Add parallel Print Page Options

சிறப்பான பண்டிகைகள்

23 மேலும் கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. கீழ்க்கண்ட பண்டிகைகள் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுத்த கூட்டங்கள் என்று அறிவி:

ஓய்வு நாள்

“ஆறு நாட்கள் வேலை செய்யுங்கள். ஏழாவது நாள் ஓய்விற்குரிய சிறப்பு நாள். பரிசுத்தமான சபை கூடும் நாள். அன்று ஒரு வேலையும் செய்யக் கூடாது. இது கர்த்தருக்குரிய சிறப்பு ஓய்வு நாளாக உங்கள் வீடுகளில் விளங்கவேண்டும்.

பஸ்கா

“கர்த்தர் தேர்ந்தெடுத்த விடுமுறை நாட்கள். பரிசுத்தக் கூட்டங்கள் கூடும் குறித்த காலங்களை நீ அறிவிக்கவேண்டும். முதலாம் மாதம் 14ஆம் நாள் அந்தி நேரத்தில் பஸ்கா பண்டிகை நடை பெற வேண்டும்.

புளிப்பில்லா அப்பப் பண்டிகை

“அதே (நிசான்) மாதத்தில் 15ஆம் நாள் புளிப்பில்லாத அப்பப் பண்டிகை வரும். நீங்கள் புளிப்பில்லாத அப்பத்தை ஏழு நாட்கள் உண்ணவேண்டும். பண்டிகையின் முதல் நாளில் சிறப்பு சபைக் கூட்டம் இருக்கும். அந்நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. ஏழு நாட்களிலும் கர்த்தருக்கு தகன பலிகள் வழங்கப்பட வேண்டும். பிறகு ஏழாவது நாளும் சிறப்பான ஒரு சபைக் கூட்டம் இருக்கும். அந்நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது” என்று கூறினார்.

முதல் அறுவடைப் பண்டிகை

மேலும் கர்த்தர் மோசேயிடம், 10 “இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல். நான் கொடுத்த நாட்டிற்குள் நீங்கள் சென்று அங்கே பயிர் செய்து அறுவடை செய்வீர்கள். அப்போது முதல் கதிரில் ஒரு கட்டை ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும். 11 ஆசாரியன் அக்கதிரை கர்த்தருடைய சந்நிதியில் அசைப்பான். பிறகு அது ஏற்றுக்கொள்ளப்படும். ஆசாரியன் அசைவாட்டும் பலியை ஞாயிற்றுக்கிழமை காலையில் செய்ய வேண்டும்.

12 “கதிரை அசைவாட்டும் பலி செய்கிற நாளில் ஒரு வயதுள்ள குறையற்ற ஒரு ஆண் செம்மறி ஆட்டுக்குட்டியைக் கொண்டு வந்து தகன பலியாகக் கொடுக்க வேண்டும். 13 நீங்கள் தானியக் காணிக்கையையும் வழங்க வேண்டும். 16 கிண்ணங்கள் அளவுள்ள அரைத்த மாவையும், ஒலிவ எண்ணெயையும் கலந்து பலியாக வழங்க வேண்டும். மேலும் திராட்சைப் பழரசத்தில் கால் படியும் கொடுக்க வேண்டும். இக்காணிக்கையின் மணமானது கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். 14 புதிய தானியத்தையோ, பழங்களையோ, புதிய மாவால் செய்த அப்பத்தையோ உங்கள் தேவனுக்கு பலிகளை செலுத்துவதற்கு முன் உண்ணக் கூடாது. இது உங்கள் தலைமுறை தோறும் தொடர வேண்டிய சட்டமாகும்.

பெந்தெகோஸ்தே பண்டிகை

15 “அறுவடை செய்த கதிரை கர்த்தருக்கு முன்பு அசைவாட்டும் பலியாக வழங்கிய ஞாயிறு காலையிலிருந்து ஏழு வாரங்களை எண்ணுங்கள். 16 50 நாட்களுக்குப் பிறகு வரும் ஏழாவது ஞாயிற்றுக்கிழமையன்று கர்த்தருக்கு புதிய தானியக் காணிக்கைகளை கொண்டு வாருங்கள். 17 அன்று உங்கள் வீட்டிலிருந்து இரண்டு அப்பங்களைக் கொண்டு வாருங்கள். இவை அசைவாட்டும் பலிக்குரியவை. 16 கிண்ணங்கள் அளவுள்ள மாவைப் புளிப்பு சேர்த்து அந்த அப்பங்களைத் தயார் செய்யப் பயன்படுத்துங்கள். இது முதல் அறுவடையானதும் கர்த்தருக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய காணிக்கையாகும்.

18 “ஒரு காளை, இரண்டு ஆட்டுக்கடா, ஒரு வயது நிறைந்த ஏழு ஆட்டுக் குட்டிகளையும் தகனபலியாக தானியக் காணிக்கையோடு ஜனங்கள் கொடுக்க வேண்டும். அம்மிருகங்களில் எவ்வித குறையும் இருக்கக் கூடாது. அவற்றைத் தகன பலியாக செலுத்த வேண்டும். இதன் வாசனை கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். 19 மேலும் நீங்கள் பாவப்பரிகார பலியாக ஒரு ஆட்டுக் கடாவையும், சமாதான பலியாக ஒருவயதான இரண்டு ஆண் ஆட்டுக்குட்டிகளையும் கொண்டுவர வேண்டும்.

20 “ஆசாரியன் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டும் பலி செலுத்தவேண்டும். முதல் அறுவடையின் தானிய மாவால் செய்த அப்பத்தோடு இரண்டு ஆட்டுக் குட்டிகளையும் அசைவாட்டும் பலியாக செலுத்த வேண்டும். கர்த்தருக்குப் பரிசுத்தமான அவைகள் ஆசாரியர்களுக்கு உரியவை. 21 அதே நாளில் நீங்கள் பரிசுத்தமான சபைக் கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும். அன்று வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது. எக்காலத்திற்கும் உங்கள் தலைமுறைதோறும் இச்சட்டம் தொடர்ந்து இருக்கும்.

22 “நீங்கள் உங்கள் வயலில் அறுவடை செய்யும்போது, வயலின் மூலைகள் வரை சேர்த்து அறுவடை செய்யாதீர்கள். தரையில் விழுந்த தானியங்களை பொறுக்காதீர்கள். அவற்றை ஏழை ஜனங்களுக்கும், அந்நியர்களுக்கும், வழிப்போக்கருக்கும் பயன்படும்படி விட்டுவிடுங்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!” என்று கூறினார்.

எக்காளப் பண்டிகை

23 மேலும் கர்த்தர் மோசேயிடம், 24 “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. ஏழாவது மாதத்தில் முதல் நாள் உங்களுக்கு ஓய்வுக்குரிய சிறப்பான நாள் உண்டு. அன்று பரிசுத்த சபைக் கூட்டமும் உண்டு. அன்று எக்காளத்தை ஊதி சிறப்பு நேரத்தை நினைவூட்ட வேண்டும். 25 அன்று ஒரு வேலையும் செய்யாமல் கர்த்தருக்குரிய தகனபலியைச் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.

பாவப்பரிகார நாள்

26 கர்த்தர் மோசேயிடம், 27 “ஏழாவது மாதத்தின் பத்தாவது நாளில் பாவப்பரிகாரம் செய்யும் பண்டிகை வரும். அப்போது ஒரு பரிசுத்த சபைக் கூட்டம் உண்டு. அன்று வேலை எதையும் செய்யாமலும், சாப்பிடாமலும் இருக்க வேண்டும். கர்த்தருக்குரிய தகன பலியைக் கொண்டு வரவேண்டும். 28 அந்த நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. ஏனென்றால் அது பாவப் பரிகாரநாள். அந்நாளில் ஆசாரியர்கள் கர்த்தருடைய சந்நிதியில் உங்களைச் சுத்திகரிப்பு செய்யும் சடங்குகளைச் செய்வார்கள்.

29 “அன்று எவனாவது உபவாசம் இருக்க மறுத்தால் அவன் தன் ஜனங்களிடமிருந்து தனியே பிரிக்கப்படுவான். 30 இந்நாளில் எவனாவது வேலை செய்தால் அவனை மற்ற ஜனங்களிடமிருந்து நான் அழித்துப் போடுவேன். 31 நீங்கள் எந்த வேலையும் அன்று செய்யக்கூடாது என்பது என்றென்றும் தொடர்ந்து வருகிற சட்டமாகும். 32 அது உங்களுக்கு ஒரு சிறப்பான ஓய்வு நாளாகும். அந்நாளில் வேறு எதுவும் நீங்கள் செய்யாமல் தாழ்மையான மனதுடன் இருக்க வேண்டும். அந்த சிறப்பான பண்டிகை அம்மாதத்தின் ஒன்பதாவது நாள் மாலையிலிருந்து மறுநாள் மாலைவரை தொடர்ந்திருக்கும்” என்று கூறினார்.

கூடாரப் பண்டிகை

33 கர்த்தர் மோசேயிடம், 34 “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு; ஏழாவது மாதத்தின் 15 ஆம் தேதி முதல் ஏழுநாட்கள் கூடாரப் பண்டிகை நடைபெறும். 35 முதல் நாள் பரிசுத்தமான சபைக்கூட்டம் ஒன்று நடைபெறும். அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. 36 நீங்கள் ஏழு நாட்கள் தகன பலியை கர்த்தருக்குக் கொண்டு வர வேண்டும். மறுபடியும் எட்டாவது நாள் பரிசுத்த சபைக் கூட்டம் நடை பெறும். நீங்கள் தகனபலியை கர்த்தருக்குக் கொண்டு வர வேண்டும். இதுவே பரிசுத்த சபைக் கூட்டமாகும். அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது.

37 “இவை கர்த்தரின் சிறப்பான விடுமுறைகள். அந்நாட்களில் பரிசுத்த சபைக் கூட்டங்களும் நடைபெறும். நீங்கள் கர்த்தருக்குத் தகன பலிகளையும், தானிய காணிக்கைகளையும், பானங்களின் பலியையும் சரியான நேரத்தில் கொண்டு வர வேண்டும். 38 கர்த்தரின் ஓய்வு நாட்களை நினைவுபடுத்துவதோடு இந்த விடுமுறை நாட்களையும் நீங்கள் கொண்டாடவேண்டும். மற்ற அன்பளிப்போடு இவைகளையும் கர்த்தருக்குக் கொண்டு வரவேண்டும். சிறப்பான பொருத்தனைகளுக்கான பலிகளையும் கர்த்தருக்குக் கொண்டுவர வேண்டும். கர்த்தருக்காகச் சிறப்பாக கொடுக்கப்படும் பலிகளோடு இவைகளையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

39 “ஏழாவது மாதத்தின் 15வது நாளில் நிலத்தின் விளைச்சலைச் சேர்த்து வைக்கும்போது கர்த்தருக்கு ஏழு நாள் பண்டிகையைக் கொண்டாடுங்கள். முதல் நாளிலும் எட்டாவது நாளிலும் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். 40 முதல் நாள் பழமரங்களில் இருந்து நல்ல பழங்களையும், ஈச்சமரத்தின் கிளைகளையும், தழைத்துள்ள மரக்கிளைகளையும், வில்லோ மரக்கிளைகளையும் எடுத்துகொண்டு வந்து, ஏழு நாட்கள் தேவனாகிய கர்த்தரின் சந்நிதானத்தில் மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். 41 ஒவ்வொரு ஆண்டும் இப்பண்டிகையை கர்த்தருக்கு முன் ஏழு நாட்கள் கொண்டாடுங்கள். இவ்விதிகள் எக்காலத்திற்கும் உரியவையாகும். இதனை நீங்கள் ஏழாவது மாதத்தில் கொண்டாட வேண்டும். 42 நீங்கள் ஏழு நாட்களிலும் தற்காலிகமான கூடாரங்களில் தங்கியிருக்கவேண்டும். இஸ்ரவேலில் பிறந்த அனைத்து ஜனங்களும் இக்கூடாரங்களில் தங்க வேண்டும். 43 ஏனென்றால் எகிப்திலிருந்து உங்களை அழைத்து வரும்போது நீங்கள் தற்காலிகமான கூடாரங்களில் தங்கியிருந்தீர்கள் என்பதை உங்கள் சந்ததியினர் உணர்ந்துகொள்ள வேண்டும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!” என்று கூறினார்.

44 எனவே, மோசே இஸ்ரவேல் ஜனங்களிடம் கர்த்தரைக் கனப்படுத்துகிற பண்டிகைகளைப்பற்றிக் கூறினான்.