1 சாமுவேல் 27
Tamil Bible: Easy-to-Read Version
பெலிஸ்தர்களோடு தாவீது வாழ்கிறான்
27 தாவீது தனக்குள், “என்றாவது சவுல் என்னைப் பிடித்துக் கொல்லுவான். எனவே பெலிஸ்தரின் நாட்டிற்குத் தப்பிச் செல்வதுதான் நான் இப்போது செய்ய வேண்டியது. பிறகு சவுல் என்னை இஸ்ரவேலில் தேடுவதை விட்டுவிடுவான். இவ்வாறுதான் இவனிடமிருந்து தப்பிக்கவேண்டும்” என்று நினைத்துக்கொண்டான்.
2 எனவே தாவீதும் அவனது 600 ஆட்களும் இஸ்ரவேலை விட்டு மாயோகின் மகனான ஆகீஸிடம் சென்றனர். ஆகீஸ் காத்தின் அரசன். 3 தாவீதும் அவனது குடும்பமும், ஆட்களும் காத்தில் ஆகீஸோடு வாழ்ந்தனர். தாவீதுடன் அவனது இரு மனைவியரும் இருந்தனர். அவர்கள் யெஸ்ரேலின் அகினோவாளும், கர்மேலின் அபிகாயிலும் ஆவார்கள். அபிகாயில் நாபாலின் விதவை. 4 தாவீது காத்துக்கு ஓடிப் போனதாக ஜனங்கள் வந்து சவுலிடம் சொல்லவே, அவனும் தாவீதைத் தேடுவதை விட்டுவிட்டான்.
5 ஆகீஸிடம் தாவீது, “என்னை உங்களுக்கு பிடிக்குமானால், எனக்கு நாட்டிலுள்ள ஒரு நகரத்தில் ஓரிடத்தைக் கொடுங்கள். நான் உங்கள் வேலைக்காரன். நான் அங்கே வாழ்வேன். உங்களோடு இத்தலைநகரத்தில் வாழமாட்டேன்” என்றான். 6 அன்றைய தினம் ஆகீஸ் தாவீதிற்கு சிக்லாக் நகரத்தைக் கொடுத்தான். அன்று முதல் அந்நகரம் யூதாவின் அரசர்களுக்கு உரியதாய் இருந்தது. 7 அங்கே தாவீது பெலிஸ்தர்களோடு ஓராண்டும் நான்கு மாதமும் வாழ்ந்தான்.
அரசனான ஆகீஸை தாவீது ஏமாற்றுகிறான்
8 தாவீதும் அவனது ஆட்களும் கெசூரியர், கெர்சியர் மற்றும் அமலேக்கியர் ஆகியோர்க்கு எதிராக படையெடுத்தனர். பழங்காலம் முதல் இவர்கள் தேலீம் அருகிலுள்ள சூர் முதல் எகிப்துவரை பரந்துள்ள நாட்டில் வாழ்ந்தனர். அவர்களைத் தோற்கடித்து செல்வங்களை அபகரித்தான். 9 தாவீது அப்பகுதியில் உள்ளவர்களையெல்லாம் தோற்கடித்தான். அவர்களின் ஆடுகள், மாடுகள், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடைகள் போன்றவற்றைப் பறித்து ஆகீஸிடம் கொண்டு வந்தான். யாரையும் அவன் உயிரோடு விடவில்லை.
10 தாவீது இவ்வாறு பலமுறைச் செய்தான். ஆகீஸ் அவனிடம், “யாரோடு எங்கே போரிட்டு இவற்றை எடுத்து வருகிறாய்?” என்று கேட்டான். அதற்கு தாவீது, “நான் யூதாவின் தென்பகுதியில் சண்டையிட்டு வருகிறேன்” என்பான். அல்லது, “நான் யெராமியேலின் தென்பகுதியில் சண்டையிட்டேன்” என்பான். அல்லது “நான் கேனியருடைய தென்பகுதியில் சண்டையிட்டேன்” என்பான். 11 தாவீது காத்திலிருந்து உயிரோடு ஆண் பெண் யாரையும் ஒரு நாளும் கொண்டு வந்ததில்லை. “யாரையாவது உயிரோடு கொண்டு வந்தால் அவர்கள் உண்மையைச் சொல்லிவிடலாம்” என்று நினைத்தான்.
பெலிஸ்தர்களின் நாட்டில் இருக்கும்வரை தாவீது இப்படி செய்து வந்தான். 12 ஆகீஸும் தாவீதை நம்பினான். அவன் தனக்குள்ளே, “இப்போது தாவீதின் சொந்த ஜனங்கள் அவனை வெறுப்பார்கள். இஸ்ரவேலரும் தாவீதை மிகவும் வெறுப்பார்கள். எனவே தாவீது என்றும் எனக்கே சேவைச் செய்வான்” என்று நினைத்துக்கொண்டான்.
2008 by Bible League International