீமிற்காக 10,000 சட்டங்களை எழுதினாலும்,
அவன் அவற்றை யாரோ அந்நியர்களுக்குரியதாகவே கருதுவான்.
13 இஸ்ரவேலர்கள் பலிகளை விரும்புகின்றார்கள்.
அவர்கள் இறைச்சியைப் படைத்து உண்ணுகிறார்கள்.
கர்த்தர் அவர்களது பலிகளை ஏற்றுக்கொள்வதில்லை.
அவர்களது பாவங்களை அவர் நினைவில் வைத்திருக்கிறார்.
அவர்களை அவர் தண்டிப்பார்.
அவர்கள் எகிப்திற்குக் கைதிகளாகக் கொண்டுச் செல்லப்படுவார்கள்.
14 இஸ்ரவேல் அரசர்களின் வீடுகளைக் கட்டினார்கள். ஆனால் இஸ்ரவேல் அதனை உருவாக்கியவரை மறந்துவிட்டது.
இப்போது யூதா கோவில்களைக் கட்டுகின்றது.
ஆனால் நான் யூதவின் நகரங்களுக்கு நெருப்பை அனுப்புவேன்.
நெருப்பானது அதன் கோட்டைகளை அழிக்கும்!”
எபேசு சபைக்கு இயேசுவின் நிருபம்
2 “எபேசு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:
“தனது வலதுகையில் ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டு ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவுகிறவர் உனக்கு இதனைக் கூறுகின்றார்.
2 “நீ என்ன செய்கிறாய் என்று எனக்குத் தெரியும். நீ கடினமாக வேலை செய்கிறாய். உன் செயல்களை நீ விட்டுவிடுவதில்லை. கெட்ட மக்களை நீ ஏற்றுக்கொள்வதில்லை என்று எனக்குத் தெரியும். உண்மையில் அப்போஸ்தலர்கள் இல்லாமல் வெளியே தங்களை அப்போஸ்தலர் என்று சொல்லித் திரிபவர்களை நீ சோதனை செய்திருக்கிறாய். அவர்கள் பொய்யர்கள் என்பதைக் கண்டு பிடித்திருக்கிறாய். 3 நீ விலகிப் போகாமல், தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறாய். நீ என் நிமித்தம் துன்பங்களைத் தாங்கிக்கொள்கிறாய். நீ இவற்றைச் செய்வதில் சோர்வு இல்லாமலும் இருக்கிறாய்.
4 “ஆனால் சில காரியங்களில் உன்மேல் எனக்குக் குறை உண்டு. நீ துவக்க காலத்தில் கொண்டிருந்த அன்பை இப்போது விட்டு விட்டாய். 5 எனவே விழுவதற்கு முன்பு எங்கிருந்தாய் என்பதை நினைத்துப்பார். உன் மனதை மாற்றிக்கொள். துவக்க காலத்தில் செய்தவைகளை தொடர்ந்து செய். நீ மாறாவிட்டால் நான் உன்னிடம் வந்து உனது விளக்குத்தண்டை அதனிடத்தில் இருந்து நீக்கிவிடுவேன். 6 ஆனால் நீ செய்கிறதில் சரியானவையும் உண்டு. நான் வெறுப்பதைப்போலவே நீ நிக்கொலாய்கள் [a] செய்வதை வெறுக்கிறாய்.
7 “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்வதைக் கேட்கிற யாவரும் கவனிக்க வேண்டும். வெற்றி பெறுகிறவனுக்கு தேவனுடைய தோட்டத்திலுள்ள ஜீவவிருட்சத்தின் கனியைச் சாப்பிடும் உரிமையை நான் கொடுப்பேன்.”
சிமிர்னா சபைக்கு இயேசுவின் நிருபம்
8 “சிமிர்னா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:
“துவக்கமும், முடிவுமாயிருப்பவர் இவைகளை உனக்குக் கூறுகின்றார். அவர்தான் இறந்து, மரணத்தில் இருந்து மீண்டும் உயிருடன் எழுந்தவர்.
9 “உங்கள் துன்பங்களை நான் அறிவேன். நீங்கள் ஏழைகள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உண்மையில் நீங்கள் செல்வந்தர்கள். தம்மைத் தாமே யூதர்கள் என்று அழைத்துக்கொள்கிறவர்களால் உங்களைப் பற்றிச் சொல்லப்பட்ட கெட்ட செய்திகளை நான் அறிவேன். ஆனால் உண்மையில் அவர்கள் யூதர்கள் அல்ல. அவர்கள் சாத்தானின் கூட்டத்தினர். 10 உங்களுக்கு நிகழ்வதைக் குறித்து அச்சப்படவேண்டாம். பிசாசு உங்களில் சிலரைச் சிறையில் போடுவான். அவன் உங்களைச் சோதிப்பதற்காகவே அவ்வாறு செய்கிறான். நீங்கள் பத்து நாட்கள் துன்பப்படுவீர்கள். ஆனால் இறக்க வேண்டியதாக இருந்தாலும் உண்மையானவர்களாக இருங்கள். நீ இறுதிவரை உண்மையாயிருந்தால் ஜீவ கிரீடத்தை உனக்குத் தருவேன்.
11 “சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கிற யாவரும் கவனிக்க வேண்டும். ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவன் இரண்டாவது மரணத்தினால் பாதிக்கப்படமாட்டான்.”
பெர்கமு சபைக்கு இயேசுவின் நிருபம்
12 “பெர்கமு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:
“இருபக்கமும் கூர்மையான வாளைக்கொண்டிருக்கிறவர் இதனை உங்களுக்குக் கூறுகிறார்.
13 “நீ எங்கே வாழ்கிறாய் என்று எனக்குத் தெரியும். சாத்தானுடைய சிம்மாசனம் இருக்கிற இடத்தில் நீ இருக்கிறாய். ஆனால் நீ எனக்கு உண்மையானவனாக இருக்கிறாய். அந்திப்பாசின் காலத்திலும் என்மீதுள்ள உன்Ԕ விசுவாசத்தை நீ மறுத்ததில்லை. அந்திப்பா எனது உண்மையுள்ள சாட்சி. அவன் உங்கள் நகரத்தில் கொல்லப்பட்டான். உங்கள் நகரம் சாத்தான் வாழுமிடம்.
14 “ஆனாலும் உனக்கு எதிரான சில காரியங்கள் என்னிடம் உண்டு. உங்கள் கூட்டத்தில் உள்ள சிலர் பிலேயாமின் உபதேசத்தைப் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். பிலேயாம் இஸ்ரவேலைப் பாவத்துக்கு வழி நடத்த பாலாக் என்பவனால் பலவந்தப்படுத்தப்பட்டவனாவான். இதனால் அவர்கள் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதை உண்டு, பாலியல் பாவங்களும் செய்தனர். 15 இதுபோலவே உங்கள் கூட்டத்தில் நிக்கொலாய் மதத்தவர்களின் போதகத்தைப் பின்பற்றுகிறவர்களும் இருக்கிறார்கள். 16 எனவே உங்கள் மனதை மாற்றிக்கொள்ளுங்கள். மாறாவிட்டால் நான் விரைவில் உங்களிடம் வருவேன். என் வாயின் வாளால் அவர்களோடு போரிடுவேன்.
17 “சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கிற யாவரும் கவனிக்கவேண்டும்!
“ஜெயம் பெறுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைக் கொடுப்பேன். [b] அதோடு அவனுக்கு வெள்ளைக் கல்லையும் கொடுப்பேன். அக்கல்லில் புதிய பெயர் எழுதப்பட்டிருக்கும். ஒருவருக்கும் அந்தப் பெயர் தெரியாது. அக்கல்லை எவன் பெறுகிறானோ அவன் ஒருவனே அந்தப் புதிய பெயரை அறிந்துகொள்வான்.”
தியத்தீரா சபைக்கு இயேசுவின் நிருபம்
“தியத்தீரா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:
18 “தேவனின் குமாரன் இவற்றைக் கூறுகிறார். அவர் ஒருவரே அக்கினிபோல ஒளிவிடும் கண்களையும், பிரகாசமான வெண்கலம் போன்ற ஒளி தரும் பாதங்களையும் கொண்டவர். அவர் உனக்குச் சொல்வது இது தான்.
19 “நீ செய்கின்றவற்றை நான் அறிவேன். நான் உன் அன்பையும், விசுவாசத்தையும், சேவையையும், பொறுமையையும் அறிவேன். துவக்கக்காலத்தை விட இப்போது நீ அதிகமாகச் செய்வதையும் நான் அறிவேன். 20 எனினும் உனக்கு எதிரான சில காரியங்கள் என்னிடம் உள்ளன. ஏசபேல் என்னும் பெண்ணுக்குத் தனது விருப்பம்போல வாழ நீ இடம் கொடுக்கிறாய். அவள் தன்னைத் தீர்க்கதரிசி என்கிறாள். அவள் தன் உபதேசத்தால் என் மக்களை என்னைவிட்டுத் தூரமாக்குகின்றாள். அவளால் அவர்கள் பாலியல் பாவங்களைச் செய்கிறார்கள். மற்றும் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதை உண்கிறார்கள். 21 அவள் தன் மனதை மாற்றிக்கொள்ளவும், தன் பாவங்களில் இருந்து விலகவும் நான் அவகாசம் கொடுத்தேன். ஆனால் அவள் மாற விரும்பவில்லை.
22 “எனவே அவளையும், அவளோடு பாவம் செய்தவர்களையும் நான் அவளுடைய படுக்கையில் எறிந்து அவர்களை மிகவும் வருந்தச் செய்வேன். அவளுடைய செய்கைகளிலிருந்து அவர்கள் மாறாவிட்டால். 23 நான் இப்பொழுதே இதனை நிகழ்த்துவேன். அவளைப் பின்பற்றுகிறவர்களையும் நான் கொல்லுவேன். அப்பொழுது எல்லாச் சபைகளும், ‘நான் மக்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் அறிந்துள்ளவர்’ என்பதை அறிவார்கள். உங்களில் ஒவ்வொருவருக்கும் உங்கள் செயல்களுக்கு ஏற்றபலன் தருவேன்.
24 “ஆனால் தியத்தீராவில் உள்ள மற்றவர்கள் சிலர் அவளது போதகத்தைப் பின்பற்றவில்லை. அவர்கள் சொல்லும் சாத்தானின் ஆழமான ரகசியங்களையும் நீ அறிந்திருக்கவில்லை. எனவே உங்கள் மீது இதைத்தவிர வேறு சுமைகளை சுமத்தமாட்டேன். 25 நான் வருகிறவரை இதனையே தொடர்ந்து செய்துவாருங்கள்.
26 “இதில் இறுதிவரை இதுபோல் இருந்து வெற்றி பெறுகிறவர்களுக்கு மற்ற தேசங்களின் மேல் நான் அதிகாரத்தைக் கொடுப்பேன்.”
27 “‘அவன் அவர்களை இரும்புக் கோலால் ஆள்வான்.
மண்பாண்டங்களைப்போல் தூள்தூளாக அவர்களை நொறுக்குவான்.’ (A)
28 “என் பிதாவிடமிருந்து இந்த வல்லமையை நான் பெற்றுக்கொண்டேன். மேலும் நான் அவனுக்கு விடிவெள்ளி நட்சத்திரத்தைக் கொடுப்பேன்.” 29 சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கின்ற யாவரும் கவனிக்க வேண்டும்.
2008 by World Bible Translation Center