M’Cheyne Bible Reading Plan
யூதாவின் அரசனான யோவாகாஸ்
36 எருசலேமில் யூதாவின் புதிய அரசனாக யோவாகாசை ஜனங்கள் தேர்ந்தெடுத்தனர். யோவாகாஸ் யோசியாவின் மகன். 2 யோவாகாஸ் தனது 23வது வயதில் யூதாவின் அரசன் ஆனான். அவன் எருசலேமில் மூன்று மாதங்களே அரசனாக இருந்தான். 3 பிறகு எகிப்து அரசனான நேகோயோ வாகாசைக் கைதியாக்கினான். 3 1/4 டன் எடையுள்ள வெள்ளியும், 75 பவுண்டு எடையுள்ள தங்கமும் அபராதமாகச் செலுத்த வேண்டுமென யூதா ஜனங்களிடம் எகிப்து அரசனான நேகோ சொன்னான். 4 யோவாகாசின் சகோதரனை யூதா மற்றும் எருசலேமின் புதிய அரசனாக நேகோ தேர்ந்தெடுத்தான். யோவாகாசின் சகோதரனின் பெயர் எலியாக்கீம் ஆகும். அவனது பெயரை யோயாக்கீம் என்று நேகோ மாற்றினான். ஆனால் நேகோ யோவாகாசை எகிப்திற்கு அழைத்துச்சென்றான்.
யூதாவின் அரசனான யோயாக்கீம்
5 யோயாக்கீம் யூதாவின் புதிய அரசனான போது அவனது வயது 25. அவன் எருசலேமில் 11 ஆண்டுகள் ஆண்டான். கர்த்தர் செய்ய வேண்டும் என்று விரும்பியவற்றை யோயாக்கீம் செய்யவில்லை. அவன் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தான்.
6 யூதாவை பாபிலோனில் இருந்த நேபுகாத்நேச்சார் தாக்கினான். அவன் யோயாக்கீமை கைது செய்து வெண்கலச் சங்கிலியால் கட்டினான். பிறகு அவனை பாபிலோனுக்கு இழுத்துச்சென்றான். 7 நேபுகாத்நேச்சார் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து பொருட்களை எடுத்துச்சென்றான். அவற்றை பாபிலோனுக்கு எடுத்துச்சென்று தனது அரண்மனையில் வைத்துக்கொண்டான். 8 யோயாக்கீம் செய்த மற்ற செயல்களும் பாவங்களும் அவனது பயங்கரமான தவறுகளும், இஸ்ரவேல் மற்றும் யூதா அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. யோயாக்கீன் புதிய அரசனாக யோயாக்கீம் இடத்தில் ஆனான். இவன் யோயாக்கீமின் மகன்.
யூதாவின் மன்னனான யோயாக்கீன்
9 யோயாக்கீன் யூதாவின் அரசனாக ஆனபோது அவனது வயது 18 ஆகும். அவன் எருசலேமின் அரசனாக 3 மாதங்களும் 10 நாட்களும் இருந்தான். கர்த்தர் செய்யவிரும்பியதை அவன் செய்யவில்லை. அவன் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தான். 10 வசந்தகாலத்தின் தொடக்கத்தில் நேபுகாத்நேச்சார் வேலைக்காரர்களை அனுப்பி யோயாக்கீனை வரவழைத்தான். அவர்கள் அவனோடு கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள விலைமதிப்பற்ற பொருட்களையும் பாபிலோனுக்கு எடுத்துச்சென்றனர். நேபுகாத் நேச்சார் சிதேக்கியாவைத் தேர்ந்தெடுத்து யூதா மற்றும் எருசலேமின் அரசனாக்கினான். சிதேக்கியா யோயாக்கீனின் உறவினன் ஆவான்.
சிதேக்கியா, யூதாவின் அரசன்
11 சிதேக்கியா யூதாவின் அரசனானபோது அவனது வயது 21 ஆகும். அவன் எருசலேமில் 11 ஆண்டுகள் அரசனாக இருந்தான். 12 சிதேக்கியா கர்த்தருடைய விருப்பப்படி செயல்களைச் செய்யவில்லை. சிதேக்கியா கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தான். எரேமியா என்ற தீர்க்கதரிசி கர்த்தரிடமிருந்து செய்தியைச் சொன்னான். ஆனால் சிதேக்கியா பணிவடையாமல் எரேமியாவின் பேச்சைக் கேட்கவில்லை.
எருசலேம் அழிக்கப்பட்டது
13 சிதேக்கியா நேபுகாத்நேச்சார் அரசனுக்கு எதிராக ஆனான். முன்பு நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவிடம் தனக்கு உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று வாக்குறுதி வாங்கியிருந்தான். சிதேக்கியா தேவன் மேல் ஆணைச் செய்திருந்தான். ஆனால் அவன் கடின மனதுள்ளவனாக இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய பக்கம் திரும்பாமல் இருந்தான். 14 ஆசாரியர்களின் தலைவர்களும், யூதா ஜனங்களின் தலைவர்களும் கொடிய பாவங்களைச் செய்து கர்த்தருக்கு எதிராகிப்போனார்கள். அவர்கள் பிற நாடுகளின் தீயச்செயல்களைப் பின்பற்றினார்கள். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தை அழித்தார்கள். கர்த்தர் எருசலேமில் தன் ஆலயத்தைப் பரிசுத்தமாக வைத்திருந்தார். 15 அவர்களது முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் அவர்களை எச்சரிக்கப் பல்வேறு தீர்க்கதரிசிகளை மீண்டும் மீண்டும் அனுப்பினார். கர்த்தர் அவர்களுக்காகவும், தமது ஆலயத்துக்காகவும் வருத்தப்பட்டார். அதனால் அவர் இவ்வாறுச் செய்தார். கர்த்தர் அவர்களையும், ஆலயத்தையும் அழித்துவிட விரும்பவில்லை. 16 ஆனால் தேவனுடைய ஜனங்கள் தேவனுடைய தீர்க்கதரிசிகளைக் கேலிச் செய்தனர். தேவனுடைய தீர்க்கதரிசனங்களைக் கேட்க அவர்கள் மறுத்தனர். அவர்கள் தேவனுடைய செய்திகளை வெறுத்தார்கள். இறுதியில் தேவனால் அவரது கோபத்தை அதற்கு மேல் அடக்க முடியவில்லை. 17 எனவே தேவன் பாபிலோனின் அரசனை யூதா மற்றும் எருசலேம் ஜனங்களைத் தாக்கிட அழைத்து வந்தார். பாபிலோன் அரசன் இளைஞர்களை அவர்கள் ஆலயத்தில் இருந்தபோதுங்கூட கொன்றான். அவன் யூதா மற்றும் எருசலேம் ஜனங்களிடம் இரக்கம் காட்டவில்லை. பாபிலோனிய அரசன் இளைஞர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள், நோயாளிகள், ஆரோக்கியமுடையவர்கள் என அனைவரையும் கொன்றான். யூதா மற்றும் எருசலேம் ஜனங்களைத் தண்டிக்கும்படி தேவன் நேபுகாத்நேச்சரை விட்டுவிட்டார். 18 நேபுகாத்நேச்சார் தேவனுடைய ஆலயத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் பாபிலேனுக்கு எடுத்துச்சென்றான். ஆலயம், அரசனது அரண்மனை, அதிகாரிகளின் வீடு என எல்லா இடங்களிலும் இருந்த விலைமதிக்கமுடியாத பொருள்களையும் அவன் எடுத்துச் சென்றான். 19 நேபுகாத்நேச்சாரும் அவனது படையும் ஆலயத்தை எரித்தனர். எருசலேம் சுவர்களை இடித்தனர். அரசன் மற்றும் அதிகாரிகளின் வீடுகளை அடித்துச் சிதைத்து எரித்தனர். அவர்கள் விலையுயர்ந்த பொருட்களை அழிப்பதும், எடுத்து செல்வதுமாய் இருந்தனர். 20 நேபுகாத்நேச்சார் உயிரோடு மீதியாக உள்ள ஜனங்களை பாபிலோனுக்குக் கொண்டுபோய் அவர்களைக் கட்டாயப்படுத்தி அடிமையாக்கினான். பெர்சிய அரசு பாபிலோனிய அரசை அழிக்கும்வரை அவர்கள் அங்கு அடிமைகளாகவே இருந்தனர். 21 எரேமியா தீர்க்கதரிசி மூலம் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கர்த்தர் சொன்னது யாவும் நடந்தது. கர்த்தர் ஏரேமியா மூலம் சொன்னது: இந்த இடம் இன்னும் 70 ஆண்டுகளுக்கு பாழாய் கிடக்கும். நிலங்களுக்கு ஜனங்களால் வழங்கப்படாமல் போன ஓய்வு ஆண்டுகளுக்காக சரி செய்வது போல் இது இருக்கும்.
22 பெர்சியா அரசனான கோரேசின் முதலாம் ஆண்டில் கர்த்தர் கோரேசின் மூலமாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். அவன் இதனைச் செய்ததால் கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் வாக்களித்ததும் நிறைவேறும். கோரேசு தன் அரசின் அனைத்து பகுதிகளுக்கும் தூதுவர்களை அனுப்பினான். அவர்கள் இந்தச் செய்தியை எடுத்துச் சென்றனர்.
23 பெர்சியா அரசனாகிய கோரேசு கூறுவது:
பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் என்னை பூமி முழுவதற்கும் அரசன் ஆக்கினார். எருசலேமில் அவர் தனக்கொரு ஆலயத்தைக் கட்டும்படி பொறுப்பளித்துள்ளார். இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்கள் எருசலேமிற்குப் போகும்படி விடுவிக்கிறேன். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருப்பாராக.
22 பின்னர் அந்தத் தூதன் ஜீவதண்ணீர் ஓடுகின்ற ஆற்றினை எனக்குக் காட்டினான். அது பளிங்குபோன்று பிரகாசமாக இருந்தது. அது தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருந்த சிம்மாசனத்தில் இருந்து பாய்ந்தது. 2 அது நகரத் தெருவின் நடுவில் பாய்ந்தது. அந்த ஆற்றின் ஒவ்வொரு கரையிலும் வாழ்வின் மரம் இருந்தது. அது ஆண்டுக்குப் பன்னிரண்டு முறை கனிகளைத் தருகிறது. ஒவ்வொரு மாதமும் அது கனிதருகிறது. அம்மரத்தின் இலைகள் மக்களின் நோயைக் குணமாக்கும் தன்மையுடையவை.
3 தேவனால் குற்றம் என நியாயந்தீர்க்கப்படுகிற எதுவும் அந்நகருக்குள் இருக்காது. தேவனுடைய சிம்மாசனமும் ஆட்டுக்குட்டியானவரும் அங்கே இருப்பார்கள். 4 தேவனுடைய ஊழியக்காரர்கள் அவரை வழிபடுவர். அவர்கள் அவரது முகத்தைப் பார்ப்பார்கள். அவர்களின் நெற்றியில் தேவனுடைய பெயர் எழுதப்பட்டிருக்கும். 5 அங்கு மீண்டும் இரவு வராது. அங்குள்ள மக்களுக்கு விளக்கின் ஒளியோ சூரியனின் ஒளியோ தேவைப்படாது. தேவனாகிய கர்த்தரே அவர்களுக்கு வெளிச்சம் தருவார். அவர்கள் அரசர்களைப் போன்று எல்லாக் காலங்களிலும் அரசாளுவர்.
6 அந்தத் தூதன் என்னிடம், “இந்த வார்த்தைகள் உண்மையானவை, நம்பத் தகுந்தவை. பரிசுத்த தீர்க்கதரிசிகளின் ஆவிகளின் தேவனாக இருக்கிற கர்த்தர் உடனடியாக என்ன நடக்க வேண்டுமென தம் ஊழியர்களுக்குக் காட்டத் தன் தூதனை அனுப்பினார். 7 இதோ, சீக்கிரமாய் வருகிறேன். இந்த நூலில் உள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கடைப்பிடிக்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான்” என்றான்.
8 நான் யோவான், நானே இவற்றைக் காணவும் கேட்கவும் செய்தேன். இவற்றை நான் பார்த்தும் கேட்டும் முடிந்த பின்னால், இவற்றை எனக்குக் காட்டிய அத்தூதனின் கால்களில் விழுந்து வணங்கக் குனிந்தேன். 9 ஆனால் அத்தூதன் என்னிடம், “என்னை வணங்க வேண்டாம். நானும் உன்னைப் போல ஒரு ஊழியன் மட்டுமே. தீர்க்கதரிசிகளாகிய உன் சகோதரர்களைப் போன்றவன் நான். இந்நூலிலுள்ள வசனங்களுக்குக் கீழ்ப்படிகிற மற்றவர்களைப்போல நானும் ஒருவனே. நீ தேவனை வணங்கு” என்றான்.
10 மேலும் அத்தூதன் என்னிடம், “இந்நூலில் உள்ள தீர்க்கதரிசனமான வசனங்களை இரகசியம் போல் மூடிவைக்க வேண்டாம். இவை நிகழ்வதற்குரிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 11 அநியாயம் செய்கிறவன் தொடர்ந்து அநியாயம் செய்யட்டும். அசுத்தமாய் இருக்கிறவன் மேலும் அசுத்தமாய் இருக்கட்டும். பரிசுத்தவான் மேலும் பரிசுத்தவானாய் இருக்கட்டும்.
12 “கவனி! நான் விரைவில் வருவேன். என்னோடு பலன்களைக் கொண்டு வருவேன். ஒவ்வொருவனுக்கும் அவனவனுடைய செயல்களுக்கு பலன் அளிப்பேன். 13 நானே அல்பாவும் ஒமேகாவுமாக இருக்கிறேன்; நானே முந்தினவரும், பிந்தினவருமாய் இருக்கிறேன். நானே துவக்கமும் முடிவுமாய் இருக்கிறேன்.
14 “தேவனுடைய கட்டளைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்கு வாழ்வின் மரத்தில் உள்ள கனிகளைப் புசிப்பதற்கு உரிமை இருக்கும். அவர்கள் வாசல் வழியாக நகரத்துக்குள் நுழைய முடியும். 15 நகரத்துக்கு வெளியே, நாய் போன்றவர்களும், சூனியக்காரர்களும், விபசாரகர்களும், கொலைகாரர்களும், உருவ வழிபாடு செய்கிறவர்களும் பொய்யை விரும்பி, அதின்படி செய்பவர்களும் இருப்பார்கள்.
16 “இயேசுவாகிய நான் சபைகளில் இவற்றை உங்களுக்குச் சொல்லும் பொருட்டு என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் குடும்ப வாரிசு. நான் பிரகாசமான விடிவெள்ளியாக இருக்கிறேன்” என்றார்.
17 ஆவியானவரும் மணமகளும் “வாருங்கள்” என்கிறார்கள். இதைக் கேட்பவர்களும் “வாருங்கள்” என்று சொல்லவேண்டும். தாகமாய் இருக்கிறவன் வருவானாக. விருப்பம் உள்ளவன் ஜீவத் தண்ணீரைப் பெறுவானாக.
18 இந்நூலில் உள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறேன். “எவனாவது ஒருவன் இவைகளோடு எதையாவது கூட்டினால் இந்நூலில் எழுதப்பட்டிருக்கிற துன்பங்களை தேவன் அவன் மேல் கூட்டுவார்.” 19 எவனாவது ஒருவன் தீர்க்கதரிசனப் புத்தக வசனங்களிலிருந்து எதையேனும் நீக்கினால் இந்நூலில் எழுதப்பட்டிருக்கிற வாழ்வின் மரத்திலிருந்தும் பரிசுத்த நகரிலிருந்தும் அவனுடைய பங்கை தேவன் நீக்கிவிடுவார்.
20 இவ்வார்த்தைகள் உண்மையென சாட்சியாய் அறிவிக்கிறவர் இயேசுவே. இப்போது அவர், “ஆம், நான் விரைவில் வருகிறேன்” என்று சொல்கிறார்.
ஆமென். கர்த்தராகிய இயேசுவே, வாரும்!
21 கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
4 “நியாயத்தீர்ப்புக்கான காலம் வந்து கொண்டிருக்கிறது. இது ஒரு வெப்பமான சூளைபோன்றது. தற்பெருமையுடைய ஜனங்கள் எல்லாம் தண்டிக்கப்படுவார்கள். தீயவர்கள் எல்லோரும் வைக்கோலைப்போல் எரிக்கப்படுவார்கள். அந்தக் காலத்தில், அவர்கள் நெருப்பில் எரிகிற பதரைப் போன்றிருப்பார்கள். அதிலுள்ள கிளையோ, வேரோ விடுபடாமல்போகும்” என்றார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
2 “ஆனால், என்னைப் பின்பற்றுகிறவர்களே, உங்களுக்கு நன்மையானது உதய சூரியனைப் போன்று ஒளி வீசும். இது சூரியக்கதிர்களைப் போன்று குணப்படுத்தும் ஆற்றலைக் கொண்டு வரும். நீங்கள் தொழுவத்திலிருந்து விடுபட்டகன்று குட்டிகளைப் போன்று சுதந்திரமும், மகிழ்ச்சியும் அடைவீர்கள். 3 பின்னர் அத்தீய ஜனங்கள் மேல் நடந்து செல்வீர்கள். அவர்கள் உங்கள் காலடியில் சாம்பலைப்போன்று கிடப்பார்கள். நியாயத்தீர்ப்புக்கான காலத்தில் நான் அவற்றை நிகழும்படிச் செய்வேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்!
4 “மோசேயின் சட்டங்களை நினைவு கொண்டு கீழ்ப்படியுங்கள். மோசே எனது ஊழியகாரனாக இருந்தான். நான் அவனுக்கு ஒரேப் மலையிலே (சீனாய்) அந்த சட்டங்களை கொடுத்தேன். அந்தச் சட்டங்கள் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களுக்கும் உரியது.”
5 கர்த்தர், “பாருங்கள், நான் எலியா தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புவேன். அவன் கர்த்தருடைய நியாயத்தீர்ப்புக்குரிய பயங்கரமான நாளுக்கு முன்னால் வருவான். 6 எலியா, தமது பிள்ளைகளுடன் நெருக்கமாயிருக்கிற பெற்றோருக்கும் தமது பெற்றோருடன் நெருக்கமாயிருக்கிற பிள்ளைகளுக்கும் உதவுவான். இது நிகழவேண்டும், அல்லது நான் (தேவன்) வந்து உங்கள் நாடு முழுவதையும் அழிப்பேன்!”
ஏழு சீஷர்களுக்கு இயேசு காட்சி அளித்தல்
21 இதற்குப் பின்பு இயேசு மறுபடியும் தன்னை சீஷர்களுக்குக் காண்பித்தார். அது திபேரியா (கலிலேயா) கடற்கரையில் நிகழ்ந்தது. அதைப்பற்றிய விபரமாவது: 2 அங்கே சில சீஷர்கள் கூடியிருந்தனர். அவர்களில் சீமோன் பேதுரு, தோமா, செபெதேயுவின் இரு குமாரர்கள், கலிலேயா நாட்டின் கானா ஊரானாகிய நாத்தான்வேல், மேலும் இரண்டு சீஷர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். 3 சீமோன் பேதுரு மற்றவர்களிடம், “நான் மீன் பிடிக்கப் போகிறேன்” என்று சொன்னார்.
அதற்கு மற்ற சீஷர்களும், “நாங்களும் உம்மோடு வருகிறோம்” என்றனர். எனவே அனைவரும் படகில் ஏறிச்சென்றனர். அன்று இரவு அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.
4 மறுநாள் அதிகாலையில் இயேசு கரையில் நின்றிருந்தார். ஆனால் சீஷர்கள் அவரை இயேசு என்று அறிந்துகொள்ளவில்லை. 5 பிறகு இயேசு தன் சீஷர்களிடம், “நண்பர்களே! நீங்கள் ஏதாவது மீன் பிடித்தீர்களா?” என்று கேட்டார்.
அதற்கு “இல்லை” என்று சீஷர்கள் சொன்னார்கள்.
6 இயேசு அவர்களிடம், “நீங்கள் உங்கள் வலைகளைப் படகுக்கு வலது புறமாகப் போடுங்கள். அப்பொழுது நீங்கள் மீன்களைப் பிடிப்பீர்கள்” என்றார். அதன்படி சீஷர்களும் செய்தனர். அவர்கள் வலையைப் படகுக்குள் இழுக்க முடியாத அளவுக்கு ஏராளமான மீன்களைப் பிடித்தனர்.
7 எனவே இயேசுவிடம் அன்பாயிருந்த சீஷன் பேதுருவிடம் “இவர் ஆண்டவர்” என்றார். “அவர் இயேசு” என்று சொல்லக் கேட்டவுடன் பேதுரு, இதுவரை மூடப்படாத தன் சரீரத்தை ஆடையால் மூடினான். பிறகு அவன் கடலுக்குள் குதித்துவிட்டான். 8 மற்ற சீஷர்கள் படகின் மூலம் கரைக்குச் சென்றனர். அவர்கள் மீன் நிறைந்த வலையை இழுத்தனர். அவர்கள் கரையிலிருந்து வெகு தூரத்தில் கடலுக்குள் இருக்கவில்லை. ஏறக்குறைய 200 முழம் தூரத்துக்குள்ளேயே இருந்தனர். 9 அவர்கள் படகிலிருந்து இறங்கிக் கரைக்கு வந்தனர். அங்கே கரி அடுப்பு பற்றவைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். அதில் மீன்களும் அப்பமும் சுடப்பட்டிருந்தன. 10 இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்” என்றார்.
11 சீமோன் பேதுரு படகில் ஏறி வலையைக் கரைக்கு இழுத்தான். அது பெரிய மீன்களால் நிறைந்திருந்தது. அதில் 153 மீன்கள் இருந்தன. மீன்கள் மிகவும் கனமுடையனவாய் இருந்தன. எனினும் வலை கிழியாமல் இருந்தது. 12 இயேசு அவர்களிடம் “வாருங்கள், சாப்பிடுங்கள்” என்றார். அவர்களில் எவரும் “நீங்கள் யார்?” என்று தைரியமாகக் கேட்கவில்லை. அவர்தான் இயேசு கிறிஸ்து என்று அவர்கள் தெரிந்திருந்தனர். 13 இயேசு உணவின் அருகில் சென்றார். அவர் அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார். அத்துடன் மீனையும் எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார்.
14 அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, இவ்வாறு மூன்றாவது முறையாகத் தம் சீஷர்களுக்குக் காட்சி தந்தார்.
பேதுருவிடம் இயேசு பேசுதல்
15 உண்டு முடித்ததும் இயேசு பேதுருவிடம், “யோவானின் மகனான சீமோனே! மற்றவர்கள் நேசிப்பதைவிட என்னை நீ மிகுதியாக நேசிக்கிறாயா?” என்று கேட்டார்.
அதற்குப் பேதுரு, “ஆம் ஆண்டவரே, நான் நேசிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்” என்றான்.
பிறகு இயேசு அவனிடம், “எனது ஆட்டுக் குட்டிகளைக் [a] கவனித்துக்கொள்” என்றார்.
16 மீண்டும் பேதுருவிடம் இயேசு “யோவானின் மகனான சீமோனே, என்னை நீ நேசிக்கிறாயா?” என்று கேட்டார்.
“ஆம் ஆண்டவரே. நான் உம்மை நேசிப்பது உமக்குத் தெரியும்” என்று பேதுரு சொன்னான்.
பிறகு பேதுருவிடம் இயேசு, “எனது மந்தையைக் கவனித்துக்கொள்” என்று சொன்னார்.
17 மூன்றாவது முறையாக இயேசு “யோவானின் மகனான சீமோனே என்னை நீ நேசிக்கிறாயா?” என்று கேட்டார்.
இயேசு மூன்றுமுறை இவ்வாறு கேட்டதால் பேதுருவுக்கு வருத்தமாக இருந்தது. பேதுரு அவரிடம், “ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியும். நான் உம்மை நேசிப்பதும் உமக்குத் தெரியும்” என்றான். பேதுருவிடம் இயேசு “எனது மந்தையைக் கவனித்துக்கொள். 18 நான் உனக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நீ இளைஞனாக இருந்தபோது, உனது இடுப்புவாரை நீயே கட்டிக்கொண்டு விரும்பும் இடங்களுக்கு சென்றாய். ஆனால் நீ முதியவன் ஆகும்போது உன் கைகளை நீட்டுவாய். வேறு ஒருவன் உன் இடுப்புவாரைக் கட்டிவிடுவான். அதோடு உனக்கு விருப்பம் இல்லாத இடத்துக்கும் உன்னை இழுத்துக்கொண்டு போவான்” என்றார். 19 (எவ்வாறு பேதுரு மரணம் அடைந்து தேவனுக்கு மகிமைசேர்க்கப் போகிறான் என்பதைக் குறிப்பிட்டே இயேசு இவ்வாறு கூறினார்.) பிறகு இயேசு பேதுருவிடம் “என்னைப் பின்தொடர்ந்து வா” என்று கூறினார்.
20 பேதுரு திரும்பிப் பார்த்தபோது தன்னோடு, இயேசுவிடம் அன்பாயிருந்த சீஷன் வருவதைப் பார்த்தான். (இந்த சீஷன்தான் முன்பு இரவு விருந்தின்போது இயேசுவிடம் “உம்மைக் காட்டிக் கொடுக்கிறவன் யார்?” என்று அவர்மீது சாய்ந்து இருந்து கேட்டவன்) 21 பேதுரு, அவன் பின்தொடர்ந்து வருவதைப் பார்த்து, “ஆண்டவரே, இவனைப் பற்றி என்ன கூறுகிறீர்?” என்று கேட்டான்.
22 அதற்கு இயேசு, “நான் வருமளவும் இவன் இருக்க எனக்கு விருப்பம் உண்டு. அது உனக்கு அவ்வளவு முக்கியமில்லை. நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்றார்.
23 ஆகையால் சீஷர்களிடம் ஒரு கதை பரவிற்று. அதாவது இயேசு அன்பாயிருக்கும் அந்த சீஷன் மரணம் அடைவது இல்லை என்று சீஷர்கள் பேசிக்கொண்டனர். ஆனால் அவன் மரணம் அடைவதில்லை என்று இயேசு கூறவில்லை. அவர் “நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பம். அதைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம்” என்றே கூறினார்.
24 அந்த சீஷனே இவற்றையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறான். அவன்தான் இவற்றையெல்லாம் இப்பொழுது எழுதியுள்ளான். அவன் சொன்னது எல்லாம் உண்மை என்று நமக்குத் தெரியும்.
25 இயேசு செய்த வேறு பல செயல்களும் உள்ளன. இவை அனைத்தும் எழுதி வைக்கப்பட்டிருந்தால் அந்தப் புத்தகங்களையெல்லாம் வைக்கிற அளவிற்கு இந்த உலகம் அவ்வளவு பெரியதாக இல்லை என்று எண்ணுகிறேன்.
2008 by World Bible Translation Center