Old/New Testament
புதிய ஆலயம்
40 நாங்கள் சிறைப்பட்ட 25ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதலாம் மாதம் (அக்டோபர்) பத்தாம் நாளன்று கர்த்தருடைய வல்லமை என்மேல் வந்தது. பாபிலோனியர்கள் எருசலேமைப் பிடித்து 14 ஆண்டுகளாயிற்று, ஒரு தரிசனத்தில் கர்த்தர் என்னை அங்கே எடுத்துக்கொண்டு போனார்.
2 தரிசனத்தில், தேவன் என்னை இஸ்ரவேல் நாட்டுக்குக் கொண்டுபோனார். ஒரு உயரமான மலையில் என்னை அவர் வைத்தார். மலையின் மேல் ஒரு கட்டிடம் நகரத்தைப்போன்று காட்சியளித்தது. அந்நகரம் கிழக்கு நோக்கி இருந்தது. 3 கர்த்தர் என்னை அங்கே கொண்டுபோனார். அங்கே ஒரு மனிதன் இருந்தான். அவன் துலக்கப்பட்ட வெண்கலத்தைப்போன்று பளபளப்பாக இருந்தான். அவன் கையில் சணல்கயிறும, அளவு கோலும் இருந்தன. அவன் வாசலருகில் நின்றுகொண்டிருந்தான். 4 அம்மனிதன் என்னிடம் சொன்னான், “மனுபுத்திரனே, உன் கண்களையும், காதுகளையும் பயன்படுத்து. இவற்றைப் பார், என்னைக் கவனி! நான் காட்டுகிற எல்லாவற்றிலும் உன் கவனத்தைச் செலுத்து. ஏனென்றால், நீ கொண்டுவரப்பட்டாய். எனவே நான் உனக்கு இவற்றைக் காட்டுகிறேன். நீ பார்த்தவற்றையெல்லாம் பற்றி இஸ்ரவேல் வம்சத்தாரிடம் கூறவேண்டும்.”
5 நான் ஆலயத்தைச் சுற்றிலும் கட்டப்பட்ட ஒரு சுவரைக் கண்டேன். அந்த மனிதனின் கையில் ஒரு அளவுகோல் இருந்தது, அது ஆறு முழ நீளமுள்ளதாக (10’6’) இருந்தது. எனவே அம்மனிதன் அச்சுவரின் கனத்தை அளந்தான். அது ஒரு அளவுகோலின் (10’6”) கனமுள்ளதாக இருந்தது. அம்மனிதன் சுவரின் உயரத்தை அளந்தான். அது ஒரு அளவுகோல் உயரமுடையதாக (10’6”) இருந்தது.
6 பிறகு அம்மனிதன் கிழக்கு வாசலுக்குச் சென்றான். அம்மனிதன் படிகளில் ஏறிப்போய் வாசலின் இடைவெளியை அளந்தான். அது ஒரு அளவு கோல் (10’6”) அகலமுடையதாக இருந்தது. மறுவாசற்படியையும் ஒரு அளவு கோல் (10’6”) அகலமுடையதாக அளந்தான். 7 காவலாளிகளுக்குரிய அறைகள் ஒரு அளவு கோல் (10’6”) நீளமுடையதாகவும் ஒரு அளவு கோல் (10’6”) அகலமுடையதாகவும் இருந்தன. அறைகளுக்கு இடையில் 5 முழ (8’9”) இடமிருந்தது. மண்டபத்தருகேயுள்ள இடைவெளி, ஆலயத்தை எதிர்நோக்கியிருந்த வாசல் வழியின் கடைசியிலிருந்தது. அங்கும் ஒரு அளவு கோல் (10’6”) அகலமுடையதாக இருந்தது. 8 பிறகு அம்மனிதன் வாசலின் மண்டபத்தையும் உள்ளே ஒரு கோல் (10’6”) அகலமுடையதாக அளந்தான். 9 பிறகு அம்மனிதன் வாசலின் மண்டபத்தை அளந்தான். அது எட்டு முழமுடையதாக (14’) இருந்தது. அம்மனிதன் வாசலின் ஒவ்வொரு பக்கத்திலிருந்த சுவர்களை அளந்தான். ஒவ்வொரு பக்கமும் 2 முழம் (3’6”) கொண்டதாக இருந்தது. வாசலின் மண்டபம் ஆலயத்தை எதிர் நோக்கியிருந்த வாசல் வழியின் கடைசியிலிருந்தது. 10 வாசலின் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று சிறிய அறைகள் இருந்தன. இம்மூன்று சிறு அறைகளும் ஒவ்வொரு பக்கத்திலும் சம அளவுடையதாக இருந்தன. இருபக்கங்களிலும் இருந்த பக்கச்சுவர்கள் சம அளவுடையதாக இருந்தது. 11 அம்மனிதன் வாசல் கதவுகளின் அகலத்தை அளந்தான். அவை 10 முழம் (17’6”) அகலமுடையதாக இருந்தன. அந்த முழு வாசலும் 13 முழம் நீளம் உடையதாக இருந்தன. 12 ஒவ்வொரு அறையின் முன்பும் சிறு சுவர் இருந்தது. அச்சுவர் 1 முழம் (1’6”) உயரமும் 1 முழம் (1’6”) கனமும் உடையதாக இருந்தது. அவ்வறைகள் 6 முழம் (10’6”) நீளமுடையதாக ஒவ்வொரு பக்கத்திலும் இருந்தன.
13 அம்மனிதன் வாசலில் இருந்து அறையின் மெத்தையினின்றும் மற்ற அறையின் மெத்தை மட்டும் அளந்தார். அது 25 முழமாக (43’9”) இருந்தது. ஒவ்வொரு கதவும் இன்னொரு கதவிற்கு நேர் எதிராக இருந்தது. 14 அம்மனிதன் முற்றத்திலிருந்து மண்டபத்தின் இரு பக்கங்களிலிருந்த பக்கசுவர்கள் உள்பட எல்லா பக்கச்சுவர்களின் முன்புறங்களையும் அளந்தான். அது மொத்தம் 60 முழம். 15 வெளிவாயிலின் உட்புற முனையிலிருந்து மண்டபத்தின் கடைசி முனைவரை 50 முழங்களாகும். 16 எல்லா அறைகளிலும், பக்கச்சுவர்களின் மேலும் வாயில் மண்டபங்களின் மேலும் சிறு சிறு ஜன்னல்கள் இருந்தன. ஜன்னல்களின் அகலப்பகுதி நுழை வாயிலை நோக்கியிருந்தது. நுழைவாயிலின் இரு பக்கங்களிலும் உள்ள சுவர்களில் பேரீச்சமரங்கள் செதுக்கப்பட்டிருந்தன.
வெளிப்பிரகாரம்
17 பிறகு, அம்மனிதன் என்னை வெளிப்பிரகாரத்திற்கு அழைத்து வந்தான். நான் அறைகளையும் தள வரிசைகளையும் பார்த்தேன். அவை பிரகாரத்தைச் சுற்றிலும் இருந்தன. சுவற்றின் வழியே நடை பாதையை உள்நோக்கி 30 அறைகள் இருந்தன. 18 அத்தள வரிசை வாசலின் பக்கம்வரை சென்றது. தளவரிசை வாசல்களின் நீளத்திற்கு இருந்தது. இது தாழ்ந்த தளவரிசையாக இருந்தது. 19 பிறகு அம்மனிதன் கீழ்வாசலின் உள்பக்கத்திலிருந்து உள்முற்றத்தின் வெளிப்பக்கம் வரையுள்ள அகலத்தை அளந்தான். அது கிழக்குப்பக்கமும் வடக்குப்பக்கமும் 100 முழம் அளவு இருந்தது.
20 வெளிப்பிரகாரத்தைச் சுற்றியுள்ள சுவரில் வடக்கு வாசலின் நீளத்தையும் அகலத்தையும் அம்மனிதன் அளந்தான். 21 அது இரு பக்கங்களிலும் மூன்று அறைகளுடையதாக இருந்தது. அதன் வாசல் தூண்களும் மண்டபமும் முதல் வாசலின் அளவுகளைப் போன்றே இருந்தன. அது 50 முழம் (87’6”) நீளமும் 25 முழம் (43’9”) அகலமும் உடையதாக இருந்தது. 22 அதன் ஜன்னல்களும் மண்டபமும் பேரிச்ச மரச் செதுக்கல்களும் கிழக்கு நோக்கியிருந்த வாசலை போன்றதாகவே இருந்தது. வாசலை நோக்கி ஏழு படிகள் மேலே போயின. வாசலின் மண்டபம் நுழைவாயிலின் உள்பக்கம் கடைசியில் இருந்தது. 23 வடக்கு நுழைவாயிலிலிருந்து முற்றத்துக்குக் குறுக்கே உள்முற்றத்துக்கு ஒரு நுழைவாயில் இருந்தது. அது கிழக்கில் இருந்த நுழைவாயிலைப் போன்றிருந்தது. ஒரு நுழைவாயிலிலிருந்து இன்னொரு நுழைவாயில்வரை அளந்தான். அது 100 முழம் (175’) அகலம் இருந்தது.
24 பிறகு அம்மனிதன் என்னைத் தெற்கே நடத்திச் சென்றான். நான் தெற்கே ஒரு வாசலைக் கண்டேன். அம்மனிதன் பக்கச் சுவர்களையும் மண்டபத்தையும் அளந்தான். அவை மற்ற வாசல்களைப்போன்றே அளவுடையதாக இருந்தன. 25 வாசலும் அதன் மண்டபமும் மற்ற வாசல்களைப்போன்றே ஜன்னல்கள் உடையதாக இருந்தன. அவை 50 முழம் (87’6”) நீளமும் 25 முழம் (43’9”) அகலமும் கொண்டதாக இருந்தன. 26 வாசலில் ஏழு படிகள் மேல் நோக்கிச் சென்றன. அதன் மண்டபம் நுழைவாயிலின் உட்புறமாக கடைசியில் இருந்தது. சுவர்கள் மேல் இரு பக்கமும் பேரீச்ச மர உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. 27 உட்பிரகாரத்தின் தென் பக்கமும் ஒரு வாசல் இருந்தது. அம்மனிதன் தெற்கு நோக்கி உள் வாசலில் இருந்து இன்னொரு வாசலுக்கு அளந்தான். அது 100 முழம் (175’) அகலமுடையதாக இருந்தது.
உட்பிரகாரம்
28 பிறகு, அம்மனிதன் என்னைத் தெற்கு வாசல் வழியாக உட்பிரகாரத்திற்கு அழைத்துப்போனான். அவன் இந்த வாசலை அளந்தான். அத்தெற்கு வாசலும் மற்ற வாசல்களைப்போன்று அளவுடையதாக இருந்தது. 29 தெற்கு வாசலில் உள்ள அறைகள், அதன் பக்கச்சுவர்கள், அதன் மண்டபம் ஆகியவை மற்ற வாசல்களில் உள்ள அளவையே கொண்டிருந்தன. வாசலையும் மண்டபத்தையும் சுற்றி ஜன்னல்கள் இருந்தன. வாசல் 50 முழம் (87’6”) நீளமும் 25 முழம் (43’9”) அகலமும் இருந்தது. 30 மண்டபம் 25 முழம் (43’9”) அகலமும் 5 முழம் (8’9”) நீளமும் இருந்தது. 31 தென்பக்க வாசல் மண்டபம் வெளிப்பிரகாரத்தை நோக்கி இருந்தது. நுழைவாயிலின் இரு பக்கச்சுவர்களிலும் பேரீச்ச மர உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அதில் ஏறிட 8 படிகளும் இருந்தன.
32 அம்மனிதன் என்னை கிழக்குப் புறமுள்ள உட்பிரகாரத்திற்கு அழைத்து வந்தான். அவன் வாசலை அளந்தான். அது மற்ற வாசல்களைப்போன்றே அளவுடையதாக இருந்தது. 33 கிழக்கு வாசலின் அறைகளும், பக்கச்சுவர்களும், மண்டபமும் மற்ற வாசல்களைப்போன்றே அளக்கப்பட்டன. வாசலையும் அதன் மண்டபத்தையும் சுற்றி ஜன்னல்கள் இருந்தன. கிழக்கு வாசல் 50 முழம் (87’6”) நீளமும் 25 முழம் (43’9”) அகலமும் உடையதாக இருந்தது. 34 அதன் மண்டபம் வெளிப்பிரகாரத்தை நோக்கி இருந்தது. நுழைவாயிலின் இரு பக்கச்சுவர்களிலும் பேரீச்ச மர உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அதற்குப் போக எட்டுப் படிகள் இருந்தன.
35 பிறகு அந்த மனிதன் என்னை வடக்கு வாசலுக்கு அழைத்து வந்தான். அவன் அதை அளந்தான். அது மற்ற வாசல்களைப்போன்று அதே அளவுடையதாக இருந்தது. 36 இதன் அறைகள், இதன் பக்கச் சுவர்களும், வாயில் மண்டபமும் கூட, மற்ற நுழை வாயில்களின் அளவுடையதாக இருந்தன. வாசலைச் சுற்றி ஜன்னல்கள் இருந்தன. இது 50 முழம் (87’6”) நீளமும் 25 முழம் (43’9”) அகலமும் கொண்டதாக இருந்தது. 37 இதன் வாயில் மண்டபம், நுழை வாயிலின் கடைசியில் வெளிமுற்றத்திற்குப் பக்கத்தில் இருந்தது. நுழைவாயிலின் இருபக்கச் சுவர்களிலும் பேரீச்ச மர உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. இதில் மேலே போக 8 படிகள் இருந்தன.
பலிகளை ஆயத்தப்படுத்தும் அறைகள்
38 வாயில் மண்டபத்தில் கதவுள்ள ஒரு அறை இருந்தது. இதுதான் ஆசாரியர்கள் தம் தகனபலிக்காக மிருகங்களைக் கழுவும் இடம். 39 மண்டபத்தின் கதவின் இரண்டு பக்கத்திலும் இரண்டு மேசைகள் இருந்தன. தகனபலி, பாவநிவாரண பலி, குற்ற நிவாரணப் பலி ஆகியவற்றின் மிருகங்களை மேசை மேல் வைத்துக் கொல்லுவார்கள். 40 மண்டபத்துக்கு வெளியே, வடக்கு வாசல் திறந்திருக்கிற இடத்தில், இரண்டு மேசைகள் இருந்தன. இம்மண்டபத்தின் வெளிவாசலின் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு மேசைகள் இருந்தன. 41 இவ்வாறு உள்ளே நான்கு மேசைகள் இருந்தன. வெளியே நான்கு மேசைகள் இருந்தன. இந்த எட்டு மேசைகளின் மேல் ஆசாரியர்கள் பலிகளுக்கான மிருகங்களைக் கொன்றார்கள். 42 நான்கு மேசைகள் தகனபலிக்காகக் கல்லால் செய்யப்பட்டிருந்தன. இம்மேசைகள் 1 1/2 முழம் (2’7 1/2”) நீளமும் 1 1/2 முழம் (2’7 1/2”) அகலமும் 1 முழம் (1’6”) உயரமும் உள்ளதாக இருந்தன. மேசைகளின்மேல் ஆசாரியர்கள் தகன பலிகள் மற்றும் இதர பலிகளுக்கான மிருகங்களைக் கொல்வதற்கான கருவிகளை வைத்திருந்தார்கள். 43 கொக்கிகள் 1 சாண் (3”) நீளமுள்ள இறைச்சிக் கொக்கிகள் இப்பகுதியிலுள்ள எல்லாச் சுவர்களிலும் அடிக்கப்பட்டிருந்தன. காணிக்கைகளின் இறைச்சி மேசைமேல் வைக்கப்பட்டது.
ஆசாரியர்களின் அறைகள்
44 உட்புற முற்றத்தில் இரண்டு அறைகள் இருந்தன. ஒன்று வடக்கு வாசலில் இருந்தது. அது தெற்கு நோக்கி இருந்தது. இன்னொன்று தெற்கு வாசலில் இருந்தது. அது வடக்கு நோக்கி இருந்தது. 45 அம்மனிதன் என்னிடம் சொன்னான், “தெற்கு நோக்கி இருக்கும் இந்த அறை ஆலயத்தில் பணியிலிருந்து சேவை செய்கிற ஆசாரியரின் அறை. 46 ஆனால் வடக்கு நோக்கி இருக்கும் அறை பலிபீடத்தில் பணிசெய்கிற ஆசாரியரின் அறையாகும். இந்த ஆசாரியர்கள் லேவியின் தலைமுறையைச் சார்ந்தவர்கள். ஆனால் இந்த இரண்டாவது ஆசாரியக் குழு சாதோக்கின் வாரிசுகள். அவர்கள் மாத்திரமே பலிகளை பலிபீடத்திற்குச் சுமந்துசென்று கர்த்தருக்குச் சேவை செய்ய முடியும்.”
47 அம்மனிதன் பிரகாரத்தை அளந்தான். அது சரியான சதுரமாக இருந்தது. இது 100 முழம் (175’) நீளமும் 100 முழம் (175’) அகலமும் உடையதாக இருந்தது. பலிபீடம் ஆலயத்தின் முன்னால் இருந்தது.
ஆலயத்தின் மண்டபம்
48 பிறகு, அம்மனிதன் என்னை ஆலய மண்டபத்துக்குக் கொண்டுபோனான். மண்டபத்தின் இரு பக்கங்களிலும் இருந்த சுவர்களை அளந்தான். ஒவ்வொரு பக்கச்சுவரின் கனம் 5 முழமாகவும் அகலம் 3 முழமாகவும் இருந்தது. அவைகளுக்குள் இருந்த இடைவெளி 14 முழமாயிருந்தது. 49 மண்டபம் 20 முழம் (35’) நீளமும் 12 முழம் (19’3”) அகலமும் உள்ளது. மண்டபத்தின் மேலே செல்ல 10 படிகள் இருந்தன. தூணாதரங்களிலே இந்தப் புறத்தில் ஒரு தூணும் அந்தப்புறத்தில் ஒரு தூணும் இருந்தது.
ஆலயத்தின் பரிசுத்த இடம்
41 பின்பு அவன் என்னை ஒரு அறைக்கு (பரிசுத்தமான இடத்திற்கு) அழைத்துக் கொண்டு போனான். அவன் அறையின் இருபுறமுள்ள சுவர்களை அளந்தான். அவை 6 முழம் (10’6”) கனமுடையதாக ஒவ்வொரு பக்கமும் இருந்தன. 2 கதவானது 10 முழம் (17’6”) அகலமுடையதாக இருந்தது. வாசல் நடையின் பக்கங்கள் ஒவ்வொரு புறத்திலும் 5 முழம் (8’9”) உடையன. அம்மனிதன் அந்த அறையை அளந்தான். அது 40 முழம் (70’) நீளமும் 20 முழம் (35’) அகலமும் கொண்டது.
ஆலயத்தின் மகா பரிசுத்த இடம்
3 பிறகு, அவன் கடைசி அறைக்குள் சென்றான். அவன் வாசலின் இருபக்கச் சுவர்களையும் அளந்தான். ஒவ்வொரு பக்கச்சுவரும் 2 முழம் கனமாகவும் 7 முழம் அகலமாகவும் இருந்தது. வாசல் வழியானது 6 முழம் அகலமுடையதாயிருந்தது. 4 பிறகு, அம்மனிதன் அறையின் நீளத்தை அளந்தான். அது 20 முழம் (35’) நீளமும் 20 முழம் (35’) அகலமுமாக ஆலயத்தின் முன்புறத்தில் அளந்தான். அம்மனிதன் என்னிடம், “இது மிகவும் பரிசுத்தமான இடம்” என்றான்.
ஆலயத்தைச் சுற்றியுள்ள மற்ற அறைகள்
5 பிறகு அம்மனிதன் ஆலயத்தின் சுவரை அளந்தான். அது 6 முழம் கனமாகயிருந்தது. ஆலயத்தைச் சுற்றிலும் பக்கத்து அறைகள் இருந்தன. இவை 4 முழம் (7’) அகலமுடையதாக இருந்தன. 6 இந்த பக்கத்து அறைகள் மூன்று வேறுபட்ட தளங்களில் இருந்தன. அவை ஒன்றின் மேல் ஒன்றாக இருந்தன. ஒவ்வொரு தளத்திலும் 30 அறைகள் இருந்தன. இந்த பக்கத்து அறைகள் சுற்றிலும் உள்ள சுவரால் தாங்கப்பட்டிருந்தன. எனவே ஆலயச் சுவர் தானாக அறைகளைத் தாங்கவில்லை. 7 ஆலயத்தைச் சுற்றிலும் பக்கத்து அறைகளின் ஒவ்வொரு தளமும் கீழே உள்ள தளத்தைவிட அகலம் அதிகமாயிருந்தது. ஆலயத்தைச் சுற்றியுள்ள உயர மேடையானது ஒவ்வொரு தளத்திலும் ஆலயத்தைச் சுற்றிப் பரந்திருந்தது, எனவே, மேல் தளங்களின் அறைகள் அகலமாயிருந்தன. ஆதலால் கீழ்த்தளத்திலிருந்து நடுத்தளம் வழியாய் மேல் தளத்திற்கு ஏறும் வழி இருந்தது.
8 ஆலயத்தைச் சுற்றி உயர்த்தப்பட்ட அடிப்பாகம் இருப்பதைப் பார்த்தேன். அது பக்கத்து அறைகளுக்கு அஸ்திபாரமாக இருந்தது. அது ஒரு முழுக் கோலின் உயரம் கொண்டதாயிருந்தது. 9 பக்கத்து அறைகளின் வெளிச் சுவரின் அகலம் 5 முழமாக (8’9”) இருந்தது. ஆலயத்தின் பக்கத்து அறைகளுக்கும் ஆசாரியரின் அறைகளுக்கும் இடையே ஒரு திறந்தவெளி இருந்தது. 10 அது ஆலயத்தைச் சுற்றிலும் 20 முழம் (35’) அகலமாக இருந்தது. 11 பக்கத்து அறைகளின் கதவுகள், உயர்த்தப்பட்ட அடிப்பாகத்தை நோக்கித் திறந்திருந்தன. ஒரு வாசல்நடை வடகேயும் ஒரு வாசல்நடை தெற்கேயும் இருந்தன. உயர்த்தப்பட்ட அடிப்பாகத்தின் அகலம் 5 முழமாய் (8’9”) சுற்றிலும் இருந்தது.
12 தடைசெய்யப்பட்ட ஆலய முற்றத்தின் முன்பிருந்த மேற்கு திசையிலுள்ள கட்டிடம் 70 முழம் (122’6”) அகலமுடையதாய் இருந்தது, அக்கட்டிடத்தின் சுற்றுச் சுவர்கள் 5 முழம் (8’9”) கனமுடையதாய் இருந்தன. அது 90 முழம் (157’6”) நீளமுடையது. 13 பிறகு அம்மனிதன் ஆலயத்தை அளந்தான். அது 100 முழம் (175’) நீளமுடையது. தடைசெய்யப்பட்ட பரப்பையும், கட்டிடத்தையும், அதன் சுவர்களையும் 100 முழம் (175’) அகலமுடையதாக அளந்தான். 14 ஆலயத்தின் முற்புறமும் கிழக்குக்கு எதிரான தடைச் செய்யப்பட்ட பரப்பும் 100 முழம் (175’) அகலமுடையதாக இருந்தது.
15 அம்மனிதன் தடைசெய்யப்பட்ட பரப்பின் பின்புறமாக அதற்கு எதிரே இருந்த கட்டிடத்தின் நீளத்தையும் அதற்கு இரு புறத்திலும் இருந்த நடை பந்தல்களையும் அளந்தான். அது 100 முழம் (175’) நீளமுடையது.
மகா பரிசுத்த இடமும், பரிசுத்த இடமும், மண்டபமும், உள் அறையை நோக்கியிருந்தன. 16 அவற்றின் சுவர்கள் முழுவதும் மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தன. மூன்று பக்கங்களிலும் சுற்றி ஜன்னல்கள் இருந்தன. வாசல்களுக்கு எதிரான நடைப் பந்தல்களும் சுற்றிலும் தரை தொடங்கி ஜன்னல்கள் வரை பலகை அடித்திருந்தது. ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தன. 17 வாசலின் மேலே தொடங்கி,
ஆலயத்தின் உட்புறமும் வெளிப்புறமும் பலகைகளால் மூடப்பட்டிருந்தன. சுற்றிலும் சுவரின் உட்புறமும் வெளிப்புறமும் 18 கேருபீன்களும் பேரீச்ச மரங்களும் செதுக்கப்பட்டிருந்தன. கேருபீன்களுக்கு இடையில் பேரீச்சமரம் இருந்தது. ஒவ்வொரு கேருபீனுக்கும் இரு முகங்கள் இருந்தன. 19 ஒரு முகம் மனிதமுகமாய் பேரீச்ச மரத்தின் ஒரு பக்கத்தைப் பார்த்தவாறு இருந்தது. இன்னொரு முகம் சிங்க முகமாய் பேரீச்ச மரத்தின் இன்னொரு பக்கத்தைப் பார்த்தவாறு இருந்தது. அவை ஆலயத்தைச் சுற்றிலும் செதுக்கப்பட்டிருந்தன. 20 தரையிலிருந்து வாசலின் மேல்புறம்வரை பரிசுத்த இடத்தின் சுவர்களில் கேருபீன்களும் பேரீச்ச மரங்களும் சித்தரிக்கப்பட்டிருந்தன.
21 பரிசுத்த இடத்தின் இருபக்கத்திலும் இருந்த சுவர்கள் சதுரமானவை. மகாபரிசுத்தமான இடத்துக்கு எதிரில் ஏதோ ஒன்று பலிபீடத்தைப்போலக் காணப்பட்டது. 22 அது மரத்தால் செய்யப்பட்ட பலிபீடத்தைப் போன்றிருந்தது. அது 3 முழம் உயரமும் 2 முழம் நீளமுமாயிருந்தது. அதன் மூலைகள், அடிப்பாகம், பக்கங்கள் எல்லாம் மரத்தால் ஆனவை. அம்மனிதன் என்னிடம், “இதுதான் கர்த்தருக்கு முன்னால் உள்ள மேசை” என்றான்.
23 நடு அறையும் (பரிசுத்தமான இடமும்) மிகப் பரிசுத்தமான இடமும் இரட்டைக் கதவுகளைக் கொண்டவை. 24 வாசல்களுக்கு மடக்குக் கதவுகளாகிய இரட்டைக் கதவுகள் இருந்தன. ஒவ்வொரு வாசலுக்கும் இரண்டு சிறு கதவுகளும் இருந்தன. 25 பரிசுத்த இடத்தின் கதவுகளிலும் கேருபீன்களும் பேரிச்ச மரங்களும் செதுக்கப்பட்டிருந்தன. அவை சுவற்றில் செதுக்கப்பட்டிருந்தவை போன்றிருந்தன. வெளியே மண்டபத்தின் முன்பாக உத்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. மண்டபத்தின் முன் பாகத்திற்குமேல் ஒரு மரக் கூரையிருந்தது. 26 இருபுறங்களிலும் ஆலயத்தின் சுற்றுக் கட்டுக்களிலும் சட்டங்கள் பொருந்திய ஜன்னல்கள் இருந்தன. சுவர்களிலும் ஆலயத்தைச் சுற்றியுள்ள அறைகளிலும் வரையப்பட்ட பேரீச்ச மரங்களும் இருந்தன.
இயேசு திரும்பவும் வருவார்
3 எனது நண்பர்களே, நான் உங்களுக்கு எழுதும் இரண்டாம் நிருபம் இது. உங்கள் நேர்மையான மனங்கள் சிலவற்றை நினைவுபடுத்திக்கொள்ளும் வகையில் நான் உங்களுக்கு இரண்டு நிருபங்களை எழுதினேன். 2 கடந்த காலத்தில் பரிசுத்த தீர்க்கதரிசிகள் கூறிய வார்த்தைகளை நீங்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நமது கர்த்தரும் இரட்சகரும் நமக்கு அளித்த கட்டளையை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அப்போஸ்தலர்கள் மூலமாக அக்கட்டளையை அவர் நமக்கு அளித்தார்.
3 கடைசி நாட்களில் நடக்கவிருப்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பது முக்கியம். மக்கள் உங்களைப் பார்த்து நகைப்பார்கள். அவர்கள் செய்ய விரும்புகிற தீய காரியங்களைப் பின்பற்றி அம்மக்கள் வாழ்வார்கள். 4 அம்மக்கள், “அவர், மீண்டும் வருவதாக வாக்களித்துள்ளார். அவர் எங்கே? நம் தந்தையர் மரித்திருக்கிறார்கள். ஆனால் படைப்பின் ஆரம்பத்திலிருந்து உலகம் இந்த வகையிலேயே தொடர்கிறது” என்பார்கள்.
5 ஆனால் அவர்கள் இந்த எண்ணத்தைத் தக்கவைத்துக்கொள்ளும்போது, நெடுங்காலத்திற்கு முன் நடந்ததை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். நெடுங்காலத்திற்கு முன்பு வானங்கள் இருந்தன. பூமி இருந்தது, தண்ணீருக்கு வெளியே, தண்ணீரின் மூலமாகவே, பூமி வெளிப்படும்படி தேவன் உருவாக்கினார். 6 இவையாவும் தேவனுடைய வார்த்தையாலே உண்டாயின. பிற்காலத்தில் இந்த உலகம் வெள்ளத்தால் நிரப்பப்பட்டு அழிக்கப்பட்டது. 7 ஆனால் தேவனுடைய அந்த வார்த்தையாலேயே இன்றைய வானமும் பூமியும் நெருப்பால் அழிபடும் பொருட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. தேவனுக்கு எதிரான மக்கள் நியாயம் தீர்க்கப்பட்டு அழிக்கப்படும் நாளுக்காக அவை வைக்கப்பட்டுள்ளன.
8 ஆனால் அன்பான நண்பர்களே, இந்த ஒரு காரியத்தை நீங்கள் மறவாதீர்கள். கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகளைப் போன்றது. ஆயிரம் ஆண்டுகளோ ஒரு நாளைப்போன்றவை. 9 கர்த்தர் வாக்குறுதி அளித்ததைச் செய்வதில் சில மக்கள் நிதானத்தைப் பற்றி கருதுவதைப் போன்று உங்களோடு மிகவும் பொறுமையாக இருக்கிறார். எந்த மனிதனும் இழக்கப்படுவதை கர்த்தர் விரும்பவில்லை. ஒவ்வொருவனும் அவனது இதயத்தை மாற்றி, பாவம் செய்வதை விட்டுவிட வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார்.
10 திருடன் வருவதைப் போன்று கர்த்தர் மீண்டும் வருகிற நாளும் ஆச்சரியமானதாக இருக்கும். மிகுந்த சத்தத்தோடு வானம் மறையும். வானிலுள்ள எல்லாப் பொருள்களும் நெருப்பால் அழிக்கப்படும். பூமியும் அதிலுள்ள மக்களும் அதிலுள்ள சகலமும் நெருப்பிலிடப்பட்டது போலாகும். 11 நான் உங்களுக்குக் கூறியபடியே எல்லாப் பொருட்களும் அழியும். எனவே நீங்கள் எந்த வகையான மனிதர்களாக இருக்க விரும்புகிறீர்கள்? நீங்கள் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து, தேவனுக்கு சேவை செய்யவேண்டும். 12 தேவனுடைய நாளின் வருகைக்காக ஆவலுடன் காத்திருங்கள். அந்த நாள் வருகிறபோது, வானம் நெருப்பால் அழிக்கப்படும். வானிலுள்ள பொருள்கள் அனைத்தும் வெப்பத்தால் உருகும். 13 ஆனால் தேவன் நமக்கு ஒரு வாக்குறுதியைத் தந்தார். அவர் தந்த வாக்குறுதிக்காகவே காத்திருக்கிறோம். நன்மை நிலைபெற்றிருக்கும் இடமாகக் காணப்படும் ஒரு புதிய வானம், ஒரு புதிய பூமி பற்றியதே அவ்வாக்குறுதியாகும்.
14 எனவே அன்பான நண்பர்களே இவ்விஷயங்களுக்காக நீங்கள் காத்துக்கொண்டிருப்பதால், தேவனுடைய பார்வையில் கறை இல்லாமலும் குற்றம் இல்லாமலும் இருக்க உங்களால் முடிந்தவரைக்கும் உழைக்க வேண்டும். தேவனோடு சமாதானமாக இருக்க முயலுங்கள். 15 நம் கர்த்தரின் பொறுமையை இரட்சிப்பாக எண்ணுங்கள். தேவன் அளித்த ஞானத்தினால் நமது அன்பான சகோதரர் பவுல் உங்களுக்கு எழுதியபோது இதையே உங்களுக்குக் கூறினார். 16 பவுல் அவரது எல்லா நிருபங்களிலும் இக்காரியங்களைக் குறித்து இவ்வாறே எழுதுகிறார். புரிந்துகொள்ளக் கடினமான விஷயங்கள் சில சமயங்களில் அவருடைய நிருபங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அறியாமை உள்ளவர்களும், விசுவாசத்தில் நிரந்தரமற்றவர்களும் அவ்விஷயங்களைத் தவறான முறையில் எடுத்துரைக்கிறார்கள். இதே முறையில் மற்ற வேதவாக்கியங்களையும் அவர்கள் தவறாக எடுத்துரைக்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அவர்கள் தங்களையே அழித்துக்கொண்டிருக்கின்றனர்.
17 அன்பான நண்பர்களே, உங்களுக்கு ஏற்கெனவே இதைப் பற்றித் தெரியும். எனவே எச்சரிக்கையாக இருங்கள். தாங்கள் செய்கிற தவறான காரியங்களால் அத்தீய மக்கள் உங்களைத் தவறாக வழி நடத்தாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் உறுதியான நிலையிலிருந்து விழுந்து விடாதபடி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். 18 கிருபையிலும், நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவிலும், வளர்ச்சியடையுங்கள். அவருக்கே இப்போதும் எப்போதும் மகிமை உண்டாவதாக! ஆமென்.
2008 by World Bible Translation Center