2 சாமுவேல் 13
Tamil Bible: Easy-to-Read Version
அம்னோனும் தாமாரும்
13 தாவீதுக்கு அப்சலோம் என்னும் பெயருள்ள மகன் இருந்தான். அப்சலோமின் சகோதரியின் பெயர் தாமார் ஆகும். தாமார் மிகுந்த அழகுடையவள். தாவீதின் மற்றொரு மகனாகிய அம்னோன் 2 தாமாரை விரும்பினான். தாமார் ஒரு கன்னிகை. அவளுக்கு எந்தத் தீமையையும் விளைவிக்க அம்னோன் நினைக்கவில்லை. எனினும் அவன் அவளை அதிகமாக நேசித்தான். நோயுறுமளவிற்கு அம்னோன் அவள் நினைவானான்.
3 சிமியாவின் மகனாகிய யோனதாப் அம்னோனின் நெருங்கிய நண்பன். (சிமியா தாவீதின் சகோதரன்) யோனதாப் மிகவும் புத்திசாலி. 4 யோனதாப் அம்னோனை நோக்கி, “நாளுக்கு நாள் நீ மெலிந்துக்கொண்டே வருகிறாய். நீ அரசனின் மகன்! உனக்கு உண்பதற்கு ஏராளமான பொருட்கள் இருந்தும், நீ ஏன் எடை குறைந்து காணப்படுகிறாய்? சொல்!” என்றான்.
அம்னோன் யோனதாபை நோக்கி, “நான் தாமாரை மிகவும் விரும்புகிறேன். அவள் எனது ஒன்று-விட்ட-சகோதரன் அப்சலோமின் சகோதரி” என்றான்.
5 யோனதாப் அம்னோனை நோக்கி, “படுக்கைக்குப் போ. நோயுற்றவன் போல் நடி. உன் தந்தை உன்னைக் காணவருவார். அவரிடம், ‘எனது சகோதரியாகிய தாமார் வந்து எனக்கு உணவு தரட்டும். அவள் என் முன்னே உணவு சமைக்கட்டும். அப்போது அதை நான் பார்த்து அவள் கையால் புசிப்பேன்’ என்று சொல்” என்றான்.
6 அவ்வாறே அம்னோன் படுக்கையில் படுத்து நோயுற்றவன்போல் நடித்தான். தாவீது அரசன் அம்னோனைப் பார்க்க வந்தான். அம்னோன் தாவீது அரசனிடம், “தயவு செய்து எனது சகோதரி தாமாரை உள்ளே வரச்செல்லுங்கள். அவள் என் முன்னே எனக்காக இரண்டு அப்பங்கள் சுட்டுதரட்டும். அப்போது அவள் கையால் ஊட்ட அவற்றை புசிப்பேன்” என்றான்.
7 தாவீது தாமாரின் வீட்டிற்கு ஆட்களை அனுப்பினான். செய்தி சொல்ல வந்த ஆட்கள் தாமாரிடம், “உனது சகோதரன் அம்னோன் வீட்டிற்குச் சென்று அவனுக்காக கொஞ்சம் உணவைத் தயாரித்துக் கொடு” என்றார்கள்.
தாமார் அம்னோனுக்காக உணவு தயாரித்தல்
8 எனவே தாமார் தன் சகோதரனாகிய அம்னோனின் வீட்டிற்குச் சென்றாள். அம்னோன் படுக்கையில் இருந்தான். தாமார் மாவை எடுத்து தன் கைகளால் பிசைந்து, அப்பங்களைச் சுட்டாள். அம்னோன் எதிரிலேயே இதனைச் செய்தாள். 9 சமையல் பாத்திரத்திலிருந்து அவற்றை எடுத்து, அம்னோன் உண்பதற்காகப் பரிமாறினாள். ஆனால் அம்னோன் சாப்பிட மறுத்தான். அம்னோன் தன் வேலையாட்களை நோக்கி, “இங்கிருந்து போங்கள், என்னைத் தனிமையில் இருக்கவிடுங்கள்!” என்றான். எனவே எல்லா வேலையாட்களும் அறையை விட்டு வெளியே சென்றனர்.
அம்னோன் தாமாரைக் கற்பழித்தல்
10 அப்போது அம்னோன் தாமாரிடம், “உணவைப் படுக்கையறைக்குள் கொண்டு வந்து உனது கைகளால் எனக்கு உணவூட்டு” என்றான்.
எனவே தாமார் தான் தயாரித்த அப்பங்களை எடுத்துக்கொண்டு தன் சகோதரனின் படுக்கையறைக்குள் சென்றாள். 11 அவள் அம்னோனுக்கு அவ்வுணவைக் கொடுக்க ஆரம்பித்தாள். ஆனால் அவனோ அவளை கையைப் பிடித்திழுத்து அவளிடம், “சகோதரியே, நீ என்னோடு சேர்ந்து படுத்துக்கொள்” என்றான்.
12 தாமார் அம்னோனிடம், “சகோதரனே, வேண்டாம்! அவ்வாறு செய்ய என்னை வற்புறுத்தாதே! அவமானமான இக்காரியத்தைச் செய்யாதே! இஸ்ரவேலில் இந்த கொடிய காரியம் நடக்கக்கூடாது! 13 நான் எனக்கு நேரும் அவமானத்திலிருந்து ஒருபோதும் மீளமுடியாது. நீ ஒரு பயங்கர குற்றவாளி என்று ஜனங்கள் கவனிப்பார்கள். தயவுசெய்து, அரசனோடு பேசு. என்னை நீ மணம் செய்துக்கொள்ள அவர் அனுமதியளிப்பார்” என்றாள்.
14 ஆனால் அம்னோன், தாமார் சொன்னதைக் கேட்க மறுத்தான். அவன் தாமாரைக் காட்டிலும் பலசாலி. அம்னோன் தாமாரை பாலின உறவுகொள்ளும்படி கட்டாயப்படுத்தி அவளை பலவந்தமாய் கற்பழித்தான். 15 பின்பு அம்னோன் தாமாரை வெறுக்க ஆரம்பித்தான். அவளை முன்பு விரும்பினதற்கு அதிகமாக அவளை வெறுக்க ஆரம்பித்தான். அம்னோன் தாமாரை நோக்கி, “எழுந்து இங்கிருந்து போ!” என்றான்.
16 தாமார் அம்னோனிடம், “இப்படி என்னை அனுப்பிவிடாதே. முன்பு நிகழ்ந்ததைக் காட்டிலும் அது தீமையானதாக இருக்கும்” என்றாள்.
ஆனால் அம்னோன், தாமார் சொல்வதைக் கேட்க மறுத்தான். 17 அம்னோன் தன் வேலையாளை அழைத்து, “இப்பெண்ணை இந்த அறைக்கு வெளியே கொண்டு செல்லுங்கள். பின்பு அவளுக்குப் பிறகு கதவை தாழ்ப்பாளிடுங்கள்” என்றான்.
18 அவ்வாறே அம்னோனின் வேலைக்காரன் தாமாரை அறைக்கு வெளியே நடத்தி, கதவைத் தாழிட்டான்.
தாமார் பலநிறங்களுள்ள ஒரு நீண்ட அங்கி அணிந்திருந்தாள். அரசனின் கன்னிப் பெண்கள் (மகள்கள்) இத்தகைய நீண்ட பலவர்ண அங்கி அணிவது வழக்கமாக இருந்தது. 19 தாமார் பலவர்ண அங்கியைக் கிழித்துக்கொண்டு, தலையின் மேல் சாம்பலை வாரிப்போட்டுக்கொண்டாள். பின் அவள் தனது கையைத் தலையில் வைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
20 அப்போது தாமாரின் சகோதரன் அப்சலோம் அவளை நோக்கி, “நீ உனது சகோதரன் அம்னோனிடம் சென்றாயா? அவன் உன்னைத் துன்புறுத்தினானா? அமைதியாக இரு, அம்னோன் உனது சகோதரன். நாங்கள் இது குறித்து கவனித்துக்கொள்வோம். அதிகமாக உன் மனதை வருத்தாதே” என்றான். தாமார் எதுவும் சொல்லவில்லை. அவள் அமைதியாக அப்சலோமின் வீட்டில் தங்கும்படி சென்றாள்.
21 தாவீது அரசன் இச்செய்தியைக் கேள்விப்பட்டான். அவன் மிகவும் கோபப்பட்டான். 22 அப்சலோம் அம்னோனை வெறுத்தான். அப்சலோம் அம்னோனிடம் நல்லதோ கெட்டதோ ஒரு வார்த்தையும் பேசவில்லை, தன் சகோதரியாகிய தாமாரைக் கற்பழித்ததால், அப்சலோம் அம்னோனை வெறுத்தான்.
அப்சலோம் பழிவாங்குதல்
23 இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அப்சலோமின் ஆடுகளிலிருந்து உரோமத்தைக் கத்தரிக்க பாகால்சோரிலிருந்து சிலரை வரவழைத்தான். அதைப் பார்ப்பதற்கென்று அரசனின் எல்லாப் பிள்ளைகளையும் அப்சலோம் அழைத்தான். 24 அப்சலோம் அரசனிடம் போய், “எனது ஆடுகளின் மயிரைக் கத்தரிக்க சிலர் வந்துள்ளனர். உங்கள் வேலையாட்களோடும் வந்து அதைப் பாருங்கள்” என்றான்.
25 தாவீது அரசன் அப்சலோமிடம், “இல்லை மகனே, நாங்கள் எல்லோரும் வரமாட்டோம். உனக்கு அதிகம் தொல்லையாக இருக்கும்” என்றான்.
தாவீதை வரும்படி அப்சலோம் மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். ஆனால் தாவீது வரவில்லை, ஆனாலும் தன் ஆசிகளை அவனுக்கு வழங்கினான்.
26 அப்சலோம், “நீங்கள் வர விரும்பாவிட்டால் எனது சகோதரன் அம்னோனை என்னோடு அனுப்புங்கள்” என்றான்.
தாவீது அரசன் அப்சலோமிடம், “அவன் ஏன் உன்னோடு வரவேண்டும்?” என்று கேட்டான்.
27 அப்சலோம் தாவீதை கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டே இருந்தான். எனவே இறுதியாக, அம்னோனும், அரசனின் மற்ற மகன்களும் அப்சலோமோடு சென்றனர்.
அம்னோன் கொலைச் செய்யப்படுகிறான்
28 பின்பு, அப்சலோம் தன் வேலையாட்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டான். “அம்னோனை கவனித்துக்கொண்டிருங்கள். அவன் குடிக்க ஆரம்பித்து திராட்சைரசப் போதையில் ஆழ்ந்திருக்கும்போது, நான் உங்களுக்குக் கட்டளையிடுவேன். நீங்கள் அம்னோனைத் தாக்கி அவனைக் கொல்லுங்கள். தண்டனை நேரும் என்று அஞ்சாதீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் எனது கட்டளைக்குப் பணிகிறீர்கள். இப்போது, துணிவும் வீரமும் உடையவர்களாய் இருங்கள்” என்றான்.
29 ஆகையால் அப்சலோமின் இளம் வீரர்கள் அவன் கூறியபடியே செய்தார்கள். அவர்கள் அம்னோனைக் கொன்றார்கள். ஆனால் தாவீதின் பிற மகன்கள் தப்பிப் பிழைத்தார்கள். ஒவ்வொரு மகனும் தன் கோவேறு கழுதையின் மேலேறித் தப்பிச் சென்றான்.
தாவீதுக்கு அம்னோனின் மரணச் செய்தி
30 அரசனின் மகன்கள் தங்கள் நகரத்தை நோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்தனர். ஆனால் நிகழ்ந்தவற்றைப் பற்றிய செய்தியை தாவீது அரசன் முந்திக் கேள்விப்பட்டான். ஆனால் அவனறிந்தச் செய்தி, “அரசனின் எல்லா மகன்களையும் அப்சலோம் கொன்றுவிட்டான். ஒருவன் கூட உயிரோடு விடப்படவில்லை” என்பதாகும்.
31 தாவீது அரசன் தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டு தரையில் கிடந்தான். அவனருகே நின்றுக்கொண்டிருந்த அதிகாரிகளும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டனர்.
32 ஆனால் தாவீதின் சகோதரனும், சிமியாவின் மகனுமாகிய யோனதாப், “அரசனின் எல்லா மகன்களும் கொல்லப்பட்டார்கள் என்று நினைக்கவேண்டாம்! அம்னோன் மட்டுமே மரித்தான். அப்சலோமின் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்ததிலிருந்து அப்சலோம் இதற்காகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தான். 33 எனது ஆண்டவனாகிய அரசரே, உங்கள் எல்லா மகன்களும் மரித்துவிட்டனர் என்று நினைக்கவேண்டாம். அம்னோன் மட்டுமே மரித்தான்” என்றான்.
34 அப்சலோம் ஓடிப்போய்விட்டான். நகரகோட்டைச் சுவரின் மீது ஒரு காவலாள் நின்றுக்கொண்டிருந்தான். மலை மேட்டிலிருந்து பலர் வந்துக்கொண்டிருப்பதை அவன் கவனித்தான். 35 எனவே யோனதாப் தாவீது அரசனை நோக்கி, “பாருங்கள், நான் சொன்னது சரியே! அரசனின் மகன்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான்.
36 யோனதாப் அவ்வாறு கூறி முடித்ததும், அரசனின் மகன்கள் வந்து சேந்தனர். அவர்கள் சத்தமாக அழுதுக்கொண்டிருந்தனர். தாவீதும் அவனது அதிகாரிகளும் அழ ஆரம்பித்தனர். அவர்கள் மிகவும் புலம்பி அழுதனர். 37 தாவீது தனது மகனுக்காக (அம்னோனுக்காக) தினசரி அழுதான்.
அப்சலோம் கேசூருக்குத் தப்பிச் செல்லுதல்
அப்சலோம் அம்மியூதின் மகனாகிய தல்மாய் என்னும் கேசூரின் அரசனிடம் ஓடிப் போனான். 38 அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போன பிறகு, அங்கு மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தான். 39 தாவீது அரசன் அம்னோனின் மரணத்திற்குப் பின், ஆறுதல் பெற்றான். ஆனால் அப்சலோமின் பிரிவு அவனை மிகவும் வாட்டியது.
2008 by Bible League International