Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எரேமியா 48-49

மோவாப் பற்றிய செய்தி

48 இது மோவாபைப் பற்றிய செய்தி. இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்கிறது:

“நேபோ மலைக்கு கேடு வரும்.
    நேபோ மலை அழிக்கப்படும்.
கீரியாத் தாயீம் தாழ்மைப்படும்.
    இது கைப்பற்றப்படும்.
பலமான இடம் தாழ்மைப்படும்.
    இது நொறுக்கப்படும்.
மோவாப் மீண்டும் பாராட்டப்படாது.
    மோவாபின் தோல்விக்கு எஸ்போனின் ஆட்கள் திட்டமிடுவார்கள்.
அவர்கள், ‘வா, அந்த நாட்டிற்கு ஒரு முடிவு செய்வோம்’ என்று சொல்வார்கள்.
மத்மேனே, நீ மௌனமாக்கப்படுவாய்.
    பட்டயம் உன்னைத் துரத்தும்.
ஒரோனாயிமிலிருந்து வரும் கதறல்களைக் கேள்.
    அவை குழப்பமும் பேரழிவுமுள்ள கதறல்களாக இருக்கும்.
மோவாப் அழிக்கப்படும்.
    அவளது சிறு குழந்தை உதவிக்காக அழும்.
மோவாபின் ஜனங்கள் லூகித்துக்குச் செல்லும் பாதையில் செல்வார்கள்.
    அவர்கள் போகும் போது மிக மோசமாக அழுதுக்கொண்டிருப்பார்கள்.
ஒரோனாயிமுக்குச் செல்லும் இறக்கமான பாதையில்
    வேதனை மற்றும் துன்பத்தின் அழுகையொலி கேட்கலாம்.
ஓடுங்கள்! உங்கள் உயிருக்காக ஓடுங்கள்!
    வனாந்தரத்தில் காற்றில் அடித்துச்செல்லும் முட்செடியைப் போல ஓடுங்கள்!

“நீங்கள் உங்களால் செய்யப்பட்ட பொருளின் மீதும், உங்கள் செல்வத்தின்மீதும் நம்பிக்கை வைத்தீர்கள்.
    எனவே, நீங்கள் கைப்பற்றப்படுவீர்கள்.
கேமோஷ் தெய்வம் சிறையெடுக்கப்படும்.
    அதனோடு அதன் ஆசாரியர்களும் அதிகாரிகளும் கொண்டு செல்லப்படுவார்கள்.
ஒவ்வொரு பட்டணத்துக்கு எதிராகவும் அழிக்கிறவன் வருவான்.
    ஒரு பட்டணம் கூட தப்பிக்காது.
பள்ளத்தாக்கு அழிக்கப்படும்.
    மேட்டு நிலமும் அழிக்கப்படும்.
இது நிகழும் என்று கர்த்தர் சொன்னார்.
    எனவே, இது நடக்கும்.
மோவாபின் வயல்களின் மேல் உப்பைத் தூவுங்கள்.
    அந்நாடு காலியான வனாந்தரமாகும்.
மோவாபின் பட்டணங்கள் காலியாகும்.
    அவற்றில் ஜனங்கள் எவரும் வாழமாட்டார்கள்.
10 கர்த்தர் சொல்வதின்படி ஒருவன் செய்யாவிட்டால்,
    அவரது பட்டயத்தைப் பயன்படுத்தி அந்த ஜனங்களைக் கொல்லாவிட்டால் பிறகு அந்த மனிதனுக்கு தீயக் காரியங்கள் நிகழும்.

11 “மோவாப் என்றைக்கும் துன்பங்களை அறிந்ததில்லை.
    மோவாப் அடியில் தங்கும் படிவிட்ட திராட்சைரசத்தைப் போன்றது.
அது ஒரு பாத்திரத்தில் இருந்து இன்னொரு பாத்திரத்திற்கு ஊற்றப்படாமல் இருந்தது.
    அது சிறைபிடிக்கப்படாமல் இருந்தது.
அது முன்புப் போலவே சுவைக்கப்பட்டது.
    அதன் வாசனை மாறாமல் இருக்கிறது.”
12 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்,
“ஆனால் நான் விரைவில் உங்களை
    உங்கள் பாத்திரத்திலிருந்து ஊற்றி ஆட்களை அனுப்புவேன்.
பிறகு அவர்கள் அப்பாத்திரங்களைக் காலிச் செய்து
    உடைத்துப் போடுவார்கள்.”

13 பிறகு மோவாப் ஜனங்கள் தம் கேமோஷ் எனும் அந்நிய தெய்வத்துக்காக அவமானம் அடைவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அந்த அந்நிய தெய்வத்தை பெத்தேலில் நம்பினார்கள். அந்த அந்நிய தெய்வம் உதவி செய்யவில்லை என்று இஸ்ரவேல் ஜனங்கள் வெட்கப்பட்டனர். மோவாபும் அது போலாகும்.

14 “உங்களால், ‘நாங்கள் நல்ல வீரர்கள்.
    போரில் நாங்கள் தைரியமான ஆட்கள்’ என்று சொல்ல முடியாது.
15 பகைவர்கள் மோவாபைத் தாக்குவார்கள்.
    பகைவர்கள் அப்பட்டணங்களுக்குள் நுழைந்து அவற்றை அழிப்பார்கள்.
அவளது சிறந்த இளைஞர்கள் வெட்டப்படுவார்கள்”
இந்த வார்த்தை அரசரிடமிருந்து வந்தது.
    அந்த அரசனின் நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
16 “மோவாபின் முடிவு அருகில் உள்ளது.
    மோவாப் விரைவில் அழிக்கப்படும்.
17 மோவாபைச் சுற்றியுள்ள இடங்களில் வாழ்கின்ற ஜனங்களாகிய நீங்கள் அந்நாட்டிற்காக அழுவீர்கள்.
    மோவாப் எவ்வளவு புகழுடையதாக இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும்.
    எனவே அதற்காக அழுங்கள்.
‘ஆள்வோனின் வல்லமை உடைக்கப்பட்டது.
    மோவாபின் வல்லமையும் மகிமையும் போய்விட்டன’ என்று சோகப் பாட்டைப் பாடுங்கள்.

18 “தீபோனில் வாழ்கின்ற ஜனங்களே,
    உங்களது மகிமையுள்ள இடத்தைவிட்டு கீழே இறங்கி வாருங்கள்.
புழுதித் தரையில் உட்காருங்கள்.
    ஏனென்றால், மோவாபை அழித்தவன் வந்துக் கொண்டிருக்கிறான்.
அவன் உங்களது பலமான நகரங்களை அழிப்பான்.”

19 கர்த்தர், “ஆரோவேரில் வாழ்கின்ற ஜனங்களே
    சாலையிலே நின்று கவனித்துக்கொண்டிருங்கள்.
மனிதன் வெளியே ஓடிக்கொண்டிருப்பதைப் பாருங்கள்.
    பெண்கள் ஓடிக்கொண்டிருப்பதைப் பாருங்கள்.
    என்ன நடந்தது என்று அவர்களைக் கேளுங்கள்.

20 “மோவாப் அழிக்கப்படும். வெட்கத்தால் நிறையும்.
    மோவாப் மேலும் மேலும் அழும்.
மோவாப் அழிக்கப்படுகிறது என்று ஆர்னோன்
    நதிக்கரையில் அறிவியுங்கள்.
21 மேட்டுச் சமவெளியில் வாழ்கின்ற ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள்.
    ஓலோன், யாத்சா, மேப்காத் ஆகிய பட்டணங்களுக்குத் தீர்ப்பு வந்திருக்கிறது.
22 தீபோன், நேபோ, பெத்லாத்தாயீம் ஆகிய
    பட்டணங்களுக்குத் தீர்ப்பு வந்திருக்கிறது.
23 கீரியாத்தாயீம், பேத்கமூல், பெத்மெயோன் ஆகிய
    பட்டணங்களுக்கும் தீர்ப்பு வந்திருக்கிறது.
24 கீரியோத் மற்றும் போஸ்றா
    பட்டணங்களுக்கும் தீர்ப்பு வந்திருக்கிறது.
மோவாபின் பக்கத்திலும் தூரத்திலுமுள்ள அனைத்து
    பட்டணங்களுக்கும் தீர்ப்பு வந்திருக்கிறது.
25 மோவாபின் பலம் வெட்டப்பட்டிருக்கிறது.
    மோவாபின் கை உடைந்திருக்கிறது” என்று சொன்னார்.

26 “மோவாப் தன்னை கர்த்தரை விட முக்கியமானவனாக நினைத்தான்.
எனவே அவன் குடிக்காரனைப்போன்று தடுமாறுகிறவரை தண்டியுங்கள்.
    மோவாப் விழுந்து தனது வாந்தியிலேயே உருளட்டும்.
ஜனங்கள் மோவாபைக் கேலிசெய்யட்டும்.

27 “மோவாபே, ஒரு திருடர் கூட்டத்தால் இஸ்ரவேல்
    சிறைபிடிக்கப்பட்டபோது நீ அதனால் சந்தோஷப்பட்டு இஸ்ரவேலைக் கேலிசெய்தாய்.
நீ இஸ்ரவேலைப்பற்றி ஒவ்வொரு முறையும் பேசும்போது,
    உன் தலையை உதறி இஸ்ரவேலைவிட நீ சிறந்தவன் என்பதுபோல நடித்தாய்.
28 மோவாபின் ஜனங்களே, உங்கள் பட்டணங்களை விட்டு விலகுங்கள்.
    பாறைகளுக்கு இடையில் வாழப் போங்கள்.
குகைப் பிளவுகளில் புறாக்கள் கூடு கட்டியிருப்பதுப் போல
    அமைத்துக்கொள்ளுங்கள்.”

29 “நாங்கள் மோவாபின் பெருமையைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.
    அவன் மிகப் பெருமிதம் உடையவனாக இருந்தான்.
அவன் தன்னை முக்கியமானவன் என்று நினைத்தான்.
    அவன் எப்பொழுதும் பெருமை பேசினான்.
    அவன் மிகமிகப் பெருமை உடையவன்.”

30 கர்த்தர் கூறுகிறார்: “எந்தக் காரணமுமில்லாமல் மோவாப் கோபங்கொண்டு வீம்பு பேசுகிறது என்று நான் அறிவேன்.
    ஆனால் அவன் வீண் பெருமைகள் பொய்யானவை.
    அவன் சொல்வதை அவனால் செய்ய முடியாது.
31 எனவே, நான் மோவாபிற்காக அழுகிறேன்.
    நான் மோவாபிலுள்ள ஒவ்வொருவருக்காகவும் அழுகிறேன்.
    நான் கீராரேஸ்ஸிலிருந்து வந்தவர்களுக்காகவும் அழுகிறேன்.
32 நான் யாசேருக்காக யாசேர் ஜனங்களோடு சேர்ந்து அழுகிறேன்.
    சிப்மாவூர் கடந்தகாலத்தில் உனது திராட்சைக் கொடிகள் கடலைக் கடந்து பரவின.
    அது வெகு தொலைவிலுள்ள நகரமான யாசேரை அடைந்தது.
ஆனால் அழிக்கிறவன் உனது பழங்களையும் திராட்சைகளையும் எடுத்திருக்கிறான்.
33 மகிழ்ச்சியும், சந்தோஷமும் மோவாபின் பெரிய திராட்சைத் தோட்டங்களிலிருந்து முடிவடைந்தன.
திராட்சை ஆலைகளில் இருந்து திராட்சைரசம் பாய்வதை நான் நிறுத்தினேன்.
அங்கே திராட்சை ரசத்துக்காகத் திராட்சை ஆலையை மிதிக்கிறவர்களின் பாடலும் ஆடலும் இல்லை.
மகிழ்ச்சியின் சத்தங்கள் இல்லை.”

34 கர்த்தர், “எஸ்போன், எலெயாலே நகரங்களில் உள்ள ஜனங்கள் அழுதுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அழுகை வெகு தொலைவில் உள்ள யாகாஸ் வரைக்கும் கேட்கிறது. அவர்களின் அழுகை சோவாரிலிருந்து கேட்கிறது. அது வெகு தொலைவில் உள்ள ஒரோனாயிம் மற்றும் எக்லாத்செலிஷியாத் வரைக்கும் கேட்கிறது. நிம்ரீமின் தண்ணீரும் வற்றிப்போகும். 35 மோவாப் தேசத்து மேடைகளில் தகனபலிகள் இடுவதை நான் தடுப்பேன். அவர்கள் தம் தெய்வங்களுக்குப் பலிகள் கொடுப்பதை நான் நிறுத்துவேன்” என்று கூறினார்.

36 “நான் மோவாபிற்காக மிகவும் வருந்துகிறேன். மரணப் பாடலில் புல்லாங்குழலில் சோக ஒலியைப்போன்று எனது இதயம் அழுகின்றது. கீராரேஷ் ஜனங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். அவர்களது பணமும் செல்வமும் எல்லாம் எடுக்கப்பட்டன. 37 ஒவ்வொருவரும் தலையை மழித்திருந்தார்கள். ஒவ்வொருவரின் தாடியும் வெட்டப்பட்டிருந்தது. ஒவ்வொருவரின் கைகளும் வெட்டப்பட்டு இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் இடுப்பைச் சுற்றி சோகத்தின் ஆடையை அணிந்துக்கொண்டிருக்கின்றனர். 38 ஜனங்கள், மோவாபின் ஒவ்வொரு இடங்களிலும் அனைத்து வீடுகளின் மேலும் தெருச்சதுரங்களிலும் மரித்துப்போனவர்களுக்காக அழுதுக்கொண்டிருந்தனர். அங்கே துயரம் இருந்தது. ஏனென்றால், ஒரு காலியான ஜாடியை உடைப்பதுப்போன்று நான் மோவாபை உடைத்துள்ளேன்” என்று கர்த்தர் சொன்னார்.

39 “மோவாப் சிதறடிக்கப்படுகிறது. ஜனங்கள் அழுதுக்கொண்டிருக்கிறார்கள். மோவாப் சரணடைந்தது. இப்பொழுது மோவாப் அவமானப்படுகிறது. ஜனங்கள் மோவாபைக் கேலிசெய்கிறார்கள். ஆனால் நடந்தவைகள் அவர்களிடம் பயத்தை நிரப்பியுள்ளன.”

40 கர்த்தர் கூறுகிறார், “பார் ஒரு கழுகு வானத்திலிருந்து கீழே பறந்து வந்துக்கொண்டிருக்கிறது.
    அது மோவாபின் மேல் தன் இறக்கைகளை விரித்துக்கொண்டிருக்கிறது.
41 மோவாபின் பட்டணங்கள் கைப்பற்றப்படும்.
    பலமான மறைவிடங்கள் தோற்கடிக்கப்படும்.
அப்போது மோவாபின் வீரர்கள் ஒரு ஸ்திரீ பிள்ளையை பெறுகிற சமயத்தில் பயப்படுவதுபோல பயப்படுவார்கள்.
42 மோவாப் தேசம் அழிக்கப்படும்.
    ஏனென்றால், அவர்கள் தம்மை கர்த்தரைவிட முக்கியமானவர்களாக நினைத்தனர்.”

43 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்.
    “மோவாபின் ஜனங்களே, பயமும், ஆழமான குழிகளும், கண்ணிகளும் உனக்காகக் காத்திருக்கின்றன.
44 ஜனங்கள் பயந்து வெளியே ஓடுவார்கள்.
    அவர்கள் ஆழமான குழிகளில் விழுவார்கள்.
எவராவது ஆழமான குழிகளில் இருந்து
    வெளியே ஏறி வந்தால் அவன் கண்ணிகளில் சிக்குவான்.
நான் மோவாபிற்குத் தண்டனை ஆண்டைக் கொண்டு வருவேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.

45 “ஜனங்கள் வல்லமை மிக்க பகைவரிடமிருந்து ஓடினார்கள்.
    அவர்கள் பாதுகாப்புக்காக எஸ்போனுக்கு ஓடினார்கள்.
(ஆனால் அங்கே பாதுகாப்பு இல்லை.)
    எஸ்போனில் நெருப்பு பற்றியது.
சீகோனில் பட்டணத்திலும் நெருப்பு பிடித்தது.
    மோவாபின் தலைவர்களையும் அது அழிக்கிறது.
இது அந்த வீண்பெருமையுள்ள ஜனங்களையும் அழித்துக்கொண்டிருக்கிறது.
46 மோவாபே, இது உனக்குக் கேடாகும்.
    கேமோஷின் ஜனங்கள் அழிக்கப்படுகின்றனர்.
உனது மகன்களும் மகள்களும் கைதிகளாகச் சிறைபிடிக்கப்பட்டு அடிமைத்தனத்திற்கு கொண்டுப்போகப்படுகின்றனர்.
47 மோவாபின் ஜனங்கள் கைதிகளாகச் சிறைப் பிடிக்கப்பட்டு அவர்களை அடிமைகளாக அழைத்துச் செல்வார்கள். ஆனால் நாட்கள் வரும்போது நான் மோவாபின் ஜனங்களைத் திரும்பக் கொண்டு வருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

மோவாபின் தீர்ப்பு இத்துடன் முடிந்தது.

அம்மோனைப் பற்றிய செய்தி

49 அம்மோனியர்களைப்பற்றி கர்த்தர் இதைக் கூறுகிறார்,

“அம்மோனிய ஜனங்களே, இஸ்ரவேல் ஜனங்களுக்குப்
    பிள்ளைகள் இல்லையென்று நினைக்கிறீர்களா?
பெற்றோர்கள் மரித்தப்போது நாட்டை சுதந்தரித்துக்கொள்ள
    பிள்ளைகள் இல்லை என்று நினைக்கிறீர்களா?
ஒருவேளை அதற்காகவேதான் மில்காம் காத்தின் நாட்டை எடுத்துக்கொண்டிருக்கலாம்.”

கர்த்தர் கூறுகிறார், “அம்மோனின் ரப்பாவிலே ஒரு காலம் வரும்.
    அப்போது ஜனங்கள் போரின் சத்தங்களைக் கேட்பார்கள்.
அம்மோனின் ரப்பா அழிக்கப்படும்.
    அது அழிந்த கட்டிடங்கள் நிறைந்த வெற்று மலையாகும்.
    அதைச் சுற்றியுள்ள பட்டணங்கள் எரிக்கப்படும்.
அந்த ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்களைத் தம் சொந்த நாட்டை விட்டு விலகும்படி பலவந்தப்படுத்தினார்கள்.
    ஆனால் பிறகு, இஸ்ரவேல் அவர்களை விலகும்படி வற்புறுத்தி அவர்கள் தேசத்தை சுதந்தரிப்பர்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.

“எஸ்போன் ஜனங்களே அழுது புலம்புங்கள்! ஏனென்றால், ஆயி பட்டணம் அழிந்துக்கொண்டிருக்கிறது.
    அம்மோனது ராப்பாவின் பெண்களே அழுங்கள்!
சோகத்துக்குரிய ஆடையை அணிந்துக் கொண்டு அழுங்கள்.
    பாதுகாப்புக்காக நகரத்திற்கு ஓடுங்கள்.
ஏனென்றால், பகைவன் வந்துக்கொண்டிருக்கிறான்.
அவர்கள் மில்காம் என்ற தெய்வத்தை எடுத்துச் செல்வார்கள்.
    அவர்கள் மில்காமின் ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் எடுத்துச் செல்வார்கள்.
நீ உனது பலத்தைப்பற்றி பெருமைபட்டாய்.
    ஆனால் நீ உனது பலத்தை இழந்துக் கொண்டிருக்கிறாய்.
உனது பணம் உன்னை பாதுகாக்கும் என்று நம்புகிறாய்.
    எவரும் உன்னைத் தாக்கிட நினைக்கவும்மாட்டார்கள் என்று நினைக்கிறாய்.”
ஆனால் சர்வ வல்லையுள்ள கர்த்தர் இதனைக் கூறுகிறார்:
“எல்லாப் பக்கங்களிலுமிருந்தும் உனக்கு கஷ்டங்களை வரப்பண்ணுவேன்.
நீங்கள் அனவைரும் ஓடுவீர்கள்.
    எவராலும் உங்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கமுடியாது.”

“அம்மோனிய ஜனங்கள் கைதிகளாகச் சிறை பிடிக்கப்பட்டு அடிமைத்தனத்திற்குக் கொண்டு போகப்படுவார்கள். ஆனால் நேரம் வரும். அப்போது நான் அம்மோனிய ஜனங்களைத் திரும்பக் கொண்டுவருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏதோம் பற்றிய செய்தி

இச்செய்தி ஏதோமைப் பற்றியது. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்கிறார்:

“தேமானில் இனி ஞானமில்லையா?
    ஏதோமில் உள்ள ஞானிகள் நல்ல ஆலோசனைக் கூற முடிவதில்லையோ?
    அவர்கள் தம் ஞானத்தை இழந்துவிட்டார்கள்.
தேதானில் வாழ்கிற ஜனங்களே ஓடிப் போங்கள்! ஒளிந்துக்கொள்ளுங்கள்.
    ஏனென்றால், நான் ஏசாவை அவர்களின் தீமைகளுக்குத் தண்டிப்பேன்.

“வேலைக்காரர்கள் திராட்சைக் கொடிகளில் இருந்து திராட்சையைப் பறிக்கிறார்கள்.
    ஆனால் அவர்கள் கொடியில் சில திராட்சைகளை விட்டுவிடுவார்கள்.
இரவில் திருடர்கள் வந்தால்
    அவர்கள் எல்லாவற்றையும் எடுக்கமாட்டார்கள்.
10 நான் ஏசாவிலிருந்து எல்லாவற்றையும் எடுப்பேன்.
    நான் அவர்களின் அனைத்து மறைவிடங்களையும் கண்டுக்கொள்வேன்.
    அவன் என்னிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முடியாது.
அவனது பிள்ளைகள், உறவினர்கள், அயலார்கள் அனைவரும் மரிப்பார்கள்.
11 தன் பிள்ளைகளை பராமரிக்க யாரும் இருக்கமாட்டார்கள்.
அவனுடைய மனைவிகள் தாங்கள் சார்ந்திருக்க எவரும் இல்லாதிருப்பார்கள்.”

12 இதுதான் கர்த்தர் சொல்கிறது: “சில ஜனங்கள் தண்டிக்கப்படத்தக்கவர் அல்ல. ஆனால் அவர்கள் துன்புறுகிறார்கள். ஆனால் ஏதோம் நீ தண்டிக்கப்படத் தகுதி உள்ளவன். எனவே, நீ உண்மையாகத் தண்டிக்கப்படுவாய். உனக்கேற்ற தண்டனையிலிருந்து நீ தப்பிக்கமாட்டாய் நீ தண்டிக்கப்படுவாய்.” 13 கர்த்தர் கூறுகிறார், “எனது சொந்த வல்லமையினால், நான் இந்த வாக்குறுதியைச் செய்கிறேன். போஸ்றா பட்டணம் அழியப்போகிறது என்று நான் வாக்குக் கொடுக்கிறேன். அந்த பட்டணம் பாறைக் குவியலாக அழியும். ஜனங்கள் மற்ற நகரங்களுக்கு ஏற்படும் அழிவுகளைப்பற்றி சொல்லும்போது இதனை எடுத்துக்காட்டாகக் கூறுவார்கள். ஜனங்கள் அப்பட்டணத்தை நிந்திப்பார்கள். போஸ்றாவைச் சுற்றியுள்ள அனைத்து பட்டணங்களும் என்றென்றும் அழிக்கப்படும்.”

14 நான் கர்த்தரிடமிருந்து இந்த வார்த்தையைக் கேட்டேன்.
    கர்த்தர் நாடுகளுக்கு ஒரு தூதுவனை அனுப்பினார்.
“உங்கள் படைகளை ஒன்று சேருங்கள்! போருக்குத் தயாராகுங்கள்!
    ஏதோம் நாட்டிற்கு எதிராகச் செல்லுங்கள்!
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
15 ஏதோமே, நான் உன்னை ஜனங்களுக்குள்ளே முக்கியமற்றவனாகச் செய்வேன்.
    ஒவ்வொருவரும் உன்னை வெறுப்பார்கள்.
16 ஏதோமே, நீ மற்ற தேசங்களை பயமுறுத்தினாய்.
    எனவே நீ முக்கியமானவன் என்று நினைத்தாய்.
ஆனால் நீ முட்டாளானாய்.
    உன் பெருமை உன்னை வஞ்சித்திருக்கிறது.
    ஏதோமே, நீ மலைகளின் உச்சியில் இருக்கிறாய்.
    நீ பாறைகளும் குன்றுகளும் பாதுகாப்பாக இருக்கிற இடத்தில் இருக்கிறாய்.
ஆனால், நீ உனது வீட்டை கழுகின் கூட்டைப்போன்று உயரத்தில் கட்டினாலும் நான் உன்னைப் பிடிப்பேன்.
    நான் உன்னை அங்கிருந்து கீழே கொண்டு வருவேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.

17 “ஏதோம் அழிக்கப்படும்.
    ஜனங்கள் அழிந்த நகரங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைவார்கள்.
    அந்த அழிந்த நகரங்களில் ஜனங்கள் பிரமித்து பிரமிப்பார்கள்.
18 சோதோம் கொமோரா மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களைப்போன்று ஏதோம் அழிக்கப்படும்.
    அங்கே ஜனங்கள் எவரும் வாழமாட்டார்கள்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.

19 “யோர்தான் ஆற்றின் கரையிலுள்ள அடர்த்தியான புதர்களில் இருந்து சில வேளைகளில் சிங்கம் வரும். ஜனங்கள் தங்கள் ஆடுகளையும் மாடுகளையும் விட்டிருக்கிற வயல்களில் அச்சிங்கம் போகும். நான் அந்தச் சிங்கத்தைப் போன்றிருக்கிறேன். நான் ஏதோமுக்குப் போவேன். நான் அந்த ஜனங்களைப் பயப்படுத்துவேன். அவர்களை ஓடும்படிச்செய்வேன். அவர்களது இளைஞர்கள் யாரும் என்னைத் தடுக்கமுடியாது. எவரும் என்னைப்போல இரார். எவரும் எனக்குச் சவால் விடமுடியாது. அவர்களில் எந்த மேய்ப்பர்களும் (தலைவர்கள்) எனக்கு எதிரே நிற்கமுடியாது.”

20 எனவே, ஏதோம் ஜனங்களுக்கு என்ன செய்ய வேண்டும்
    என்று கர்த்தர் திட்டமிட்டுள்ளாரோ அதைக் கவனி!
தீமான் ஜனங்களுக்கு கர்த்தர் என்ன செய்யவேண்டும்
    என்று முடிவு செய்தாரோ, அதை கவனி!
ஏதோமின் மந்தையில் (ஜனங்கள்) உள்ள குட்டிகளைப் பகைவர்கள் இழுத்துப் போடுவார்கள்.
ஏதோமின் மேய்ச்சல் நிலம் அவர்கள் என்ன செய்தார்களோ
    அதினிமித்தம் வெறுமையாய்விடும்.
21 ஏதோமின் வீழ்ச்சியின் ஓசையில்
    பூமி அதிரும்.
அவர்களின் அழுகை
    செங்கடல் வழி முழுவதும் கேட்கும்.

22 கர்த்தர், மிருகத்தைத் தாக்கப்போகிற கழுகு மேலே பறப்பதுப்போன்று இருப்பார்.
    போஸ்ராவின் மேல் சிறகை விரிக்கிற கழுகைப்போன்று கர்த்தர் இருப்பார்.
அந்நேரத்தில் ஏதோமின் வீரர்கள் மிகவும் அஞ்சுவார்கள்.
    குழந்தையைப் பெறுகிற பெண்ணைப்போன்று அவர்கள் பயத்தால் அழுவார்கள்.

தமஸ்குவைப்பற்றியச் செய்தி

23 இச்செய்தி தமஸ்குவைப்பற்றியது:

“ஆமாத், அர்ப்பாத் ஆகிய பட்டணங்கள் அஞ்சுகின்றன.
    அவர்கள் பயப்படுகிறார்கள்.
    ஏனென்றால், அவர்கள் கெட்டச் செய்திகளைக் கேட்டனர்.
அவர்கள் அதைரியப்படுகிறார்கள்.
    அவர்கள் கவலைப்படுகிறார்கள், பயப்படுகிறார்கள்.
24 தமஸ்கு நகரம் பலவீனமாயிற்று.
    ஜனங்கள் ஓட விரும்புகின்றனர்.
    ஜனங்கள் திகில் அடைய தயாராகின்றனர்.
குழந்தை பெறும் பெண்களைப்போன்று
    ஜனங்கள் வலியும் துன்பமும் அடைகின்றனர்.

25 “தமஸ்கு மகிழ்ச்சியுள்ள நகரமாயிருக்கிறது.
    ஜனங்கள் அந்த ‘மகிழ்ச்சி நகரை’ இன்னும் விட்டுப் போகவில்லை.
26 எனவே, இளைஞர்கள் நகரின் பொதுச் சதுரங்களில் மரிப்பார்கள்.
    அந்த நேரத்தில் அவளது வீரர்கள் எல்லோரும் கொல்லப்படுவார்கள்.”
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
27 “தமஸ்குவின் சுவர்களில் நான் நெருப்பை வைப்பேன்.
    அது பெனாதாத்தின் பலமான கோட்டைகளை முழுவதுமாக எரிக்கும்.”

கேதார் மற்றும் காத்சோர் பற்றியச் செய்தி

28 இது கேதார் மற்றும் காத்சோர் கோத்திரத்தை ஆள்வோர்களைப்பற்றிய செய்தி. பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் அவர்களைத் தோற்கடித்தான்.

கர்த்தர் கூறுகிறார்.

“போய் கேதாரின் கோத்திரத்தை தாக்கு.
    கிழக்கின் ஜனங்களை அழியுங்கள்.
29 அவர்களின் கூடாரங்களும் மந்தைகளும் எடுக்கப்படும்.
    அவர்களின் கூடாரம் மற்றும் அவர்களின் செல்வமெல்லாம் எடுக்கப்படும்.
    பகைவர்கள் அவர்களது ஒட்டகங்களை எடுப்பார்கள்.
இதனை ஆண்கள் அவர்களிடம் சத்தமிடுவார்கள்.
    ‘நம்மைச் சுற்றிலும் பயங்கரமானவை நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
30 ‘வேகமாக ஓடுங்கள்!
    காத்சோரின் ஜனங்களே, ஒளிந்துக்கொள்ள நல்ல இடத்தைப் பாருங்கள்’
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
‘நேபுகாத்நேச்சார் உனக்கு எதிராக திட்டமிட்டான்.
    உன்னைத் தோற்கடிக்க அவன் ஒரு நல்ல திட்டத்தை நினைத்தான்.’

31 “பாதுகாப்பை உணர்கிற ஒரு தேசம் இருக்கிறது.
    அத்தேசம் பாதுகாப்பை உணர்கிறது.
அந்தத் தேசத்திற்கு வாசலோ வேலியோ பாதுகாப்புக்கு இல்லை.
அவற்றின் அருகில் எவரும் இல்லை.
    கர்த்தர், ‘அத்தேசத்தைத் தாக்குங்கள்!’ என்றார்.
32 பகைவர்கள் அவர்களின் ஒட்டகங்களைத் திருடுவார்கள்,
    அவர்களின் பெரிய மந்தையை எடுத்துக்கொள்வார்கள்.
நான் பூமியின் மூலைகளுக்கு அவர்களை ஓடச் செய்வேன்.
    நான் அவர்களுக்குப் பயங்கரமான துன்பங்களை எல்லா பக்கத்திலிருந்தும் கொண்டுவருவேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
33 “ஆசோர் தேசம், காட்டு நாய்கள் மட்டும் வாழத்தக்க இடமாக மாறும்.
அந்த இடத்தில் எவரும் வாழ்வதில்லை.
    அது என்றென்றும் காலியான வனாந்தரமாக இருக்கும்.”

ஏலாமைப் பற்றியச் செய்தி

34 யூதாவின் அரசனான சிதேக்கியாவின் ஆட்சியின் ஆரம்ப நாட்களில், தீர்க்கதரிசி எரேமியா கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றான். அச்செய்தி ஏலாம் தேசத்தைப்பற்றியது.

35 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்.
“நான் விரைவில் ஏலாமின் வில்லை உடைப்பேன்.
    வில் ஏலாமின் பலமான ஆயுதம்.
36 நான் ஏலாமிற்கு எதிராக நான்கு காற்றுகளைக் கொண்டு வருவேன்.
    நான் அவற்றை வானத்தின் நான்கு மூலைகளில் இருந்தும் கொண்டுவருவேன்.
நான்கு காற்றுகளும் வீசுகிற பூமியின் அனைத்து
    இடங்களுக்கும் ஏலாம் ஜனங்களை அனுப்புவேன்.
எல்லா தேசங்களுக்கும் ஏலாமின் கைதிகள் கொண்டுச்செல்லப்படுவார்கள்.
37 நான் ஏலாமை, அவர்களின் பகைவர்கள்
    கவனிக்கும்போதே துண்டுகளாக உடைப்பேன்.
அவர்களைக் கொல்ல விரும்பும் ஜனங்களின் முன்னால்
    ஏலாமை நான் உடைப்பேன்.
நான் அவர்களுக்குப் பயங்கரமானவற்றைக் கொண்டு வருவேன்.
    நான் எவ்வளவு கோபமாக இருக்கிறேன் என்பதைக் காட்டுவேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
“நான் ஏலாமைத் துரத்தும்படி வாளை அனுப்புவேன்.
    நான் அவர்கள் அனைவரையும் கொல்லும்வரை அந்த வாள் அவர்களைத் துரத்தும்.
38 நான் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறேன் என்பதை ஏலாமிற்குக் காட்டுவேன்.
    நான் அவளது அரசனையும் அவளது அதிகாரிகளையும் அழிப்பேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
39 “ஆனால் எதிர்காலத்தில், நான் ஏலாமிற்கு நன்மை நடக்கும்படிச் செய்வேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எபிரேயர் 7

ஆசாரியன் மெல்கிசேதேக்

மெல்கிசேதேக் சாலேமின் அரசன். அவன் மிக உயர்ந்த தேவனுடைய ஆசாரியனுமாகவும் இருந்தான். அரசர்களை வென்றுவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்த ஆபிரகாமை மெல்கிசேதேக் சந்தித்து ஆசிவழங்கினான். அதன் பிறகு, பத்தில் ஒரு பங்கை ஆபிரகாம் அவனுக்குக் கொடுத்தான்.

(சாலேமின் அரசனான மெல்கிசேதேக் என்ற பெயருக்கு இரு பொருள் உண்டு. மெல்கிசேதேக் என்பதற்கு “நன்மையின் அரசன்” என்ற பொருளும் “சலேமின் அரசன்” என்பதற்கு “சமாதானத்தின் அரசன்” என்ற பொருளும் உண்டு.) இவனது தாய் தந்தையரைப் பற்றி எவருக்கும் தெரியாது. எங்கிருந்து வந்தான் என்றும் தெரியாது. எங்கே பிறந்தான், எப்போது இறந்தான் என்றும் ஒருவருக்கும் தெரியாது. இவன் தேவனுடைய குமாரனைப் போன்றவன். அவன் என்றென்றைக்கும் ஆசாரியனாகவே இருக்கிறான்.

போரில் கைப்பற்றிய பொருள்களில் பத்தில் ஒரு பங்கை ஆபிரகாம் இவனுக்குக் கொடுத்ததின் மூலம் இவன் எவ்வளவு முக்கியமானவன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். இப்போது லேவியின் வாரிசுதாரர்களாக உள்ள ஆசாரியர்கள் இஸ்ரவேலைச் சேர்ந்த மக்களிடமிருந்து பத்தில் ஒருபாகத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென சட்டம் கூறுகிறது. அதாவது ஆபிரகாமின் குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் கூட மக்களிடமிருந்து இந்த பத்தில் ஒரு பங்கை அவர்கள் வசூலிக்கிறார்கள். இப்பொழுது மெல்கிசேதேக் ஆபிரகாமிடமிருந்து பத்தில் ஒன்றைப் பெற்றுக்கொண்டு தேவனுடைய விசேஷ வாக்குறுதிகளை பெற்ற ஆபிரகாமை ஆசீர்வதித்தான். மிகப் பெரிய மனிதர்களே சிறியவர்களை ஆசீர்வாதம் செய்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஒரு புறத்தில் வாழ்ந்து மடிகிற ஆசாரியர்களால் பத்தில் ஒரு பாகம் வசூலிக்கப்படுகிறது. இன்னொரு புறத்தில் இன்னும் உயிருடன் இருப்பதாகச் சொல்லப்படுகிற மெல்கிசேதேக்கால் பத்தில் ஒரு பாகம் வசூலிக்கப்படுகிறது. உண்மையில், ஆபிரகாமின் மூலமாக லேவியே பத்தில் ஒரு பாகத்தை மெல்கிசேதேக்குக்கு கொடுத்தான் என்று கூட நீங்கள் சொல்லக் கூடும். 10 ஏன்? ஏனெனில் மெல்கிசேதேக் ஆபிரகாமைச் சந்தித்தபோது லேவி இன்னும் பிறந்திருக்கவில்லை. தன் முன்னோரான ஆபிரகாமின் சரீரத்திலேயே இன்னும் அவன் இருந்தான்.

11 லேவி பரம்பரை ஆசாரிய முறைமைகளை அடிப்படையாய்க் கொண்ட சட்டத்தை [a] இஸ்ரவேல் மக்கள் பெற்றார்கள். ஆனால் இம்முறைமையினால் மக்கள் ஆன்மீக முதிர்ச்சியை அடைய முடியவில்லை, ஆரோனைப் போல அல்லாமல் மெல்கிசேதேக் போன்ற வேறொரு ஆசாரியன் அவசியமானார். 12 ஆசாரியத்துவம் மாற்றப்பட்டால் நியாயப்பிரமாணமும் மாற்றப்பட்டிருக்க வேண்டும். 13 எப்போதும் ஒரு ஆசாரியனாக சேவை செய்திராத ஒரு குடும்பக் குழுவினைச் சேர்ந்த ஒரு மனிதரைப் பற்றி இப்பகுதிகள் பேசுகின்றன. 14 நமது கர்த்தர் யூதாவின் குடும்பக் குழுவிலிருந்து வந்தவர் என்பது தெளிவு. மோசேயும் இந்தக் குடும்பக் குழுவிலிருந்து வரும் ஆசாரியர்களைப் பற்றி எதுவும் கூறவில்லை.

மெல்கிசேதேக்கைப் போன்று இயேசுவும் ஒரு ஆசாரியர்

15 மெல்கிசேதேக் போன்ற ஒரு வித்தியாசமான ஆசாரியர் வருவார் என்பதால் இது மேலும் தெளிவாகிறது. 16 மாம்சீகமான பரம்பரை பற்றிய சில சட்டங்களினால் ஆசாரியனாகாமல் அழிக்க முடியாத ஜீவனுக்குரிய வல்லமையால் அவர் ஆசாரியனாகிறார். 17 “நீர் மெல்கிசேதேக்கைப் போன்று என்றென்றைக்கும் உரிய ஆசாரியராக இருக்கிறீர்” [b]என்று வேதவாக்கியங்களில் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது.

18 ஆகவே அந்தப் பழைய சட்டம் இப்போது மாற்றப்பட்டிருக்கிறது. ஏனெனில் பழைய சட்டம் பலவீனமானதும், பயனற்றதுமாய் இருந்தது. 19 மோசேயின் நியாயப்பிரமாணமானது எதையும் முழுமை ஆக்கவில்லை. எனவே சிறிதளவேனும் நல்ல நம்பிக்கை நமக்கு கொடுக்கப்பட்டது. மேலும் அதன் மூலமாகத்தான் தேவனுக்கு அருகில் வருகிறோம்.

20 இது மிக முக்கியமானது. மற்றவர்களை ஆசாரியர்களாக்கியபோது ஆணை எதுவும் கொடுக்கப்படவில்லை. 21 ஆனால் இயேசுவைப் பிரதான ஆசாரியனாக்கியபோது தேவன் பிரமாணம் கொடுத்தார்.

“‘நீரே என்றென்றைக்கும் ஆசாரியனாக இருக்கிறீர்’
    என்று கர்த்தர் ஆணையிட்டுரைத்தார்.
மேலும் அவர் தன் மனதை மாற்றிக்கொள்ளமாட்டார்” (A)

என்றும் அவர் சொன்னார்.

22 மிகச் சிறந்த உடன்படிக்கைக்கு [c] இயேசுவே ஒரு நிரூபணமாக இருக்கிறார் என்பதே இதன் பொருள் ஆகும்.

23 ஏனைய ஆசாரியர்கள் இறந்தார்கள். எனவே நிறைய ஆசாரியர்கள் இருக்க வேண்டும். 24 இயேசுவே என்றென்றைக்கும் நிலைத்திருக்கக் கூடியவர். எனவே மாறா ஆசாரியத்துவம் கொண்டுள்ளார். 25 எனவே தன் மூலமாக தேவனிடம் வருகிறவர்களை இயேசுவால் முழுமையாக இரட்சிக்க முடியும். ஏனெனில் நமக்காகப் பரிந்து பேச இயேசு எப்பொழுதும் வாழ்கிறார்.

26 ஆகவே, இயேசுவே நமக்குத் தேவையான சிறந்த பிரதான ஆசாரியர். அவர் பரிசுத்தமானவர். அவரிடம் எவ்விதப் பாவங்களும் இல்லை. அவர் குற்றமில்லாதவர். பாவிகளால் பாதிக்கப்படாதவர். இவர் பரலோகத்தில் மேலான நிலைக்கு உயர்த்தப்பட்டார். 27 இவர் மற்ற ஆசாரியர்களைப் போன்றவரல்லர். அவர்கள் ஒவ்வொரு நாளும் பலிசெலுத்த வேண்டியிருந்தது. அவர்கள் முதலாவது தங்கள் பாவங்களுக்காகவும், பின்பு மக்களின் பாவங்களுக்காகவும் பலி செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் இவரோ அவ்வாறில்லை. அத்தகைய தேவையும் இவருக்கில்லை. இவர் தன்னையே பலிகொடுத்திருக்கிறார். அதுவே என்றென்றைக்கும் போதுமானது. 28 மோசேயின் சட்டம் மனிதர்களை ஆசாரியர்களாக நியமிக்கிறது. அம்மனிதர்களுக்கு பலவீனமிருந்தது. ஆனால் ஆணை அடங்கிய அந்தப் பகுதி சட்டத்திற்குப் பிறகு வருகிறது. மேலும் அது என்றென்றைக்குமாக பரிசுத்தமாக்கப்பட்ட தேவனுடைய குமாரனான இயேசுவைப் பிரதான ஆசாரியராக நியமித்தது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center