சங்கீதம் 60
Tamil Bible: Easy-to-Read Version
“உடன்படிக்கையின் லில்லி” என்ற பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த பாடல். இது போதிப்பதற்குரியது. தாவீது ஆராம் நகராயீம், ஆராம் சோபா ஆகிய நாட்டினரோடு யுத்தம் பண்ணிய காலத்தில், யோவாப் திரும்பிவந்து 12,000 ஏதோமிய வீரர்களை உப்புப் பள்ளத்தாக்கில் வெட்டிக் கொன்றபோது பாடியது.
60 தேவனே, எங்களோடு சினங்கொண்டீர், எனவே எங்களை நிராகரித்து அழித்தீர்.
தயவாய் எங்களிடம் திரும்பி வாரும்.
2 நீர் பூமியை அசைத்து அதைப் பிளக்கப் பண்ணினீர்.
நம் உலகம் பிரிந்து விழுந்தது.
அருள் கூர்ந்து அவற்றை ஒன்றாக இணைத்து விடும்.
3 நீர் உமது ஜனங்களுக்குப் பல தொல்லைகளை அனுமதித்தீர்.
நாங்களோ தள்ளாடி விழுகின்ற குடிவெறியர்களைப் போலானோம்.
4 உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்களை நீர் எச்சரித்தீர்.
அவர்கள் இப்போது பகைவனிடமிருந்து தப்பிச்செல்ல முடியும்.
5 உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி எங்களைக் காப்பாற்றும்!
என் ஜெபத்திற்குப் பதில் தாரும், நீர் நேசிக்கிற ஜனங்களைக் காப்பாற்றும்.
6 தேவன் அவரது ஆலயத்தில் பேசினார்:
“நான் யுத்தத்தில் வென்று, அவ்வெற்றியால் மகிழ்வேன்!
இந்நாட்டை எனது ஜனங்களோடு பகிர்ந்துகொள்வேன்.
அவர்களுக்கு சீகேமைக் கொடுப்பேன்.
அவர்களுக்கு சுக்கோத் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.
7 கீலேயாத்தும், மனாசேயும் என்னுடையவை.
எப்பிராயீம் எனது தலைக்குப் பெலன்.
யூதா என் நியாயத்தின் கோல்.
8 மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம்.
ஏதோம் என் மிதியடிகளைச் சுமக்கும் அடிமை.
நான் பெலிஸ்தரை வென்று என் வெற்றியை முழக்கமிடுவேன்!”
9-10 தேவனே நீர் எங்களை விட்டு விலகினீர்!
வலிய, பாதுகாவலான நகரத்திற்குள் யார் என்னை அழைத்துச் செல்வார்?
ஏதோமிற்கு எதிராகப் போர் செய்ய யார் என்னை வழி நடத்துவார்?
தேவனே, நீர் மட்டுமே எனக்கு உதவக்கூடும்.
ஆனால் நீரோ எங்களை விட்டு விலகினீர்!
நீர் எங்கள் சேனையோடு செல்லவில்லை.
11 தேவனே, எங்கள் பகைவரை வெல்ல எங்களுக்கு உதவும்!
மனிதர்கள் எங்களுக்கு உதவ முடியாது!
12 தேவன் மட்டுமே எங்களைப் பலப்படுத்த முடியும்.
தேவன் எங்கள் பகைவர்களை வெல்ல முடியும்.
2008 by Bible League International