Add parallel Print Page Options

ஆபிரகாமின் உதாரணம்

நமக்கெல்லாம் தந்தையான ஆபிரகாம் பற்றி நாம் என்ன சொல்லமுடியும்? அவர் விசுவாசத்தைப் பற்றி என்ன அறிந்திருந்தார்? ஆபிரகாம் தனது செயல்களினால் நீதிமானானால் அவர் தன்னைப்பற்றிப் பெருமையாகப் பேசிக்கொள்ள முடியும். ஆனாலும் தேவனுக்கு முன்னால் பெருமை பாராட்டிக்கொள்ள ஏதுமில்லை. வேதவாக்கியங்கள் என்ன சொல்கிறது? “ஆபிரகாம் தேவனில் விசுவாசம் வைத்தான். அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.” [a]

ஒரு காரியத்தைச் செய்கிறவனுக்கு அவனுக்குரிய சம்பளத்தை யாரும் பரிசாகக் கொடுப்பதில்லை. அதை சம்பாதித்தே அவன் அடைகிறான். தேவனுக்கு வேண்டிய நீதிமானாக ஒருவன் மாற காரியரீதியாக அவன் எதையும் செய்ய முடியாது. அவன் தேவன் மீது விசுவாசம் வைக்க வேண்டும். பின்னரே தேவன் அவனை நீதிமானாக ஏற்பார். தேவன் ஒருவரால்தான் பாவியை நீதிமானாக மாற்ற முடியும். தாவீதும் இதையே சொன்னார். ஒரு மனிதனின் செயல்களை தேவன் கவனிக்காவிட்டால் அவன் உண்மையிலேயே மகிழ்ச்சி அடையலாம். இந்த வழி அவனை நல்லவனாக ஏற்றுக்கொள்ளப்படச் செய்கிறது.

“எப்பொழுது அவர்களின் சட்டத்துக்கு மாறான செயல்கள் மன்னிக்கப்படுகிறதோ,
    எப்பொழுது அவர்களின் பாவங்கள் மூடப்படுகிறதோ,
    அப்பொழுது மக்கள் உண்மையில் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
யாருடைய பாவங்களை தேவன் அவனுக்கு எதிராக எண்ணுவதில்லையோ,
    அவனே உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவன்.” (A)

இந்தப் பாக்கியம் விருத்தசேதனமுள்ளவனுக்கு மட்டும் வருவதில்லை. விருத்தசேதனம் செய்யாதவர்களுக்கும் வரும். ஆபிரகாமின் விசுவாசம் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவனும் நீதிமான் ஆனான். 10 எனவே, இது எவ்வாறு ஆயிற்று? ஆபிரகாமை விருத்தசேதனத்திற்கு முன்னரா, பின்னரா, தேவன் எப்பொழுது ஏற்றுக்கொண்டார்? முன்னர் தானே. 11 தேவன் தன்னை ஏற்றுக்கொண்டார் என்று காட்டுவதற்காக ஆபிரகாம் பின்னர் விருத்தசேதனம் செய்துகொண்டான். விருத்தசேதனம் செய்வதற்கு முன்பாக, விசுவாசத்தின் மூலம் தேவனுடன் சரியாக இருந்தான் என்பதற்கு விருத்தசேதனம் ஒரு அடையாளமாக இருந்தது. எனவே ஆபிரகாம் விருத்தசேதனம் செய்யாத, ஆனால் விசுவாசிக்கிற அனைவருக்கும் தந்தையாக இருக்கிறார். அந்த மக்கள் விசுவாசித்து தேவனுக்கு உகந்த மக்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். 12 விருத்தசேதனம் செய்துகொண்டவர்களுக்கும் அவர் தந்தையாகக் கருதப்படுகிறார். இதில் அவர்கள் விருத்தசேதனம் செய்துகொண்டதால் மட்டும் ஆபிரகாம் தந்தையாகவில்லை. ஆபிரகாம் விருத்தசேதனம் செய்துகொள்ளுமுன் வைத்திருந்த விசுவாசத்தைப் போன்று அவர்களும் விசுவாசம் வைத்திருந்ததால் ஆபிரகாம் அவர்களது தந்தையானான்.

விசுவாசத்தின் மூலம் நீதி

13 ஆபிரகாமுக்கும் அவனது சந்ததியினருக்கும் முழு உலகமும் கிட்டும் என்ற தேவனுடைய வாக்குறுதி கிடைத்தது. ஆபிரகாம் சட்டவிதிகளைக் கடைப்பிடித்ததால் அவனுக்கு அவ்வாக்குறுதி கிடைக்கவில்லை. அவன் தனது விசுவாசத்தால் தேவனுக்கு முன் நீதிமானாக இருந்தபடியால் இது கிடைத்தது. 14 சட்டவிதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலமே தேவனுடைய வாக்குறுதியை மக்கள் பெற்றுக்கொள்ள முடியுமென்றால் பிறகு விசுவாசத்தால், பயனில்லாமல் போகும். ஆபிரகாமுக்கு தேவனுடைய வாக்குறுதியும் பயனில்லாமல் போகும். 15 ஏனென்றால் சட்டவிதியானது, அதைக் கடைப்பிடிக்காதவர்களிடம் தேவனுடைய கோபத்தையே உருவாக்கும். எனவே சட்டவிதி இல்லாவிட்டால் பின்னர் கீழ்ப்படியாமையும் இல்லாமல் போகும்.

16 எனவே மக்கள் தேவனுடைய வாக்குறுதியை விசுவாசத்தின் மூலம் பெறுகின்றனர். இவ்வாறு நிகழ்வதால் இதுகொடையாகிறது. இது இலவசமான கொடையானால் இதனை ஆபிரகாமின் பிள்ளைகளாய் விளங்கும் அத்தனை பேரும் பெற்றுக்கொள்கின்றனர். இவ்வாக்குறுதி மோசேயின் சட்டவிதிகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் கிடைக்கிறது. ஆபிரகாமைப் போன்று விசுவாசம் கொள்ளும் அனைவரும் அதனைப் பெறலாம். அதனால்தான் ஆபிரகாம் அனைவருக்கும் தந்தையாகிறான். 17 “அநேக தேசத்து மக்களுக்கு நான் உன்னைத் தகப்பனாக உருவாக்கினேன்” [b] என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கின்றது. இது தேவனுக்கு முன் உண்மையாகின்றது. தேவனால் இறந்தவரை உயிர்த்தெழச் செய்யமுடியும். இதுவரை இல்லாதவற்றை இருப்பதாகக் கொண்டுவர இயலும் என்பதை ஆபிரகாம் நம்பினான்.

18 ஆபிரகாமுக்குப் பிள்ளைகள் பிறப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் அவன் தேவனை நம்பினான். அதனால்தான் அவன் பல தேசத்து மக்களுக்கும் தந்தையானான். தேவன் “உனக்கு அநேக சந்ததிகள் ஏற்படும்” [c] என்று சொன்னபடி ஆயிற்று. 19 அவன் ஏறக்குறைய 100 வயதுள்ளவனாய் இருந்தான். அவ்வயதில் பிள்ளைகள் உருவாக உயிர் சக்தியில்லை. அதே சமயத்தில் சாராளாலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. ஆபிரகாம் இதைப்பற்றியும் நினைத்துப் பார்த்தான். ஆனால் தேவன் மேல் வைத்த விசுவாசம் மட்டும் குறையவே இல்லை. 20 வாக்குக் கொடுத்தபடி தேவன் நடந்துகொள்வார் என்பதில் ஆபிரகாமுக்கு சந்தேகம் வந்ததே கிடையாது. அவன் தன் விசுவாசத்தை இழக்கவில்லை. அவன் தன் விசுவாசத்தில் மேலும் மேலும் பலமுள்ளவன் ஆனான். தேவனைப் புகழ்ந்தான். 21 தேவன் வாக்குரைத்தபடி செய்ய வல்லவர் என்பதில் உறுதியான நம்பிக்கை உடையவனாக இருந்தான். 22 எனவே “தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டார். அது அவனை தேவனுக்கு முன் நீதிமான் ஆக்கிற்று.” [d] 23 இது ஆபிரகாமுக்காக மட்டும் எழுதப்படவில்லை. நமக்காகவும் எழுதப்பட்டது. 24 நம்முடைய விசுவாசத்தின் பொருட்டு தேவன் நம்மையும் ஏற்றுக்கொள்வார். நம் கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பிய அத்தேவனை நம்புகிற நமக்கும் அப்படியே எண்ணப்படும். 25 நமது பாவங்களுக்காக இயேசு மரணத்திற்கு ஒப்படைக்கப்பட்டார். நம்மை நீதிமான்களாக்க அவர் மரணத்திலிருந்து எழுப்பப்பட்டார்.

Footnotes

  1. ரோமர் 4:3 ஆதி. 15:6-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
  2. ரோமர் 4:17 ஆதி. 17:5-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
  3. ரோமர் 4:18 ஆதி. 15:5-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
  4. ரோமர் 4:22 ஆதி. 15:6-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.