Add parallel Print Page Options

சமாரியாவும் இஸ்ரவேலும் தண்டிக்கப்பட வேண்டும்

கர்த்தருடைய வார்த்தை மீகாவிடம் வந்தது. இது யோதாம், ஆகாஸ், எசேக்கியா எனும் அரசர்களின் காலங்களில் நிகழ்ந்தது. இவர்கள் யூதாவின் அரசர்கள். மீகா, மொரேசா என்னும் ஊரைச் சேர்ந்தவன். மீகா இந்தத் தரிசனத்தைச் சமாரியாவையும் எருசலேமையும் குறித்துப் பார்த்தான்.

அனைத்து ஜனங்களே, கவனியுங்கள்!
    பூமியே அதிலுள்ள உயிர்களே, கவனியுங்கள்,
எனது கர்த்தராகிய ஆண்டவர் அவரது பரிசுத்த ஆலயத்திலிருந்து வருவார்.
    எனது ஆண்டவர் உங்களுக்கு எதிரான சாட்சியாக வருவார்.
பாருங்கள், கர்த்தர் அவரது இடத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறார்.
    அவர் இறங்கி வந்து பூமியிலுள்ள உயர்ந்த மேடைகளை மிதிப்பார்.
அவருக்குக் கீழே மலைகள் உருகும்.
    அவை நெருப்புக்கு முன்னாலுள்ள
மெழுகைப் போன்று உருகும்.
    பள்ளத்தாக்குகள் பிளந்து மலைகளிலிருந்து தண்ணீர் பாயும்.
ஏனென்றால், இதற்கு காரணம் யாக்கோபின் பாவம்.
    இதற்கு இஸ்ரவேல் நாடு செய்த பாவங்களும் காரணமாகும்.

சமாரியா, பாவத்தின் காரணம்

யாக்கோபு செய்த பாவத்திற்கு காரணம் என்ன?
    அது சமாரியா,
யூதாவிலுள்ள, வழிபாட்டிற்குரிய இடம் எங்கே?
    அது எருசலேம்.
எனவே, நான் சமாரியாவை வயலிலுள்ள குன்றுகளின் குவியலாக்குவேன்.
    அது திராட்சைக் கொடி நடுவதற்கான இடம்போல் ஆகும்.
நான் சமாரியவின் கற்களைப் பள்ளத்தாக்கில் புரண்டு விழப் பண்ணுவேன்.
    நான் அவளது அஸ்திபாரங்களைத் தவிர எல்லாவற்றையும் அழிப்பேன்.
அவளது அனைத்து விக்கிரகங்களும் துண்டுகளாக உடைக்கப்படும்.
    அவள் வேசித்தனத்தின் சம்பளம் (விக்கிரகங்கள்) நெருப்பில் எரிக்கப்படும்.
நான் அவளது அந்நிய தெய்வங்களின் விக்கிரகங்கள் அனைத்தையும் அழிப்பேன்.
    ஏனென்றால் சமாரியா எனக்கு விசுவாசமற்ற முறையில் அச்செல்வத்தைப் பெற்றாள்.
எனவே அவை எனக்கு விசுவாசம்
    அற்றவர்களாலேயே எடுத்துக்கொள்ளப்படும்.

மீகாவின் பெருந்துக்கம்

என்ன நிகழும் என்பதைப்பற்றி நான் மிகவும் துக்கப்படுவேன்.
    நான் பாதரட்சையும் ஆடையும் இல்லாமல் போவேன்.
நான் ஒரு நாயைப்போன்று அழுவேன்.
    நான் ஒரு பறவையைப்போன்று துக்கங்கொள்வேன்.
சமாரியாவின் காயங்கள் குணப்படுத்தப்பட இயலாது.
    அவளது (பாவம்) நோய் யூதா முழுவதும் பரவியிருக்கிறது.
இது எனது ஜனங்களின் நகரவாசலை அடைந்திருக்கிறது.
    எருசலேமின் எல்லா வழிகளிலும் பரவியிருக்கிறது,
10 இதனைக் காத்திடம் சொல்லவேண்டாம்.
    அக்கோ என்னுமிடத்தில் கதறவேண்டாம்.
பெத்அப்ராவிலே
    புழுதியில் நீ புரளு.
11 சாப்பீரில் குடியிருக்கிறவர்களே வெட்கத்துடன்
    நிர்வாணமாய் உங்கள் வழியிலே போங்கள்.
சாயனானில் குடியிருக்கிறவர்கள் வெளியே வரமாட்டார்கள்.
பெத்ஏசேலில் வாழ்கிறவர்கள் கதறுவார்கள்.
    உங்களின் உதவியை எடுத்துக்கொள்வார்கள்.
12 மாரோத்தில் குடியிருக்கிறவளே பலவீனமாகி
    நல்ல செய்தி வருமென்று எதிர்ப்பார்த்திருந்தார்கள்.
ஏனென்றால், துன்பமானது
    கர்த்தரிடமிருந்து எருசலேமின் நகர வாசலுக்கு வந்திருக்கிறது.
13 லாகீசில் குடியிருக்கிறவளே,
    உங்கள் இரதத்தில் விரைவாகச் செல்லும் குதிரையைப் பூட்டு.
சீயோனின் பாவம் லாகீசில் தொடங்கியது.
    ஏனென்றால் நீ இஸ்ரவேலின் பாவங்களைப் பின்பற்றுகிறாய்.
14 எனவே, நீ மோர்ஷேக் காத்தினிடத்திற்கு கட்டாயமாக பிரிவு உபச்சார
    வெகுமதிகளைக் கொடுக்கவேண்டும்.
அக்சீபின் வீடுகள் இஸ்ரவேல் அரசர்களிடம்
    வஞ்சனை செய்யும்.
15 மரேஷாவில் குடியிருக்கிறவளே,
    நான் உனக்கு எதிராக ஒருவனைக் கொண்டு வருவேன்.
அவன் உனக்கு உரிய பொருட்களை எடுத்துக்கொள்வான்.
    அதுல்லாமிற்குள் இஸ்ரவேலின் மகிமை (தேவன்) வரும்.
16 எனவே உனது முடியை வெட்டு, உன்னை மொட்டையாக்கிக்கொள்.
    ஏனென்றால், நீ அன்பு செலுத்துகிற உன் குழந்தைகளுக்காக நீ கதறுவாய்.
நீ கழுகைப்போன்று முழுமொட்டையாக இருந்து உனது துக்கத்தைக் காட்டு.
    ஏனென்றால் உனது பிள்ளைகள் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.