Old/New Testament
தங்க விக்கிரகமும் நெருப்புச் சூளையும்
3 நேபுகாத்நேச்சார் அரசனிடம் தங்கத்தினால் செய்த ஒரு விக்கிரகம் இருந்தது. அந்த விக்கிரகம் 60 முழம் உயரமும் 6 முழம் அகலமுமானது. பிறகு அவன் அந்த விக்கிரகத்தைப் பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமவெளியில் நிறுத்தி வைத்தான். 2 பின்னர் அரசன் தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், கருவூலக்காரரையும், ஆலோசகரையும், ஆளுநரையும், நாடுகளிலுள்ள அதிகாரிகள் அனைவரையும் கூடி வருமாறு அழைத்தான். அரசன், அவர்கள் அனைவரும் விக்கிரகத்தின் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று விரும்பினான்.
3 எனவே அவர்களெல்லாம் அரசனான நேபுகாத்நேச்சார் அமைத்திருந்த விக்கிரகத்தின் முன் வந்து நின்றார்கள். 4 பிறகு அரசனுக்காக அறிவிப்பு செய்யும் கட்டியக்காரன் உரத்தக்குரலில், “பல தேசங்களிலிருந்தும், பலமொழி இனங்களிலிருந்தும் வந்துள்ள ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். 5 நீங்கள் எல்லா இசைக்கருவிகளின் சப்தங்களைக் கேட்டதும் பணிந்து வணங்கவேண்டும். எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு மற்றும் மற்ற இசைக்கருவிகளின் ஒலியை கேட்கும்போது, நீங்கள் தங்க விக்கிரகத்தை தொழுதுகொள்ளவேண்டும். அரசனான நேபுகாத்நேச்சார் இந்த விக்கிரகத்தை அமைத்திருக்கிறார். 6 எவனாவது கீழே விழுந்து தங்க விக்கிரகத்தை தொழாமலிருந்தால் அவன் சீக்கிரமாக அதிக வெப்பமுள்ள எரிகிற அக்கினிச் சூளையிலே போடப்படுவான். இது அனைவருக்குமுரிய அரச கட்டளையாகும்” என்றான்.
7 எனவே அவர்கள், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம் முதலான இசைக்கருவிகளின் ஒலியைக் கேட்டதும் மிக விரைவாக கீழே விழுந்து தங்க விக்கிரகத்தைக் தொழுதுகொண்டார்கள். சகல தேசத்தாரும், இனத்தாரும், மொழிக்காரர்களும் கீழே விழுந்து அரசனான நேபுகாத்நேச்சார் நிறுவிய தங்க விக்கிரகத்தைத் தொழுதுகொண்டார்கள்.
8 பின்னர், சில கல்தேயர்கள் அரசனிடம் வந்தனர். அந்த ஆட்கள் யூதர்களுக்கு விரோதமாகப் பேசத்தொடங்கினர். 9 அவர்கள் அரசனான நேபுகாத்நேச்சாரிடம், “அரசே! நீர் என்றும் வாழ்க. 10 அரசரே, நீர் ஒரு கட்டளை கொடுத்தீர். எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகல இசைக் கருவிகளின் ஒலியைக் கேட்டதும் ஒவ்வொருவரும் இந்தத் தங்க விக்கிரகத்தைப் பணிந்து தொழுதுகொள்ளவேண்டும் என்று சொன்னீர். 11 அதோடு, எவனாவது தங்க விக்கிரகத்தைப் பணிந்து தொழுதுகொள்ளாமலிருந்தால் அவன் அதிக வெப்பமுள்ள எரிகிற அக்கினிச் சூளையில் போடப்படுவான் என்றும் நீர் கட்டளையிட்டீர். 12 சில யூதர்கள் அரசரான உமது கட்டளையில் கவனம் செலுத்தாமல் இருக்கின்றனர். நீர் அந்த யூதர்களை பாபிலோன் மாகாணத்தின் முக்கியமான அதிகாரிகளாக ஆக்கினீர். அவர்கள் பெயர்களாவன: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ. அவர்கள் உமது தெய்வத்தைத் தொழுவதில்லை. அவர்கள் உம்மால் நிறுவப்பட்ட தங்க விக்கிரகத்தைப் பணிந்து வணங்கவில்லை” என்று புகார் கூறினார்கள்.
13 நேபுகாத்நேச்சார் மிகவும் கோபங்கொண்டான். அவன் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை அழைத்தான். எனவே அவர்கள் அரசன் முன்பு கொண்டுவரப்பட்டார்கள். 14 நேபுகாத்நேச்சார் அவர்களிடம், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரே நீங்கள் எனது தெய்வத்தைத் தொழவில்லை என்பது உண்மையா? நீங்கள், என்னால் நிறுவப்பட்ட தங்க விக்கிரகத்தைத் தொழவில்லை என்பது உண்மையா? 15 இப்பொழுது நீங்கள் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு ஆகிய இசைக் கருவிகளின் ஒலியைக் கேட்டதும் நான் நிறுவிய தங்க விக்கிரகத்தைப் பணிந்து தொழவேண்டும். நான் செய்திருக்கிற இவ்விக்கிரகத்தை நீங்கள் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது. ஆனால், நீங்கள் இதனைத் தொழாவிட்டால், மிகவும் சூடான எரிகிற அக்கினிச் சூளையில் போடப்படுவீர்கள். பிறகு உங்களை என் அதிகாரத்திலிருந்து எந்தத் தேவனாலும் காப்பாற்ற முடியாது” என்றான்.
16 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அரசனிடம்: “நேபுகாத்நேச்சாரே, நாங்கள் உம்மிடம் இவற்றைப்பற்றி விளக்கிடத் தேவையில்லை. 17 நீர் எங்களை எரிகிற அக்கினி சூளையில் போட்டால் நாங்கள் சேவிக்கிற எங்கள் தேவன் எங்களைக் காப்பாற்றுவார். அவர் விரும்பினால் உமது வல்லமையிலிருந்தும் எங்களைக் காப்பாற்றுவார். 18 ஆனால் எங்களை அவர் காப்பாற்றாவிட்டாலும்கூட, நாங்கள் உமது தெய்வங்களைச் சேவிக்கமாட்டோம். நீர் நிறுவிய தங்க விக்கிரகத்தை தொழமாட்டோம். இது அரசராகிய உமக்குத் தெரிந்திருக்கவேண்டும்” என்றார்கள்.
19 பின்னர் நேபுகாத்நேச்சார் மிகவும் கோபங்கொண்டான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கெதிரான கோபம் அவனது முகத்தில் வெளிப்பட்டது. அவன், வழக்கத்தை விடச் சூளையை ஏழு மடங்கு மிகுதியாகச் சூடாக்கும்படிக் கட்டளையிட்டான். 20 பிறகு நேபுகாத்நேச்சார் தனது வீரர்களில் மிகவும் பலமானவர்களிடம் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை நன்றாகக் கட்டும்படி கட்டளையிட்டான். அரசன் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை அக்கினி சூளையிலே போடும்படி வீரர்களிடம் கட்டளையிட்டான்.
21 எனவே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் கட்டப்பட்டு அக்கினி சூளையிலே போடப்பட்டனர். அவர்கள் சால்வை, நிசார் தலைப்பாகை, மற்றும் ஆடைகளை அணிந்திருந்தனர். 22 அரசன் கட்டளையிடும்போது மிகவும் கோபமுடையவனாக இருந்தான். எனவே அவர்கள் சூளையைச் சீக்கிரமாக சூடாக்கினார்கள். அந்நெருப்பு பலமான வீரர்களையும் எரிக்கும் அளவில் மிகவும் சூடாக இருந்தது. அவர்கள் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைத் தூக்கிச் சென்று அக்கினிச் சூளையில் போடுவதற்கு அருகில் சென்றபோது அவ்வீரர்களை நெருப்பு அழித்துப்போட்டது. 23 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் இறுகக் கட்டப்பட்ட நிலையில் நெருப்பில் விழுந்தனர்.
24 பின்னர் அரசனான நேபுகாத்நேச்சார் குதித்து எழுந்தான். அவன் மிகவும் வியப்புற்று தனது ஆலோசகர்களிடம்: “நாம் மூன்றுபேரை மட்டுமே கட்டி நெருப்பில் போட்டோம். இது சரிதானா?” என்றான்.
அவனது ஆலோசகர்கள்: “ஆம் அரசே” என்றனர்.
25 அரசன் அவர்களிடம், “பாருங்கள், நான்குபேர் நெருப்பிற்குள் நடமாடுவதை நான் பார்க்கிறேன். அவர்கள் கட்டப்பட்டிருக்கவில்லை. அவர்கள் நெருப்பால் எரிக்கப்படவில்லை. நான்காவது ஆள் ஒரு தேவபுத்திரனைப் போன்று இருக்கிறார்” என்றான்.
26 பிறகு நேபுகாத்நேச்சார் அக்கினிச் சூளையின் வாசலருகே சென்று உரத்தகுரலில், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே வெளியே வாருங்கள்! உன்னதமான தேவனுடைய பணியாட்களே, வெளியே வாருங்கள்” என்றான்.
எனவே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் நெருப்பிலிருந்து வெளியே வந்தனர். 27 அவர்கள் வெளியே வரும்போது, அவர்களைச் சுற்றி தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், அரசனின் மந்திரிகளும் சூழ்ந்து நின்றனர். நெருப்பானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைச் சுடாமலிருந்ததை அவர்களால் பார்க்க முடிந்தது. அவர்களின் உடல்கள் வெந்துபோகவில்லை. அவர்களின் தலைமயிர் கருகவில்லை. அவர்களின் சால்வைகள் எரிக்கப்படவில்லை அவர்கள்மேல் அக்கினியின் மணம் வீசவில்லை.
28 பிறகு நேபுகாத்நேச்சார்: “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் தேவனைப் போற்றுங்கள். அவர்களின் தேவன், தூதனை அனுப்பி அவர்களைக் காப்பாற்றிவிட்டார். இந்த மூன்று பேரும் அவர்களின் தேவனை நம்பினார்கள். அவர்கள் எனது கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் மற்ற தெய்வங்களுக்குப் பணிவிடைச் செய்து தொழுவதைவிட மரித்துப்போகத் தயாராக இருந்தனர். 29 எனவே, நான் இப்போது இந்தச் சட்டத்தை ஏற்படுத்துகிறேன். எந்த தேசத்தினராகவும், மொழியினராகவும் உள்ள என் ஜனங்கள் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் தேவனுக்கு எதிராக ஏதாவது சொன்னால் அவர்களைத் துண்டு துண்டாக வெட்டுவேன். அவர்களது வீட்டை எருக்களமாகிப் போடுவேன். வேறு எந்த தேவனும் தம் ஜனங்களை இதுபோல் காப்பாற்ற முடியாது” என்றான். 30 பிறகு அரசன் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைப் பாபிலோன் மாகாணத்தின் முக்கிய அதிகாரிகளாக்கினான்.
நேபுகாத்நேச்சாரின் மரம் பற்றிய கனவு
4 அரசனான நேபுகாத்நேச்சார் உலகமெங்கிலும் வாழும் சகல தேசத்தாருக்கும், ஜாதியாருக்கும், மொழிக்காரர்களுக்கும், பின்வரும் கடிதத்தை அனுப்பினான்.
வாழ்த்துக்கள்:
2 மிக உன்னதமான தேவன் எனக்காகச் செய்த அற்புதமும் ஆச்சரியமும்கொண்ட செயல்களை உங்களுக்குச் சொல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
3 தேவன் வியக்கத்தக்க அற்புதங்களைச் செய்திருக்கிறார்.
தேவன் வல்லமைமிக்க அற்புதங்களைச் செய்திருக்கிறார்.
தேவனுடைய இராஜ்யம் என்றென்றும் தொடர்கிறது.
தேவனுடைய ஆட்சி அனைத்துத் தலைமுறைகளுக்கும் தொடரும்.
4 நேபுகாத்நேச்சாராகிய நான் எனது அரண்மனையில் மகிழ்ச்சியுடனும், வெற்றியோடும் இருந்தேன். 5 என்னை அச்சுறுத்தும் ஒரு கனவை நான் கண்டேன். நான் என் படுக்கையில் படுத்திருந்தேன். என் மனதில் படங்களையும், தரிசனங்களையும் பார்த்தேன். அவை என்னை மிகவும் அச்சுறுத்தின. 6 எனவே என் கனவிற்குரிய பொருளைக் கூறும்படி நான் பாபிலோனிலுள்ள அனைத்து ஞானிகளையும் அழைத்துவருமாறு கட்டளையிட்டேன். 7 சாஸ்திரிகளும், கல்தேயர்களும் வந்தபோது நான் அவர்களிடம் என் கனவைப்பற்றிச் சொன்னேன். ஆனால் அவர்களால் கனவின் பொருளைச் சொல்ல முடியவில்லை. 8 இறுதியாக, தானியேல் என்னிடம் வந்தான், (நான் தானியேலுக்கு என் தேவனைப் பெருமைப்படுத்தும்படி பெல்தெஷாத்சார் என்று பெயரிட்டிருந்தேன். பரிசுத்த தெய்வங்களின் ஆவி அவனிடமிருந்தது.) நான் தானியேலிடம் எனது கனவைச் சொன்னேன். 9 “பெல்தெஷாத்சார், நீ சாஸ்திரிகளிலேயே மிகவும் முக்கியமானவன். உன்னிடம் பரிசுத்த தெய்வங்களின் ஆவி இருப்பதை நான் அறிவேன். உன்னால் புரிந்துகொள்ள முடியாத கடுமையான இரகசியம் இல்லை என்பதை அறிவேன். நான் கண்ட கனவு இதுதான். என்னிடம் இதன் பொருள் என்னவென்று சொல். 10 நான் எனது படுக்கையில் படுத்திருக்கும்போது கண்ட தரிசனங்கள் இதுதான். என் முன்னால் பூமியின் மத்தியில் ஒரு மரம் நின்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த மரம் மிக உயரமாக இருந்தது. 11 அம்மரம் பெரிதாகவும் பலமுடையதாகவும் வளர்ந்தது. அம்மரத்தின் உச்சி வானத்தைத் தொட்டது. அதனை பூமியின் எந்த இடத்தில் இருந்தும் பார்க்கமுடியும். 12 அம்மரத்தின் இலைகள் மிக அழகானவை. அதில் ஏராளமான நல்ல பழங்கள் இருந்தன. அம்மரத்தில் ஒவ்வொருவருக்கும் ஏராளமான உணவு இருந்தது. அம்மரத்தின் அடியில் காட்டு மிருகங்கள் தங்கின. அதன் கிளைகளில் பறவைகள் வசித்தன. ஒவ்வொரு மிருகங்களும் அம்மரத்திலிருந்து சாப்பிட்டன.
13 “நான் படுக்கையில் படுத்திருந்தபோது நான் அவற்றைக் காட்சிகளாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு நான், ஒரு பரிசுத்தமான தேவதூதன் பரலோகத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். 14 அவன் உரத்தகுரலில்: “மரத்தை வெட்டிப்போடுங்கள். அதன் கிளைகளை வெட்டிப் போடுங்கள். அதன் இலைகளை உதிர்த்துவிடுங்கள். அதன் பழங்களைச் சிதறடியுங்கள். அம்மரத்தின் அடியிலுள்ள மிருகங்கள் ஓடிப்போகும். அதன் கிளைகளில் உள்ள பறவைகள் பறந்துபோகும். 15 ஆனால் அதன் தண்டையும், வேர்களையும், மண்ணிலே இருக்கவிடுங்கள். அதைச் சுற்றி இரும்பாலும், வெண்கலத்தாலுமான விலங்கைப் போடுங்கள். அதின் தண்டும் வேர்களும் தம்மைச் சுற்றிலும் புல்லிருக்கின்ற வெளியில் இருக்கும். அது காட்டு மிருகங்கள் மற்றும் பறவைகளுக்கு மத்தியில் இருக்கும். அது பனியில் நனையும். 16 அவன் ஒரு மனிதனைப்போல சிந்திக்கமாட்டான். அவன் ஒரு மிருகத்தின் மனதைப் பெறுவான். அவன் இவ்வாறு இருக்கையில் ஏழு பருவங்களும் கடந்துபோகும் என்று கூறினான்.
17 பரிசுத்த தேவதூதன் இத்தண்டனையை அறிவித்தது ஏன்? அதனால் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களும் மனிதர்களின் இராஜ்யங்களை மிக உன்னதமான தேவன் ஆளுகிறார் என்று அறிந்துகெள்வார்கள். தேவன் அந்த இராஜ்யங்களை தாம் விரும்புகிற எவருக்கு வேண்டுமானாலும் கொடுக்கிறார். தேவன் அந்த இராஜ்யங்களை ஆள பணிவானவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்.
18 “நேபுகாத்நேச்சாரகிய நான் கண்ட கனவு இதுதான். இப்பொழுது பெல்தெஷாத்சாரே (தானியேல்), இதன் பொருள் என்னவென்று சொல். எனக்காக என் இராஜ்யத்தில் உள்ள எந்த ஞானிக்கும் இதற்கு விளக்கம் சொல்ல முடியவில்லை. ஆனால் பெல்தெஷாத்சாரே, நீ இதற்கு விளக்கமளிக்கமுடியும். ஏனென்றால் பரிசுத்த தேவனுடைய ஆவி உன்னில் இருக்கிறது.”
19 தானியேல் (பெல்தெஷாத்சார்) ஒருமணி நேரத்திற்கு மிகவும் அமைதியாக இருந்தான். அவனது சிந்தனை அவனைப் பாதித்தது. எனவே, அரசன் அவனிடம்: “பெல்தெஷாத்சாரே (தானியேல்) கனவோ அல்லது அதன் பொருளோ உன்னைக் கலங்கப் பண்ண வேண்டியதில்லை” என்றான்.
பிறகு பெல்தெஷாத்சார் (தானியேல்) அரசனுக்குப் பதில் சொன்னான். என் எஜமானரே! அந்தக் கனவு உமது பகைவரைக் குறித்ததாய் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அந்தக் கனவின் பொருளும் உமக்கு விரோதமானவர்களைக் குறித்ததாக இருக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். 20-21 நீர் உமது கனவில் ஒரு மரத்தைப் பார்த்தீர். அம்மரம் பெரிதாகவும் பலமானதாகவும் வளர்ந்தது. அதின் உச்சி வானத்தைத் தொட்டது. அது பூமியின் எல்லா இடங்களிலிருந்தும் பார்க்கக்கூடியதாக இருந்தது. அதன் இலைகள் அழகாய் இருந்தன. அதில் ஏராளமாகப் பழங்கள் இருந்தன. அப்பழங்கள் ஏராளமானவர்களுக்கு உணவாகியது. அது காட்டுமிருங்களுக்கு வீடாகியது. அதன் கிளைகள் பறவைகளுக்குக் கூடாகியது. நீர் பார்த்த மரம் இதுதான். 22 அரசே, நீரே அந்த மரம். நீர் சிறப்பும், வல்லமையும் பெற்றிருக்கிறீர். நீர் வானத்தைத் தொடும் மரத்தைப்போன்று உயர்ந்து உமது வல்லமை பூமியின் அனைத்துப் பாகங்களையும் போய் அடைந்திருக்கிறது.
23 “அரசே, நீர் பரலோகத்திலிருந்து ஒரு பரிசுத்தமான தேவதூதன் வருவதைப் பார்த்தீர். அவன், இம்மரத்தை வெட்டு, இதனை அழித்துப்போடு, அதற்கு இரும்பாலும் வெண்கலத்தாலுமான விலங்கைப் போடு. அதன் தண்டையும் வேர்களையும் பூமியிலேயே விட்டுவிடு. அதனைப் புல்வெளியில் விட்டுவிடு. அது பனியில் நனையும். அவன் காட்டு மிருகத்தைப் போன்று வாழ்வான். ஏழு பருவங்கள் (காலங்கள்) அவன் இவ்வாறு இருக்கும்போதே கடந்துபோகும்.
24 “கனவின் பொருள் இதுதான், அரசே, மிக உன்னதமான தேவன் அரசருக்கு இவை ஏற்படும்படி கட்டளையிட்டார். 25 அரசரான நேபுகாத்நேச்சாரே, நீர் ஜனங்களை விட்டுப் போகும்படி வற்புறுத்தப்படுவீர். நீர் காட்டு மிருகங்களுக்கு மத்தியில் வாழ்வீர். நீர் மாடுகளைப்போன்று புல்லைத் தின்பீர். நீர் பனியில் நனைவீர். ஏழு பருவங்கள் (ஆண்டுகள்) கடந்துபோகும். பிறகு நீர் உன்னதமான தேவனே மனித இராஜ்யங்களை ஆளுகிறார் என்பதையும், உன்னதமான தேவன் தான் விரும்புகிற எவருக்கும் இராஜ்யங்களைக் கொடுப்பார் என்பதையும் கற்றுக்கொள்வீர்.
26 “மரத்தின் தண்டையும் வேர்களையும் பூமியில் விடவேண்டும் என்பதன் பொருள் இதுதான்: உமது இராஜ்யம் உம்மிடம் திருப்பிக்கொடுக்கப்படும். உமது இராஜ்யத்தை உன்னதமான தேவன் ஆளுகிறார் என்பதை நீர் கற்கும்போது இது நிகழும். 27 எனவே, அரசே, எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்ளும். நீர் பாவம் செய்வதை நிறுத்தி சரியானவற்றைச் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறேன். தீமை செய்வதை நிறுத்தும். ஏழை ஜனங்களிடம் இரக்கமாயிரும். பிறகு நீர் வெற்றியுள்ளவராக இருப்பீர்”.
28 அவை யாவும் அரசன் நேபுகாத்நேச்சாருக்கு ஏற்பட்டன. 29-30 கனவுக்கண்ட 12 மாதத்திற்குப் பிறகு அரசனான நேபுகாத்நேச்சார் பாபிலோனிலுள்ள தன் அரண்மனையின் மாடியின் மேல் நடந்துகொண்டிருந்தான். அவன் மாடியிலிருந்துக் கொண்டு, “பாபிலோனைப் பார்! நான் இந்தப் பெரியநகரத்தைக் கட்டினேன். இது எனது அரண்மனை! எனது வலிமையினால் நான் இந்த அரண்மனையைக் கட்டினேன். நான் எவ்வளவு பெரியவன் என்று காட்டுவதற்காக இந்த இடத்தைக் கட்டினேன்” என்று கூறினான்.
31 இந்த வார்த்தைகள் அரசனின் வாயில் இருக்கும்போதே பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. அச்சத்தம் சொன்னது: “அரசனான நேபுகாத்நேச்சாரே, இவையெல்லாம் உனக்கு நிகழும். உன்னிடமிருந்து அரசன் என்னும் அதிகாரம் எடுத்துக் கொள்ளப்படும். 32 நீ ஜனங்களிடமிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவாய். நீ காட்டுமிருகங்களோடு வாழ்வாய். நீ பசுவைப்போன்று புல்லைத் தின்பாய். ஏழு பருவங்கள் (ஆண்டுகள்), நீ உனது பாடத்தைக் கற்றுக்கொள்ளும் முன் கடந்துபோகும். பிறகு உன்னதமான தேவன் மனிதரின் இராஜ்யங்களை ஆளுகிறார் என்பதை நீ கற்பாய். அந்த உன்னதமான தேவன் அவர் விரும்புகிறவர்களுக்கு இராஜ்யங்களைக் கொடுக்கிறார்.”
33 அக்காரியங்கள் உடனே நிகழ்ந்தன. நேபுகாத்நேச்சார் ஜனங்களைவிட்டு வெளியேற்றப்பட்டான். அவன் பசுவைப்போன்று புல்லைத் உண்ணத்தொடங்கினான். அவன் பனியால் நனைந்தான். அவனது தலைமுடி கழுகின் சிறகுகள் போன்று நீளமாக வளர்ந்தன. அவனது நகங்கள் பறவையின் நகத்தைப்போன்று வளர்ந்தது.
34 பிறகு காலத்தின் முடிவில், நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தை நோக்கிப் பார்த்தேன். என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது. பிறகு நான் உன்னதமான தேவனைப் போற்றினேன். நான் அவருக்கு மதிப்பையும் மகிமையையும் என்றென்றும் கொடுத்தேன்.
தேவன் என்றென்றும் ஆளுகிறார்.
அவரது இராஜ்யம் எல்லா தலைமுறைகளுக்கும் தொடருகிறது.
35 பூமியிலுள்ள ஜனங்கள் உண்மையிலேயே முக்கியமானவர்களல்ல.
பரலோகத்தின் வல்லமைகளோடும்,
பூமியின் ஜனங்களோடும் தேவன் என்ன செய்ய விரும்புகிறாரோ அதைச் செய்கிறார்.
எவராலும் அவரது அதிகாரமுள்ள கையை நிறுத்தமுடியாது.
எவராலும் அவரது செயல்களைக் கேள்விக் கேட்க்கமுடியாது.
36 எனவே, அந்த நேரத்தில், தேவன் எனது சரியான புத்தியை எனக்குக் கொடுத்தார். அவர் எனக்கு சிறந்த மதிப்பையும், அரசன் என்ற வல்லமையையும் திரும்பக் கொடுத்தார். எனது ஆலோசகர்களும், பிரபுக்களும் மீண்டும் எனது ஆலோசனைகளைக் கேட்கத் தொடங்கினார்கள். நான் மீண்டும் அரசனானேன். நான் முன்பைவிட இன்னும் சிறந்தவனாகவும் மிகுந்த வல்லமையுள்ளவனாகவும் ஆனேன். 37 இப்பொழுது, நேபுகாத்நேச்சாரகிய நான் பரலோக அரசருக்கு புகழ்ச்சி, கனம், மகிமை ஆகியவற்றைக் கொடுக்கிறேன். அவர் செய்கிறவை எல்லாம் சரியானது. அவர் எப்பொழுதும் நேர்மையானவர். அவரால் அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்தமுடியும்.
தேவனின் மக்கள் உலகை எதிர்த்து வெற்றி பெறுகிறார்கள்
5 இயேசுவே கிறிஸ்து என நம்புகிற மக்கள் தேவனின் பிள்ளைகளாவர். பிதாவை நேசிக்கிற மனிதன் தேவனின் பிள்ளைகளையும் நேசிக்கிறான். 2 நாம் தேவனின் பிள்ளைகளை நேசிக்கிறோம் என்பதை எவ்வாறு அறிவோம்? தேவனை நேசிப்பதாலும், அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதினாலும் அறிகிறோம். 3 தேவனை நேசித்தல் என்பது அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் என்று பொருள்படும். தேவனின் கட்டளைகள் நமக்கு மிகவும் கடினமானவையல்ல. 4 ஏன்? தேவனின் பிள்ளையாகிய ஒவ்வொரு மனிதனும் உலகை எதிர்த்து வெல்கிற ஆற்றல் பெற்றிருக்கிறான். 5 நமது விசுவாசமே உலகத்திற்கு எதிராக வென்றது. எனவே உலகை எதிர்த்து வெற்றியடைகிற மனிதன் யார்? இயேசு தேவனின் குமாரன் என்று நம்புகிற ஒருவனே ஆவான்.
தேவன் நமக்கு அவரது குமாரனைக் குறித்துக் கூறினார்
6 இயேசு கிறிஸ்துவே நம்மிடம் வந்தவர். இயேசு நீரோடும் இரத்தத்தோடும் வந்தவர். இயேசு நீரினால் மட்டுமே வரவில்லை. இல்லை, இயேசு நீரினாலும் இரத்தத்தினாலும் வந்தார். இது உண்மையென்று நமக்கு ஆவியானவர் கூறுகிறார். ஆவியானவர் உண்மையாவார். 7 எனவே இயேசுவைக் குறித்து நமக்குக் கூறும் மூன்று சாட்சிகள் இருக்கின்றன. 8 ஆவி, நீர், இரத்தம் இந்த மூன்று சாட்சிகளும் ஒப்புக்கொள்கின்றன.
9 சிலவற்றை உண்மையானவையாக மக்கள் கூறும்போது அவற்றை நம்புகிறோம். ஆனால் தேவன் சொல்வது அதைக் காட்டிலும் முக்கியமானது. இதுவே தேவன் நமக்குக் கூறியதாகும். அவரது சொந்த குமாரனைக் குறித்து உண்மையை அவர் நமக்குக் கூறினார். 10 தேவனின் குமாரனை நம்புகிற மனிதன் தேவன் நமக்குக் கூறிய உண்மையை தனக்குள் கொண்டிருக்கிறான். தேவனை நம்பாத மனிதனோ தேவனைப் பொய்யராக்குகிறான். ஏன்? தேவன் அவரது குமாரனைக் குறித்துக் கூறிய செய்திகளை அம்மனிதன் நம்பவில்லை. 11 இதுவே தேவன் நமக்குக் கூறியதாகும். தேவன் நமக்கு நித்திய ஜீவனைக் கொடுத்துள்ளார். மேலும் இந்த நித்திய ஜீவன் அவரது குமாரனில் உள்ளது. 12 குமாரனைக் கொண்டிருக்கிற மனிதனுக்கு உண்மையான ஜீவன் உண்டு. ஆனால் தேவனின் குமாரனைக் கொண்டிராத ஒருவன் அந்த ஜீவனைக் கொண்டிருப்பதில்லை.
நமக்கு இப்போது நித்திய ஜீவன் உண்டு
13 தேவனின் குமாரனை நம்புகிற மக்களாகிய உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். உங்களுக்கு இப்போது நித்திய ஜீவன் கிடைத்திருக்கிறது என்பதை நீங்கள் அறியும்படியாக இதை எழுதுகிறேன். 14 எந்த ஐயமுமின்றி நாம் தேவனிடம் வரமுடியும். அவர் மனம் ஒத்துக்கொள்கிற எதனையும் நாம் தேவனிடம் வேண்டுகிறபோது, நாம் கேட்பதை தேவன் கவனிக்கிறார். 15 நாம் அவரிடம் கேட்கும் ஒவ்வொரு முறையும் தேவன் கவனித்துக் கேட்கிறார். எனவே, நாம் தேவனிடமிருந்து கேட்கிற பொருட்களை அவர் நமக்குத் தருவார் என்பதை நாம் அறிகிறோம்.
16 கிறிஸ்துவில் சகோதரனோ சகோதரியோ நித்திய மரணத்திற்குள் வழி நடத்தாத பாவம் செய்வதை ஒருவன் பார்க்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்பாவம் செய்கிற அந்த சகோதரன் அல்லது சகோதரிக்காக பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்போது தேவன் அச்சகோதரன் அல்லது சகோதரிக்கு ஜீவனைக் கொடுப்பார். நித்திய மரணத்திற்குள் வழி நடத்தாத பாவத்தைச் செய்கிற மக்களைக் குறித்து நான் பேசிக்கொண்டிருக்கிறேன். மரணத்திற்குள் வழி நடத்தும் பாவமுண்டு. அத்தகைய பாவத்திற்காக ஒரு மனிதன் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று நான் சொல்லவில்லை. 17 தவறு செய்வது எப்பொழுதும் பாவமாகும். ஆனால் நித்திய மரணத்திற்குள் வழி நடத்தாத பாவமுமுண்டு.
18 தேவனின் பிள்ளையாக மாறிய மனிதன் பாவம் செய்வதைத் தொடர்வதில்லை என்பதை நாம் அறிவோம். தேவனின் குமாரன், தேவனின் பிள்ளையைப் பாதுகாக்கிறார். தீயவனால் அம்மனிதனைத் துன்புறுத்த இயலாது. 19 நாம் தேவனுக்கு உரியவர்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் தீயவனோ உலகம் முழுவதையும் கட்டுப்படுத்துகிறான். 20 தேவகுமாரன் வந்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம். தேவனின் குமாரன் நமக்குத் தெளிவை கொடுத்திருக்கிறார். உண்மையான தேவனை இப்போது நாம் அறியமுடியும். தேவனே உண்மையான ஒருவர். அந்த உண்மையான தேவனிடமும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடமும் நமது ஜீவன் உள்ளது. அவரே உண்மையான தேவனும், அவரே நித்திய ஜீவனுமானவர். 21 ஆகையால், அன்பான மக்களே, விக்கிரகங்களாகிய போலிக் கடவுள்களை விட்டு நீங்கள் தூர விலகுங்கள்.
2008 by World Bible Translation Center