1 கொரி 5
Tamil Bible: Easy-to-Read Version
சபையின் ஒரு தார்மீகச் சிக்கல்
5 பாலுறவு தொடர்பான பாவங்கள் உங்களிடம் உள்ளன, என்று மக்கள் உண்மையாகவே கூறுகின்றனர். அவை தேவனை அறியாத மக்களிடம் கூட இல்லாத தீய வகையான பாலுறவு தொடர்பான பாவங்கள் ஆகும். ஒருவன் அவனது தந்தையின் மனைவியுடன் உறவு கொண்டிருக்கிறான் என்று மக்கள் கூறுகின்றனர். 2 எனினும் நீங்கள் உங்களைக் குறித்துப் பெருமையடைகின்றீர்கள். அதற்குப் பதிலாக, ஆழ்ந்த வருத்தம் கொண்டிருக்க வேண்டும். அந்தப் பாவத்தைச் செய்தவனை உங்களிடமிருந்து விலக்கி வைக்கவேண்டும். 3 என்னுடைய சரீரம் உங்களோடு இருக்கிறதில்லை. ஆனால் ஆவியில் நான் உங்களோடு இருக்கிறேன். உங்களோடு நான் அங்கே இருந்திருந்தால் எப்படிச் செய்திருப்பேனோ, அதே போல இப்பாவத்தைச் செய்த மனிதனை நான் ஏற்கெனவே நியாயம் தீர்த்துவிட்டேன். 4 நம் கர்த்தராகிய இயேசுவின் பெயரால் ஒன்று கூடுங்கள், நான் ஆவியில் உங்களோடு இருப்பேன். நம் கர்த்தராகிய இயேசுவின் வல்லமை உங்களோடு இருக்கும். 5 இந்த மனிதனை சாத்தானிடம் ஒப்படையுங்கள். அப்போது பாவம் நிரம்பிய அவனது சுயம் அழிக்கப்படும். அவனது ஆவியோ கர்த்தர் வரும் நாளில் காக்கப்படும்.
6 நீங்கள் தற்பெருமை பாராட்டுவது நல்லதல்ல. உங்களுக்கு இந்தப் பழமொழி தெரியும். “சிறிது புளிப்பு மாவானது எல்லா மாவையும் புளிக்கவைக்கும்.” 7 புளித்த பழைய மாவை அகற்றுங்கள். இதனால் புதிய மாவாக நீங்கள் ஆகமுடியும். நீங்கள் புளிக்காத அப்பமாக ஏற்கெனவே இருக்கிறீர்கள். ஆம் நமது பஸ்கா ஆட்டுக் குட்டியாகிய [a] கிறிஸ்துவோ ஏற்கெனவே நமக்காகக் கொல்லப்பட்டுள்ளார். 8 எனவே நமது பஸ்கா விருந்தை உண்போமாக. ஆனால் புளித்த பழைய மாவைக்கொண்ட அப்பத்தை உண்ணக் கூடாது. புளித்த மாவு பாவத்தையும் தவறுகளையும் குறிக்கும். ஆனால் நாம் புளிக்காத மாவுடைய அப்பத்தை உண்போம். அது நன்மை, உண்மை ஆகியவற்றைக் குறிக்கும் அப்பமாகும்.
9 பாலுறவில் பாவம் செய்யும் மக்களோடு நீங்கள் தொடர்புகொள்ளக் கூடாது என்று என் கடிதத்தில் எழுதி இருந்தேன். 10 உலக இயல்பின்படி வாழ்கின்ற மக்களோடு நீங்கள் தொடர்புகொள்ளக்கூடாது என்று நான் கருதவில்லை. உலக இயல்பின்படியான வாழ்வை உடைய அம்மக்களும் பாலுறவுரீதியாகப் பாவச் செயல்களைச் செய்கின்றனர். அவர்கள் சுயநலம் உள்ளவர்களாகவோ, பிறரை ஏமாற்றுபவராகவோ உள்ளனர். அவர்கள் உருவங்களை வணங்குகின்றனர். அவர்களைவிட்டு விலக வேண்டுமானால் நீங்கள் இந்த உலகத்தை விட்டுப் போக வேண்டியதிருக்கும். 11 நீங்கள் தொடர்புகொள்ளக்கூடாத மக்களை உங்களுக்கு இனம் காட்டுவதற்காகவே இதை எழுதுகிறேன். தன்னைக் கிறிஸ்துவுக்குள் உங்கள் சகோதரனாகக் கூறியும் பாலுறவில் பாவம் செய்கின்றவனுடனும், தன்னலம் பொருந்தியவனுடனும், உருவங்களை வணங்குபவனோடும், மற்றவர்கள் மீது களங்கம் சுமத்துபவனோடும், மது அருந்துபவனோடும், மக்களை ஏமாற்றுகின்றவனோடும் நீங்கள் தொடர்புகொள்ளக் கூடாது. அப்படிப்பட்டவர்களோடு அமர்ந்து உணவு உட்கொள்ளுதலும் கூடாது.
12-13 சபையின் அங்கம் அல்லாத அந்த மனிதர்களைப் பற்றித் தீர்ப்புக் கூறுவது எனது வேலையல்ல. தேவன் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார். சபையின் அங்கத்தினருக்கு நீங்கள் தீர்ப்பு வழங்கவேண்டும். “தீயவனை உன்னிடமிருந்து விலக்கிவிடு” என்று எழுதப்பட்டிருக்கிறது.
Footnotes
- 1 கொரி 5:7 பஸ்கா அப்பம் இது ஒவ்வொரு ஆண்டும் யூதர்கள் பஸ்காவின்போது உண்ணும் புளிப்பில்லாத அப்பம். பஸ்கா அப்பம் புளிப்பில்லாது இருப்பது போலவே, கிறிஸ்தவர்கள் பாவம் இல்லாது இருப்பார்கள் என்று பவுல் கருதுகிறார்.
2008 by Bible League International