யாத்திராகமம் 24
Tamil Bible: Easy-to-Read Version
தேவனும் இஸ்ரவேலரும் உடன்படிக்கையை செய்துகொள்கிறார்கள்
24 தேவன் மோசேயை நோக்கி, “நீயும் ஆரோன், நாதாப், அபியூ, மற்றும் இஸ்ரவேலின் 70 மூப்பர்களும் (தலைவர்கள்) மலையின் மேல் வந்து என்னைத் தூரத்திலிருந்து தொழுதுகொள்ள வேண்டும். 2 பின்பு மோசே மாத்திரம் கர்த்தரிடம் நெருங்கி வருவான். மற்றவர்கள் கர்த்தரை நெருங்கி மலை மீது ஏறி வரக்கூடாது” என்றார்.
3 கர்த்தர் கூறிய எல்லா விதிகளையும், கட்டளைகளையும் மோசே ஜனங்களுக்குக் கூறினான். எல்லா ஜனங்களும், “கர்த்தர் கூறின எல்லா கட்டளைகளுக்கும் நாங்கள் கீழ்ப்படிவோம்” என்று ஏகமாய் பதிலுரைத்தனர்.
4 எனவே மோசே ஒரு சுருளில் கர்த்தரின் கட்டளைகளை எழுதினான். மறுநாள் காலையில் மோசே எழுந்து மலையடிவாரத்தில், ஒவ்வொரு கல்லும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களைக் குறிக்கும் வகையில் பன்னிரண்டு கற்களால் ஒரு பலிபீடத்தைக் கட்டினான். 5 பின் மோசே இஸ்ரவேலின் வாலிபர்களைப் பலி செலுத்தவதற்காக அழைத்தனுப்பினான். தகன பலியாகவும் சமாதான பலியாகவும் அவர்கள் இளங்காளைகளைப் பலியிட்டனர்.
6 மோசே இம்மிருகங்களின் இரத்தத்தை எடுத்து வைத்தான். அந்த இரத்தத்தில் பாதியைக் கிண்ணங்களில் ஊற்றினான். மீதியைப் பலிபீடத்தின்மேல் தெளித்தான்.
7 விசேஷ உடன்படிக்கை பொருந்திய சுருளை எல்லா ஜனங்களும் கேட்கும்படியாக மோசே வாசித்தான். அதைக் கேட்டதும் ஜனங்கள், “கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த சட்டங்களைக் கேட்டோம். அவற்றிற்குக் கீழ்ப்படிய சம்மதிக்கிறோம்” என்றார்கள்.
8 பலிகளின் இரத்தத்தைச் சேகரித்து வைத்திருந்த கிண்ணத்தை மோசே உயர்த்தி, இரத்தத்தை ஜனங்கள் மீது தெளித்தான். அவன், “கர்த்தர் உங்களோடு ஒரு விசேஷ உடன்படிக்கையைச் செய்தார் என்பதை இந்த இரத்தம் குறிக்கிறது. தேவன் கொடுத்த சட்டங்கள் இந்த உடன்படிக்கையை விளக்குகின்றன” என்றான்.
9 பின்பு மோசே, ஆரோன், நாதாப், அபியூ மற்றும் இஸ்ரவேலின் 70 மூப்பர்களும் (தலைவர்கள்) மலையின் மீது ஏறி, 10 இஸ்ரவேலின் தேவனைக் கண்டனர். அவர் நின்றிருந்த இடம் வானத்தின் நிறமுள்ள தெளிந்த நீல இரத்தினக் கற்பாறை போன்று காணப்பட்டது! 11 இஸ்ரவேலின் மூப்பர் எல்லோரும் தேவனைக் கண்டார்கள். ஆனால் தேவன் அவர்களை அழிக்கவில்லை. அவர்கள் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு குடித்தார்கள்.
தேவனின் கட்டளையைப் பெறுவதற்கு மோசே போகிறான்
12 கர்த்தர் மோசேயை நோக்கி, “மலையின் உச்சியில் என்னிடம் வா. அங்கே எனது கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய நியாயப்பிரமாணத்தையும், கற்பனைகளையும் நான் உனக்கு கொடுப்பேன்” என்றார்.
13 மோசேயும், அவனது உதவியாளனாகிய யோசுவாவும் தேவனின் மலையின் மீது ஏறினார்கள். 14 மோசே இஸ்ரவேல் மூப்பர்களிடம் (தலைவர்களிடம்), “இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள். நாங்கள் உங்களிடம் திரும்பி வருவோம். நான் இல்லாதபோது, ஆரோனும், ஊரும் உங்களைக் கண்காணிப்பார்கள். பிரச்சனை ஏதேனும் வந்தால் அவர்களிடம் செல்லுங்கள்” என்றான்.
மோசே தேவனைச் சந்திக்கிறான்
15 பின்பு மோசே மலையின் மீது ஏறினான். மேகம் மலையைச் சூழ்ந்துகொண்டது. 16 கர்த்தரின் மகிமை சீனாய் மலையின் மீது இறங்கியது. மேகம் மலையை சுற்றி ஆறு நாட்கள் சூழ்ந்திருந்தது. ஏழாவது நாளில் கர்த்தர் மேகத்திலிருந்து மோசேயிடம் பேசினார். 17 இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரின் மகிமையைக் கண்டார்கள். மலை உச்சியின் மீது எரிகிற நெருப்பைப் போன்று அது இருந்தது.
18 பின்பு மோசே மலையின் உச்சியில் மேகத்துக்குள் சென்றான். அங்கே மோசே 40 பகலையும் 40 இரவையும் கழித்தான்.
2008 by Bible League International