Old/New Testament
எரேமியா சிறையில் போடப்படுகிறான்
37 நேபுகாத்நேச்சார் பாபிலோனின் அரசன். நேபுகாத்நேச்சார் யோயாக்கீமின் மகன் கோனியாவின் இடத்தில் சிதேக்கியாவை யூதாவின் அரசனாக நியமித்தான். சிதேக்கியா யோசியா அரசனின் மகன். 2 ஆனால் சிதேக்கியா, தீர்க்கதரிசி எரேமியாவிற்குப் பிரசங்கத்திற்காக கர்த்தர் கொடுத்திருந்த செய்திகளைப் பொருட்படுத்தவில்லை. சிதேக்கியாவின் வேலைக்காரர்களும் யூதாவின் ஜனங்களும் கர்த்தருடைய செய்திகளுக்கு கவனம் செலுத்தவில்லை.
3 சிதேக்கியா அரசன், யூகால் என்ற பெயருடையவனையும் ஆசாரியன் செப்பனியாவையும் ஒரு செய்தியுடன் எரேமியாவிடம் அனுப்பினான். யூகால் செலேமியாவின் மகன். ஆசாரியன் செப்பனியா, மாசெயாவின் மகன். அவர்கள் எரேமியாவிற்குக் கொண்டுவந்த செய்தி: “எரேமியா, எங்களுக்காக நமது தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்.”
4 (அந்நேரத்தில், எரேமியாவைச் சிறையில் போட்டிருக்கவில்லை. எனவே அவன் விரும்பிய இடத்துக்குப் போகச் சுதந்திரம் உடையவனாக இருந்தான். 5 அதே நேரத்தில் பார்வோனின் படையானது எகிப்திலிருந்து யூதாவிற்குப் புறப்பட்டது. எருசலேமைச் சுற்றி அதைத் தோற்கடிப்பதற்காக பாபிலோனியாவின் படையானது முற்றுகையிட்டது. பிறகு, அவர்கள் எகிப்திலிருந்து படை புறப்பட்டு வருவதாக கேள்விப்பட்டனர். எனவே, பாபிலோனியப் படை எருசலேமைவிட்டுப் போய் எகிப்திலிருந்து வந்த படையோடு சண்டையிடப் போனது.)
6 தீர்க்கதரிசி எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. 7 “இதுதான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வது: ‘யூகாலே, செப்பனியா, யூதாவின் அரசனான சிதேக்கியா என்னிடம் சில கேள்விகள் கேட்க உன்னை அனுப்பியதை நான் அறிவேன். அரசன் சிதேக்கியாவிடம் இதைக் கூறு. பாபிலோனியன் படைக்கு எதிராக உனக்கு உதவ பார்வோனின் படை எகிப்திலிருந்து வந்துக்கொண்டிருக்கிறது. ஆனால் பார்வோனின் படை திரும்பிப் போகும். 8 அதற்குப் பிறகு பாபிலோனின் படை இங்கே திரும்பி வரும். அவர்கள் எருசலேமைத் தாக்குவார்கள். பிறகு பாபிலோனிலிருந்து வந்தப் படை எருசலேமைப் பிடித்து நெருப்பிடுவார்கள்.’ 9 இதுதான் கர்த்தர் சொல்கிறது: ‘எருசலேம் ஜனங்களே உங்களை முட்டாள்களாக்காதீர்கள். நீங்கள் உங்களுக்குள் “பாபிலோனின் படை உறுதியாக நம்மைத் தனியேவிடும்” என்று சொல்ல வேண்டாம். அவர்கள் வேறிடத்திற்கு போகமாட்டார்கள். 10 எருசலேம் ஜனங்களே உங்களைத் தாக்கும் பாபிலோனியப் படை முழுவதையும் நீங்கள் தோற்கடித்தாலும் அங்கே கூடாரத்தில் காயப்பட்டவர்கள் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். அந்தச் சில காயப்பட்டவர்களும்கூடத் தம் கூடாரத்தை விட்டு வெளியே வந்து எருசலேமை எரித்துப்போடுவார்கள்.’”
11 பாபிலோனியப் படை எகிப்தின் பார்வோனின் படையோடு போரிடச் சென்றபோது, 12 எரேமியா எருசலேமிலிருந்து பென்யமீன் தேசத்திற்குப் பயணம் செய்ய விரும்பினான். அங்கே அவன் தனது குடும்பத்திற்குரிய சொத்தைப் பங்கு வைப்பதற்காகப் போய்க்கொண்டிருந்தான். 13 ஆனால் எரேமியா எருசலேமின் பென்யமீன் வாசலுக்குப் போனபோது காவலர்களின் தலைவன் அவனைக் கைது செய்தான். தளபதியின் பெயர் யெரியா. யெரியா செலேமியாவின் மகன். செலேமியா அனானியாவின் மகன். எனவே தளபதி யெரியா எரேமியாவைக் கைது செய்தான். அவன், “எரேமியா நீ பாபிலோனியர் பக்கம் சேரும்படி விலகிக்கொண்டிருக்கிறாய்” என்று சொன்னான்.
14 எரேமியா யெரியாவிடம், “அது உண்மையன்று. பாபிலோனியரிடம் சேருவதற்காக நான் விலகிப் போகவில்லை” என்றான். ஆனால் யெரியா எரேமியா சொல்வதைக் கேட்க மறுத்தான். யெரியா எரேமியாவைக் கைது செய்து, எருசலேமில் உள்ள அரச அதிகாரிகளிடம் கொண்டு போனான். 15 அந்த அதிகாரிகள் எரேமியாவிடம் மிகவும் கோபமாக இருந்தனர். எரேமியாவை அடிக்கும்படி அவர்கள் கட்டளை கொடுத்தனர். பிறகு அவர்கள் எரேமியாவைச் சிறைக்குள்போட்டனர். சிறையானது யோனத்தான் என்ற பெயருடையவன் வீட்டில் இருந்தது. யூதாவின் அரசனுக்கு யோனத்தான் ஒரு எழுத்தாளனாக இருந்தான். யோனத்தான் வீடு சிறையாக ஆக்கப்பட்டிருந்தது. 16 அந்த ஜனங்கள் எரேமியாவை யோனத்தானின் வீட்டின் அடியிலுள்ள பள்ளத்திலே போட்டனர். அந்த அறை ஆழமான பள்ளத்திலே இருந்தது. எரேமியா அங்கே நீண்ட காலம் இருந்தான்.
17 பிறகு சிதேக்கியா அரசன் ஒரு ஆளை அனுப்பி அரசனின் வீட்டிற்கு எரேமியாவை அழைத்து வரச் செய்தான். சிதேக்கியா எரேமியாவிடம், தனியாக பேசினான். அவன் எரேமியாவிடம், “கர்த்தரிடமிருந்து ஏதாவது வார்த்தை வந்திருக்கிறதா?” என்று கேட்டான்.
18 எரேமியா, “ஆம். கர்த்தரிடமிருந்து ஒரு வார்த்தை வந்திருக்கிறது. சிதேக்கியா, பாபிலோன் அரசனிடம் நீ கொடுக்கப்படுவாய்” என்று பதில் சொன்னான். பிறகு எரேமியா அரசன் சிதேக்கியாவிடம், “நான் என்ன தவறு செய்தேன்? உனக்கு எதிராக நான் என்ன குற்றம் செய்தேன்? அல்லது உனது அதிகாரிகளுக்கு அல்லது எருசலேம் ஜனங்களுக்கு எதிராக என்ன குற்றம் செய்தேன்? என்னை எதற்காகச் சிறையிலிட்டாய்? 19 சிதேக்கியா அரசனே, உனது தீர்க்கதரிசிகள் இப்பொழுது எங்கே? அந்தத் தீர்க்கதரிசிகள் உன்னிடம் பொய்யைச் சொன்னார்கள். அவர்கள், ‘பாபிலோன் அரசன் உன்னையோ இந்த யூதா தேசத்தையோ தாக்கமாட்டான்’ என்றார்கள். 20 ஆனால், இப்பொழுது யூதாவின் அரசனே நான் சொல்வதைக் கேள். என் விண்ணப்பத்தை தயவுசெய்து கேள். இதுதான் நான் கேட்பது. என்னைத் திரும்ப எழுத்தாளனான யோனாத்தானின் வீட்டிற்கு அனுப்பவேண்டாம். நீர் என்னை அங்கு அனுப்பினால் நான் அங்கே மரிப்பேன்” என்று சொன்னான்.
21 எனவே சிதேக்கியா அரசன் எரேமியாவைக் காவற்சாலையின் முற்றத்திலே வைக்குமாறு கட்டளையிட்டான். அவனுக்குத் தெருவிலே அப்பஞ்சுடுகிறவர்களிடமிருந்து அப்பத்தை வாங்கிக் கொடுக்கச் சொன்னான். நகரத்திலே அப்பம் இருக்கும்வரை எரேமியாவிற்கு வாங்கிக் கொடுக்கப்பட்டது. எனவே அப்படியே எரேமியா காவற் சாலையின் முற்றத்திலே இருந்தான்.
எரேமியா தண்ணீர்க்குழியிலே போடப்படுகிறான்
38 அரச அதிகாரிகளில் சிலர் எரேமியாவின் பிரசங்கத்தை கேட்டனர். அவர்கள், மாத்தானின் மகனாகிய செப்பத்தியா, பஸ்கூரின் மகனாகிய கெதலியா, செலேமியாவின் மகனாகிய யூகால், மல்கியாவின் மகனாகிய பஸ்கூரும் ஆவார்கள். எரேமியா இச்செய்தியை அனைத்து ஜனங்களுக்கும் சொன்னான். 2 “இதுதான் கர்த்தர் சொல்கிறது: ‘எருசலேமில் வாழ்கிற ஒவ்வொருவரும் வாள் அல்லது பசி அல்லது பயங்கரமான நோயால் மரிப்பார்கள். ஆனால் பாபிலோனியப் படையிடம் சரண் அடைபவர்கள் பிழைத்துக்கொள்வார்கள். அந்த ஜனங்கள் தாம் உயிரோடு தப்பித்துக்கொள்வார்கள்.’ 3 இதுதான் கர்த்தர் சொல்கிறது: ‘இந்த எருசலேம் நகரமானது பாபிலோன் அரசனின் படையிடம் உறுதியாகக் கொடுக்கப்படும். அவன் இந்நகரத்தைக் கைப்பற்றுவான்.’”
4 பிறகு அந்த அரச அதிகாரிகள் ஜனங்களுக்கு எரேமியா சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டு விட்டு சிதேக்கியா அரசனிடம் சென்றனர். அவர்கள் அரசனிடம், “எரேமியா சாகடிக்கப்பட வேண்டும். இந்த நகரத்தில் இன்னும் இருக்கிற வீரர்களை அவன் அதைரியப்படுத்திக் கொண்டிருக்கிறான். எரேமியா தான் சொல்லிக்கொண்டிருப்பவற்றால் ஒவ்வொருவரையும் அதைரியப்படுத்திக்கொண்டிருக்கிறான். எரேமியா நமக்கு நன்மை நிகழ்வதை விரும்பவில்லை. அவன் எருசலேம் ஜனங்களை அழித்து விட விரும்புகிறான்” என்றனர்.
5 எனவே, சிதேக்கியா அரசன் அந்த அதிகாரிகளிடம், “எரேமியா உங்கள் கட்டுபாட்டுக்குள் இருக்கிறான். உங்களைத் தடுக்க என்னால் எதுவும் செய்ய முடியாது” என்றான்.
6 எனவே, அந்த அதிகாரிகள் எரேமியாவைக் கொண்டுப்போய் மல்கியாவின் தண்ணீர்க்குழியில் அடைத்தனர். (மல்கியா அரசனின் மகன்). அந்த தண்ணீர்க்குழி ஆலயப் பிரகாரத்தில் அரசனின் காவலர்கள் தங்கும் இடத்தில் இருந்தது. அந்த அதிகாரிகள் எரேமியாவைக் கயிற்றில் கட்டி தண்ணீர்க்குழியில் இறக்கினார்கள். அந்த தண்ணீர்க்குழியில் தண்ணீர் எதுவுமில்லை. ஆனால் சேறு மட்டுமே இருந்தது. எரேமியா சேற்றுக்குள் புதைந்தான்.
7 ஆனால், எபெத்மெலேக் என்ற பெயருடையவன் எரேமியாவை தண்ணீர்க்குழியில் அடைத்ததைப்பற்றி கேள்விப்பட்டான். எபெத்மெலேக் எத்தியோப்பியாவிலிருந்து வந்தவன். அவன் அரசனின் வீட்டில் பிரதானியாக இருந்தான். சிதேக்கியா அரசன் பென்யமீன் வாசலில் இருந்தான். எனவே எபெத்மெலேக் அரசனின் வீட்டை விட்டுப் போய் வாசலில் உள்ள அரசனிடம் பேசப் போனான். 8-9 எபெத்மெலேக், “எனது பிரபுவே, அரசனே, அந்த அதிகாரிகள் கெட்ட வழியில் நடந்திருக்கிறார்கள். அவர்கள் தீர்க்கதரிசி எரேமியாவை மோசமாக நடத்துகிறார்கள். அவர்கள் அவனை தண்ணீர்க் குழியில் எறிந்துவிட்டனர். அங்கேயே பட்டினியால் மரிக்கவிடுவார்கள்” என்றான்.
10 பிறகு சிதேக்கியா அரசன் எத்திதோப்பியனான எபெத்மெலேக்கிற்கு ஒரு கட்டளை கொடுத்தான். இதுதான் கட்டளை: “எபெத்மெலேக், அரசனது வீட்டிலிருந்து மூன்று பேரை உன்னோடு அழைத்துக்கொள். போய் எரேமியாவை அவன் மரிப்பதற்கு முன்பு தண்ணீர்க்குழியிலிருந்து வெளியே எடு.”
11 எனவே, எபெத்மெலேக் ஆட்களைத் தன்னோடு அழைத்தான். ஆனால் முதலில் அவன் அரசனது வீட்டிலுள்ள சாமான் அறைக்குக் கீழுள்ள அறைக்குச் சென்றான். அவன் கிழிந்த பழைய புடவைகளையும், கந்தைத் துணிகளையும் எடுத்தான். பின்னர் தண்ணீர்க் குழியில் அத்துணிகளையும் கயிறுகளையும் இறக்கினான். 12 எத்திதோப்பியனான எபெத்மெலேக் எரேமியாவிடம், “இப்பழையத் துணிகளையும் கந்தைத்துணிகளையும் உன் கைகளுக்குக் கீழே கட்டிக் கொள். நாங்கள் உன்னை இழுக்கும்போது இந்தத் துணிகளை கைகளுக்கு இடையில் அடங்க வைத்துக்கொள். பிறகு, இந்தக் கயிறுகள் உன்னை சேதப்படுத்தாது” எனவே, எரேமியா எபெத்மெலேக் சொன்னபடிச் செய்தான். 13 அம்மனிதர்கள் எரேமியாவை வெளியே எடுத்தனர். எரேமியா ஆலயப் பிரகாரத்தில் காவல் சாலையின் முற்றத்தில் தங்கினான்.
சிதேக்கியா எரேமியாவிடம் மீண்டும் சில கேள்விகளைக் கேட்கிறான்
14 பிறகு, அரசன் சிதேக்கியா ஒருவனை தீர்க்கதரிசி எரேமியாவிடம் அனுப்பினான். கர்த்தருடைய ஆலயத்தின் மூன்றாவது வாசலுக்கு அவன் எரேமியாவை அழைத்தான். பிறகு அரசன், “எரேமியா, நான் உன்னிடம் சிலவற்றைக் கேட்கப்போகிறேன். என்னிடமிருந்து எதனையும் மறைக்க வேண்டாம். எல்லாவற்றையும் நேர்மையாக எனக்குக் கூறு” என்றான்.
15 எரேமியா சிதேக்கியாவிடம், “நான் உனக்குப் பதில் சொன்னால் நீ உண்மையில் என்னைக் கொல்வாய். நான் உனக்கு அறிவுரைச் சொன்னாலும் நான் சொல்வதை நீ கேட்கமாட்டாய்” என்றான்.
16 ஆனால் சிதேக்கியா அரசன் இரகசியமாக எரேமியாவிடம் ஒரு உறுதிமொழி செய்து கொடுத்தான். சிதேக்கியா, “கர்த்தர் நமக்கு ஜீவனும் ஆத்துமாவைக் கொடுத்திருக்கிறார். கர்த்தர் ஜீவனோடு இருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நான் உன்னைக் கொல்லமாட்டேன் என்பதும், உன்னைக் கொல்ல விரும்புகிற அந்த அதிகாரிகளிடம் உன்னைக் கொடுக்கமாட்டேன் என்றும் நான் வாக்குறுதி அளிக்கிறேன்” என்றான்.
17 பிறகு எரேமியா சிதேக்கியா அரசனிடம், “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர், கூறுகிறார், ‘நீ பாபிலோன் அரசனின் அதிகாரிகளிடம் சரணடைந்தால் உனது வாழ்க்கை காப்பாற்றப்படும். எருசலேம் எரிக்கப்படாமல் இருக்கும். நீயும் உனது குடும்பமும் காக்கப்படுவீர்கள். 18 ஆனால் நீ சரணடைய மறுத்தால், பிறகு பாபிலோனியப் படையிடம் எருசலேம் கொடுக்கப்படும். அவர்கள் எருசலேமை எரிப்பார்கள். நீ அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது’” என்றான்.
19 ஆனால் அரசன் சிதேக்கியா எரேமியாவிடம், “ஆனால் நான் பாபிலோனியப் படையுடன் ஏற்கனவே சேர்ந்துவிட்ட யூதாவின் ஆட்களைப்பற்றிப் பயப்படுகிறேன். வீரர்கள் என்னை அந்த யூதாவின் ஆட்களிடம் கொடுப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன். அவர்கள் என்னை மோசமாக நடத்தி என்னைத் தாக்குவார்கள்” என்றான்.
20 ஆனால் எரேமியா பதிலாக, “யூதாவின் ஆட்களிடம் அவ்வீரர்கள் உன்னைக் கொடுக்கமாட்டார்கள். சிதேக்கியா அரசனே, நான் என்ன சொல்கிறேனோ அதன்படி கர்த்தருக்கு கீழ்ப்படி. பிறகு எல்லாம் உனக்கு நன்மையாகும். உனது வாழ்வு காப்பாற்றப்படும். 21 ஆனால் பாபிலோனிய படைக்குச் சரணடைய மறுத்தால், கர்த்தர் எனக்கு என்ன நடக்கும் என்பதைக் காட்டியிருக்கிறார். இதுதான் கர்த்தர் எனக்குச் சொன்னது. 22 யூதா அரசனின் வீட்டில் விடப்பட்டுள்ள ஸ்திரீகள் எல்லாம் வெளியே கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் பாபிலோன் அரசனின் முக்கிய அதிகாரிகளிடம் கொண்டுவரப்படுவார்கள். உங்கள் ஸ்திரீகள் ஒரு பாடலால் பரிகாசம் செய்வார்கள். இதுதான் அப்பெண்கள் சொல்வது:
“உங்கள் நல்ல நண்பர்கள் உனக்கு தந்திரம் செய்தார்கள்.
தீயக் காரியங்களை செய்யும்படி உன்னை மாற்றுகின்றனர்.
உங்கள் கால்கள் சேற்றில் சிக்கிக்கொண்டன.
பின்னர் உன்னை தன்னந்தனியே அவர்கள் விட்டுவிட்டனர்.”
23 “உன் மனைவிகளும் குழந்தைகளும் வெளியே கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் பாபிலோனியப் படையிடம் கொடுக்கப்படுவார்கள். நீங்கள் பாபிலோன் படையிடமிருந்து தப்பிக்க முடியாது. நீ பாபிலோன் அரசனால் கைப்பற்றப்படுவாய். எருசலேம் எரிக்கப்படும்” என்றான்.
24 பிறகு சிதேக்கியா எரேமியாவிடம், “நீ எவரிடமும் நான் உன்னோடு பேசினேன் என்று சொல்ல வேண்டாம். நீ அவ்வாறு செய்தால் நீ மரிப்பாய். 25 அந்த அதிகாரிகள் நான் உன்னிடம் பேசியதைக் கண்டுப்பிடித்துவிடலாம். பிறகு அவர்கள் உன்னிடம் வந்து, ‘எரேமியா, நீ அரசன் சிதேக்கியாவிடம் என்ன சொன்னாய் என்பதை எங்களிடம் கூறு. அரசன் சிதேக்கியா உன்னிடம் என்ன சொன்னான் என்பதையும் எங்களிடம் கூறு. எங்களோடு நேர்மையாக இருந்து எல்லாவற்றையும் சொல் அல்லது நாங்கள் உன்னைக் கொல்வோம்’ என்று சொல்வார்கள். 26 அவர்கள் இதனை உன்னிடம் சொன்னால், அவர்களிடம் சொல், ‘நான் அரசனிடம் மீண்டும் என்னை யோனத்தானின் வீட்டின் அடியில் உள்ள பள்ளத்திற்குள் அனுப்பவேண்டாம். நான் அங்கே திரும்பப்போனால் நான் மரித்துவிடுவேன்’” என்று கெஞ்சிக்கொண்டிருந்தேன்.
27 இது நிகழ்ந்தது. அந்த அரச அதிகாரிகள் எரேமியாவிடம் கேள்விகள் கேட்க வந்தனர். அரசன் என்ன பதில் சொல்லவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தானோ அதனையே சொன்னான். பிறகு எரேமியாவை அந்த அதிகாரிகள் தனியே விட்டனர். எவரும் எரேமியாவும் அரசனும் என்ன பேசினார்கள் என்று கேட்கவில்லை.
28 எனவே எரேமியா ஆலய பிரகாரத்தின் காவல் அறையில் எருசலேம் கைப்பற்றப்படும்வரை இருந்தான்.
எருசலேமின் வீழ்ச்சி
39 எருசலேம் கைப்பற்றப்பட்டது இப்படித்தான்: யூதாவின் அரசன் சிதேக்கியாவின் ஒன்பதாவது ஆண்டின் பத்தாவது மாதத்தில் பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு எதிராகத் தனது முழுப்படையுடன் புறப்பட்டான். அந்நகரைத் தோற்கடிக்க முற்றுகையிட்டனர். 2 சிதேக்கியாவின் பதினொன்றாவது ஆண்டின் நாலாவது மாதத்தின் ஒன்பதாவது நாளில் எருசலேமின் சுவர் உடைக்கப்பட்டது. 3 பிறகு பாபிலோன் அரசனின் அதிகாரிகள் எருசலேம் நகருக்குள் வந்தனர். அவர்கள் உள்ளே வந்து மத்திய வாசலில் உட்கார்ந்துக்கொண்டனர். அந்த அதிகாரிகளின் பெயர்கள் இவை: நெர்கல் சரேத்சேர், சம்கார் நேபோ மாவட்டத்து ஆளுநர், ஒரு மிக உயர்ந்த அதிகாரி, நெபோசர்சேகிம், இன்னொரு உயர் அதிகாரி மற்றும் பல்வேறு முக்கிய அதிகாரிகளும் இருந்தனர்.
4 யூதாவின் அரசனான சிதேக்கியா பாபிலோன் அதிகாரிகளைப் பார்த்தான். அவன் தனது படை வீரர்களோடு ஓடிப்போனான். அவர்கள் இரவில் எருசலேமை விட்டனர். அவர்கள் அரசனது தோட்டத்தின் வழியாகச் சென்றனர். இரண்டு சுவர்களுக்கு இடையில் இருந்த வாசல் வழியாகச் சென்றனர். பிறகு அவர்கள் வனாந்தரத்தை நோக்கிப் போனார்கள். 5 பாபிலோனியப் படை சிதேக்கியாவையும் அவனோடு சென்ற வீரர்களையும் துரத்தியது. எரிகோவின் சமவெளியில் அவர்கள் சிதேக்கியாவைப் பிடித்தனர். அவனை பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரிடம் கொண்டுபோனார்கள். நேபுகாத்நேச்சார் ஆமாத் தேசத்து ரிப்லா பட்டணத்தில் இருந்தான். அந்த இடத்தில் நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவை என்ன செய்யலாம் என்று முடிவு செய்தான். 6 அங்கே ரிப்லா பட்டணத்தில், பாபிலோன் அரசன் சிதேக்கியாவின் மகனை சிதேக்கியா பார்க்கும்போதே கொன்றான். நேபுகாத்நேச்சார் யூதாவின் அரச அதிகாரிகளை சிதேக்கியா பார்த்துக்கொண்டிருக்கும்போதே கொன்றான். 7 பிறகு, நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவின் கண்களை குருடாக்கினான். அவனுக்கு வெண்கலச் சங்கிலியைப் போட்டு பாபிலோனுக்குக் கொண்டுப்போனான்.
8 பாபிலோன் படையானது அரசனின் வீட்டையும் எருசலேம் ஜனங்களின் வீட்டையும் நெருப்பிட்டனர். அவர்கள் எருசலேமின் சுவர்களை உடைத்தனர். 9 நேபுசராதான் பாபிலோனிய அரசனின் சிறப்புக் காவலர்களின் தளபதியாக இருந்தான். எருசலேமில் மீதியிருந்த ஜனங்களைப் பிடித்துக்கொண்டுபோய் சிறையிலிட்டான். அவர்களைப் பாபிலோனுக்குக் கொண்டுப்போனான். ஏற்கனவே, அவனிடம் சரணடைந்த எருசலேம் ஜனங்களையும் கைதிகளாக பாபிலோனுக்கு கொண்டுப்போனான். 10 ஆனால் சிறப்புக் காவலர்களின் தளபதியான நேபுசராதான் யூதாவின் சில ஏழை ஜனங்களை விட்டுவிட்டுச் சென்றான். அந்த ஜனங்கள் சொந்தமாக எதுவும் இல்லாதவர்கள். எனவே, அந்த நாளில் நேபுசராதான் அவ்வேழை ஜனங்களுக்குத் திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் கொடுத்தான்.
11 ஆனால், நேபுகாத்நேச்சார் நேபுசராதானுக்கு எரேமியாவைப்பற்றி சில கட்டளைகளைக் கொடுத்தான். நேபுசராதான் நேபுகாத்நேச்சாரின் சிறப்புக் காவலர்களின் தலைவன். இவைதான் கட்டளைகள்: 12 “எரேமியாவைக் கண்டுபிடி. அவனை கவனித்துக் கொள். அவனைத் தாக்காதே. அவன் என்ன கேட்கிறானோ அவற்றைக் கொடு.”
13 எனவே அரசனின் சிறப்புக் காவலர் தளபதியான நேபுசராதான், பாபிலோனின் தலைமைப் படை அதிகாரியான நேபுசராதானையும் ஒரு உயர் அதிகாரியான நெர்கல்சரேத்சேரையும் மற்றும் மற்றப் படை அதிகாரிகளையும் எரேமியாவைத் தேட அனுப்பினான். 14 அவர்கள் எரேமியாவைக் கண்டனர். ஆலய முற்றத்திலிருந்து யூதா அரசனின் காவலரிடமிருந்து வெளியே எடுத்தனர். பாபிலோனது படையின் அவ்வதிகாரிகள் எரேமியாவை கெதலியாவினிடம் ஒப்படைத்தனர். கெதலியா அகிக்காமின் மகன். அகிக்காம் சாப்பானுடைய மகன். கெதலியா எரேமியாவை வீட்டிற்குத் திரும்பக் கொண்டுப்போகும் கட்டளைகளைப் பெற்றிருந்தான். எனவே, எரேமியா வீட்டிற்குக் கொண்டுப்போகப்பட்டான். அவன் தன் சொந்த மனிதர்களோடு தங்கினான்.
எபெத்மெலேக்குவிற்கு கர்த்தரிடமிருந்து ஒரு செய்தி
15 எரேமியா ஆலயப் பிரகாரத்தில் காவலர் பாதுகாப்பில் இருந்தபோது கர்த்தரிடமிருந்து வார்த்தை அவனுக்கு வந்தது. 16 “எரேமியா, போய் எத்தியோப்பியனான எபெத்மெலேக்குவிடம் இதைச் சொல்! ‘இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார். மிக விரைவில் எருசலேம் நகரைப்பற்றி நான் சொன்ன செய்திகள் உண்மையாகும்படிச் செய்வேன். எனது செய்தி பேரழிவின் மூலமே உண்மையாகுமே தவிர நல்லவற்றின் மூலம் அன்று. நீ உனது சொந்தக் கண்களால் அது உண்மையாவதை பார்ப்பாய். 17 ஆனால், அந்நாளில் எபெத்மெலேக்கே நான் உன்னைக் காப்பாற்றுவேன்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். ‘நீ பயப்படுகிற ஜனங்களிடம் கொடுக்கப்படமாட்டாய். 18 நான் உன்னைக் காப்பாற்றுவேன். எபெத்மலேக்கே, நீ வாளால் மரிக்கமாட்டாய். ஆனால் நீ தப்பித்து வாழ்வாய். இது நிகழும். ஏனென்றால் நீ என்னிடம் நம்பிக்கை வைத்தாய்’” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இயேசு மோசேயை விட பெரியவர்
3 எனவே, நீங்கள் அனைவரும் இயேசுவைப் பற்றி சிந்தனை செய்ய வேண்டும். தேவன் இயேசுவை நம்மிடம் அனுப்பினார். அவர் நம் விசுவாசத்தின் பிரதானஆசாரியர் ஆவார். எனது பரிசுத்தமான சகோதர சகோதரிகளே! நான் இதை உங்களுக்காகக் கூறுகிறேன். நீங்கள் தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். 2 தேவன் இயேசுவை நம்மிடம் அனுப்பி நமது பிரதான ஆசாரியர் ஆக்கினார். மோசே போன்று உண்மையுள்ளவராய் முழுக்குடும்பத்தின் பொறுப்பும் இயேசுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 3 ஒருவன் ஒரு வீட்டைக் கட்டும்போது மக்கள் அந்த வீட்டை விட மனிதனையே பெரிதும் மதிப்பர். இதேபோல, மோசேயைவிட அதிக மரியாதைக்கு இயேசு தகுதியானவராக இருக்கிறார். 4 தேவன் எல்லாவற்றையும் படைக்கிறார் எனினும் ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவனால் கட்டப்படுகிறது. 5 மோசே தேவனுடைய வீட்டில் ஒரு பணியாளைப் போன்று உண்மையுள்ளவனாயிருந்தான். எதிர்காலத்தில் சொல்வதைப் பற்றி அவன் சொன்னான். 6 ஆனால் ஒரு மகனைப் போல தேவனுடைய குடும்பத்தை ஆள்வதில் இயேசு உண்மையுள்ளவராயிருக்கிறார். நம்மிடமுள்ள மாபெரும் நம்பிக்கையினைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி மேன்மையாக எண்ணினால், விசுவாசிகளாகிய நாம் தேவனுடைய குடும்பத்தவர்களாயிருப்போம்.
நாம் தேவனைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்
7 பரிசுத்த ஆவியானவர் சொல்வது போல்,
“இன்று நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டால்,
8 வனாந்திரத்தில் நீங்கள் தேவனைச் சோதித்தபோது, தேவனுக்கு எதிராக நீங்கள்
கலகம் செய்த கடந்த காலத்தைப் போல உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்.
9 நாற்பது வருடங்களாக வனாந்திரத்தில் நான் செய்ததை உங்கள் மக்கள் பார்த்தார்கள்.
ஆனால் அவர்கள் என்னையும் என் பொறுமையையும் சோதித்தனர்.
10 எனவே நான் அவர்களிடம் கோபம் கொண்டேன்.
‘அம்மக்களின் சிந்தனைகள் எப்போதும் தவறாகவே இருக்கின்றன.
அம்மக்கள் என் வழிகளை எப்போதும் புரிந்துகொண்டதில்லை’ என்று நான் சொன்னேன்.
11 எனவே நான் கோபத்தோடு, ‘அவர்கள் ஒருபோதும் எனது இளைப்பாறுதலுக்குள்
நுழைய முடியாது’ என்று ஆணையிட்டேன்.” (A)
12 எனவே சகோதர சகோதரிகளே! பாவம் நிறைந்தவராகவும், ஜீவனுள்ள தேவனிடமிருந்து விலகுகிற நம்பிக்கையற்ற இருதயமுள்ளோராகவும் உங்களில் யாரும் இல்லாதபடி கவனமாயிருங்கள். 13 ஆனால் ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். “இன்று” எனப்படும் நிலை இருக்கிறபோதே இதைச் செய்யுங்கள். உங்களில் யாரும் பாவத்தால் முட்டாளாக்கப்படாதிருக்கவும் உறுதியாக இருக்கவும் இதைச் செய்யுங்கள். 14 இது எதற்காக? தொடக்கத்தில் நாம் கொண்டிருந்த நம்பிக்கையைத் தொடர்ந்து உறுதியாய் பற்றிக்கொண்டிருப்போமானால் நாம் அனைவரும் கிறிஸ்துவுடன் பங்கு உள்ளவர்களாக முடியும். 15 இதைத் தான்,
“இன்று நீங்கள் தேவனுடைய சத்தத்தைக கேட்டால், தேவனுக்கு எதிராக நீங்கள்
கலகம் செய்த கடந்த காலத்தைப் போல உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்” (B)
என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது.
16 யார் தேவனுடைய செய்தியைக் கேட்டு அவருக்கு எதிராக மாறினார்கள்? எகிப்திலிருந்து மோசேயால் வழிநடத்தப்பட்டவர்கள் அனைவரும் அப்படியே இருந்தார்கள். 17 மேலும் நாற்பது வருடங்களாக தேவன் யார் மீது கோபம் கொண்டார்? பாவம் செய்தவர்கள் மீது அல்லவா? அவர்களனைவரும் வனாந்திரத்திலேயே மடிந்து போனார்கள். 18 எனது இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியாது என்று யாரிடம் தேவன் கூறினார்? அவருக்குக் கீழ்ப்படியாத மக்களிடம் மட்டும் தானே கூறினார். 19 எனவே, அந்த மக்கள் தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் நுழைய முடியாது என்றார். ஏன்? அவர்கள் விசுவாசம் உடையவர்களாக இருக்கவில்லை.
2008 by World Bible Translation Center