Old/New Testament
20 ஒரு நாள், சில மூப்பர்கள் (தலைவர்கள்) இஸ்ரவேலில் இருந்து, கர்த்தரிடம் ஆலோசனை கேட்க என்னிடம் வந்தனர். இது கைதியான ஏழாம் ஆண்டு ஐந்தாம் மாதம் பத்தாம் நாள். அம்மூப்பர்கள் (தலைவர்கள்) எனக்கு முன்னால் உட்கார்ந்தார்கள்.
2 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 3 “மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மூப்பர்களிடம் (தலைவர்கள்) கூறு. அவர்களிடம், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: என்னிடம் ஆலோசனை கேட்க வந்திருக்கிறீர்களா? அது அவ்வாறானால் நான் அதனைத் தரமாட்டேன். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.’ 4 அவர்களை நியாயம்தீர்க்க வேண்டுமா? மனுபுத்திரனே, நீ அவர்களை நியாயம்தீர்க்கிறாயா? அவர்கள் பிதாக்கள் செய்த அருவருப்பான பாவங்களைப்பற்றி நீ சொல்ல வேண்டும். 5 நீ அவர்களிடம் சொல்ல வேண்டும்: ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: நான் இஸ்ரவேலைத் தேர்ந்தெடுத்த நாளில், நான் யாக்கோபின் குடும்பத்தின்மேல் என் கையை உயர்த்தி, நான் அவர்களுக்கு முன்னால், எகிப்தில், என்னை வெளிப்படுத்தினேன். என் கையை உயர்த்தி நான் சொன்னேன்: “நானே உமது தேவனாகிய கர்த்தர்.” 6 அந்நாளில் உன்னை எகிப்தைவிட்டு வெளியே எடுத்துச்செல்வேன் என்று வாக்களித்தேன்: நான் உங்களுக்குக் கொடுத்த நாட்டிற்கு அழைத்துச் செல்வேன். இது பல நன்மைகள் நிறைந்த நல்ல நாடு. இது எல்லா நாடுகளையும்விட அழகான நாடு!
7 “‘நான் இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் அவர்களது அருவருப்பான விக்கிரகங்களை எறிந்து விடும்படிச் சொன்னேன். எகிப்தில் உள்ள அசுத்தமான சிலைகளோடு சேர்ந்து தீட்டுப்படுத்திக்கொள்ளாதீர்கள் என்று சொன்னேன். “நானே உங்களது தேவனாகிய கர்த்தர்.” 8 ஆனால் அவர்கள் எனக்கு எதிராகத் திரும்பி என் சொல்லைக் கேட்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் தம் அருவருப்பான விக்கிரகங்களை எறியவில்லை. ஆனால் அவர்கள் எகிப்தியரின் அந்த ஆபாசமான சிலைகளை விடவில்லை. எனவே நான் (தேவன்) எகிப்தில் அவர்களையும் அழித்திட முடிவு செய்தேன். எனது கோபத்தின் முழு சக்தியையும் அவர்கள் உணருமாறுச் செய்தேன். 9 ஆனால் நான் அவர்களை அழிக்கவில்லை. அவர்களை எகிப்தைவிட்டு வெளியே கொண்டுவருவேன் என்று அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த நாட்டில் ஏற்கெனவே நான் சொல்லியிருந்தேன். நான் எனது நல்ல பெயரை அழிக்கவில்லை. எனவே, மற்ற ஜனங்களின் முன்பு இஸ்ரவேலை நான் அழிக்கவில்லை. 10 நான் இஸ்ரவேல் குடும்பத்தாரை எகிப்திற்கு வெளியே கொண்டுவந்தேன். நான் அவர்களை வனாந்தரத்தில் வழிநடத்தினேன். 11 பிறகு நான் எனது சட்டங்களைக் கொடுத்தேன். எனது விதிகளை எல்லாம் அவர்களிடம் சொன்னேன். ஒருவன் அந்த விதிகளுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் வாழ்வான். 12 நான் அவர்களுக்கு ஓய்வுக்குரிய சிறப்பான நாட்களைப்பற்றியும் சொன்னேன். அவ்விடுமுறை நாட்கள் எனக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள அடையாளங்கள் ஆகும். நானே கர்த்தர். நான் அவர்களை எனக்குப் பரிசுத்தமாக்கிக் கொண்டிருந்தேன் என அவை காட்டும். எனக்குரிய சிறப்பாக அவற்றைச் செய்தேன்.
13 “‘ஆனால் இஸ்ரவேல் குடும்பத்தார் வனாந்தரத்தில் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் எனது விதிகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவை நல்ல விதிகள். ஒருவன் அவ்விதிகளுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் வாழ்வான். அவர்கள் ஓய்வுக்குரிய சிறப்பான நாட்களை எல்லாம் முக்கியமற்றதாகக் கருதினார்கள். அவர்கள் அந்நாட்களில் பலமுறை வேலை செய்தனர். நான் அவர்களை வனாந்தரத்திலேயே அழிக்கவேண்டுமென முடிவெடுத்தேன். என் கோபத்தின் முழு சக்தியையும் அவர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டுமென நினைத்தேன். 14 ஆனால் அவர்களை நான் அழிக்கவில்லை. நான் இஸ்ரவேலரை எகிப்தை விட்டு வெளியே கொண்டு வந்ததை மற்ற நாடுகள் பார்த்தன. நான் எனது நல்ல பெயரை அழிக்க விரும்பவில்லை எனவே மற்றவர்கள் முன்பு நான் இஸ்ரவேலரை அழிக்கவில்லை. 15 வனாந்தரத்தில் அந்த ஜனங்களுக்கு இன்னொரு வாக்கு கொடுத்தேன். நான் கொடுத்திருந்த நாட்டிற்கு அவர்களை அழைத்து வரமாட்டேன் என்று சொன்னேன். அது நன்மைகள் நிறைந்த நல்ல நாடு. எல்லா நாடுகளையும் விட அது அழகான நாடு!
16 “‘இஸ்ரவேல் ஜனங்கள் எனது விதிகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். என் சட்டங்களை அவர்கள் பின்பற்றவில்லை. அவர்கள் எனது ஓய்வுக்குரிய சிறப்பான நாட்களை முக்கியமற்றதாகக் கருதினார்கள். அவர்கள் இவற்றையெல்லாம் செய்தனர். ஏனென்றால், அவர்கள் இருதயங்கள் அந்த அசுத்த விக்கிரங்களுக்குச் சொந்தமாயிருந்தன. 17 ஆனால் நான் அவர்களுக்காக வருத்தப்பட்டேன். நான் அவர்களை அழிக்கவில்லை. நான் வனாந்தரத்தில் அவர்களை முழுமையாக அழிக்கவில்லை. 18 வனாந்திரத்தில் நான் அவர்களது பிள்ளைகளோடு பேசினேன்: “உங்கள் பெற்றோர்களைப்போன்று இருக்க வேண்டாம். நீங்கள் அசுத்த சிலைகளோடு சேர்ந்து அசுத்தமாகவேண்டாம். அவர்களின் சட்டங்களைப் பின்பற்றவேண்டாம். அவர்களது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவேண்டாம். 19 நானே கர்த்தர். நானே உங்கள் தேவன். எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். எனது கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள். நான் சொன்னபடி செய்யுங்கள். 20 எனது ஓய்வுக்குரிய நாட்கள் எல்லாம் முக்கியமானவை என்று காட்டுங்கள். எனக்கும் உங்களுக்கும் இடையே அவை சிறப்பான அடையாளங்களாக இருப்பதை நினைவுகொள்ளுங்கள். நானே கர்த்தர். அவ்விடுமுறைகள் நானே உங்கள் தேவன் என்பதைக் காட்டும்.”
21 “‘ஆனால் அப்பிள்ளைகள் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் எனது கட்டளைகளைக் கைக்கொள்ளவில்லை. நான் சொன்னபடி அவர்கள் செய்யவில்லை. அவை நல்ல சட்டங்கள். ஒருவன் அவற்றுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் வாழ்வான். அவர்கள் எனது சிறப்பிற்குரிய ஓய்வு நாட்களை முக்கியமற்றவையாகக் கருதினர். எனவே அவர்களை வனாந்திரத்தில் நான் முழுமையாக அழிக்க விரும்பினேன். 22 ஆனால் நான் என்னைக் கட்டுப்படுத்தினேன். நான் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்ததை மற்ற நாட்டினர் பார்த்தனர். நான் எனது நல்ல பெயரை அழிக்க விரும்பவில்லை. எனவே மற்ற நாடுகளின் முன்னால் நான் இஸ்ரவேலரை அழிக்கவில்லை. 23 எனவே வனாந்திரத்தில் அந்த ஜனங்களுக்கு வேறொரு வாக்கு தந்தேன். அவர்களைப் பல்வேறு நாடுகளில் சிதறடிப்பேன் என்று வாக்குறுதி செய்தேன்.
24 “‘இஸ்ரவேல் ஜனங்கள் எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் எனது சிறப்புக்குரிய ஓய்வு நாட்களை முக்கியமற்றதாகக் கருதினார்கள். அவர்கள் தம் தந்தையர்களுடைய அசுத்த விக்கிரகங்களை தொழுதுகொண்டனர். 25 எனவே நான் அவர்களுக்கு நன்மையற்ற சட்டங்களைக் கொடுத்தேன். வாழ்வு தராத கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்தேன். 26 நான் அவர்கள் தமது அன்பளிப்புகளால் (அவர்கள் விக்கிரகங்களுக்கு படைத்தவை) தங்களையே தீட்டுப்படுத்திக்கொள்ள இடங்கொடுத்தேன். அவர்கள் தம் முதல் குழந்தைகளைக் கூட பலியிடத் தொடங்கினார்கள். இவ்வழியில், அந்த ஜனங்களை அழிப்பேன். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.’ 27 எனவே இப்பொழுது, மனுபுத்திரனே இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் பேசு. அவர்களிடம், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: இஸ்ரவேல் ஜனங்கள் என்னைப்பற்றி கெட்டவற்றைச் சொன்னார்கள். எனக்கு எதிராகத் தீயத்திட்டங்களைப் போட்டனர். 28 ஆனால் நான் வாக்களித்த நாட்டிற்கு அவர்களை அழைத்து வந்தேன். அவர்கள் அனைத்து குன்றுகளையும் பச்சை மரங்களையும் பார்த்தனர். அவர்கள் அந்த இடங்களுக்கு தொழுகைச் செய்யச் சென்றனர். அவர்கள் தம் பலிகளையும் எனக்குக் கோப பலியையும் [a] கொண்டு சென்றனர். அவர்கள் பலிகளைக் கொடுத்தனர். அது இனிய மணத்தைக் கொடுத்தது. அந்த இடங்களில் எல்லாம் அவர்கள் பானங்களின் காணிக்கையைக் கொடுத்தனர். 29 நான் அந்த ஜனங்களிடம் அந்த மேடான இடங்களுக்கு ஏன் போகிறீர்கள் என்று கேட்டேன். இன்றும் அம்மேடான இடங்கள் அங்கு இருக்கின்றன’” என்று சொல்.
30 தேவன் சொன்னார்: “இஸ்ரவேல் ஜனங்கள் அனைத்துப் பாவங்களையும் செய்தனர். எனவே இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் பேசு. ‘என் கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: உங்கள் முற் பிதாக்களைப்போன்று தீமைகளைச் செய்து நீங்கள் உங்களை அசுத்தமாக்கிக்கொண்டீர்கள். நீங்கள் வேசியைப்போன்று நடந்துகொண்டீர்கள். நீங்கள் உங்கள் முன்னோர்கள் வழிபட்ட அருவருப்பான தெய்வங்களை வணங்க என்னைவிட்டு விலகினீர்கள். 31 நீங்கள் அதேபோன்று அன்பளிப்புகளைக் கொடுக்கிறீர்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பொய்த் தெய்வங்களுக்குப் பலியாக நெருப்பில் போடுகிறீர்கள். இன்றுவரை நீங்கள் அசுத்த விக்கிரகங்களோடு சேர்ந்து உங்களை தீட்டாக்கிக்கொண்டீர்கள்! நான் உங்களை என்னிடம் ஆலோசனை கேட்க வரவிடவேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே நினைக்கிறீர்களா? நானே ஆண்டவரும் கர்த்தருமாயிருக்கிறேன். என் உயிரின் மூலம் நான் வாக்களிக்கிறேன், நான் உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லமாட்டேன். உங்களுக்கு ஆலோசனை தரமாட்டேன்! 32 நீங்கள் வேறு நாட்டினரைப்போன்று இருப்போம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் பிற நாட்டினரைப்போன்று வாழ்கிறீர்கள். நீங்கள் மரத்துண்டுகளையும் கல்லையும் (சிலைகள்) சேவிக்கிறீர்கள்.’”
33 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “என் உயிரைக்கொண்டு நான் வாக்களிக்கிறேன், நான் உங்களை அரசனைப்போன்று ஆள்வேன். ஆனால் நான் என் வல்லமை வாய்ந்த கையை உயர்த்தி உங்களைத் தண்டிப்பேன். நான் உங்களுக்கு எதிரான எனது கோபத்தைக் காட்டுவேன்! 34 உங்களை நான் சிதறடித்த நாடுகளிலிருந்து வெளியே கொண்டு வருவேன். நான் உங்களை ஒன்று சேர்ப்பேன். இந்நாடுகளிலிருந்து உங்களை மீண்டும் கொண்டு வருவேன். ஆனால், நான் எனது வல்லமை வாய்ந்த கரத்தை உங்களுக்கு எதிராக உயர்த்தி உங்களைத் தண்டிப்பேன். உங்களுக்கு எதிரான எனது கோபத்தைக் காட்டுவேன்! 35 நான் உங்களை முன்புபோல் வனாந்திரத்தில் வழிநடத்துவேன். ஆனால் இது மற்ற நாட்டினர் வாழும் இடம். நாம் நேருக்கு நேராக நிற்போம். நான் உங்களை நியாயந்தீர்ப்பேன். 36 நான் எகிப்தின் அருகில் உள்ள வனாந்திரத்தில் உங்கள் முன்னோர்களை நியாயந்தீர்த்தது போன்று உங்களை நியாயந்தீர்ப்பேன்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
37 “நான் உடன்படிக்கையின் உங்கள் குற்றங்களை நியாயம் தீர்த்து தண்டிப்பேன். 38 நான் எனக்கு எதிராகத் திரும்பி பாவம் செய்தவர்களை விலக்குவேன். நான் அவர்களை உங்கள் தாய்நாட்டிலிருந்து விலக்குவேன். அவர்கள் மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்கு வரமாட்டார்கள். பிறகு, நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.”
39 இப்பொழுது, இஸ்ரவேல் குடும்பத்தினரே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “எவராவது தம் அசுத்த விக்கிரகங்களை தொழுதுகொள்ளவேண்டுமானால், அவன் போய் தொழுதுகொள்ளட்டும். ஆனால் பிறகு, என்னிடமிருந்து ஆலோசனை கிடைக்கும் என்று எண்ண வேண்டாம்! இனிமேலும் எனது நாமத்தை உங்கள் அன்பளிப்புகளாலும், உங்கள் விக்கிரகங்களாலும் நீங்கள் தீட்டுப்படுத்த முடியாது.”
40 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “ஜனங்கள் எனது பரிசுத்தமான மலைகளுக்கு இஸ்ரவேலிலுள்ள உயரமான மலையில் எனக்குச் சேவை செய்ய வரவேண்டும்! இஸ்ரவேலின் எல்லா வம்சத்தாருமாகிய அனைவரும் உங்கள் நிலத்தில் (தேசத்தில்) இருப்பீர்கள். என்னிடம் வந்து ஆலோசனை கேட்கக்கூடிய இடம் அதுதான். நீங்கள் அந்த இடத்திற்கு உங்கள் காணிக்கைகளை எடுத்துக்கொண்டு வரவேண்டும். உங்கள் விளைச்சலின் முதல் பகுதியை அந்த இடத்திற்கு நீங்கள் கொண்டு வரவேண்டும். உங்கள் பரிசுத்த அன்பளிப்புகள் அனைத்தையும் அந்த இடத்திற்கு நீங்கள் கொண்டு வரவேண்டும். 41 பிறகு நான் உங்கள் பலிகளின் இனிய மணத்தால் பிரியமாய் இருப்பேன். நான் உங்களைத் திரும்ப அழைத்து வரும்போது அது நிகழும். நான் உங்களைப் பல தேசங்களில் சிதற அடித்திருந்தேன். ஆனால் நான் உங்களைக் கூட்டிச் சேர்ப்பேன். நான் உங்களை எனது சிறப்புக்குரிய ஜனங்களாக மீண்டும் செய்வேன். அந்நாடுகள் எல்லாம் இதனைப் பார்க்கும். 42 பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களை மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்குக் கொண்டுவரும்போது இதனை அறிவீர்கள். உங்கள் முற்பிதாக்களிடம் அந்த நாட்டையே உங்களுக்குத் தருவதாக வாக்களித்திருந்தேன். 43 அந்நாட்டில் உங்களை அசுத்தமாக்கிய நீங்கள் செய்த பாவங்களை நினைப்பீர்கள். நீங்கள் உங்கள் தீய வழிகளினிமித்தம் வெட்கப்பட்டுப்போவீர்கள். 44 இஸ்ரவேல் குடும்பத்தாரே, நீங்கள் பல கெட்டக் காரியங்களைச் செய்தீர்கள். அத்தீயக்காரியங்களால் நீங்கள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எனது நற்பெயரைக் காப்பாற்றிக்கொள்ள உங்களுக்கேற்ற அத்தண்டனைகளை நான் தரவில்லை. பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.”
45 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 46 “மனுபுத்திரனே, யூதாவின் தென் பகுதியிலுள்ள நெகேவைப் பார். நெகேவ் காட்டிற்கு [b] எதிராகப் பேசு. 47 நெகேவ்காட்டிடம் சொல், ‘கர்த்தருடைய வார்த்தையைக் கேள். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: பார், உன் காட்டில் நெருப்பிட நான் தயாராக இருக்கிறேன். நெருப்பானது எல்லா பச்சை மரங்களையும் எல்லா காய்ந்த மரங்களையும் அழிக்கும். எரியும் ஜூவாலையை அணைக்கமுடியாது. தெற்கிலிருந்து வடக்கு வரையுள்ள அனைத்து நிலமும் எரியும். 48 பிறகு எல்லா ஜனங்களும் கர்த்தராகிய நானே நெருப்பு வைத்தேன் என அறிவார்கள். அந்நெருப்பு அணைக்கப்படாது!’”
49 பிறகு நான் (எசேக்கியேல்) சொன்னேன், “ஓ, எனது கர்த்தராகிய ஆண்டவரே! நான் இவற்றைச் சொன்னால், பிறகு ஜனங்கள் நான் கதைகளை மட்டும் சொல்வதாக நினைப்பார்கள். இது உண்மையில் நிகழும் என்று அவர்கள் நினைக்கமாட்டார்கள்!”
21 எனவே கர்த்தருடைய வார்த்தை மீண்டும் என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, எருசலேமை நோக்கிப் பார். அதன் பரிசுத்தமான இடங்களுக்கு எதிராகப் பேசு. எனக்காக இஸ்ரவேல் நாட்டிற்கு எதிராகப் பேசு. 3 இஸ்ரவேல் நாட்டிடம் கூறு, ‘கர்த்தர் இவற்றைச் சொன்னார்; நான் உனக்கு எதிரானவன்! நான் எனது வாளை அதன் உறையிலிருந்து எடுப்பேன்! நல்லவர்கள் தீயவர்கள் ஆகிய எல்லா ஜனங்களையும் உன்னிடமிருந்து விலக்குவேன். 4 நான் நல்ல ஜனங்களையும், தீய ஜனங்களையும் உன்னிடமிருந்து துண்டிப்பேன்! நான் எனது வாளை அதன் உறையிலிருந்து உருவி தெற்கிலிருந்து வடக்கு வரையுள்ள அனைத்து ஜனங்களுக்கும் எதிராகப் பயன்படுத்துவேன். 5 பிறகு நானே கர்த்தர் என்பதை எல்லா ஜனங்களும் அறிந்துகொள்வார்கள். நானே எனது வாளை உறையிலிருந்து உருவியிருக்கிறேன் என்பதையும் அறிந்துகொள்வார்கள். எனது வாள் தன் வேலையை முடிக்கும்வரை தன் உறைக்குள் திரும்பப் போகாது.’”
6 தேவன் என்னிடம் சொன்னார், “மனுபுத்திரனே, துக்கமான மனிதனைப்போன்று உடைந்த உள்ளத்துடன் துக்க ஒலிகளை எழுப்பு. இத்துயர ஒலிகளை ஜனங்களுக்கு முன்னால் எழுப்பு. 7 பிறகு அவர்கள் உன்னை ‘ஏன் இத்தகைய துக்க ஒலிகளை எழுப்புகிறாய்’ எனக் கேட்பார்கள். பிறகு நீ, ‘துக்கச்செய்தி வரப்போகிறது, ஒவ்வொரு இதயமும் பயத்தால் உருகப்போகிறது, எல்லா கைகளும் பலவீனமடையப் போகிறது. எல்லா ஆவியும் சோர்ந்துபோகும். எல்லா முழங்கால்களும் தண்ணீரைப்போன்று ஆகும்’ என்று சொல்லவேண்டும். பார், கெட்ட செய்தி வந்துகொண்டிருக்கிறது. இவை எல்லாம் நிகழும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்.
வாள் தயாராயிருக்கிறது
8 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 9 “மனுபுத்திரனே, எனக்காக ஜனங்களிடம் பேசு. இவற்றைக் கூறு, ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
“‘பார், ஒரு வாள், கூர்மையான வாள்,
அந்த வாள் தீட்டப்பட்டிருக்கிறது.
10 வாள் கொல்வதற்காகக் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது.
இது மின்னலைப்போன்று பளிச்சிட கூர்மையாக்கப்பட்டிருக்கிறது.
என் மகனே, நான் உன்னைத் தண்டிக்க வரும் பிரம்பிடமிருந்து ஓடிவிட்டாய்.
அம்மரத்தடியால் தண்டிக்கப்படுவதற்கு நீ மறுக்கிறாய்.
11 எனவே, வாள் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது.
இப்போது இதனைப் பயன்படுத்த முடியும்.
வாள் கூர்மையாகவும் பளபளப்பாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது.
இப்போது இது கொலையாளியின் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
12 “‘கதறியழு, கத்து, மனுபுத்திரனே! ஏனென்றால், இந்த வாள் எனது ஜனங்களுக்கும் இஸ்ரவேலை ஆள்வோர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தப்படும்! அந்த ஆள்வோர்கள் போரை விரும்பினார்கள். எனவே, வாள் வரும்போது அவர்கள் எனது ஜனங்களோடு இருப்பார்கள்! எனவே உனது தொடையிலே அடித்துக்கொண்டு, உன் துக்கத்தைக் காட்ட ஒலி எழுப்பு! 13 எனென்றால், இது ஒரு சோதனை அன்று! மரத்தடியால் தண்டிக்கப்பட நீ மறுத்தாய் எனவே, நான் உன்னை வேறு எதனால் தண்டிக்க முடியும்? ஆம் வாளால்தான்’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
14 தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, உன் கைகளைத் தட்டு.
எனக்காக ஜனங்களிடம் பேசு.
இந்த வாள் கீழே இரண்டு முறை வரட்டும்! மூன்று முறை வரட்டும்.
இந்த வாள் ஜனங்களைக் கொல்வதற்குரியது!
இந்த வாள் பெருங் கொலைக்குரியது.
இந்த வாள் ஜனங்களுக்குள் ஊடுருவுமாறு செருகப்பட்டிருக்கிறது.
15 அவர்களின் இதயங்கள் அச்சத்தால் உருகும்.
மிகுதியான ஜனங்கள் கீழே விழுவார்கள்.
நகர வாசல்களில் இந்த வாள் பலரைக் கொல்லும்.
ஆம் இந்த வாள் மின்னலைப்போன்று பளிச்சிடும்.
இது ஜனங்களைக் கொல்லத் தீட்டப்பட்டிருக்கிறது!
16 வாளே, கூர்மையாக இரு!
வலது பக்கத்தை வெட்டு.
நேராக மேலே வெட்டு.
இடது பக்கத்தை வெட்டு.
உனது முனை தேர்ந்தெடுத்த இடங்களில் எல்லாம் போ!
17 “பிறகு நானும் எனது கைகளைத் தட்டுவேன்.
என் கோபத்தைக் காட்டுவதை நிறுத்துவேன்.
கர்த்தராகிய நான் பேசினேன்!”
எருசலேம் தண்டிக்கப்படுதல்
18 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 19 “மனுபுத்திரனே, பாபிலோனிய அரசனின் வாள் இஸ்ரவேலுக்கு வரத்தக்கதாக இரண்டு பாதைகளை வரைந்துக்கொள். இரண்டு சாலைகளும் ஒரே தேசத்திலிருந்து (பாபிலோன்) வர வேண்டும். சாலையின் ஆரம்பத்தில் ஒரு குறிப்பை எழுது. 20 அடையாளத்தைப் பயன்படுத்தி எந்த வழியில் வாள் வருமென்று காட்டு. ஒருவழி அம்மோனியரின் நகரமாகிய ரப்பாவுக்குக் கொண்டுபோகும். இன்னொரு வழி யூதாவில் இருக்கிற பாதுகாக்கப்பட்ட நகரம் எருசலேமிற்கு கொண்டுபோகும்! 21 பாபிலோனிய அரசன் தாக்குவதற்காகத் தான் போக விரும்பும் வழியைத் திட்டமிட்டிருக்கிறான் என்பதை இது காட்டும். பாபிலோன் அரசன் இரு வழிகளும் பிரிகிற இடத்திற்கு வந்திருக்கிறான். பாபிலோன் அரசன் எதிர்காலத்தை அறிய மந்திர அடையாளங்களைப் பயன்படுத்தியிருக்கிறான். அவன் சில அம்புகளை ஆட்டினான். அவன் குடும்ப விக்கிரகங்களிடம் கேள்விகள் கேட்டான். அவன் தான் கொன்ற விலங்கின் ஈரலைப் பார்த்தான்.
22 “அடையாளமானது வலது பக்கமாக எருசலேமிற்குப் போகும் வழியில் போகச் சொல்லும்! அவன் வாசலை இடிக்கும் எந்திரங்களைக் கொண்டுவர திட்டமிடுகிறான். அவன் கட்டளை இடுவான். அவனது வீரர்கள் கொல்லத் தொடங்குவார்கள். அவர்கள் போர் ஆரவாரத்தைச் செய்வார்கள். பிறகு அவர்கள் நகரத்தைச் சுற்றி சுவரைக் கட்டுவார்கள், மணசாலைகளை அமைப்பார்கள். நகரத்தைத் தாக்க அவர்கள் மரக்கோபுரங்களைக் கட்டுவார்கள். 23 அச்செயல்களை வெறும் பயனற்ற மந்திர வித்தைகளாக இஸ்ரவேல் ஜனங்கள் கருதினார்கள். அவர்கள் தங்களுக்குள் விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். ஆனால் கர்த்தர் அவர்களது பாவங்களை நினைப்பார்! பிறகு இஸ்ரவேலர்கள் சிறை பிடிக்கப்படுவார்கள்.”
24 எனது கர்த்தராகிய ஆண்டவர், இதனைக் கூறுகிறார்: “நீ பல பாவங்களைச் செய்திருக்கிறாய். உன் பாவங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. நீ குற்றவாளி என்பதை அவை எனக்கு நினைப்பூட்டுகின்றன. எனவே எதிரி தன் கையில் உன்னைப் பிடித்துக்கொள்வான். 25 இஸ்ரவேலின் தீய தலைவனான நீ கொல்லப்படுவாய். உன் தண்டனைக் காலம் வந்திருக்கிறது. இங்கே முடிவு இருக்கிறது!”
26 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “உன் தலைப்பாகையை எடு! உன் கிரீடத்தை எடுத்துவிடு. காலம் மாறி இருக்கிறது. முக்கியமான தலைவர்கள் தாழ்த்தப்படுவார்கள். முக்கியமற்றவர்கள் தலைவர்கள் ஆவார்கள். 27 நான் அந்த நகரத்தை முழுமையாக அழிப்பேன்! ஆனால் சரியான மனிதன் புதிய அரசன் ஆகும்வரை இது நிகழாது. பிறகு நான் அவனை (பாபிலோன் அரசனை) இந்நகரத்தை வைத்துக் கொள்ளவிடுவேன்.”
அம்மோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம்
28 தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, எனக்காக ஜனங்களிடம் கூறு, இவற்றைச் சொல், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் அம்மோன் ஜனங்களிடமும் அவர்களின் அவமானத்திற்குரிய பொய்த் தேவனிடமும் இவற்றைச் சொல்கிறார்:
“‘பார், ஒரு வாள்!
வாள் உறையிலிருந்து வெளியே உள்ளது.
வாள் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது!
வாள் கொலை செய்யத் தயாராக இருக்கிறது.
இது மின்னலைப்போன்று ஒளிவிட கூர்மையாக்கப்பட்டுள்ளது!
29 “‘உங்கள் தரிசனங்கள் பயனற்றவை,
உங்கள் மந்திரம் உங்களுக்கு உதவாது. இது பொய்களின் கொத்து மட்டுமே.
இவ்வாள் இப்பொழுது தீய மனிதர்களின் தொண்டையில் உள்ளது.
அவர்கள் மரித்த உடல்களாக விரைவில் ஆவார்கள்.
அவர்களின் நேரம் வந்திருக்கிறது.
அவர்களின் தீமை முடிவடையும் நேரம் வந்திருக்கிறது.
பாபிலோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம்
30 “‘உனது வாளை (பாபிலோன்) உறையிலே போடு, பாபிலோனே, நீ எந்த இடத்தில் உருவாக்கப்பட்டாயோ, எந்த இடத்தில் பிறந்தாயோ அங்கே நான் உன்னை நியாயந்தீர்ப்பேன். 31 எனது கோபத்தை நான் உனக்கு எதிராகக் கொட்டுவேன். எனது கோபம் உன்னை ஒரு சூடான காற்றைப்போன்று அழிக்கும். நான் உன்னைத் தீய மனிதர்களிடம் ஒப்படைப்பேன். அவர்கள் ஜனங்களைக் கொல்வதில் திறமை உடையவர்கள். 32 நீங்கள் நெருப்புக்கான எண்ணெயைப் போன்றவர்கள். உங்கள் இரத்தம் பூமியின் ஆழம்வரை பாயும். ஜனங்கள் உன்னை மீண்டும் நினைக்கமாட்டார்கள். கர்த்தராகிய நான் பேசினேன்!’”
சுய நலமிக்க பணக்காரர்கள் தண்டிக்கப்படுவர்
5 பணக்காரர்களே! கவனியுங்கள், கதறுங்கள், துக்கமாயிருங்கள். ஏனென்றால் பெரும் துன்பம் உங்களுக்கு வரப்போகிறது. 2 உங்கள் செல்வம் அழுகியது, எதற்கும் பயனற்றது. உங்கள் ஆடைகள் செல்லரித்துப் போகும். 3 உங்கள் தங்கமும் வெள்ளியும் துருப்பிடித்துப் போகும். அந்தத் துருவே நீங்கள் தவறானவர்கள் என்பதை நிரூபிக்கும். அது உங்கள் சரீரத்தை நெருப்பு போல எரித்துவிடும். உங்கள் கடைசி நாட்களில் செல்வத்தைச் சேர்த்தீர்கள். 4 மக்கள் உங்கள் வயல்களில் வேலை செய்தார்கள். ஆனால் அவர்களுக்கு நீங்கள் கூலி கொடுக்கவில்லை. அவர்கள் கூலிகளை நீங்கள் வைத்துக்கொண்டீர்கள். இப்போது அவர்கள் மீண்டும் உங்களைப் பார்த்து கூக்குரலிடுகிறார்கள். கூலிக்காரர்களின் கதறல்களை அனைத்து அதிகாரமுமுள்ள கர்த்தர் கேட்டார்.
5 பூமியில் உங்கள் வாழ்வானது செல்வமிக்கது. உங்கள் விருப்பத்தின்படி கிடைப்பதைக்கொண்டு திருப்தி அடைகிறீர்கள். உங்களை நீங்கள் கொழுக்க வைத்து வெட்டப்படப்போகிற மிருகங்களைப்போல் ஆகிறீர்கள். 6 நல்ல மக்களுக்கு நீங்கள் இரக்கம் காட்டவில்லை. உங்களை எதிர்த்து நிற்காத நல்ல மக்களை நீங்கள் தண்டித்துக் கொலை செய்தீர்கள்.
பொறுமையாய் இருங்கள்
7 சகோதர சகோதரிகளே, பொறுமையாக இருங்கள். கர்த்தராகிய இயேசு வருவார். காலம் வரும்வரை பொறுமையாக இருங்கள். ஒரு விவசாயி தன் பயிர் வளர்ந்து அறுவடையாகும்வரை காத்திருக்கிறான். தன் பயிருக்காக வேண்டி முதல் மழைக்கும் இறுதி மழைக்கும் அவன் மிகப் பொறுமையாக காத்திருக்கிறான். 8 நீங்களும் கூடப் பொறுமையாக இருக்க வேண்டும். நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள். கர்த்தராகிய இயேசு சீக்கிரம் வருவார். 9 சகோதர சகோதரிகளே, உங்களை நீங்களே குற்றவாளியாக நியாயம் தீர்த்துக்கொள்ளாதபடிக்கு ஒருவரை ஒருவர் எதிர்த்து புகார்கள் செய்வதை நிறுத்துங்கள். பாருங்கள், கதவுக்கு வெளியே நீதிபதி நின்றுகொண்டிருக்கிறார்.
10 துன்பப்படுதலுக்கும் பொறுமைக்கும் ஒரு உதாரணமாகக் கர்த்தரின் பெயரில் பேசிய தீர்க்கதரிசிகளைப் பாருங்கள். 11 சகித்துக்கொண்டதால் இப்போது நாம் அவர்களை “ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்று அழைக்கிறோம். நீங்கள் யோபின் பொறுமையைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அவரது அனைத்துத் துன்பங்களுக்கும் பிறகு கர்த்தர் உதவினார். இது, தேவன் கிருபையும், இரக்கமும் உடையவர் என்பதைக் காட்டும்.
நீங்கள் சொல்வதைப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள்
12 எனது சகோதர சகோதரிகளே, இது மிகவும் முக்கியமானது. பரலோகம் அல்லது பூமியின் பெயரைப் பயன்படுத்தி ஆணையிடுவதை நிறுத்துங்கள். உண்மையில் எந்த ஆணையுமே இடாதீர்கள். உங்கள் “ஆமாம்” என்பது “ஆமாமாகவே” இருக்க வேண்டும். மேலும் உங்கள் “இல்லை” என்பது “இல்லை” யாகவே இருக்கவேண்டும். நீங்கள் குற்றவாளியாக நியாயம் தீர்க்கப்படாதபடிக்கு இதை மட்டுமே சொல்லுங்கள்.
பிரார்த்தனையின் அதிகாரம்
13 உங்களில் எவருக்கேனும் துன்பம் வந்தால் அவர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். உங்களில் யாரேனும் மகிழ்ச்சியுடன் இருந்தால் அவர்கள் பாடவேண்டும். 14 உங்களில் எவருக்கேனும் நோய் வந்தால் ஆலயத்தில் உள்ள மூப்பர்களை அழைக்கவேண்டும். அவர்கள் கர்த்தரின் பெயரால் எண்ணெயைத் தடவிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். 15 விசுவாசத்தோடு செய்யப்படுகிற எந்தப் பிரார்த்தனையும் பயன் தரும். அது நோயைக் குணமாக்கும்.
16 நீங்கள் செய்த தவறுகளை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுங்கள். பிறகு ஒருவருக்காக ஒருவர் பிரார்த்தனை செய்யுங்கள். இவ்வாறு செய்தால் தேவன் குணப்படுத்துவார். நல்லவர்கள் பிரார்த்தனை செய்தால் நன்மைகள் நிகழும். 17 எலியாவும் நம்மைப்போன்ற ஒருவன் தான். மழை பெய்யக் கூடாது என்று பிரார்த்தனை செய்தான். எனவே மூன்றரை வருடங்களாக மழை இல்லாமல் இருந்தது. மழை வேண்டுமென எலியா பிரார்த்தனை செய்தான். 18 எலியாவின் பிரார்த்தனைக்குப்பின் மழை வந்தது. பயிர்கள் செழித்தன.
ஆன்மாவைக் காப்பாற்றுதல்
19 எனது சகோதர சகோதரிகளே, உங்களில் ஒருவன் உண்மையிலிருந்து விலகிப் போகலாம். இன்னொருவன் அவனைத் திரும்பவும் அழைத்து வரலாம். 20 இதை நினைவிலிருத்திக்கொள்ளுங்கள். தவறான வழியிலிருந்து ஒரு பாவியைத் திருப்புகிற ஒருவன் அம்மனிதனின் ஆன்மாவைக் காப்பாற்றிப் பல பாவங்களை அழிக்கிறான்.
2008 by World Bible Translation Center