Old/New Testament
நெகேமியாவின் ஜெபம்
1 இவைகள் நெகேமியாவின் வார்த்தைகள். நெகேமியா அகலியாவின் மகன். நெகேமியாவாகிய நான் கிஸ்லேயு மாதத்தில் சூசான் என்னும் தலைநகரத்தில் இருந்தேன். இது அர்தசஷ்டா அரசனான இருபதாவது ஆண்டு. 2 நான் சூசானில் இருந்தபோது என் சகோதரர்களில் ஒருவனான ஆனானியும் வேறு சில மனிதர்களும் யூதாவிலிருந்து வந்தனர். நான் அவர்களிடம் அங்கு வாழும் யூதர்களைப் பற்றிக் கேட்டேன். அந்த யூதர்கள் சிறைவாசத்திலிருந்து தப்பித்து இன்னும் யூதாவில் வாழ்ந்துக்கொண்டிருந்தனர். நான் அவர்களிடம் எருசலேம் நகரத்தைப்பற்றியும் விசாரித்தேன்.
3 ஆனானியும் அவனோடு இருந்த மனிதர்களும், “நெகேமியா, சிறைவாசத்திலிருந்து தப்புவித்து யூதா நாட்டில் வாழ்கிற யூதர்கள் மிகுந்த துன்பத்தில் இருக்கின்றனர். அந்த ஜனங்கள் மிகுந்த தொல்லைகளிலும் அவமானத்திலும் இருக்கின்றனர். ஏனென்றால் எருசலேமின் சுவர் உடைந்து விழுந்தது. அதன் வாசல்கள் நெருப்பால் எரிந்தன” என்றனர்.
4 நான் எருசலேம் ஜனங்களைப் பற்றியும் அதன் சுவரைப் பற்றியும் கேள்விப்பட்டதும் கவலை அடைந்தேன். நான் உட்கார்ந்து கதறினேன். நான் பல நாள் துக்கமாக இருந்தேன். உண்ணாமல் இருந்து பரலோகத்தின் தேவனிடம் ஜெபம் செய்தேன். 5 பிறகு இந்த ஜெபத்தை ஜெபித்தேன்:
“பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, நீரே உயர்ந்தவர், வல்லமையுள்ள தேவன். உம்மை நேசித்து உமது கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் ஜனங்களோடு தான் செய்துகொண்ட அன்பின் உடன்படிக்கையை நிறைவேற்றும் தேவன் நீரே.
6 “உமக்கு முன்னால் இரவும் பகலும் ஜெபம் செய்துக்கொண்டிருக்கிற உமது அடியானின் ஜெபத்தைக் கேட்கும்படி தயவுசெய்து உமது கண்களையும் காதுகளையும் திறவும். நான் இஸ்ரவேல் ஜனங்களான உமது அடியார்களுக்காக ஜெபம் செய்துக்கொண்டிருக்கிறேன். இஸ்ரவேல் ஜனங்களாகிய நாங்கள் உமக்கு எதிராகச் செய்த பாவங்களை நான் அறிக்கையிடுகின்றேன். நான் உமக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறேன் என்றும் என் தந்தையின் வீட்டார் உமக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறார்கள் என்றும் நான் அறிக்கையிட்டுக்கொண்டிருக்கிறேன். 7 இஸ்ரவேல் ஜனங்களாகிய நாங்கள் உமக்கு மிகவும் தீயவர்களாக இருந்தோம். நீர் உமது அடியாரான மோசேக்குக் கொடுத்த கட்டளைகள், போதனைகள், சட்டங்கள் ஆகியவற்றிற்கு நாங்கள் அடி பணிந்திருக்கவில்லை.
8 உமது அடியாரான மோசேக்கு, நீர் கொடுத்த கட்டளையை தயவுசெய்து நினைவுக்கூரும். நீர் அவனிடம், “இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள் உண்மையுள்ளவர்களாக இல்லாவிட்டால் நான் உங்களைப் பலவந்தமாக மற்ற நாடுகளுக்குள் சிதறடிப்பேன். 9 நீங்கள் என்னிடம் திரும்பிவந்து எனது கட்டளைகளுக்கு அடிபணிவீர்களானால் பிறகு நான் சொல்லுகிற இது நடக்கும். ஜனங்கள் தம் வீடுகளிலிருந்து பலவந்தமாக வெளியே அனுப்பப்பட்டு பூமியின் கடைசி எல்லைகளில் இருந்தாலும் அங்கிருந்து அவர்களை நான் ஒன்றுசேர்ப்பேன். எனது நாமத்தை விளங்கும்படி நான் தேர்ந்தெடுத்த இடத்திற்கு நான் அவர்களைத் திரும்பக்கொண்டுவருவேன்” என்று கூறினீர்.
10 இஸ்ரவேலின் ஜனங்கள் உமது அடியவர்களாகவும் ஜனங்களாகவும் இருக்கின்றனர். நீர் உமது வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும் அந்த ஜனங்களை மீட்டீர். 11 எனவே கர்த்தாவே, எனது ஜெபத்தைக் கேளும். நான் உமது அடியான். உமது நாமத்தில் மரியாதை வைத்திருக்கிற உமது அடியார்களின் ஜெபங்களைக்கேளும். கர்த்தாவே, நான் அரசனது திராட்சைரசப் பணியாள் [a] என்பது உமக்குத் தெரியும். எனவே இன்று எனக்கு உதவும். அரசனிடத்தில் உதவி கேட்கிறபோது நீர் எனக்கு உதவும். என் காரியத்தைக் கைகூடி வரப்பண்ணும். அரசனுக்கு நான் விருப்பமுடையவனாக இருக்கும்படி உதவும்.
அர்தசஷ்டா அரசன் நெகேமியாவை எருசலேமிற்கு அனுப்புகிறான்
2 அர்தசஷ்டா அரசனின் இருபதாம் ஆட்சியாண்டில், நிசான் மாதத்தில் கொஞ்சம் திராட்சைரசம் அரசனுக்கு கொண்டுவரப்பட்டது. நான் திராட்சைரசத்தை எடுத்து அரசனுக்கு கொடுத்தேன். நான் அரசனோடு இருக்கும்போது எப்பொழுதும் துக்கமாக இருந்ததில்லை. ஆனால் இப்பொழுது நான் துக்கமாய் இருந்தேன். 2 எனவே அரசன் என்னிடம், “நீ நோயுற்றிருக்கிறாயா? ஏன் துக்கமாய் காணப்படுகிறாய்? உனது இதயம் துக்கத்தால் நிறைந்திருப்பது போன்று நான் எண்ணுகிறேன்” என்று கேட்டான்.
பிறகு நான் மிகவும் பயந்தேன். 3 பயந்தாலும் கூட நான் அரசனிடம், “அரசன் என்றென்றும் வாழ்வாராக! நான் துக்கமாய் இருக்கிறேன். ஏனென்றால் எனது முற்பிதாக்களின் கல்லறைகள் உள்ள நகரம் பாழாயிற்று. அதன் வாசல்கள் நெருப்பால் எரிக்கப்பட்டன” என்றேன்.
4 பிறகு அரசன் என்னிடம், “நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகின்றாய்?” என்று கேட்டான்.
நான் பதில் சொல்வதற்கு முன்னால் நான் பரலோகத்தில் இருக்கிற தேவனிடம் ஜெபம் செய்தேன். 5 பிறகு நான் அரசனுக்கு, “இது அரசனுக்கு பிடித்தமானதாக இருந்தால், நான் உமக்கு நல்லவனாக இருந்திருந்தால், தயவுசெய்து எனது முற்பிதாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள யூதாவிற்கு என்னை அனுப்பும். யூதாவில் நான் போய் எருசலேம் நகரத்தை மீண்டும் கட்ட விரும்புகிறேன்” என்று பதில் சொன்னேன்.
6 அரசி அரசனுக்கு அடுத்து அமர்ந்துக் கொண்டிருந்தாள். அரசன் என்னிடம், “நீ போய் வர எவ்வளவு காலம் எடுக்கும். நீ இங்கே எப்பொழுது திரும்பி வருவாய்?” என்று கேட்டான்.
அரசன் என்னை அனுப்புவதில் சந்தோஷப்பட்டான். எனவே நான் அவனுக்குக் குறிப்பிட்ட காலத்தைச் சொன்னேன்.
7 நான் அரசனிடம், “அரசனுக்கு விருப்பமானால் எனக்கு உதவலாம். நான் உதவி கேட்கலாமா? ஐபிராத்து நதிக்கு மேற்கிலுள்ள பகுதிகளின் ஆளுநர்களிடம் காட்ட எனக்கு சில கடிதங்களைத் தயவு செய்துக் கொடும். யூதாவிற்கு போகும் வழியில், அவர்களின் பகுதிகளின் வழியாகப் போவதற்கான அனுமதியை ஆளுநர்களிடம் பெற இக்கடிதங்கள் எனக்குத் தேவைப்படுகின்றன. 8 வாசல்கள், சுவர்கள், ஆலயத்தைச் சுற்றியுள்ள சுவர்கள் மற்றும் எனது வீடு ஆகியவற்றிற்குத் தேவையான மரத்தடிகள் எனக்குத் தேவைப்படுகின்றது. எனவே உம்மிடமிருந்து ஆசாப்பிற்கு ஒரு கடிதம் எனக்குத் தேவை. உமது காடுகளுக்கு ஆசாப் பொறுப்பு அதிகாரி” என்றேன்.
அரசன் எனக்குக் கடிதங்களைக் கொடுத்தான். நான் கேட்டவற்றையெல்லாம் கூட கொடுத்தான். ஏனென்றால் தேவன் என்னிடம் கருணையோடு இருந்ததால், அரசன் இவற்றைச் செய்தான்.
9 எனவே, நான் ஐபிராத்து நதியின் மேற்குப் பகுதியின் ஆளுநர்களிடம் சென்றேன். அரசனிடமிருந்து பெற்ற கடிதங்களை ஆளுநர்களிடம் கொடுத்தேன். அரசன் என்னுடன் படை அதிகாரிகளையும் குதிரை வீரர்களையும் அனுப்பியிருந்தான். 10 நான் என்ன செய்துகொண்டிருக்கின்றேன் என்பது பற்றி சன்பல்லாத்தும் தொபியாவும் கேள்விப்பட்டனர். அவர்கள் இடிந்து போனார்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவ ஒருவன் வந்திருக்கிறான் என்று அறிந்து கோபமுற்றனர். சன்பல்லாத் ஓரோனியனிலிருந்தும் தொபியா அம்மோனியாவிலிருந்தும் வந்த அதிகாரிகள்.
நெகேமியா எருசலேம் சுவர்களைக் கண்காணிக்கிறான்
11-12 நான் எருசலேமிற்குப் போனேன். நான் அங்கு மூன்று நாட்கள் தங்கினேன். பிறகு இரவில் நான் சில மனிதர்களோடு புறப்பட்டேன். எருசலேமிற்காக என்ன செய்யவேண்டும் என்று தேவன் என் இதயத்தில் வைத்திருக்கிறார் என்பதைப்பற்றி நான் எவரிடமும் சொல்லியிருக்கவில்லை. நான் சவாரி செய்து வந்த குதிரையைத் தவிர வேறு குதிரைகள் என்னிடம் இல்லை. 13 இருட்டாக இருக்கும்போது நான் பள்ளத்தாக்கின் வாசல் வழியாகப் போய் வலுசர்ப்பத்துரவு மற்றும் குப்பைமேட்டு வாசலை நோக்கிச் சவாரி செய்தேன். உடைக்கப்பட்டிருந்த எருசலேமின் சுவர்களையும், நெருப்பால் எரிக்கப்பட்டிருந்த சுவர்களிலுள்ள வாசல்களையும் நான் பார்வையிட்டேன். 14 பிறகு நான் அங்கிருந்து நீருற்று வாசலுக்கும் அரசனின் குளத்துக்கும் சென்றேன். ஆனால் நான் அருகில் நெருங்கும்போது எனது குதிரை செல்வதற்குப் போதிய இடம் இல்லை என்பதைக் கண்டுக்கொள்ள முடிந்தது. 15 எனவே, இருட்டில் நான் பள்ளத்தாக்கிற்குச் சென்றேன். இறுதியாக நான் திரும்பி, பள்ளத்தாக்கின் வாசல் வழியாகத் திரும்பி வந்தேன். 16 இஸ்ரவேலின் முக்கிய அதிகாரிகளும் மற்ற ஜனங்களும் நான் எங்கே போய் வந்தேன் என்பதையும், நான் என்ன செய்துக்கொண்டிருந்தேன் என்பதையும் அறியவில்லை. யூதர்கள், ஆசாரியர்கள், அரச குடும்பத்தினர், அதிகாரிகள், அந்தந்த வேலையைச் செய்யப்போகும் ஜனங்களுக்கும் நான் எதுவும் சொல்லவில்லை.
17 பிறகு நான் அந்த ஜனங்களிடம், “இங்கே நமக்குள்ள துன்பத்தை உங்களால் பார்க்க முடியும். எருசலேம் பாழாகியிருக்கிறது. இதன் வாசல்கள் நெருப்பால் எரிக்கப்பட்டிருக்கின்றன. வாருங்கள் மீண்டும் நாம் எருசலேமின் சுவர்களைக் கட்டுவோம். அதன்பின் ஒருபோதும் நாம் அவமானமடைந்தவர்களாக இருக்கமாட்டோம்” என்றேன்.
18 நான் அந்த ஜனங்களிடம் தேவன் என்னிடம் கருணையோடு இருப்பதைப் பற்றியும் சொன்னேன். அரசன் என்னிடம் சொல்லியிருந்தவற்றைப் பற்றியும் நான் அவர்களிடம் சொன்னேன். பிறகு அந்த ஜனங்கள், “இப்பொழுது நாம் வேலையை ஆரம்பிக்கலாம்” என்று பதிலுரைத்தனர். எனவே இந்த நல்ல வேலையை நாங்கள் தொடங்கினோம். 19 ஆனால் ஓரோனியனான சன்பல்லாத்தும் அம்மோனியனான தொபியா என்னும் வேலைக்காரனும் அரபியனான கேஷேமும் நாங்கள் மீண்டும் கட்டிக்கொண்டிருக்கிறோம் என்பதைக் கேள்விப்பட்டனர். அவர்கள் மிக இழிவான வழியில் எங்களைக் கேலிச் செய்தனர். அவர்கள், “நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் அரசனுக்கு எதிராகிக்கொண்டிருக்கிறீர்களா?” என்று கேட்டனர்.
20 ஆனால் நான் அந்த மனிதர்களிடம், “பரலோகத்தில் உள்ள தேவன் எங்களுக்கு கைக்கூடிவர உதவுவார். நாங்கள் தேவனுடைய அடியார்கள். நாங்கள் இந்த நகரத்தை மீண்டும் கட்டுவோம். இந்த வேலைக்கு நீங்கள் எங்களுக்கு உதவ முடியாமல் போகும். உங்கள் குடும்பத்தில் எவரும் இங்கே எருசலேமில் வாழவில்லை. இந்த நாட்டை நீங்கள் சொந்தம் கொள்ளவில்லை. இந்த இடத்தில் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை” என்று சொன்னேன்.
சுவரைக் கட்டுபவர்கள்
3 தலைமை ஆசாரியரின் பெயர் எலியாசீப். எலியாசீபும் அவனது சகோதரர்களாகிய ஆசாரியர்களும் எழுந்துப் போய் ஆட்டுவாசலைக் கட்டினார்கள். அவர்கள் ஜெபம் செய்து அந்த வாசலைக் கர்த்தருக்குரிய பரிசுத்தமானதாக ஆக்கினார்கள். அவர்கள் சுவரில் கதவுகளை வைத்தனர். அந்த ஆசாரியர்கள் எருசலேமின் சுவரில் நூறு என்னும் கோபுரம்வரையும் அனனெயேலின் கோபுரம்வரையும் வேலை செய்தனர். அவர்கள் ஜெபம் செய்து தங்கள் வேலையைக் கர்த்தருக்குரிய பரிசுத்தமானதாக ஆக்கினார்கள்.
2 எரிகோவிலிருந்து வந்த மனிதர்கள் ஆசாரியர்களுக்கு அருகில் சுவர்கள் கட்டினார்கள். இம்ரியின் மகனாகிய சக்கூர் எரிகோவின் மனிதர்களுக்கு அருகில் கட்டினான்.
3 செனாவின் மகன்கள் மீன்வாசலைக் கட்டினார்கள். சரியான இடத்தில் உத்திரம் வைத்தனர். அவர்கள் அந்தக் கட்டிடத்திற்கு கதவுகளை வைத்தனர். பிறகு அந்த கதவிற்குப் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.
4 உரியாவின் மகனான மெரெமோத் சுவரின் அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்து கட்டினான். (கோசின் மகன் உரியா.)
பெரகியாவின் மகனான மெசுல்லாம் அதற்கு அடுத்த சுவரைப் பழுதுபார்த்து கட்டினான் (மெஷேசாபெயேலின் மகன் பெரகியா.)
பானாவின் மகனாகிய சாதோக் அருகிலுள்ள சுவரைப் பழுதுபார்த்து கட்டினான்.
5 தெக்கோவா ஊரார் அவர்கள் அருகே பழுதுபார்த்து கட்டினார்கள். ஆனால் அவர்களது தலைவர்களோ அவர்களின் ஆளுநரான நெகேமியாவிற்கு வேலை செய்ய மறுத்துவிட்டனர்.
6 யோய்தாவும் மெசுல்லாமும் பழைய வாசலை பழுதுபார்த்து கட்டினார்கள். யோய்தா, பசெயாகின் மகன். மெசுல்லாம், பேசோதியாவின் மகன். அவர்கள் அதற்கு தூண்கள் அமைத்தனர். அவர்கள் கதவுகளையும் அதற்குரிய பூட்டுகள் மற்றும் தாழ்ப்பாள்களையும் பொருத்தினார்கள்.
7 கிபியோன் மற்றும் மிஸ்பா ஊர்களின் மனிதர்கள் அடுத்த பகுதியைப் பழுதுபார்த்து கட்டினார்கள். அந்த வேலையை மெலதீயா என்னும் கிபியோனியனும், யாதோன் என்னும் மெரோனோத்தியனும் செய்தனர். மிஸ்பா மற்றும் கிபியோன் ஐபிராத்து நதியிடையே மேற்கு பகுதியின் ஆளுநரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது.
8 அராயாவின் மகனான ஊசியேல் அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்து கட்டினான். ஊசியேல் ஒரு பொற்கொல்லனாய் இருந்தான். தைலக்காரர்களில் ஒருவரான அனனியா அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான். அம்மனிதர்கள் அந்த அகன்ற மதில்வரைக்கும் எருசலேமைக் கட்டிப் பழுதுபார்த்தனர்.
9 ஊரின் மகனான ரெப்பாயா அவர்கள் அருகே பழுதுபார்த்துக் கட்டினான். ரெப்பாயா, எருசலேமின் பாதி பகுதிக்குரிய ஆளுநர்.
10 அருமாப்பின் மகனான யெதாயா அடுத்த சுவர் பகுதியைக் கட்டினான். யெதாயா தனது சொந்த வீட்டின் அருகிலுள்ளவற்றைப் பழுதுபார்த்து கட்டினான். ஆசாப் நெயாவின் மகனான அத்தூஸ் அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான். 11 ஆரீமின் மகனான மல்கிஜாவும் பாகாத்மோவாபின் மகனான அசூபும் அடுத்தப் பகுதியைப் பழுது பார்த்துக் கட்டினார்கள். சூளைகளின் கோபுரத்தையும் அவர்கள் பழுதுபார்த்தார்கள்.
12 அலோகேசின் மகனான சல்லும் அடுத்த சுவர்பகுதியைப் பழுதுபார்த்தான். அவனது மகள்கள் அவனுக்கு உதவினார்கள். சல்லூம் எருசலேமின் பாதி பகுதிக்கு ஆளுநராக இருந்தான்.
13 ஆனூனும் சானோவாகின் குடிமக்களும் பள்ளத்தாக்கின் வாசலைப் பழுதுபார்த்தனர். அவர்கள் அதனைக் கட்டி அதற்கு கதவுகளை அமைத்தனர். பிறகு அவர்கள் அதற்குப் பூட்டுகளையும் தாழ்ப்பாளையும் பொருத்தினர். அவர்கள் குப்பைமேட்டு வாசல் வரைக்கும் 500 கெஜம் சுவரைக் கட்டினார்கள்.
14 ரெக்காவின் மகனான மல்கியா, குப்பை மேட்டு வாசலைப் பழுதுபார்த்துக் கட்டினான். மல்கியா, பெத்கேரேமின் மாகாணத்து ஆளுநராக இருந்தான். அவன் வாசலைக் கட்டினான். அதற்குக் கதவுகளைப் பொருத்தினான். பிறகு அதற்குரிய பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் வைத்தான்.
15 அவன் நீருற்று வாசலை பழுதுபார்த்தான். கொல்லோசேயின் மகனான சல்லூம் மிஸ்பா மாகாணத்து ஆளுநர், அவன் வாசலை அமைத்து அதற்குக் கூரையையும் போட்டான். பிறகு அதற்கு கதவுகளையும் வைத்தான். அதற்குரிய பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு வைத்தான். சல்லூம், சீலோவாவின் குளத்து சுவரையும் கட்டினான். அது அரசனுடைய தோட்டத்தை அடுத்து இருந்தது. தாவீது நகரத்திலிருந்து இறங்குகிற படிக்கட்டுகளையும் அவன் கட்டிமுடித்தான்.
16 அஸ்பூகின் மகனான நெகேமியா அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்தான். இந்த நெகேமியா பெத்சூர் மாவட்டத்தின் பாதிப் பகுதிக்கு ஆளுநராக இருந்தான். இவன் தாவீதின் கல்லறைகளுக்கு எதிரான இடம்வரையும் பழுதுபார்த்தான். அதோடு வெட்டப்பட்ட குளம் வரையிலும், பராக்கிரமசாலிகளின் வீடுவரையிலும் உள்ளவற்றைப் பழுதுபார்த்தான்.
17 லேவியின் கோத்திரத்தார் அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்தனர். லேவியர்கள் பானியின் மகனான ரேகூமிற்குக் கீழ் வேலைபார்த்தனர். அடுத்தப் பகுதியை அசபியா பழுதுபார்த்தான். அசபியா, கேகிலா மாவட்டத்தின் பாதிப் பகுதிக்கு ஆளுநராக இருந்தான். அவன் தனது சொந்த மாவட்டத்திற்கே பழுதுபார்த்தான்.
18 அடுத்தப் பகுதியை அவனது சகோதரர்கள் பழுதுபார்த்தனர். அவர்கள் எனாதாதின் மகனான பின்னூவியின் கீழ் வேலை பார்த்தனர். பின்னூவி, கேகிலா மாவட்டத்தின் பாதிப் பகுதிக்கு ஆளுநராக இருந்தான்.
19 யெசுவாவின் மகனாகிய ஏசர் அடுத்தப் பகுதியைப் பழுது பார்த்தான். ஏசர், மிஸ்பாவின் ஆளுநராக இருந்தான். அவன் ஆயுத அறையிலிருந்து சுவரின் மூலைவரையுள்ள சுவர்ப் பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான். 20 சாபாயின் மகனான பாரூக் அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்தான். பாரூக் மிகக் கடினமாக வேலை செய்தான். அவன் அந்த மூலையிலிருந்து தலைமை ஆசாரியனான எலியாசீபின் வீட்டின் நுழைவாயில் வரை சுவரைக் கட்டினான். 21 கோசின் மகன் உரியா. உரியாவின் மகன் மெரெமோத். அவன் எலியாசிபின் வாசற்படி முதல் அந்த வீட்டின் கடைசிவரையுள்ள சுவரைப் பழுதுபார்த்தான். 22 அடுத்தப் பகுதியிலுள்ள சுவர்கள் அந்தப் பகுதியில் வாழும் ஆசாரியர்களால் பழுதுபார்த்துக் கட்டப்பட்டன.
23 பென்யமீனும் அசூபும் தங்கள் வீட்டிற்கு எதிரேயுள்ள சுவரைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள். அனனியாவின் மகனாகிய மாசேயாவின் மகன் அசரியா, அவனது வீட்டிற்கு அருகே இருந்த சுவரைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
24 எனாதாதின் மகனான பின்னூவி அசரியாவின் வீட்டிலிருந்த சுவரின் கோடி வளைவு வரைக்கும் உள்ள வேறொரு பங்கைக் கட்டினான்.
25 ஊசாயின் மகனான பாலால் வளைவுக்கு எதிரேயும் கோபுரத்திற்கு அருகேயும் உள்ளவற்றைக் கட்டினான். இந்த கோபுரம் அரசனின் உயரமான அரண்மனையில் இருந்தது. அது அரசனது காவல் வீட்டின் முற்றத்தை அடுத்திருந்தது. பாலாலுக்கு அடுத்து (பிறகு) பாரோஷின் மகன் பெதாயா வேலைச் செய்தான்.
26 ஆலய வேலைக்காரர்கள் ஓபேல் மலையில் குடியிருந்தார்கள். அவர்கள் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசல்வரையிலும் கோபுரத்திற்கு அருகிலும் கட்டினார்கள்.
27 தெக்கோவா ஊரார், பெரிய கோபுரத்திலிருந்து ஓபேலின் மதில்வரைப் பழுதுபார்த்து கட்டினார்கள்.
28 குதிரைவாசல் முதற்கொண்டு ஆசாரியர்கள் தம் பகுதியை பழுதுபார்த்தார்கள். ஒவ்வொரு ஆசாரியரும் அவரது சொந்த வீட்டிற்கு முன்னுள்ள சுவரைக் கட்டினார்கள். 29 இம்மேரின் மகனான சாதோக் தன் வீட்டிற்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்தான். அவனுக்கு பின்னாக, செக்கனியாவின் மகனான செமாயா பழுதுபார்த்துக் கட்டினான். செமாயா, கிழக்கு வாசலின் காவல்காரனாக இருந்தான்.
30 செல்மீயாவின் மகனான அனனியாவும் சாலாபின் மகனான ஆனூனும் வேறொரு பங்கைப் பழுது பார்த்துக் கட்டினார்கள். (ஆனூன், சாலாபின் ஆறாவது மகன்)
பெரக்கியாவின் மகன் மெசுல்லாம் அவனது வீட்டின் முன்னால் ஒரு பகுதியை கட்டினான். 31 மல்கியா, ஆலய வேலைக்காரர்களும் வணிகர்களும் குடியிருப்புகள் வரையுள்ள அடுத்த பாகத்தை பழுதுபார்த்தான். அது சோதனை வாசலுக்கு எதிரேயுள்ளது. மல்கியா, பொற்கொல்லனாய் இருந்தான். 32 கோடியின் மேல்வீட்டிற்கும் ஆட்டு வாசலுக்கும் இடையே இருக்கிறதைப் பொற்கொல்லர்களும் மளிகைக்காரரும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
பரிசுத்த ஆவியானவரின் வருகை
2 பெந்தெகோஸ்தே நாளில் அப்போஸ்தலர் அனைவரும் ஓரிடத்தில் கூடியிருந்தனர். 2 திடீரென வானிலிருந்து ஓசை ஒன்று எழுந்தது. பெருங்காற்று அடித்தாற்போல அது ஒலித்தது. அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதையும் அவ்வொலி நிரப்பிற்று. 3 நெருப்புக் கொழுந்து போன்றவற்றை அவர்கள் கண்டனர். அக்கொழுந்துகள் பிரிந்து சென்று அங்கிருந்த ஒவ்வொருவர் மேலும் நின்றன. 4 அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள். பல்வேறு மொழிகளில் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். இப்படிப்பட்ட வல்லமையை பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார்.
5 அக்காலத்தில் எருசலேமில் மிக பக்திமான்களாகிய யூதர்கள் சிலர் தங்கியிருந்தனர். உலகத்தின் எல்லா தேசத்தையும் சார்ந்தவர்களாக இந்த மனிதர்கள் இருந்தனர். 6 ஒலியைக் கேட்டு இம்மனிதர்கள் பெருங்கூட்டமாக அங்கு வந்தனர். அப்போஸ்தலர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த மொழியில் கேட்டதால் அம்மனிதர்கள் வியப்புற்றனர்.
7 யூதர்கள் இதனால் ஆச்சரியமடைந்தனர். அப்போஸ்தலர்கள் எவ்வாறு இதைச் செய்ய முடிந்தது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள், “பாருங்கள்! பேசிக்கொண்டிருக்கும் இந்த மனிதர்கள் எல்லோரும் கலிலேயாவைச் சேர்ந்தவர்கள்! 8 ஆனால் நமது மொழிகளில் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்கிறோம். எப்படி இது இயலும்? நாம் 9 பார்த்தியா, மேதியா, ஏலாம், மெசொபொதாமியா, யூதேயா, கப்பதோகியா, பொந்து, ஆசியா, 10 பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேனே நகரங்களிற்கு அருகேயுள்ள லிபியா நாட்டுப் பகுதிகள், 11 கிரேத்தா, ரோமிலிருந்து வந்த மக்கள் மற்றும் அரேபியா ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். நம்மில் சிலர் யூதர்களாகப் பிறந்தவர்கள் மற்றவர்கள் யூதர்களாக மதம் மாறியவர்கள். நாம் வெவ்வேறு நாட்டினர். ஆனால் இவர்கள் நம் மொழிகளில் பேசுவதைக் கேட்கிறோமே! அவர்கள் தேவனைக் குறித்துக் கூறும் மேன்மையான காரியங்களை நம்மெல்லோராலும் புரிந்துகொள்ள முடிகிறதே” என்றார்கள்.
12 மக்கள் அனைவரும் வியப்புற்றவர்களாகவும் குழப்பமடைந்தவர்களாகவும் காணப்பட்டனர். அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “என்ன நடந்துகொண்டிருக்கிறது?” என்று வினவினர். 13 பிற மக்கள் அப்போஸ்தலர்களைப் பார்த்துச் சிரித்தனர். அம்மக்கள் அப்போஸ்தலர் மிகுதியான மதுவைப் பருகியிருந்தனர் என நினைத்தனர்.
பேதுரு மக்களிடம் பேசுதல்
14 அப்பொழுது பேதுரு மற்ற அப்போஸ்தலர் பதினொருவரோடும் எழுந்து நின்றான். எல்லா மக்களும் கேட்கும்படியாக உரக்கப் பேசினான். அவன், “எனது யூத சகோதரர்களே, எருசலேமில் வசிக்கும் மக்களே, நான் கூறுவதைக் கவனியுங்கள். நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில கருத்துக்களை உங்களுக்குக் கூறுவேன். கவனமாகக் கேளுங்கள். 15 நீங்கள் நினைக்கிறது போல் இம்மனிதர்கள் மது பருகியிருக்கவில்லை. இப்போது காலை ஒன்பது மணிதான். 16 இங்கு இன்றைக்கு நிகழ்ந்துகொண்டிருப்பதைக் குறித்து யோவேல் என்னும் தீர்க்கதரிசி எழுதியிருக்கிறார். யோவேல் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்:
17 “‘தேவன் கூறுகிறார், கடைசி நாட்களில் நான் எனது ஆவியை எல்லா மக்களுக்கும் அள்ளி வழங்குவேன்.
ஆண் மக்களும், பெண்மக்களும் தீர்க்கதரிசனம் உரைப்பர்.
உங்கள் இளைஞர் தரிசனம் காண்பார்கள்.
உங்கள் முதியோர் விசேஷக் கனவுகள் காண்பர்.
18 அந்நேரத்தில் எனது ஆவியை எனது ஊழியர்களாகிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் கொடுப்பேன்.
அவர்கள் தீர்க்கதரிசனம் உரைப்பர்.
19 மேலே வானில் வியப்புறும் காட்சிகளைக் காண்பிப்பேன்.
கீழே பூமியிலும் சான்றுகள் தருவேன்.
அங்கு இரத்தம், நெருப்பும், புகை மண்டலமும் இருக்கும்.
20 சூரியன் இருளாக மாறும்.
நிலா இரத்தம் போல் சிவப்பாகும்.
அப்போது கர்த்தருடைய மகத்தான மகிமை மிக்க நாள் வரும்.
21 கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் ஒவ்வொரு மனிதனும் இரட்சிக்கப்படுவான்.’ (A)
2008 by World Bible Translation Center