M’Cheyne Bible Reading Plan
புதிய துவக்கம்
9 தேவன் நோவாவையும் அவனது பிள்ளைகளையும் ஆசீர்வதித்தார். தேவன் அவர்களிடம், “குழந்தைகளைப் பெற்று, ஜனங்களால் இப்பூமியை நிரப்புங்கள். 2 பூமியிலுள்ள அனைத்து மிருகங்களும், வானத்திலுள்ள அனைத்து பறவைகளும், தண்ணீரிலுள்ள அனைத்து மீன்களும், பிற அனைத்து ஊர்வனவும் உங்களைக் கண்டு அஞ்சும், அவை உங்கள் அதிகாரத்திற்குள் இருக்கும். 3 கடந்த காலத்தில் பச்சையான தாவரங்களை உங்களுக்கு உணவாகக் கொடுத்தேன். இப்போது அனைத்து மிருகங்களும் உங்களுக்கு உணவாகட்டும். உலகிலுள்ள அனைத்தும் உங்களுக்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 4 ஆனால் உங்களுக்கு ஒரு ஆணை இடுகிறேன். இறைச்சியை அதின் உயிராகிய இரத்தத்துடன் உண்ணாதீர்கள். 5 நான் உங்களது உயிருக்காக உங்களது இரத்தத்தைக் கேட்பேன். அதாவது ஒரு மனிதனைக் கொல்லுகிற விலங்கின் இரத்தத்தைக் கேட்பேன். மேலும் மற்றொரு மனிதனைக் கொல்லுகிற மனிதனின் இரத்தத்தைக் கேட்பேன்.
6 “தேவன் மனிதனைத் தமது சாயலாகவேப் படைத்தார்.
எனவே மற்றவனைக் கொல்லுகிற எவனும் இன்னொருவரால் கொல்லப்பட வேண்டும்.
7 “நோவா, நீயும் உன் மகன்களும் குழந்தைகளைப் பெற்று, உங்கள் ஜனங்களால் பூமியை நிரப்புங்கள்” என்றார்.
8 பிறகு தேவன் நோவாவிடமும் அவனது பிள்ளைகளிடமும், 9 “நான் உங்களோடும் உங்களுக்குப் பின்னுள்ள வாரிசுகளோடும், 10 உங்களோடு கப்பலிலே இருந்த பறவைகளோடும் மிருகங்களோடும் ஊர்வனவற்றோடும் பூமியில் உள்ள அனைத்து உயிர்களோடும் எனது உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்கிறேன். 11 வெள்ளப்பெருக்கால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் அழிக்கப்பட்டன. ஆனால் மீண்டும் இது போல் நடைபெறாது. இன்னொரு வெள்ளப் பெருக்கு பூமியில் உள்ள உயிர்களை அழிக்காது” என்றார்.
12 மேலும் தேவன், “உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு அடையாளமாக ஒன்றை உங்களுக்குத் தருகிறேன். உன்னோடும் பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரோடும் நான் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு அது அத்தாட்சியாக இருக்கும். இந்த உடன்படிக்கை இனிவரும் எல்லாக் காலத்துக்கும் உரியதாக இருக்கும். இதுவே அந்த அத்தாட்சி. 13 மேகங்களுக்கு இடையே ஒரு வானவில்லை உருவாக்கி உள்ளேன். எனக்கும் பூமிக்குமான உடன்படிக்கைக்கு இதுவே அத்தாட்சி. 14 பூமிக்கு மேலாய் மேகங்களைக் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் அதில் வானவில்லைப் பார்க்கலாம். 15 வானவில்லைப் பார்க்கும்போதெல்லாம் நான் எனக்கும் உங்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை நினைத்துக்கொள்வேன். அந்த உடன்படிக்கை இனி ஒரு வெள்ளப் பெருக்கு உலகில் தோன்றி இங்குள்ள உயிர்களை அழிக்காது என்று கூறுகிறது. 16 மேகங்களுக்கிடையில் நான் வானவில்லைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கும் பூமியின் மீதுள்ள அனைத்து உயிர்களுக்குமிடையிலான நிரந்தரமான உடன்படிக்கையை நினைத்துக்கொள்வேன்.”
17 “நான் பூமியில் உள்ள அனைத்து உயிர்களோடும் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு அத்தாட்சியாக வானவில் விளங்குகிறது” என்றார்.
பிரச்சனைகள் மீண்டும் தோன்றுதல்
18 நோவாவின் மகன்கள் கப்பலைவிட்டு வெளியே வந்தனர். அவர்களின் பெயர் சேம், காம், யாப்பேத் ஆகும். காம், கானானின் தந்தை. 19 இந்த மூன்று பேரும் நோவாவின் மகன்கள். பூமியில் உள்ள அனைத்து ஜனங்களும் அவர்களது வம்சமேயாகும்.
20 நோவா ஒரு விவசாயி ஆனான். அவன் ஒரு திராட்சைத் தோட்டத்தைப் பயிர் செய்தான். 21 நோவா அதில் திராட்சை ரசத்தைச் செய்து குடித்தான். அவன் போதையில் தன் கூடாரத்தில் ஆடையில்லாமல் விழுந்து கிடந்தான். 22 கானானின் தந்தையான காம் ஆடையற்ற தனது தந்தையைப் பார்த்து அதைக் கூடாரத்திற்கு வெளியே இருந்த தன் சகோதரர்களிடம் சொன்னான். 23 சேமும் யாப்பேத்தும் ஒரு ஆடையை எடுத்து தங்கள் முதுகின் மேல் போட்டுக்கொண்டு பின்னால் நடந்து கூடாரத்திற்குள் நுழைந்து அதைத் தங்கள் தகப்பன் மேல் போட்டார்கள். இவ்வாறு தந்தையின் நிர்வாணத்தைப் பார்க்காமல் தவிர்த்தார்கள்.
24 திராட்சை ரசத்தைக் குடித்ததினால் தூங்கிய நோவா எழுந்ததும் தனது இளைய மகனான காம் செய்தது அவனுக்குத் தெரியவந்தது. 25 எனவே அவன்,
“கானான் சபிக்கப்பட்டவன்.
அவன் தன் சகோதரர்களுக்கு அடிமையிலும் அடிமையாக இருப்பான்” என்றான்.
26 மேலும்,
“சேமுடைய தேவனாகிய கர்த்தர் துதிக்கப்படுவாராக.
கானான் சேமுடைய அடிமையாய் இருப்பான்.
27 தேவன் யாப்பேத்துக்கு மேலும் நிலங்களைக் கொடுப்பார்.
தேவன் சேமுடைய கூடாரத்தில் இருப்பார்.
இவர்களின் அடிமையாகக் கானான் இருப்பான்” என்றான்.
28 வெள்ளப் பெருக்குக்குப் பிறகு நோவா 350 ஆண்டுகள் வாழ்ந்தான். 29 அவன் மொத்தம் 950 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.
நாடுகளின் வளர்ச்சியும் பரவலும்
10 சேம், காம், யாப்பேத் ஆகியோர் நோவாவின் மகன்கள். வெள்ளப் பெருக்குக்குப் பின் இவர்கள் மேலும் பல பிள்ளைகளுக்குத் தந்தை ஆனார்கள். இங்கே அவர்களின் பிள்ளைகள் பற்றிய பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
யாப்பேத்தின் சந்ததி
2 கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் ஆகியோர் யாப்பேத்தின் மகன்கள்.
3 அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா ஆகியோர் கோமரின் மகன்கள்.
4 எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் ஆகியோர் யாவானின் மகன்கள்.
5 மத்தியத்தரைக் கடல் பகுதியில் வாழ்ந்த ஜனங்கள் யாப்பேத்தின் வழி வந்தவர்கள். ஒவ்வொரு மகனும் தனக்குரிய சொந்த நிலத்தைப் பெற்றிருந்தான். ஒவ்வொரு குடும்பமும் பெருகி வெவ்வேறு நாடுகளாயின. ஒவ்வொரு நாடும் தனக்கென்று ஒரு தனி மொழியைப் பெற்றது.
காமின் சந்ததி
6 கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் ஆகியோர் காமின் பிள்ளைகள்.
7 சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா, ஆகியோர் கூஷின் பிள்ளைகள்.
சேபா, திதான் ஆகியோர் ராமாவின் பிள்ளைகள்.
8 கூஷ் நிம்ரோத்தை பெற்றான். நிம்ரோத் பூமியில் மிக வல்லமை மிக்க வீரன் ஆனான். 9 இவன் கர்த்தருக்கு முன்னால் பெரிய வேட்டைக்காரனாக இருந்தான். இதனால் “கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோத்தைப்போல” என்ற வழக்குச்சொல் உண்டானது.
10 நிம்ரோத்தின் அரசாட்சி பாபேலிலிருந்து ஏரேக், அக்காத், சிநெயார் நாட்டிலுள்ள கல்னேவரை பரவியிருந்தது. 11 நிம்ரோத் அசீரியாவுக்குப் போனான், அங்கு நினிவே, ரெகொபோத், காலாகு, ரெசேன் ஆகிய நகரங்களைக் கட்டினான். 12 (ரெசேன் நகரமானது நினிவேக்கும் காலாகுக்கும் இடைப்பட்ட பெரிய நகரம்)
13 லூதி, ஆனாமீ, லெகாபீ, நப்தூகீம், 14 பத்ருசீம், பெலிஸ்தர், கஸ்லூ, கப்தொர் ஆகியோரின் தந்தை மிஸ்ராயீம்.
15 கானான் சீதோனின் தந்தையானான். இவன் கானானின் மூத்தமகன். கானான் கேத்துக்கும் தந்தை. கேத் கேத்தியர்களின் தந்தை ஆனான். 16 எபூசியர், எமோரியர், கிர்காசியர், 17 ஈவியர், அர்க்கீரியர், சீநியர், 18 அர்வாதியர், செமாரியர், காமாத்தியர், ஆகியோருக்கும் கானான் தந்தை ஆனான்.
இவனது சந்ததியினர் உலகின் பல பாகங்களிலும் பரவினர். 19 கானான் தேசத்தில் இருந்தவர்களுக்கு தம் எல்லையாக சீதோன் முதல் கேரார் வழியாய் காசா மட்டும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் வழியாய் லாசா மட்டும் இருந்தது.
20 இவர்கள் அனைவரும் காமுடைய சந்ததியார்கள். இக்குடும்பத்தினர் அனைவரும் தங்களுக்கென்று சொந்த மொழியும் சொந்த பூமியும் உடையவர்களாய் இருந்தனர். அவர்கள் தனித்தனி நாட்டினராயும் ஆயினர்.
சேமின் சந்ததி
21 சேம், யாப்பேத்தின் மூத்த சகோதரன். அவனது சந்ததியில் ஒருவனே ஏபேர். எபேரே எபிரெய ஜனங்கள் அனைவருக்கும் தந்தையானான். [a]
22 ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் ஆகியோர் சேமின் பிள்ளைகள்.
23 ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ் ஆகியோர் ஆராமின் பிள்ளைகள்.
24 அர்பக்சாத்தின் மகன் சாலா.
சாலாவின் மகன் ஏபேர்.
25 ஏபேருக்கு இரு மகன்கள். ஒருவன் பேர் பேலேகு. அவனுடைய நாட்களில்தான் பூமி பகுக்கப்பட்டது. யொக்தான் இன்னொரு மகன்.
26 அல்மோதாத், சாலேப் அசர்மாவேத், யேராகை, 27 அதோராம், ஊசால், திக்லா, 28 ஓபால், அபிமாவேல், சேபா, 29 ஒப்பீர், ஆவிலா, யோபா ஆகியோரை யொக்தான் பிள்ளைகளாகப் பெற்றான். 30 இவர்களின் பகுதிகள் மேசா துவக்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழி மட்டும் இருந்தது.
31 இவர்கள் அனைவரும் சேமுடைய வாரிசுகள். இவர்கள் அனைவரும் தம் குடும்பங்கள், மொழிகள், நாடுகள், தேசங்கள், வழியாக வரிசைப்படுத்தப்பட்டவர்கள்.
32 நோவாவின் பிள்ளைகளால் உருவான குடும்பப்பட்டியல் இதுதான். இவர்கள் தங்கள் நாடுகளின்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளப் பெருக்குக்குப் பிறகு இக்குடும்பங்கள் தோன்றி பூமி முழுவதும் பரவினர்.
பக்கவாத வியாதிக்காரன் குணமாகுதல்(A)
9 இயேசு ஒரு படகில் ஏரியைக் கடந்து மீண்டும் தம் சொந்த நகருக்குத் திரும்பினார். 2 பக்கவாத வியாதியினால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சிலர் இயேசுவிடம் அழைத்து வந்தனர். அவன் படுக்கையில் படுத்திருந்தான். அம்மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு வந்திருந்ததை இயேசு கண்டார். எனவே இயேசு அந்த வியாதிக்காரனிடம்,, “வாலிபனே, மகிழ்ச்சியாயிரு. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
3 இதைக் கேட்ட சில வேதப்போதகர்கள்., “இந்த மனிதன் (இயேசு) தேவனைப் போலவே பேசுகிறான். இது தேவனை நிந்திக்கும் செயல்” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
4 அவர்கள் இவ்வாறு எண்ணியதை இயேசு அறிந்தார். எனவே இயேசு,, “நீங்கள் ஏன் தீய எண்ணங்களைச் சிந்திக்கின்றீர்கள்? 5 பக்கவாத வியாதிக்காரனிடம் ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’, என்று கூறுவது எளிதா? அல்லது ‘எழுந்து நட’, என்று கூறுவது எளிதா? 6 ஆனால் மனித குமாரனுக்கு பூமியில் பாவங்களை மன்னிக்கும் வல்லமை இருப்பதை நான் உங்களுக்கு நிரூபிப்பேன்” என்று சொன்னார். பிறகு அந்த வியாதிக்காரனிடம் இயேசு,, “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்!” என்று கூறினார்.
7 அம்மனிதன் எழுந்து வீட்டுக்குச் சென்றான். 8 இதைக்கண்ட மக்கள் வியப்புற்றனர். இத்தகைய வல்லமையை மனிதனுக்கு அளித்ததற்காக அவர்கள் தேவனைப் புகழ்ந்தார்கள்.
இயேசு மத்தேயுவைத் தேர்ந்தெடுத்தல்(B)
9 அங்கிருந்து இயேசு செல்லும்பொழுது, மத்தேயு என்ற மனிதனைக் கண்டார். மத்தேயு வரி அலுவலகத்தில் அமர்ந்திருந்தான்., “என்னைத் தொடர்ந்து வா” என்று மத்தேயுவிடம் இயேசு கூறினார். உடனே மத்தேயு எழுந்திருந்து இயேசுவைப் பின் தொடர்ந்தான்.
10 இயேசு மத்தேயுவின் வீட்டில் விருந்துண்டார். வரி வசூலிப்பவர்கள் பலரும் தீயவர்கள் பலரும் வந்திருந்து இயேசுவுடனும் அவரது சீஷர்களுடனும் விருந்துண்டனர். 11 அத்தகைய மனிதர்களுடன் இயேசு விருந்துண்டதைப் பரிசேயர்கள் கண்டனர். பரிசேயர்கள் இயேசுவின் சீஷர்களிடம்,, “ஏன் உங்கள் குருவானவர் வரி வசூலிப்பவர்களுடனும் தீய மனிதர்களுடனும் உணவு உண்கிறார்?” என்று கேட்டனர்.
12 பரிசேயர்கள் இவ்வாறு கூறுவதை இயேசு கேட்டார். எனவே, இயேசு பரிசேயர்களிடம்,, “ஆரோக்கியமானவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை. நோயாளிகளுக்குத்தான் மருத்துவர் தேவை. 13 நான் உங்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன். அதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். விலங்குகளைப் பலியிடுவதை நான் விரும்பவில்லை. [a] நான் மக்களிடம் கருணையை விரும்புகிறேன். நல்லவர்களை அழைக்க நான் வரவில்லை. பாவம் செய்தவர்களை அழைக்கவே நான் வந்தேன்” என்று கூறினார்.
வித்தியாசமான போதனை(C)
14 பின்னர், யோவானின் சீஷர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் இயேசுவிடம்,, “நாங்களும் பரிசேயர்களும் அடிக்கடி உபவாசம் இருக்கிறோம். ஆனால், உங்கள் சீஷர்கள் உபவாசம் இருப்பதில்லை. ஏன்?” என்று கேட்டார்கள்.
15 அதற்கு இயேசு அவர்களிடம்,, “திருமணத்தின்போது, மணமகன் உடன் இருக்கும் பொழுது அவன் நண்பர்கள் சோகமாக இருப்பதில்லை. ஆனால் மணமகன் அவர்களிடமிருந்து பிரிக்கப்படும் நேரம் வரும். அப்பொழுது மணமகனின் நண்பர்கள் வருத்தம் அடைகிறார்கள். அப்பொழுது அவர்கள் உபவாசம் இருப்பார்கள்.
16 ,“ஒருவன் தன் பழைய சட்டையிலுள்ள ஒரு ஓட்டையை தைக்கும்பொழுது, சுருக்கமடையாத புதிய துணியைப் பயன்படுத்துவதில்லை. அப்படிச் செய்தால், இணைத்த துண்டுத்துணியானது சுருங்கி சட்டையிலிருந்து கிழிந்துவிடும். அதனால் ஓட்டை மேலும் மோசமடையும். 17 மேலும், மக்கள் ஒருபோதும் புதிய திராட்சை இரசத்தைப் பழைய திராட்சை இரசம் இருக்கும் பைகளில் வைப்பதில்லை. ஏனென்றால் பழைய திராட்சை இரசம் இருக்கும் பைகள் கிழிந்துவிடும். திராட்சை இரசமும் சிந்திவிடும். திராட்சை இரசப் பைகளும் வீணாகும். அதனால், மக்கள் எப்பொழுதும் புதிய திராட்சை இரசத்தை புதிய பைகளிலேயே ஊற்றுகிறார்கள். அதனால் திராட்சை இரசமும் பைகளும் நன்றாக இருக்கும்” என்றார்.
மரித்த பெண் உயிரடைதல், நோயாளிப் பெண் சுகமடைதல்(D)
18 இயேசு இவற்றைக் கூறிக்கொண்டிருந்தபொழுது, யூத ஆலயத் தலைவன் ஒருவன் அவரிடம் வந்தான். அவன் இயேசுவை வணங்கி,, “என் மகள் சற்றுமுன் இறந்துவிட்டாள். ஆனாலும், நீர் வந்து உமது கையால் அவளைத் தொடும். அவள் மீண்டும் உயிர் பிழைப்பாள்” என்றான்.
19 உடனே, இயேசு எழுந்து அவனுடன் சென்றார். இயேசுவின் சீஷர்களும் அவரைத் தொடர்ந்தார்கள்.
20 அப்பொழுது பன்னிரெண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் அவதியுற்றுக்கொண்டிருந்த ஒரு பெண் இயேசுவின் பின் வந்து அவரது மேலங்கியின் நுனியைத் தொட்டாள். 21 அந்தப் பெண்,, “நான் இந்த மேலங்கியைத் தொட்டால் குணமடைவேன்” என எண்ணிக்கொண்டிருந்தாள்.
22 இயேசு திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்து அவளிடம்,, “பெண்ணே, மகிழ்ச்சியாயிரு. நீ சுகமாக்கப்பட்டாய். ஏனென்றால், நீ விசுவாசித்ததினால் குணமாக்கப்பட்டாய்” என்றார். உடனே அந்தப் பெண் குணமாக்கப்பட்டாள்.
23 இயேசு அந்தத் தலைவனுடன் தொடர்ந்து சென்று, அவனது வீட்டிற்குள் சென்றார். சரீர அடக்கத்திற்கான இசை இசைப்போரை இயேசு அங்கு கண்டார். அந்தச் சிறுமி இறந்துவிட்டதனால், அழுதுகொண்டிருந்த பலரையும் இயேசு கண்டார். 24 இயேசு,, “விலகிச் செல்லுங்கள். இச்சிறுமி இறக்கவில்லை. இவள் தூக்கத்திலிருக்கிறாள்” என்று சொன்னார். அதைக் கேட்ட அங்கிருந்த மக்கள் இயேசுவைப் பார்த்து நகைத்தனர். 25 அவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதும், இயேசு சிறுமியின் அறைக்குள் நுழைந்தார். இயேசு சிறுமியின் கரத்தைப் பிடித்தார். சிறுமி எழுந்து நின்றாள். 26 இச்செய்தி அத்தேசம் முழுவதும் பரவியது.
இயேசு பலரைக் குணமாக்குதல்
27 இயேசு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டதும் இரு குருடர்கள் அவரைத் தொடர்ந்தார்கள். அக்குருடர்கள் உரத்த குரலில்,, “தாவீதின் குமாரனே, எங்களுக்குக் கருணை காட்டும்” என்று சொன்னார்கள்.
28 இயேசு வீட்டிற்குள் சென்றார். குருடர்கள் இருவரும் அவருடன் வீட்டிற்குள் நுழைந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து,, “நீங்கள் பார்வை பெறுமாறு செய்ய என்னால் முடியுமென்று விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்குக் குருடர்கள், “ஆம், போதகரே, நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்று பதிலளித்தனர்.
29 பிறகு இயேசு அவர்களது கண்களைத் தொட்டு,, “நீங்கள் பார்வை பெறுமாறு செய்ய என்னால் முடியுமென்று நம்புகிறீர்கள். எனவே அது நடக்கும்” என்று சொன்னார். 30 உடனே அவர்களால் பார்க்க முடிந்தது. பின் அவர்,, “இதைக் குறித்து யாரிடமும் கூறாதீர்கள்” என்று கண்டிப்புடன் சொல்லி அனுப்பினார். 31 ஆனால் அவர்கள் அங்கிருந்து சென்று இயேசுவைக் குறித்த செய்திகளை அப்பிரதேசமெங்கும் பரப்பினார்கள்.
32 அவர்கள் இருவரும் புறப்பட்டுச்சென்ற பின், சிலர் வேறொரு மனிதனை இயேசுவிடம் அழைத்து வந்தார்கள். இம்மனிதனைப் பிசாசு பிடித்திருந்ததினால் அவனால் பேச இயலவில்லை. 33 இயேசு அம்மனிதனிடமிருந்த பிசாசை விரட்டினார். பிறகு ஊமையான அம்மனிதனால் பேச முடிந்தது. அதனால் வியப்படைந்த மக்கள்,, “இஸ்ரவேலில் நாங்கள் ஒருபோதும் இப்படிப்பட்ட ஒன்றைக் கண்டதில்லை” என்று கூறினார்கள்.
34 ஆனால் பரிசேயர்கள்,, “பிசாசுகளை விரட்டுகிற வல்லமையை இயேசுவிற்குக் கொடுத்தது பிசாசுகளின் தலைவனே” என்று சொன்னார்கள்.
இயேசுவின் கரிசனை
35 இயேசு எல்லா நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாகப் பயணம் செய்தார். பரலோக அரசைப் பற்றிய நற்செய்தியை இயேசு யூதர்களின் ஜெப ஆலயங்களில் மக்களுக்குக் கூறினார். இயேசு எல்லாவகையான நோய்களையும் குணமாக்கினார். 36 திரளான மனிதர்களைக் கண்ட இயேசு அவர்களுக்காக வருத்தமடைந்தார். ஏனென்றால், மக்கள் கவலை கொண்டும் ஆதரவற்றும் இருந்தனர். மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையைப்போல மக்கள் தங்களை வழிநடத்த மேய்ப்பனின்றி இருந்தனர். 37 இயேசு தம் சீஷர்களிடம்,, “ஏராளமான மக்கள் அறுவடைக்காக (காப்பாற்றப்பட) உள்ளனர். ஆனால் அவர்களை அறுவடை செய்வதற்கோ மிகச் சில பணியாளர்களே உள்ளனர். தேவனுக்கு உரியது அறுவடை (மக்கள்). 38 பிரார்த்தனை செய்யுங்கள். தேவன் மேலும் பலரைத் தம் அறுவடையைச் சேகரிக்க அனுப்புவார்” என்றார்.
யூதரல்லாதவர்களுடன் செய்த திருமணங்கள்
9 இவை அனைத்தையும் செய்து முடிந்த பிறகு, இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்கள் என்னிடம் வந்தனர். அவர்கள், “எஸ்றா, இஸ்ரவேல் ஜனங்கள் தம்மைச் சுற்றியுள்ள ஜனங்களிடமிருந்து தங்களைத் தனியே பிரித்து வைத்திருக்கவில்லை. ஆசாரியர்களும் லேவியர்களும் தங்களைத் தனியே பிரித்து வைத்திருக்கவில்லை. இவர்கள், கானானியர், ஏத்தியர், பெர்சியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், எம்மோரியர் ஆகிய ஜனங்களால் பாதிப்புக்குள்ளாகி, அவர்களின் தீயச் செயல்களுக்கும் ஆளானார்கள். 2 இஸ்ரவேல் ஜனங்கள் எங்களைச் சுற்றியுள்ளவர்களை மணந்துக்கொண்டனர். இஸ்ரவேல் ஜனங்கள் சிறப்புக்குரியவர்களாகக் கருதப்படத்தக்கவர்கள். ஆனால் அவர்கள் இப்போது தம்மோடு வாழும் மற்றவர்களோடு கலந்துவிட்டனர். இந்த வகையில் இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்களும் முக்கிய அதிகாரிகளும் ஒரு மோசமான உதாரணமாக இருந்தனர்” என்றனர். 3 நான் இதைப்பற்றி கேள்விப்பட்டதும், நான் கலக்கமடைந்ததைக் காட்ட எனது ஆடைகளையும் சால்வைகளையும் கிழித்துக்கொண்டேன். என் தலையிலும் தாடியிலும் உள்ள முடியைப் பிடுங்கிக்கொண்டேன். அதிர்ச்சியடைந்தும் கலக்கமடைந்தும் நான் உட்கார்ந்துவிட்டேன். 4 பிறகு, தேவனுடைய சட்டங்கள் மீது மரியாதைக் கொண்ட ஒவ்வொருவரும் அஞ்சினார்கள். அவர்கள், அடிமைத்தனத்திலிருந்து மீண்ட இஸ்ரவேலர்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்கள் அல்ல என்பதை அறிந்ததால் பயந்தார்கள். நான் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்தேன். பலிக்கான மாலை நேரம்வரை நான் உட்கார்ந்திருந்தேன். அந்த ஜனங்கள் என்னைச் சுற்றிக் கூடினார்கள்.
5 பிறகு பலிக்குரிய மாலை நேரம் வந்ததும் நான் எழுந்தேன். அங்கே அமர்ந்திருந்தபொழுது, பார்ப்பதற்கு வெட்கப்படும்படியாக என்னை நானே ஆக்கிக் கொண்டேன். எனது ஆடையும் சால்வையும் கிழிந்திருந்தன. நான் முழங்காலிட்டு, என் தேவனாகிய கர்த்தருக்கு நேராக கைகளை விரித்திருந்தேன். 6 பிறகு நான் இந்த ஜெபத்தைச் செய்தேன்.
“எனது தேவனே, உம்மைப் பார்ப்பதற்கு நான் மிகவும் வெட்கமும் குழப்பமும் அடைகிறேன். எங்கள் தலைகளைவிட எங்கள் பாவங்கள் உயரமாகிவிட்டதை அறிந்து வெட்கப்படுகிறேன். எங்கள் குற்றங்கள் பரலோகம்வரை எட்டியது. 7 எங்கள் முற்பிதாக்களின் காலமுதல் இன்றுவரை நாங்கள் பலவகையான பாவங்களைச் செய்து வருகிறோம். நாங்கள் பாவம் செய்ததினால் எங்களுடைய அரசர்களும் ஆசாரியர்களும் தண்டிக்கப்பட்டனர். வெளிநாட்டு அரசர்கள் எங்களைத் தாக்கி, எங்கள் ஜனங்களை இழுத்துச் சென்றனர். எங்களுக்குரிய செல்வங்களையும் எடுத்துக்கொண்டு எங்களை அவமானத்திற்குள்ளாக்கிவிட்டார்கள். இன்றும் கூட அதே நிலைதான் உள்ளது.
8 “ஆனால் இப்போது, முடிவாக நீர் எங்கள் மீது இரக்கத்துடன் இருக்கிறீர். அடிமைத்தனத்திலிருந்த எங்களில் சிலரை விடுதலை செய்து, இந்தப் பரிசுத்தமான இடத்திற்கு அழைத்து வந்தீர், கர்த்தாவே எங்களுக்குப் புதிய வாழ்வும், அடிமைத்தனத்திலிருந்து விடுதலையும் தந்தீர். 9 ஆமாம், நாங்கள் அடிமைகளாய் இருந்தோம். ஆனால் நீர் எங்களை எப்போதும் அடிமைகளாய் இருக்கவிடவில்லை. எங்களோடு நீர் இரக்கமாய் இருக்கிறீர். பெர்சியா அரசர்களையும் எங்கள் மீது கருணை காட்டுமாறு செய்தீர். உமது ஆலயம் அழிக்கப்பட்டது. ஆனால் நீர் எங்களுக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுத்தீர். எனவே, நாங்கள் உமது ஆலயத்தை மீண்டும் புதிதாகக் கட்ட முடிந்தது. தேவனே, யூதாவையும் எருசலேமையும் காப்பாற்ற ஒரு சுவர் கட்ட நீர் உதவிச்செய்தீர்.
10 “இப்போது, தேவனே உமக்கு நாங்கள் என்ன சொல்ல முடியும்? மீண்டும் நாங்கள் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்திக் கொண்டோம். 11 தேவனே, நீர் உம்முடைய ஊழியக்காரர்களையும், தீர்க்கதரிசிகளையும் பயன்படுத்தி உமது கட்டளைகளைக் கொடுத்தீர். நீர், ‘நீங்கள் வாழப் போகிற நாடு அழிந்துபோன நாடு. அது, அங்குள்ள ஜனங்களின் தீயச் செயல்களால் அழிந்து போனது. இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு இடத்திலும் அங்குள்ள ஜனங்கள் பாவம் செய்தனர். அவர்கள் இந்தத் தேசத்தைத் தங்கள் பாவங்களால் அசிங்கப்படுத்திவிட்டனர். 12 எனவே, இஸ்ரவேல் ஜனங்களே, அவர்களது பிள்ளைகளை உங்கள் பிள்ளைகள் மணந்துக்கொள்ள அனுமதிக்கவேண்டாம்! அவர்களோடு சேராதீர்கள். அவர்களது பொருட்களை விரும்பாதீர்கள்! எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். எனவே நீங்கள் பலமுள்ளவர்களாகவும், இந்த நாட்டிலுள்ள நல்லவற்றை அனுபவிப்பவர்களாகவும் இருப்பீர்கள். பிறகு இந்த நிலத்தை உமது பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம்’ என்று சொன்னீர்.
13 “எங்களுடைய சொந்தத் தவறுகளால்தான் எங்களுக்கு தீமைகள் ஏற்பட்டன. நாங்கள் கெட்டவற்றைச் செய்திருக்கிறோம், எங்களிடம் நிறைய குற்றங்கள் உள்ளன. ஆனால், எங்கள் தேவனாகிய நீர் எங்களுக்குரிய தண்டனைகளைவிடக் குறைவாகவே தண்டித்தீர். நாங்கள் பயங்கரமான பாவங்களைச் செய்திருக்கிறோம். நாங்கள் மிக மோசமாகத் தண்டிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் நீர் எங்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டிருக்கின்றீர். 14 எனவே, நாங்கள் உம்முடைய கட்டளைகளை மீறக்கூடாது என்று தெரிந்துக்கொண்டோம். அவர்களை நாங்கள் மணந்துக்கொள்ளக்கூடாது. அவர்கள் தீய பாவங்களை செய்தனர். தேவனே, நாங்கள் அவர்களைத் தொடர்ந்து மணந்துக்கொண்டிருந்தால், எங்களை நீர் முழுவதும் அழித்துவிடுவீர் என்பதை அறிவோம்! பிறகு, இஸ்ரவேலர் எவரும் உயிரோடு இருக்கமாட்டார்கள்.
15 “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் நல்லவர்! நீர் இன்னும் எங்களில் சிலரை வாழ விட்டிருக்கிறீர். ஆமாம், நாங்கள் குற்றவாளிகளே! எங்கள் குற்றமனப்பான்மையால் எங்களில் ஒருவரும் உமது முன்னிலையில் நிற்க அனுமதிக்கப்படக்கூடாது.”
சவுல் மனம் மாறுதல்
9 சவுல் கர்த்தரின் சீஷரைப் பயமுறுத்தவும், கொல்லவும் எப்பொழுதும் முயன்று கொண்டிருந்தான். எனவே அவன் தலைமை ஆசாரியனிடம் சென்றான். 2 தமஸ்கு நகரத்தில் ஜெப ஆலயங்களிலுள்ள யூதர்களுக்குக் கடிதங்களை எழுதுமாறு அவரைக் கேட்டான். தமஸ்குவில் கிறிஸ்துவின் வழியைப் பின்பற்றுகிற சீஷர்களைக் கண்டுபிடிக்கும் அதிகாரத்தை அவனுக்குக் கொடுக்குமாறு தலைமை ஆசாரியரைக் கேட்டான். அங்கு ஆணோ, பெண்ணோ, விசுவாசிகள் எவரையேனும் கண்டால் அவன் அவர்களைக் கைதுசெய்து எருசலேமிற்குக் கொண்டு வர விரும்பினான்.
3 எனவே சவுல் தமஸ்குவிற்கு புறப்பட்டுச் சென்றான். அவன் நகரத்திற்கு அருகே வந்தபோது, அவனைச் சுற்றிலும் மிகுந்த பிரகாசமான ஒளி வானிலிருந்து திடீரென வெளிச்சமிட்டது. 4 சவுல் தரையில் விழுந்தான். அவன் தன்னோடு பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். “சவுலே, சவுலே! நீ ஏன் புண்படுத்தும் காரியங்களை எனக்குச் செய்துகொண்டிருக்கிறாய்?” என்றது அச்சத்தம்.
5 சவுல், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான்.
அந்தச் சத்தம் பதிலாக, “நான் இயேசு, 6 நீ புண்படுத்த நினைப்பது என்னையே. நீ எழுந்து நகரத்துக்குள் போ. அங்கிருக்கும் ஒருவர் நீ செய்ய வேண்டியதை உனக்குக் கூறுவார்” என்றது.
7 சவுலோடு பயணம் செய்த மனிதர் நின்றனர். அவர்கள் எதுவும் சொல்லவில்லை. அம்மனிதர் சத்தத்தைக் கேட்டனர். ஆனால் யாரையும் பார்க்கவில்லை. 8 சவுல் தரையிலிருந்து எழுந்தான். அவன் கண்களைத் திறந்தபோது அவனால் பார்க்க முடிய வில்லை. எனவே சவுலோடு வந்த மனிதர்கள் அவன் கையைப் பிடித்து, அவனைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றனர். 9 மூன்று நாட்கள் சவுலால் பார்க்க முடியவில்லை. அவன் எதையும் உண்ணவோ, எதையும் பருகவோ இல்லை.
10 தமஸ்குவில் இயேசுவின் சீஷன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் அனனியா. கர்த்தர் ஒரு தரிசனத்தில் அவனிடம் வந்து பேசினார். கர்த்தர், “அனனியாவே!” என்று அழைத்தார்.
அனனியா பதிலாக, “ஆண்டவரே, இதோ இருக்கிறேன்” என்றான்.
11 கர்த்தர் அனனியாவை நோக்கி, “எழுந்து நெடும்வீதி எனப்படும் தெருவுக்குப் போ. யூதாஸின் [a] வீட்டைக் கண்டுபிடி. தர்சு நகரத்தின் சவுல் என்ற மனிதனுக்காக விசாரி. அவன் அங்குப் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறான். 12 சவுல் ஒரு காட்சி கண்டான். அக்காட்சியில் அனனியா என்றொரு மனிதன் அவனிடம் வந்து கரங்களை அவன்மீது வைத்தான். அப்போது சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது” என்றார்.
13 ஆனால் அனனியா பதிலாக, “ஆண்டவரே பல மக்கள் இம்மனிதனைக் குறித்து எனக்குக் கூறியிருக்கிறார்கள். எருசலேமிலுள்ள உமது தூய மக்களுக்கு இந்த மனிதன் செய்த தீமைகளை அவர்கள் எனக்குச் சொன்னார்கள். 14 இப்போது அவன் இங்கு தமஸ்குவுக்கு வந்துள்ளான். உம்மில் விசுவாசம் வைக்கிற எல்லோரையும் கைது செய்யும் அதிகாரத்தைத் தலைமைப் போதகர்கள் அவனுக்கு அளித்துள்ளனர்” என்றான்.
15 ஆனால் கர்த்தர் அனனியாவிடம், “போ! நான் சவுலை ஒரு முக்கிய வேலைக்காகத் தேர்ந்துள்ளேன். அவன் மன்னருக்கும், யூத மக்களுக்கும் பிற நாடுகளுக்கும் என்னைப்பற்றிச் சொல்லவேண்டும். 16 என் பெயருக்காக அவன் படவேண்டிய துன்பங்களை நான் சவுலுக்குக் காட்டுவேன்” என்றார்.
17 எனவே அனனியா புறப்பட்டு, யூதாஸின் வீட்டிற்குச் சென்றான். அவன் தனது கைகளைச் சவுலின் மீது வைத்து, “சவுலே, எனது சகோதரனே, கர்த்தர் இயேசு என்னை அனுப்பினார். நீ இங்கு வந்துகொண்டிருந்தபொழுது வழியில் நீ பார்த்தவரும் அவரே. நீ மீண்டும் பார்வை அடையவும், பரிசுத்த ஆவியால் நிரம்பவும் இயேசு என்னை இங்கு அனுப்பினார்” என்றான். 18 உடனே மீன் செதில்கள் போன்றவை சவுலின் கண்களிலிருந்து விழுந்தன. சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது. சவுல் எழுந்து ஞானஸ்நானம் பெற்றான். 19 அவன் ஆகாரம் உண்டு, பலம் பெற்றவனாக உணர்ந்தான்.
சவுல் தமஸ்குவில் போதித்தல்
சில நாட்கள் தமஸ்குவில் சவுல் இயேசுவின் சீஷர்களோடு இருந்தான். 20 ஜெப ஆலயங்களில் இயேசுவைக் குறித்துப் போதிக்க ஆரம்பித்தான். மக்களுக்கு, “இயேசு தேவனுடைய குமாரன்!” என்று கூறினான்.
21 சவுலைக் கேட்ட எல்லா மக்களும் வியப்புற்றனர். அவர்கள், “இவன் எருசலேமிலிருந்த அதே மனிதன். இந்தப் பெயரை நம்பிய மக்களை அழிக்க முற்பட்டுக் கொண்டிருந்தான்! அவன் இங்கும் அதைச் செய்வதற்காகவே வந்தான். இயேசுவின் சீஷர்களைக் கைது செய்து எருசலேமிலுள்ள தலைமை ஆசாரியர்களிடம் அழைத்துச் செல்வதற்கு வந்தான்” என்றனர்.
22 ஆனால் சவுலோ மென்மேலும் வல்லமையில் பெருகினான். அவன் இயேசுவே கிறிஸ்து என நிரூபித்தான். தமஸ்குவில் அவன் சான்றுகள் வலுவாக இருந்தபடியால் யூதர்கள் அவனோடு வாக்குவாதம் செய்ய இயலவில்லை.
சவுல் தப்பிச் செல்லுதல்
23 பல நாட்களுக்குப் பிறகு, யூதர்கள் சவுலைக் கொல்லத் திட்டமிட்டனர். 24 சவுலுக்காக நகரத்தின் கதவுகளை இரவும் பகலும் யூதர்கள் காவல் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் அவனைக் கொல்ல விரும்பினர். ஆனால் சவுல் அவர்களின் சதித்திட்டத்தைக் குறித்துச் சொல்லப்பட்டிருந்தான். 25 ஒரு நாள் இரவில் சில சீஷர்கள் அவன் நகரத்திலிருந்து வெளியேறுவதற்கு உதவினர். சீஷர்கள் அவனை ஒரு கூடையில் வைத்தனர். நகரக் கோட்டையிலிருந்த ஒரு துவாரத்தின் வழியாக கூடையை இறக்கி அவனை வெளியே விட்டனர்.
எருசலேமில் சவுல்
26 பிறகு சவுல் எருசலேமுக்குச் சென்றான். சீஷர் குழுவில் சேர்ந்துகொள்ள அவன் முயற்சித்தான். ஆனால் அவர்கள் எல்லோரும் அவனைக் கண்டு பயந்தனர். சவுல் உண்மையாகவே இயேசுவைப் பின்பற்றுகிறவன் என்பதை அவர்கள் நம்பவில்லை. 27 ஆனால் பர்னபா சவுலை ஏற்றுக் கொண்டு அவனை அப்போஸ்தலரிடம் அழைத்து வந்தான். பர்னபா அப்போஸ்தலருக்கு, தமஸ்குவுக்குச் செல்லும் பாதையில் சவுல் கர்த்தரை தரிசித்ததைச் சொன்னான். கர்த்தர் சவுலிடம் பேசிய வகையை பர்னபா அப்போஸ்தலருக்கு விளக்கினான். பின் அவன் அப்போஸ்தலர்களுக்கு இயேசுவுக்காக பயமின்றி தமஸ்குவில் மக்களுக்கு சவுல் போதித்ததையும் சொன்னான்.
28 சவுலும் சீஷரோடு தங்கினான். பயமின்றி கர்த்தரைப் பற்றி எருசலேமின் எல்லா பகுதிகளுக்கும் சென்று போதித்தான். 29 கிரேக்கமொழி பேசிய யூதரிடம் சவுல் அவ்வப்போது பேசினான். அவர்களோடு விவாதங்கள் நடத்தினான். ஆனால் அவனைக் கொல்வதற்கு அவர்கள் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். 30 சகோதரர்கள் இதைப்பற்றி அறிந்தபோது அவர்கள் சவுலை செசரியா நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். செசரியாவிலிருந்து தர்சு நகரத்திற்கு அவர்கள் சவுலை அனுப்பினர்.
31 யூதேயா, கலிலேயா, சமாரியா, ஆகிய இடங்களிலுள்ள சபையினர் அமைதியுடன் வாழ்ந்தார்கள். பரிசுத்த ஆவியானவரின் உதவியால் வலிமையூட்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். தாங்கள் வாழ்ந்த வகையால் கர்த்தரை அவர்கள் மதித்தனர் என்பதை விசுவாசிகள் காட்டினர். ஏனெனில் பரிசுத்த ஆவியானவரின் உதவியினால் விசுவாசிகள் குழு பெருகி வளர்ந்தது.
லித்தா மற்றும் யோப்பாவில் பேதுரு
32 எருசலேமைச் சுற்றிலுமிருந்த எல்லா ஊர்கள் வழியாகவும் பேதுரு பயணமானான். லித்தாவில் வாழ்ந்த விசுவாசிகளை [b] அவன் சந்தித்தான். 33 அங்கு பக்கவாத வியாதியால் பீடிக்கப்பட்ட ஐனேயா என்ற பெயருள்ள ஒருவனை அவன் கண்டான். கடந்த எட்டு ஆண்டுகளாக ஐனேயாவால் அவனது படுக்கையை விட்டு நகர முடியவில்லை. 34 பேதுரு அவனிடம், “ஐனேயாவே, இயேசு கிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார். எழுந்து உன் படுக்கையை மடக்கு. உன்னால் இப்போது இதனைச் செய்ய முடியும்!” என்றான். ஐனேயா உடனே எழுந்து நின்றான். 35 லித்தாவில் வாழ்ந்த எல்லா மக்களும் சாரோனின் மக்களும் அவனைக் கண்டனர். இம்மக்கள் கர்த்தரிடம் திரும்பினார்கள்.
36 யோப்பா நகரில் தபித்தா என்னும் பெயருள்ள இயேசுவின் சீஷப் பெண் இருந்தாள். (அவளது கிரேக்க பெயரான, தொர்காள், “மான்” எனப் பொருள்பட்டது) அவள் மக்களுக்கு எப்போதும் நன்மையையே செய்தாள். தேவைப்பட்ட மக்களுக்குப் பண உதவியும் செய்து வந்தாள். 37 பேதுரு லித்தாவிலிருக்கும்போது, தபித்தா நோய்வாய்ப்பட்டு இறந்தாள். அவர்கள் அவளது சரீரத்தைக் கழுவி மாடியில் ஓர் அறையில் வைத்திருந்தனர். 38 யோப்பாவில் சீஷர்கள் பேதுரு லித்தாவில் இருப்பதைக் கேள்விப்பட்டனர். (லித்தா யோப்பாவுக்கு அருகிலுள்ளது). எனவே அவர்கள் இரண்டு மனிதர்களைப் பேதுருவிடம் அனுப்பினர். அவர்கள் அவனிடம் “விரைந்து எங்களிடம் சீக்கிரம் வாரும்!” என்று வேண்டினர்.
39 பேதுரு தயாராகி அவர்களோடு போனான். அவன் வந்து சேர்ந்தபொழுது அவனை மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். விதவைகள் எல்லோரும் பேதுருவைச் சூழ்ந்து நின்றனர். அவர்கள் அழுதுகொண்டிருந்தனர். தொர்காள் உயிரோடிருந்தபோது செய்த அங்கிகளையும் பிற ஆடைகளையும் பேதுருவுக்குக் காட்டினர். 40 பேதுரு எல்லா மக்களையும் அறைக்கு வெளியே அனுப்பினான். அவன் முழங்காலில் நின்று பிரார்த்தனை செய்தான். பின் அவன் தபித்தாவின் சரீரத்துக்கு நேராகத் திரும்பி, “தபித்தாவே, எழுந்து நில்!” என்றான். அவள் கண்களைத் திறந்தாள். அவள் பேதுருவைக் கண்டபோது, எழுந்து அமர்ந்தாள். 41 அவன் அவளுக்கு நேராகக் கையை நீட்டி, அவள் எழுந்திருக்கும்படி உதவினான். பின் அவன் விசுவாசிகளையும், விதவைகளையும் அறைக்குள் அழைத்தான். அவர்களுக்குத் தபித்தாவைக் காட்டினான். அவள் உயிரோடிருந்தாள்!
42 யோப்பாவிலுள்ள மக்கள் எல்லோரும் இதனை அறிந்தனர். அவர்களில் பலர் கர்த்தரை நம்பினர். 43 பேதுரு யோப்பாவில் பல நாட்கள் தங்கினான். தோல் தொழிலாளியான சீமோன் என்னும் பெயருள்ள ஒரு மனிதனோடு அவன் தங்கினான்.
2008 by World Bible Translation Center