Old/New Testament
14 இஸ்ரவேலின் மூப்பார்கள் என்னிடம் வந்தார்கள். அவர்கள் என்னோடு பேச உட்கார்ந்தார்கள். 2 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்; 3 “மனுபுத்திரனே, இம்மனிதர்கள் உன்னோடு பேச வந்திருக்கிறார்கள். என்னிடம் ஆலோசனை கேட்க அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அம்மனிதர்கள் இன்னும் தங்கள் அசுத்தமான விக்கிரகங்களை வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் பாவத்தை உண்டுபண்ணுபவற்றை வைத்திருக்கிறார்கள். அவர்கள் அந்தச் சிலைகளை இன்னும் வழிபடுகிறார்கள். எனவே, என்னிடம் ஆலோசனை கேட்க எதற்காக அவர்கள் வரவேண்டும்? அவர்களது கேள்விகளுக்கு நான் பதில் சொல்வேனா? இல்லை! 4 ஆனால் நான் ஒரு பதிலைச் சொல்வேன். நான் அவர்களைத் தண்டிப்பேன்! நீ அவர்களிடம் இவற்றைக் கூறவேண்டும். ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; எந்த இஸ்ரவேலராவது ஒரு தீர்க்கதரிசியிடம் வந்து என்னிடம் ஆலோசனை கேட்டால், அவனுக்கு அத்தீர்க்கதரிசி பதில் சொல்லமாட்டான். அவனது கேள்விக்கு நானே பதில் கூறுவேன். இன்னும் அவனிடம் அந்த அசுத்தமான விக்கிரகங்கள் இருந்தாலும், இன்னும் அவன் அச்சிலைகளை வணங்கி வந்தாலும், இன்னும் அவர்கள் பாவத்தைச் செய்யத் தூண்டும் பொருட்களை வைத்திருந்தாலும் நான் பதில் சொல்வேன். அவனுடைய அசுத்த விக்கிரகங்கள் இன்னும் இருந்தபொழுதும் நான் அவனுடன் பேசுவேன். 5 ஏனென்றால், நான் அவர்களின் இதயத்தைத் தொட விரும்புகிறேன். என்னத்தான் அவர்கள் அசுத்தமான விக்கிரகங்களை வணங்க என்னை விட்டு விலகினாலும், நான் அவர்களை நேசிக்கிறேன் என்பதைக் காட்டவேண்டும்.’
6 “எனவே, இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் இவற்றைச் சொல், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: என்னிடம் திரும்பி வாருங்கள், உங்கள் அசுத்த விக்கிரகங்களை விட்டுவிடுங்கள். அப்பொய்யான தெய்வங்களை விட்டு விலகிப்போங்கள். 7 இஸ்ரவேலில் வாழும் இஸ்ரவேலனோ அல்லது அயல்நாட்டுக்காரனோ என்னிடம் ஆலோசனை கேட்க வந்தால், நான் அவனுக்குப் பதில் சொல்வேன். அவன் இன்னும் அந்த அசுத்த விக்கிரகங்களை வைத்திருந்தாலும், இன்னும் அவன் பாவத்தை உண்டுபண்ணுகின்றவற்றை வைத்திருந்தாலும், இன்னும் அவன் அச்சிலைகளை வணங்கினாலும், நான் அவனுக்கு பதில் சொல்வேன். அவனுக்கு நான் தரும் பதில் இதுதான். 8 நான் அவனுக்கு எதிராகத் திரும்புவேன். நான் அவனை அழிப்பேன். அவன் மற்ற ஜனங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பான். ஜனங்கள் அவனைப் பார்த்துச் சிரிப்பார்கள். நான் அவனை எனது ஜனங்களிலிருந்து விலக்குவேன். பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்! 9 ஒரு தீர்க்கதரிசி முட்டாளைப்போன்று தன் சொந்தமாக ஒரு பதிலைச் சொன்னால், அப்பொழுது நான் அவன் எவ்வளவு மதியீனன் என்பதை அவனுக்குக் காட்டுவேன். நான் அவனுக்கு எதிராக எனது வல்லமையைக் காட்டுவேன்! நான் அவனை அழித்து எனது இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து விலக்குவேன். 10 எனவே, ஆலோசனைக்கு வருபவன் பதில் சொல்லும் தீர்க்கதரிசி, என இருவரும் ஒரே தண்டனையைப் பெறுவார்கள். 11 ஏன்? எனது ஜனங்களை என்னிடமிருந்து வழிதப்பிப் போக அந்தத் தீர்க்கதரிசிகள் தூண்டுவதை உற்சாகப்படுத்தவேண்டும். எனவே எனது ஜனங்கள் அவர்கள் பாவங்களால் அசுத்தமாகாமல் தடுக்கப்படுவார்கள். பின்னர் அவர்கள் எனது சிறப்புக்குரிய ஜனங்களாவார்கள். நான் அவர்களின் தேவனாய் இருப்பேன்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
எருசலேம் தண்டிக்கப்படும்
12 பிறகு, கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 13 “மனுபுத்திரனே, என்னை விட்டு விலகி எனக்கு எதிராகப் பாவம் செய்யும் எந்த நாட்டையும் நான் தண்டிப்பேன். நான் அவர்களுக்கு உணவு கொடுக்கப்படுவதை நிறுத்துவேன். நான் பசி காலத்திற்குக் காரணம் ஆவேன். அந்நாட்டை விட்டு மனிதர்களையும் விலங்குகளையும் விலக்குவேன். 14 நான் அந்நாட்டை அங்கு நோவா, தானியேல், யோபு போன்றவர்கள் வாழ்ந்தாலும் கூடத் தண்டிப்பேன். தங்கள் நற்குணத்தினால் அம்மனிதர்கள் தம் சொந்த உயிரைக் காப்பாற்றமுடியும். ஆனால் அவர்களால் முழு நாட்டையும் காப்பாற்ற முடியாது.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
15 தேவன் சொன்னார்: “அல்லது நான் காட்டு விலங்குகளை அந்நாட்டிற்கு அனுப்புவேன். அவ்விலங்குகள் அனைத்து ஜனங்களையும் கொல்லும், அக்காட்டு விலங்குகளால் எவரும் அந்நாட்டின் வழியாகப் பயணம் செய்ய முடியாது. 16 நோவா, தானியேல், யோபு ஆகியோர் வாழ்ந்தால் நான் அம்மூன்று பேரையும் காப்பாற்றுவேன். அம்மூன்று பேரும் தம் சொந்த உயிரைக் காப்பாற்றுவார்கள். ஆனால் நான் என் வாழ்வில் வாக்களித்தபடி, அவர்களால் மற்றவர்களின் உயிரை காப்பாற்றமுடியாது. அது அவர்களது சொந்த மகன்கள் அல்லது மகள்களாக இருந்தாலும் காப்பாற்றமுடியாது! அத்தீய நாடு அழிக்கப்படும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
17 தேவன் சொன்னார்: “அல்லது அந்நாட்டுக்கு எதிராகப் போரிட ஒரு பகைப்படையை அனுப்பலாம். அவ்வீரர்கள் அந்நாட்டை அழிக்கலாம். நான் அந்நாட்டிலுள்ள அனைத்து ஜனங்களையும் விலங்குகளையும் விலக்குவேன். 18 நோவா, தானியேல், யோபு ஆகியோர் அங்கே வாழ்ந்தாலும் நான் அம்மூன்று நல்லவர்களை மட்டுமே காப்பாற்றுவேன். அம்மூன்றுபேராலும் தங்கள் உயிரைத்தான் காப்பாற்ற முடியும். ஆனால் நான் என் உயிரின்மேல் அளித்த வாக்குறுதிப்படி அவர்களால் மற்றவர்களின் உயிரை, அது அவர்களது மகன்களாக அல்லது மகள்களாக இருந்தாலும் காப்பாற்றமுடியாது! அத்தீய நாடு அழிக்கப்படும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
19 தேவன் சொன்னார்: “அல்லது அந்நாட்டிற்கு எதிராக நான் கொள்ளை நோயை அனுப்பலாம். நான் என் கடுங்கோபத்தை அதன் மீது இரத்தச் சிந்துதலுடன் ஊற்றுவேன். நான் அந்நாட்டிலுள்ள எல்லா ஜனங்களையும் விலங்குகளையும் விலக்குவேன். 20 நோவா, தானியேல், யோபு ஆகியோர் அங்கு வாழ்ந்தாலும், நான் அம்மூன்று பேரை மட்டும் காப்பாற்றுவேன். ஏனென்றால் அவர்கள் நல்லவர்கள். அம்மூன்று பேராலும் தங்கள் உயிரை மட்டுமே காப்பாற்றமுடியும். ஆனால் நான் என் உயிரின்மேல் வாக்களிக்கிறேன், அவர்களால் மற்றவர்களின் உயிரை, அது அவர்களது மகன்களாகவோ, மகள்களாகவோ இருந்தாலும் காப்பாற்றமுடியாது!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவ்வாறு கூறினார்.
21 பிறகு எனது கர்த்தராகிய ஆண்டவர் மேலும் சொன்னார். “எனவே எருசலேமிற்கு இது எவ்வளவு கேடானது என்று எண்ணிப்பார். நான் இந்த நகரத்திற்கு எதிராக இந்நான்கு தண்டனைகளையும் அனுப்புவேன். நான் பகைவரின் படை, பசி, நோய், காட்டுமிருகங்கள் ஆகியவற்றை நகருக்கெதிராக அனுப்புவேன். நான் அந்நாட்டிலுள்ள ஜனங்களையும் விலங்குளையும் வெளியே அனுப்புவேன்! 22 ஜனங்களில் சிலர் அந்நாட்டிலிருந்து தப்பித்துக்கொள்வார்கள். அவர்கள் உதவிக்காகத் தம் மகன்களையும் மகள்களையும் உன்னிடம் அழைத்து வருவார்கள். பின்னர் அவர்கள் உண்மையில் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை நீ அறிவாய். நான் எருசலேமிற்குக் கொடுத்த துன்பங்கள் எல்லாம் பரவாயில்லை என்று நீ உணர்வாய். 23 அவர்கள் வாழும் வாழ்வையும் செய்யும் தீமையையும் நீ பார்ப்பாய். பிறகு, நான் அவர்களைத் தண்டித்ததற்குச் சரியான காரணம் உண்டென்று நீ அறிவாய்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
எருசலேம் என்னும் திராட்சைக்கொடி எரிக்கப்படும்
15 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது, அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, காட்டிலுள்ள மரங்களிலிருந்து வெட்டப்பட்டக் கிளைகளை விட திராட்சைக் கிளைகளின் குச்சி சிறந்ததா? இல்லை! 3 திராட்சைக் கொடியிலிருக்கும் மரத்துண்டை நீ எதற்காவது பயன்படுத்த முடியுமா? இல்லை! அந்த மரத்தைக் கொண்டு பாத்திரங்களைத் தொங்கவிடும் முளைகளைச் செய்யமுடியுமா? இல்லை! 4 ஜனங்கள் அவற்றை தீயில்தான் போடுவார்கள். சில குச்சிகள் முனைகளில் எரியத்தொடங்கும். நடுப்பகுதி நெருப்பால் கறுப்பாகும். அக்குச்சிகள் முழுவதும் எரியாது. அக்குச்சிகளை நீ வேறு எதற்கும் பயன்படுத்த முடியுமா? 5 அவை எரிவதற்கு முன்னமே அவற்றைப் பயன்படுத்த முடியாது என்றால், பிறகு அவை எரிந்தபின் அவற்றைப் பயன்படுத்தவேமுடியாது! 6 எனவே திராட்சைக் கொடியிலுள்ள குச்சிகளும் காட்டிலுள்ள மற்ற மரங்களின் குச்சிகளைப் போன்றவைதான். ஜனங்கள் அம்மரத்துண்டுகளை நெருப்பில் எறிவார்கள்.” நெருப்பு அவற்றை எரிக்கும்! அதுபோலவே, நானும் எருசலேமில் வாழ்கிற ஜனங்களை நெருப்பில் எறிவேன். எனது கர்த்தராகிய ஆண்டவர் இதைச் சொன்னார். 7 “நான் அந்த ஜனங்களைத் தண்டிப்பேன். ஆனால் ஜனங்களில் சிலர் முழுவதும் எரியாத குச்சிகளைப்போன்றுள்ளனர். அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் முழுவதுமாக அழிக்கப்படவில்லை. அந்த ஜனங்களை நான் தண்டித்தேன் என்பதை நீ பார்ப்பாய். நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்! 8 நான் அந்த நாட்டை அழிப்பேன். ஏனென்றால் ஜனங்கள் பொய்த் தெய்வங்களை வணங்க என்னைவிட்டு விலகினார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
அனைவரையும் நேசியுங்கள்
2 அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, நம் மகிமைமிக்க கர்த்தராகிய இயேசுவில் நீங்கள் விசுவாசிகளாயிருக்கும்போது, பாரபட்சமாக இருக்காதீர்கள். 2 உதாரணமாக, ஒருவன் சிறந்த ஆடைகளையும் தங்க மோதிரங்களையும் அணிந்தவனாக உங்களிடம் வரலாம். இன்னொருவன் ஏழையாக பழைய அழுக்கான ஆடைகளை அணிந்தவனாக வரலாம். 3 நீங்கள் செல்வந்தனிடம் அதிகம் அக்கறை காட்டுகிறீர்கள். “நல்ல ஆசனத்தில் அமருங்கள்” என்று கூறுகிறீர்கள். ஆனால் ஒரு ஏழை வந்தால் அவனை நிற்கவைக்கிறீர்கள். அல்லது தரையிலே உட்காரும்படி கூறுகிறீர்கள். 4 இப்படிச் செய்யும்போது சிலர் மற்றவர்களைவிட மிகவும் முக்கியமானவர்கள் என்பது போல உங்களில் சிலரை நடத்துகிறீர்கள். அப்போது தகாத நோக்கங்கள் உள்ள நீதிபதியாக நீங்கள் ஆகிறீர்கள்.
5 அன்பான சகோதர சகோதரிகளே, உலகம் ஏழையாகப் பார்க்கிற ஒருவனை விசுவாசத்தில் செல்வந்தனாக தேவன் தேர்ந்தெடுத்தார் என்பது உண்மையில்லையா? தான் நேசிப்பவர்களுக்குத் தருவதாக தேவன் வாக்களித்த இராஜ்யத்தை அந்த ஏழை மக்கள் பெறுவார்கள். 6 ஆனால் நீங்கள் ஏழைகளை மதிக்கவில்லை என்பதைப் புலப்படுத்தினீர்கள். செல்வந்தர்களே உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்கிறார்கள் என்பது உண்மை இல்லையா? நீதிமன்றத்திற்கு உங்களை இழுப்பது அவர்கள் அல்லவா? 7 நீங்கள் எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறீர்களோ அந்த நல்ல பெயரைப் பழித்துப் பேசுகிறவர்கள் அவர்கள் அல்லவா?
8 ஒரு சட்டம் மற்ற சட்டங்களை ஆளுகின்றது. “நீ உன்னை நேசிப்பது போன்று மற்றவர்களையும் நேசிப்பாயாக” [a]என்று வேத வாக்கியங்களில் எழுதப்பட்ட சட்டம்தான் மிகச் சிறந்த சட்டமாகும். நீ இச்சட்டத்தின்படி செய்தால் பிறகு நீ சரியானதைச் செய்கிறாய். 9 ஆனால் நீ ஒருவனை மற்றவர்களை விட முக்கியமாக நடத்தினால் பிறகு நீ பாவம் செய்தவன் ஆகிறாய். நீ மிக உயர்ந்த தேவனின் சட்டத்தை உடைத்த குற்றவாளி ஆகிறாய்.
10 ஒருவன் தேவனின் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பவனாக இருக்கலாம், ஆனால் அவன் ஒரே ஒரு கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் இருந்தால், பிறகு அவன் அனைத்துக் கட்டளைகளையும் உடைத்தவனாகிறான். 11 “விபசாரம் செய்யாமல் இருப்பாயாக” [b]என்று தேவன் கூறினார். அதோடு “கொலை செய்யாமல் இருப்பாயாக” [c]என்றும் கூறியுள்ளார். எனவே, நீ விபசாரம் செய்யாமல் இருந்து, கொலை மட்டும் செய்வாயானால், பிறகு நீ சட்டத்தில் கட்டளைகளை உடைத்தவன் ஆகிறாய்.
12 உங்களை விடுவிக்கிற சட்டத்தால் நியாயந்தீர்க்கப்பட்ட மக்களைப்போல நீங்கள் பேசவும் வாழவும் வேண்டும். 13 மற்ற மனிதர்கள் மீது கருணை காட்ட ஒருவன் தவறினால், அவனை நியாயந்தீர்க்கும்போது தேவன் அவன் மீது கருணை காட்டத் தவறுவார். மனிதர்கள் மீது கருணை காட்டுகிறவன் நியாயத்தீர்ப்பு நாளில் பயமின்றி நிற்க முடியும்.
விசுவாசமும் நற்செயல்களும்
14 எனது சகோதர சகோதரிகளே, ஒருவன் விசுவாசம் கொண்டவனாக தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டு காரியரீதியாக எதுவும் செய்யாமல் இருப்பானேயானால் அவனது விசுவாசத்தால் எந்த பயனும் இல்லை. அத்தகைய விசுவாசம் யாரையாவது இரட்சிக்குமா? 15 கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனோ சகோதரியோ உண்ண உணவும் உடுக்க உடையும் தேவைப்பட்டவராக இருக்கலாம். 16 நீங்கள் அவனிடம் “தேவன் உன்னோடு இருக்கிறார். இருக்க வசதியான இடமும், உண்ண நல்ல உணவும் உனக்குக் கிட்டும் என்று நம்புகிறேன்” என்று சொல்லலாம். ஆனால் அப்படிச் சொல்லிவிட்டு எதுவும் கொடுக்காமல் இருந்தால் அதனால் எந்தப் பயனுமில்லை. உங்கள் வார்த்தைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. 17 இது போலத்தான் விசுவாசமும், செயலின்மையால் இறந்து விடுகிறது.
18 ஒருவன், “உன்னிடம் விசுவாசம் உள்ளது. ஆனால் நான் செயல் புரிகிறேன். செயல்களற்ற உன் விசுவாசத்தை நீ காட்டு. நான் செய்கிற செயல்கள் மூலம் நான் என் விசுவாசத்தைக் காட்டுவேன்” என்று கூறலாம். 19 ஒரே ஒரு தேவன் தான் இருக்கிறார் என்று நீ நம்புகிறாயா? நல்லது. ஆனால் பிசாசுகள் கூட அதை நம்பி பயத்தால் நடுங்குகின்றன.
20 நீ புத்தியில்லாதவன். செயலற்ற விசுவாசம் என்பது உயிரற்றது என்பதை நீ அறியமாட்டாயா? 21 தன் மகன் ஈசாக்கைப் பலிபீடத்தில் காணிக்கையாக்கியபோது செயல்கள் மூலம் ஆபிரகாம் நீதிமானாக்கப்பட்டான். 22 இதனால் நீ ஆபிரகாமின் விசுவாசமும் அவனது செயலும் ஒருங்கே செயல்பட்டதைக் காண இயலும். அவனது செயல்கள் அவனது விசுவாசத்தை முழுமையாக்கியது. 23 எனவே “ஆபிரகாம் தேவனை நம்பினான். அது அவனை நீதிமானாக்கியது” [d]என்கிற பகுதிக்கு இது முழுமையான பொருளைத் தருகிறது. மேலும் இதனால்தான் “தேவனின் நண்பன்” என்று அவன் அழைக்கப்பட்டான். 24 எனவே ஒருவன் வெறும் விசுவாசத்தால் மட்டுமல்ல, தான் செய்கிற காரியங்களால் நீதிமானாக்கப்படுகிறான் என்பதை நீங்கள் பார்க்கமுடியும்.
25 ராகாப் இன்னொரு எடுத்துக்காட்டாகும். அவள் ஒரு விலைமகள். ஆனால் அவள் தனது செயல்களால் தேவனுக்கு முன் நீதியுள்ளவளாக்கப்பட்டாள். அவள் தேவனுடைய பிள்ளைகளான ஒற்றர்களைத் தன் வீட்டிற்குள் வைத்திருந்து, அவர்கள் தப்பிச் செல்ல உதவினாள். [e]
26 எனவேதான் ஆவி இல்லாத ஓர் சரீரம் இறந்ததாயிருக்கிறதைப்போலச் செயல்கள் அற்ற விசுவாசம் கூட இறந்ததாயிருக்கிறது.
2008 by World Bible Translation Center