Old/New Testament
11 பிறகு ஆவியானவர் என்னை கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு வாசலுக்குத் தூக்கிச் சென்றார். இந்த வாசல் சூரியன் உதிக்கிற கிழக்கு நோக்கி இருந்தது. நுழை வாசலில் 25 பேர் இருப்பதை நான் பார்த்தேன். அம்மனிதர்களோடு ஆசூரின் மகனான பெலத்தியாவும் இருந்தான். பெலத்தியா ஜனங்களின் தலைவனாயிருந்தான்.
2 பிறகு, தேவன் என்னிடம் பேசினார். அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, இவர்கள்தான் நகரத்திற்குக் கேடான திட்டங்களைத் தீட்டுகிறவர்கள். இம்மனிதர்கள் எப்பொழுதும் ஜனங்களிடம் கெட்டவற்றைச் செய்யும்படிக் கூறுகிறார்கள். 3 இம்மனிதர்கள், ‘நாங்கள் விரைவில் எங்களது வீடுகளை கட்டப்போகிறோம். நாங்கள் இந்நகரத்தில் பாத்திரத்திற்குள் இருக்கிற இறைச்சிபோன்று பத்திரமாக இருக்கிறோம்’ என்கின்றனர். 4 அவர்கள் இப்பொய்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, எனக்காக நீ ஜனங்களிடம் பேசவேண்டும். மனுபுத்திரனே, ஜனங்களுக்கு தீர்க்கதரிசனம் சொல்லப் போ.”
5 பிறகு கர்த்தருடைய ஆவி என்மேல் வந்தார். அவர் என்னிடம் சொன்னார்: “கர்த்தர் இவற்றைச் சொன்னார் என்று அவர்களிடம் கூறு: இஸ்ரவேல் குடும்பமே, நீ பெரியவற்றைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாய். ஆனால் நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன்! 6 நீ இந்நகரத்தில் பலரைக் கொன்றிருக்கிறாய். நீ தெருக்களைப் பிணங்களால் நிறைத்திருக்கிறாய். 7 இப்போது நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: ‘மரித்த உடல்களே இறைச்சியாகும். நகரமே பானையாகும். ஆனால் அவன் (நேபுகாத்நேச்சார்) வந்து உன்னைப் பாதுகாப்பான பானையிலே இருந்து வெளியே எடுப்பான்! 8 நீ வாளுக்குப் பயப்படுகிறாய். ஆனால் நான் உனக்கு எதிராக வாளைக் கொண்டு வருகிறேன்!’” நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார். எனவே அவை நிகழும்!
9 தேவன் மேலும் சொன்னார்: “நான் ஜனங்களாகிய உங்களை நகரத்திலிருந்து வெளியேற்றுவேன். நான் அந்நியர்களிடம் உங்களைக் கொடுப்பேன் உங்களைக் கடுமையாகத் தண்டிப்பேன்! 10 நீங்கள் வாளால் மரணம் அடைவீர்கள். நான் உங்களை இங்கே இஸ்ரவேலில் தண்டிப்பேன். எனவே, உங்களைத் தண்டிக்கிறவர் நானே என்பதை நீங்கள் அறிவீர்கள். நானே கர்த்தர். 11 ஆம், இந்த இடம் சமையல் பானையாக இருக்கும். அதற்குள் வேகும் இறைச்சி நீங்களே! நான் உங்களை இஸ்ரவேலில் தண்டிப்பேன். 12 பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மீறியது எனது சட்டம்! நீங்கள் எனது ஆணைகளுக்கு அடிபணியவில்லை. உங்களைச் சுற்றிலும் உள்ள நாட்டினரைப்போன்று நீங்கள் வாழ முடிவுசெய்தீர்கள்.”
13 நான் தீர்க்கதரிசனம் சொல்லி முடிக்கும்போது, பெனாயாவின் மகனான பெலத்தியா மரித்தான்! நான் தரையில் விழுந்தேன். என் முகம் தரையில் படும்படி குனிந்து, “ஓ, எனது கர்த்தராகிய ஆண்டவரே, இஸ்ரவேலில் வாழ்கிற மீதியான உயிர் தப்பியோர் அனைவரையும் நீர் அழித்துக்கொண்டிருக்கிறீர்!” என்று உரத்த குரலெழுப்பினேன்.
எருசலேமில் உள்ள மீதி தப்பிப்பிழைத்தவர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம்
14 ஆனால், கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 15 “மனுபுத்திரனே, உனது சகோதரர்களை நினைத்துப்பார். இஸ்ரவேல் குடும்பத்தாரையும் இந்நகரை விட்டு வெளியேற்றப்பட்டவர்களையும் நினைத்துப்பார்! அந்த ஜனங்கள் இந்நாட்டிலிருந்து தொலை தூரத்தில் வாழ்கிறார்கள். ஆனால் எருசலேமில் வாழ்கிற ஜனங்களே அவர்களிடம் கூறுகிறார்கள்: ‘கர்த்தரிடமிருந்து விலகி தூரத்தில் இருங்கள். இந்த நிலம் எங்களுக்குக் கொடுக்கப்பட்டது, இது எங்களுடையது!’
16 “எனவே, ஜனங்களிடம் இவற்றைப்பற்றிச் சொல்; எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; ‘இது உண்மை. நான் எனது ஜனங்களை அந்நிய நாடுகளுக்குப் போகும்படி கட்டாயப்படுத்தினேன். பல நாடுகளில் அவர்களைச் சிதறும்படிச் செய்தேன். அவர்கள் அங்குத் தங்கும்பொழுது, குறுகிய காலத்திற்கு நான் அவர்களுடைய ஆலயமாயிருப்பேன். 17 எனவே நீ அந்த ஜனங்களிடம் அவர்களது கர்த்தராகிய ஆண்டவர், அவர்களைத் திரும்ப கொண்டு வருவார் என்று சொல்லவேண்டும். உங்களைப் பல நாடுகளில் சிதறடித்திருந்தேன். ஆனால் நான் உங்களைச் சேர்த்து அந்நாடுகளில் இருந்து திரும்ப அழைப்பேன். நான் இஸ்ரவேல் நாட்டை உங்களுக்கு திரும்பத் தருவேன்! 18 எனது ஜனங்கள் திரும்பி வரும்போது அவர்களுடைய வெறுக்கத்தக்க அருவருக்கத்தக்கச் சிலைகளை அழிப்பார்கள். 19 நான் அவர்களை ஒன்று சேர்த்து ஒரே ஆள்போன்று செய்வேன். நான் அவர்களுக்குப் புதிய ஆவியைக் கொடுப்பேன். நான் அவர்களிடமுள்ள கல்போன்ற இருதயத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் உண்மையான இருதயத்தை வைப்பேன். 20 பின்னர் அவர்கள் எனது சட்டங்களுக்குப் பணிவார்கள். நான் அவர்களிடம் சொல்வதைச் செய்வார்கள். அவர்கள் எனது உண்மையான ஜனங்களாக இருப்பார்கள். நான் அவர்களின் தேவனாக இருப்பேன்.’”
கர்த்தருடைய மகிமை எருசலேமை விட்டு வெளியேறுதல்
21 பிறகு தேவன் சொன்னார்: “ஆனால், இப்போது அவர்கள் இருதயம் அந்த வெறுக்கத்தக்க அருவருக்கத்தக்கச் சிலைகளுக்குரியதாக இருக்கிறது. நான், அவர்கள் செய்த தீயச்செயல்களுக்காக தண்டிப்பேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார். 22 பிறகு கேருபீன்கள் தம் சிறகை விரித்து காற்றில் பறக்க ஆரம்பித்தன, சக்கரங்களும் அவற்றோடு இருந்தன. இஸ்ரவேல் தேவனுடைய மகிமை அதற்கு மேல் இருந்தது. 23 கர்த்தருடைய மகிமை காற்றில் எழுந்து எருசலேமை விட்டு வெளியேறியது. அது நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின் மேல் நின்றது. 24 பிறகு ஆவியானவர் என்னை மேலே தூக்கி பாபிலோனியாவிற்கு இஸ்ரவேலை விட்டுக் கட்டாயமாக வெளியே அனுப்பப்பட்ட ஜனங்களிடம் திரும்பக் கொண்டுவந்தார். நான் அதையெல்லாம் தேவ தரிசனத்தில் கண்டேன். பின்னர் நான் தரிசனத்தில் கண்ட அவர் காற்றில் எழுந்து என்னைவிட்டுப் போனார். 25 பிறகு நான் நாடுகடத்தப்பட்ட ஜனங்களிடம் பேசினேன். கர்த்தர் எனக்குக் காட்டிய எல்லாவற்றையும் நான் சொன்னேன்.
12 பின்னர் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, நீ கலகக்காரர்களின் மத்தியில் வாழ்கிறாய். அவர்கள் எப்பொழுதும் எனக்கு எதிராகத் திரும்புகின்றனர். நான் அவர்களுக்காகச் செய்ததைப் பார்க்க அவர்களிடம் கண்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் அவற்றைப் பார்க்கவில்லை. நான் அவர்களிடம் செய்யச் சொல்வதைக் கேட்க அவர்களிடம் காதுகள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் எனது ஆணைகளைக் கேட்கவில்லை. ஏனென்றால், அவர்கள் கலகக்காரர்கள். 3 எனவே, மனுபுத்திரனே, உனது பைகளைக்கட்டு, நீ தொலைதூர நாட்டிற்குப் போவதுபோன்று நடி. இவ்வாறு செய். இதனால் உன்னை ஜனங்கள் பார்க்கமுடியும். அவர்கள் உன்னைப் பார்க்கலாம், ஆனால் அவர்கள் கலகக்காரர்கள்.
4 “பகல் நேரத்தில், உனது பைகளை வெளியே வை, அதனால் உன்னை ஜனங்கள் பார்க்கமுடியும். பிறகு மாலையில், ஒரு கைதி தொலைதூர நாட்டிற்குப் போவதுபோன்று நீ புறப்படு. 5 ஜனங்கள் கவனித்துக்கொண்டிருக்கும்போது சுவற்றில் ஒரு துவாரமிட்டு, அத்துவாரத்தின் வழியாக வெளியே போ. 6 இரவில், உனது பைகளைத் தோளில் போட்டுக்கொண்டு விலகிப்போ. உன் முகத்தை மூடிக்கொள். அதனால் நீ போகும்போது உன்னால் பார்க்க முடியாமல்போகும். நீ இவற்றையெல்லாம் செய்யவேண்டும். எனவே ஜனங்கள் உன்னைப் பார்க்கமுடியும். ஏனென்றால், இஸ்ரவேல் குடும்பத்துக்கு உன்னை ஒரு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துவேன்.”
7 எனவே நான் (எசேக்கியேல்) கட்டளையிடப்பட்டபடி செய்தேன். பகல் பொழுதில், எனது பைகளை எடுத்துகொண்டு தூரநாடுகளுக்குப் போவதுபோன்று புறப்பட்டேன். அன்று மாலையில் நான் என் கையால் சுவரில் துவாரமிட்டேன். இரவில் நான் என் தோளில் பைகளைப் போட்டுக்கொண்டு விலகினேன். நான் இதனைச் செய்தேன். எனவே ஜனங்களால் என்னைப் பார்க்கமுடிந்தது.
8 மறுநாள் காலையில், கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 9 “மனுபுத்திரனே, நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்று இஸ்ரவேலின் கலகக்காரர்கள் உன்னைப் பார்த்துக் கேட்டார்கள் அல்லவா? 10 அவர்களது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார் என்று அவர்களிடம் கூறு. இந்தத் துயரச் செய்தியானது எருசலேமின் தலைவரையும் இஸ்ரவேலில் வாழ்கிற அனைத்து ஜனங்களையும் பற்றியது. 11 அவர்களிடம், ‘நான் (எசேக்கியேல்) ஜனங்களாகிய உங்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறேன். நான் செய்திருக்கின்றவையெல்லாம் நிச்சயம் உங்களுக்கு ஏற்படும்’ என்று சொல். நீங்கள் சிறைக் கைதிகளாகத் தூர நாடுகளுக்குப் பலவந்தமாக அனுப்பப்படுவீர்கள். 12 உங்கள் தலைவன் சுவற்றில் துவாரமிட்டு அவற்றின் வழியாக நழுவிப் போய்விடுவான். அவன் தனது முகத்தை மூடுவான். எனவே, ஜனங்களால் அவனை அடையாளம் காணமுடியாது. அவன் எங்கே போகிறான் என்பதை அவனது கண்களால் கண்டுகொள்ள முடியாது. 13 அவன் தப்பித்துக்கொள்ள முயல்வான். ஆனால் நான் (தேவன்) அவனைப் பிடித்துக்கொள்வேன்! அவன் என் வலைக்குள் பிடிக்கப்படுவான். நான் அவனை கல்தேயர் வாழும் பாபிலோனுக்கு கொண்டு போவேன். ஆனாலும் அவன் பாபிலோனைப் பார்க்கமுடியாது. பகைவர்கள் அவனது கண்களைக் குத்திக் குருடாக்குவார்கள். பிறகு அவன் அங்கு மரிப்பான். 14 இஸ்ரவேலைச் சுற்றியுள்ள நாடுகளில் வாழும்படி நான் அரசனின் ஜனங்களைப் பலவந்தப்படுத்துவேன். நான் அவனது படையைக் காற்றில் சிதறடிப்பேன். பகைவரின் படைவீரர்கள் அவர்களைத் துரத்துவார்கள். 15 பிறகு அந்த ஜனங்கள், நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள். நான் அவர்களைப் பல நாடுகளில் சிதறடித்தேன் என்பதையும் அறிவார்கள். அவர்களை வேறு நாடுகளுக்குச் செல்லும்படி நான் கட்டாயப்படுத்தினேன் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.
16 “ஆனால், கொஞ்சம் ஜனங்களை நான் வாழும்படி அனுமதித்தேன். அவர்கள் நோயாலும் பசியாலும் போராலும் மரிக்கமாட்டார்கள். நான் அந்த ஜனங்களை வாழவிடுவேன், அதனால் அவர்கள் எனக்கு எதிராகச் செய்த பயங்கரமான காரியங்களைப்பற்றிப் பிற ஜனங்களுக்குச் சொல்ல முடியும், பிறகு, நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்.”
பயத்தோடு நடுங்கு
17 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 18 “மனுபுத்திரனே, நீ பயந்தவனைப்போன்று நடக்கவேண்டும். நீ உணவை உண்ணும்போது நடுங்கவேண்டும். நீ உனது தண்ணீரைக் குடிக்கும்போது கவலையும் அச்சமும் கொண்டவனைப்போன்று நடந்துகொள்ள வேண்டும். 19 நீ இதனைப் பொது ஜனங்களுக்குச் சொல்லவேண்டும். நீ, இவ்வாறு சொல்லவேண்டும். எருசலேமிலும் இஸ்ரவேலின் மற்றப் பகுதிகளிலும் வாழ்கிற ஜனங்களுக்கு, ‘நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். உங்கள் உணவை நீங்கள் உண்ணும்போது ஜனங்களாகிய நீங்கள் மிகவும் கவலைப்படுவீர்கள், நீங்கள் உங்கள் தண்ணீரைக் குடிக்கும்போது திகிலடைவீர்கள். ஏனென்றால், உங்கள் நாட்டிலுள்ள அனைத்துப் பொருட்களும் அழிக்கப்படும்! அங்கே வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்களிடம் பகைவர்கள் கொடூரமாக நடந்துகொள்வார்கள். 20 இப்பொழுது உங்கள் நகரங்களில் ஏராளமான ஜனங்கள் வாழ்கிறார்கள். ஆனால் அந்நகரங்கள் அழிக்கப்படும். உங்கள் நாடு முழுவதும் பாழாக்கப்படும். பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.’”
துன்பம் வரும்
21 பிறகு, கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 22 “மனுபுத்திரனே, இஸ்ரவேல் நாட்டைப்பற்றி ஜனங்கள் இந்தப் பாடலை ஏன் பாடுகின்றனர்?
“‘துன்பம் விரைவில் வராது,
தரிசனம் நிகழாது.’
23 “அவர்களின் கர்த்தராகிய ஆண்டவர் இப்பாடலை நிறுத்துவார் என்று அந்த ஜனங்களிடம் சொல். இனிமேல் அவர்கள் இஸ்ரவேலைப்பற்றி அவற்றைச் சொல்லமாட்டார்கள். இப்பொழுது அவர்கள் இப்பாடலைச் சொல்லுவார்கள்:
“‘துன்பம் விரைவில் வரும்,
தரிசனம் நிகழும்.’
24 “இது உண்மை. இனிமேல் பொய்யான தரிசனங்கள் இஸ்ரவேலில் இராது. மந்திரவாதிகளின் நிறைவேறாத குறிகளும் இனிமேல் இராது. 25 ஏனென்றால், நானே கர்த்தர். என்ன சொல்ல விரும்புகிறேனோ அதையே சொல்வேன். அவை நிகழும்! நான் அதன் காலத்தை நீடிக்கச் செய்யமாட்டேன். அத்துன்பங்கள் உன் சொந்த வாழ்நாளிலேயே விரைவில் வரும்! கலகக்காரர்களே, நான் எதையாவது சொல்லும்போது அது நடக்கும்படிச் செய்வேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.
26 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 27 “மனுபுத்திரனே, இஸ்ரவேல் ஜனங்கள் நான் உனக்குக் கொடுக்கும் தரிசனங்கள் நிகழ அநேக நாட்கள் ஆகும் என்று எண்ணுகிறார்கள். பல, வருஷங்கள் கழித்து நடக்கப்போகும் காரியங்களைப்பற்றி நீ பேசுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். 28 எனவே நீ அவர்களிடம் இவற்றைச் சொல்லவேண்டும்: ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: நான் இனி தாமதிக்கமாட்டேன். ஏதாவது நிகழும் என்று நான் சொன்னால் அது நிகழும்!’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
13 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, நீ எனக்காக இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளிடம் பேச வேண்டும். அத்தீர்க்கதரிசிகள் உண்மையில் எனக்காகப் பேசவில்லை, அவர்கள் தாம் சொல்ல விரும்புவதையே சொல்கிறார்கள். எனவே நீ அவர்களிடம் பேசவேண்டும். அவர்களிடம் இவற்றைப் பேசு, ‘கர்த்தரிடமிருந்து வந்த இச்செய்தியைக் கேளுங்கள்! 3 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். மூடத் தீர்க்கதரிசிகளே, உங்களுக்குத் தீயவை ஏற்படும். நீங்கள் உங்களது சொந்த ஆவிகளைப் பின்பற்றுகிறீர்கள். நீங்கள் உண்மையில் எவற்றைத் தரிசிக்கிறீர்களோ அவற்றை ஜனங்களிடம் கூறுவதில்லை.
4 “‘இஸ்ரவேலே, உங்கள் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலும் பாழடைந்த கட்டிடங்களிலும் வாழும் நரிகளுக்கு ஒப்பானவர்கள். 5 நீங்கள் நகரத்தின் உடைந்த சுவர்களுக்கு அருகில் படை வீரர்களை நிறுத்தி வைக்கவில்லை. நீங்கள் இஸ்ரவேல் வம்சத்தாரைப் பாதுகாப்பதற்காக சுவர்களைக் கட்டியிருக்கவில்லை. எனவே கர்த்தர் உங்களைத் தண்டிக்கும் காலம் வரும்போது நீங்கள் போரை இழப்பீர்கள்!
6 “‘பொய்த் தீர்க்கதரிசிகள் தரிசனங்களைக் கண்டதாகக் கூறினார்கள். அவர்கள் தம் மந்திரங்களைச் செய்தார்கள். அவர்கள் எதிர்காலத்தைக் குறித்து தீர்க்கதரிசனம் சொன்னார்கள். ஆனால் அவர்கள் பொய் சொன்னார்கள். அவர்கள் தம்மை கர்த்தர் அனுப்பியதாகச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் பொய் சொன்னார்கள். அவர்கள் இன்னும் தாம் கூறிய பொய்கள் உண்மையாவதற்காக காத்திருக்கிறார்கள்.
7 “‘பொய்த் தீர்க்கதரிசிகளே, நீங்கள் கண்ட தரிசனங்களெல்லாம் உண்மையல்ல. நீங்கள் உங்கள் மந்திரங்களைச் செய்தீர்கள். சில நிகழும் என்றீர்கள். ஆனால் நீங்கள் பொய் சொன்னீர்கள்! கர்த்தர் அவற்றைக் கூறியதாக நீங்கள் சொன்னீர்கள். ஆனால் நான் உங்களிடம் பேசவில்லை!’”
8 எனவே இப்போது, எனது கர்த்தராகிய ஆண்டவர் உண்மையிலேயே பேசுவார்! அவர் கூறுகிறார்: “நீங்கள் பொய்களைச் சொன்னீர்கள். நீங்கள் உண்மையற்ற தரிசனங்களைப் பார்த்தீர்கள். எனவே நான் (தேவன்) இப்பொழுது உங்களுக்கு எதிராக இருக்கிறேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இதனைச் சொன்னார். 9 கர்த்தர் கூறுகிறார்: “பொய்த் தரிசனங்களைப் பார்த்து பொய் சொன்ன தீர்க்கதரிசிகளை நான் தண்டிப்பேன். அவர்களை என் ஜனங்களிடமிருந்து விலக்குவேன். இஸ்ரவேல் வம்சத்தாரின் பட்டியலில் அவர்களின் பெயர்கள் இருக்காது. அவர்கள் மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்கு வரமாட்டார்கள். பிறகு, நான்தான் கர்த்தராகிய ஆண்டவர் என்றும், நீங்கள் அறிவீர்கள்!
10 “மீண்டும் மீண்டும் அந்தப் பொய்த் தீர்க்கதரிசிகள் என் ஜனங்களிடம் பொய் சொல்கிறார்கள். சமாதானம் இருக்கிறது என்று தீர்க்கதரிசிகள் சொன்னார்கள். ஆனால் அங்கே சமாதானம் இல்லை. ஜனங்களுக்கு சுவரை நிர்மாணித்து போர் செய்ய தயாராகிட அவசியம் இருந்தது. ஆனால் அவர்கள் உடைந்த சுவரின் மேல் ஒரு மெல்லிய பூச்சை மட்டுமே பூசினார்கள். 11 நான் கல்மழையையும் பெருமழையையும் (பகைவர் படை) அனுப்புவேன் என்று அம்மனிதர்களிடம் சொல். காற்று கடுமையாக அடிக்கும். புயல் காற்றும் வரும். 12 பிறகு அந்தச் சுவர் கீழே விழும். ஜனங்கள் தீர்க்கதரிசிகளிடம், ‘சுவரில் நீங்கள் பூசிய பூச்சு என்னவாயிற்று?’ என்று கேட்பார்கள்.” 13 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான் கோபமாக இருக்கிறேன். நான் உனக்கு எதிராகப் பலமான புயல் காற்றை அனுப்புவேன். நான் கோபமாக இருக்கிறேன். நான் உனக்கு எதிராகப் பெருமழையை அனுப்புவேன். நான் கோபமாக இருக்கிறேன். நான் வானத்திலிருந்து பெருங்கல் மழையைப் பொழியச் செய்து உன்னை முழுமையாக அழிப்பேன்! 14 நீங்கள் அவற்றில் பூச்சு பூசினீர்கள். ஆனால் நான் முழுச் சுவற்றையும் அழித்துவிட்டேன். அதைத் தரையிலே விழப்பண்ணுவேன். அச்சுவர் உன்மீது விழும். பிறகு, நான்தான் கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். 15 நான் சுவருக்கும் சாந்து பூசினவர்களுக்கும் எதிரான எனது கோபத்தை முடிப்பேன். பிறகு நான் சொல்லுவேன்; ‘சுவரும் இல்லை, சாந்து பூசின வேலைக்காரர்களும் இல்லை.’
16 “இஸ்ரவேலில் உள்ள பொய்த் தீர்க்கதரிசிகளுக்கு இவை எல்லாம் ஏற்படும். அத்தீர்க்கதரிசிகள் எருசலேம் ஜனங்களிடம் பேசுகிறார்கள். அத்தீர்க்கதரிசிகள் சமாதானம் உண்டென்று சொல்கிறார்கள். ஆனால் சமாதானம் இல்லை” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.
17 தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, இஸ்ரவேலில் உள்ள பெண் தீர்க்கதரிசிகளைப் பாருங்கள். அப்பெண் தீர்க்கதரிசிகள் எனக்காகப் பேசுவதில்லை. அவர்கள் விரும்புவதையே சொல்லுகிறார்கள். எனவே அவர்களுக்கு எதிராக நீ எனக்காக அவர்களிடம் பேச வேண்டும். 18 ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: பெண்களாகிய உங்களுக்குத் தீமைகள் ஏற்படும். நீங்கள், ஜனங்கள் தம் கையில் அணிந்துகொள்ளத் தாயத்துகளைச் செய்கிறீர்கள். ஜனங்கள், தம் தலையில் அணிந்துக்கொள்ள சிறப்பான முக்காட்டுச் சேலைகளை உண்டாக்குகிறீர்கள். ஜனங்களது வாழ்வை அடக்கி ஆள மந்திரசக்தி இவற்றில் உள்ளதாகக் கூறுகிறீர்கள். உங்களது வாழ்வுக்காக அந்த ஜனங்களை நீங்கள் வேட்டையாடுகிறீர்கள்! 19 நான் முக்கியமானவனில்லை என்று ஜனங்களை நினைக்கும்படிச் செய்கிறீர்கள். சில பிடி வாற்கோதுமைக்காகவும் அப்பத்துண்டுகளுக்காகவும் அவர்களை எனக்கு எதிராக நீங்கள் திருப்புகிறீர்கள். நீங்கள் என் ஜனங்களிடம் பொய் கூறுகிறீர்கள். அவர்கள் பொய்களைக் கேட்க விரும்புகிறார்கள். வாழவேண்டிய ஜனங்களைக் கொல்லுகிறீர்கள். மரிக்கவேண்டிய ஜனங்களை வாழவைக்கிறீர்கள். 20 எனவே கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: நீங்கள் துணியையும் தாயத்துக்களையும் ஜனங்களை வலைக்குட்படுத்த உருவாக்குகிறீர்கள். ஆனால் நான் அந்த ஜனங்களை விடுவிப்பேன். அவர்கள் கைகளிலிருந்து அத்தாயத்துகளைப் பிய்த்து எறிவேன். ஜனங்கள் உங்களிடமிருந்து விடுதலை பெறுவார்கள். அவர்கள் வலையிலிருந்து பறக்கும் பறவைகளைப்போன்று இருப்பார்கள்! 21 நான் உங்கள் முக்காட்டுச் சேலைகளைக் கிழித்து உங்கள் வல்லமையிலிருந்து என் ஜனங்களைக் காப்பேன். அந்த ஜனங்கள் உங்கள் வலைகளிலிருந்து தப்புவார்கள். நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
22 “‘தீர்க்கதரிசிகளாகிய நீங்கள் பொய்களைச் சொல்கிறீர்கள். உங்களது பொய்கள் நல்ல ஜனங்களைப் புண்படுத்துகின்றன. அந்த நல்ல ஜனங்கள் புண்படுவதை நான் விரும்புவதில்லை. நீங்கள் கெட்ட ஜனங்களை ஆதரிக்கிறீர்கள், உற்சாகப்படுத்துகிறீர்கள். அவர்களின் வாழ்வை மாற்றும்படி நீங்கள் அவர்களிடம் சொல்வதில்லை. அவர்களின் வாழ்வைக் காப்பாற்ற நீங்கள் முயல்வதில்லை! 23 எனவே இனி நீங்கள் பயனற்ற தரிசனங்களைக் காண்பதில்லை. இனிமேல் நீங்கள் எவ்வித மந்திரமும் செய்யப் போவதில்லை. நான் எனது ஜனங்களை உங்களது சக்திகளிலிருந்து காப்பாற்றுவேன். நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.’”
1 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியனான யாக்கோபு, உலகமெங்கும் பரவியுள்ள பன்னிரண்டு குடிகளுக்கும் வாழ்த்துக்களோடு எழுதிக்கொள்வது:
விசுவாசமும் ஞானமும்
2 எனது சகோதர சகோதரிகளே, உங்களுக்குப் பலவகையான தொந்தரவுகள் இருக்கும். ஆனால் இவை நிகழும்போது இதற்காக மகிழ்ச்சி அடையுங்கள். 3 ஏனென்றால், இத்தொந்தரவுகள் உங்களது விசுவாசத்தை சோதிக்கின்றன என நீங்கள் அறியுங்கள். இவை உங்களுக்குப் பொறுமையைத் தருகின்றது. 4 நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொறுமை வெளிப்படக்கடவது. அப்பொறுமை உங்களை, நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாக இல்லாமல் முழுமையும் நிறைவும் உள்ளவர்களாக ஆக்கித் தன் பணியை நிறைவு செய்யும்.
5 ஆனால் உங்களில் எவருக்கேனும் ஞானம் வேண்டுமானால் நீங்கள் தேவனிடம்தான் கேட்டுக்கொள்ள வேண்டும். தேவன் தாராளமானவர். கேட்கின்ற ஒவ்வொருவருக்கும் கொடுப்பதில் அவர் மகிழ்வடைகிறார். ஆகையால் தேவன் உங்களுக்கு ஞானத்தைக் கொடுப்பார். 6 ஆனால் நீங்கள் தேவனைக் கேட்டுக்கொள்ளும்போது உங்களுக்கு அவர் மீது விசுவாசம் வேண்டும். தேவனை சந்தேகித்தல் கூடாது. சந்தேகப்படுகிறவன் கடலில் உள்ள அலைகளைப் போன்றவன். காற்று அந்த அலைகளை மேலும் கீழுமாகப் புரட்டும். 7-8 சந்தேகப்படுகிறவன் ஒரே நேரத்தில் இரண்டு வேறுபட்ட சிந்தனைகளை உடையவனாக இருக்கிறான். அவன் தான் செய்கின்ற எதைப் பற்றியும் தீர்மானிக்க முடியாதவன். இத்தகையவன் கர்த்தரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது.
உண்மையான செல்வம்
9 தேவன் தன்னை செல்வந்தனாக ஆக்கியிருக்கிறார் என ஒரு ஏழைச் சகோதரன் அல்லது சகோதரி பெருமைப்பட வேண்டும். 10 மேலும் தேவன் தன்னைப் பணிவுள்ளவனாக ஆக்கியிருக்கிறார் என ஒரு பணக்காரச் சகோதரன் அல்லது சகோதரி பெருமைப்பட வேண்டும். எப்படி? “அவன் ஒரு காட்டுப் பூவைப்போல உதிர்ந்து போவான்” என்று தேவன் சொன்னார். 11 சூரியன் உதயமானதும் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடாகிறது. சூரிய வெப்பமானது செடிகளைக் காய வைக்கிறது. பூ உதிர்ந்துவிடுகின்றது. அந்த பூ அழகாக இருந்தது. ஆனால் அது வாடிப்போய் விடுகிறது. பணக்காரனும் அப்படித்தான். அவன் தன் வியாபாரத்துக்காகத் திட்டமிடும்போது இறந்துபோவான்.
தேவனிடமிருந்து சோதனைகள் வருவதில்லை
12 சோதிக்கப்படும்போது உறுதியாய் இருக்கிற மனிதன் மிகுந்த பாக்கியவான் ஆகிறான். ஏனெனில் தான் நேசிக்கிறவர்களுக்குத் தருவதாக தேவன் வாக்களித்த வாழ்வு என்னும் பரிசை, சோதனையில் தேறிவிடும்போது அவன் பெறுவான். 13 ஒரு மனிதன் சோதிக்கப்படும்போது, “அந்த சோதனை தேவனிடமிருந்து உண்டாகிறது” என்று அவன் சொல்லக் கூடாது. பொல்லாங்கினால் தேவன் சோதிக்கப்படுவதில்லை. மேலும் தேவன் ஒருவரையும் சோதிப்பதும் இல்லை. 14 அவனவன் தனது சுய ஆசைகளாலேயே இழுக்கப்பட்டு சிக்குண்டு சோதிக்கப்படுகிறான். 15 இந்த ஆசையானது கருத்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கிறது. மேலும் பாவம் முழுமையடையும்போது மரணத்தைத் தருகிறது.
16 எனது அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, ஏமாற்றப்படாமல் இருங்கள். 17 எல்லா நன்மைகளும் தேவனிடமிருந்தே வருகின்றன. ஒவ்வொரு முழுமையான வரமும் அவரிடமிருந்தே வருகின்றது. இவை, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்றவற்றை உருவாக்கிய பிதாவிடமிருந்தே வருகின்றன. அவர் மாறுவதில்லை. எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கிறார். 18 உண்மையான வார்த்தை மூலமே தேவன் நமக்கு வாழ்க்கையைத் தர முடிவு செய்துள்ளார். அவரால் படைக்கப்பட்ட அனைத்திலும் நம்மையே முக்கியமானவையாகக் கருதுகிறார்.
கவனிப்பதும் கீழ்ப்படிவதும்
19 எனது அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, கேட்பதில் தீவிரமாகவும், பேசுவதில் பொறுமையாகவும், கோபிப்பதில் தாமதமாகவும் இருங்கள். 20 ஒருவனின் கோபமானது, அவனை தேவன் விரும்புகிற நல் வழியில் நடத்தாது. 21 எனவே உங்களைச் சுற்றி மிகுந்த அளவில் இருக்கிற எல்லாவிதமான அழுக்கையும், தீமையையும் நீங்கள் ஒழித்துவிட்டு உங்கள் ஆன்மாவைக் காப்பாற்ற வல்ல போதனையைப் பணிவுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.
22 தேவன் சொல்கிறபடி செய்கிறவர்களாக இருங்கள். போதனையைக் கேட்கிறவர்களாக மட்டுமே இருந்து தம்மைத் தாமே வஞ்சித்துக்கொள்கிறவர்களாக இருக்காதீர்கள். 23 ஒருவன் தேவனுடைய போதனையைக் கேட்டுவிட்டு எதுவும் செயல்படாமல் இருந்தால் அது ஒருவன் கண்ணாடியின் முன் நின்று தன் பிம்பத்தைத் தானே பார்த்துக்கொள்வது போன்றது ஆகும். 24 அவன் தன்னைத் தானே பார்த்து, அந்த இடம் விட்டுப் போனபிறகு தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான். இதுவும் அதைப் போன்றதுதான். 25 முழுமையான தேவனுடைய சட்டத்தை ஆழமாக ஆராய்ந்து, கேட்டு மறந்துவிடுகிறவனாக இல்லாமல் தொடர்ந்து அதைப் படித்து அதன்படி நடக்கிறவன் தான் செய்வதில் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருக்கிறான். தேவனுடைய சட்டம் மக்களை விடுதலையடையச் செய்கிறது.
தேவனை வழிபடுகிற உண்மையான வழி
26 தெய்வ பக்தி உள்ளவன் என ஒருவன் தன்னைப்பற்றி எண்ணிக்கொள்ளலாம். ஆனால் தன் நாக்கை அவன் அடக்கிக்கொள்ளவில்லையெனில், தன்னைத்தானே அவன் முட்டாளாக்கிக்கொள்கிறான். அவன் “தெய்வ பக்தி” பயனற்றதாக இருக்கின்றது. 27 பிதாவாகிய தேவன் தூய்மையானதும் குற்றமற்றதுமென எண்ணுகிற வழிபாடு என்பது உதவி தேவைப்படுகிற விதவைகள், அனாதைகள் ஆகியோர்மேல் அக்கறை கொள்வதும் உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்வதுமே ஆகும்.
2008 by World Bible Translation Center