சங்கீதம் 5
Tamil Bible: Easy-to-Read Version
புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்
5 கர்த்தாவே, என் வார்த்தைகளைக் கேளும்.
நான் சொல்ல முயற்சிப்பதை புரிந்துகொள்ளும்.
2 எனது தேவனாகிய அரசனே,
என் ஜெபத்தைக் கேளும்.
3 கர்த்தாவே, என் அன்பளிப்புகளை காலைதோறும் உமக்கு படைக்கிறேன்.
உம்மை உதவிக்காக நோக்குகிறேன், நீர் என் ஜெபங்களைக் கேளும்.
4 தேவனே, தீய ஜனங்கள் உம்மருகே வருவதை நீர் விரும்புகிறதில்லை.
தீய ஜனங்கள் உம்மை ஆராதிக்க முடியாது.
5 மூடர் உம்மிடம் வர இயலாது,
தீமை செய்யும் ஜனங்களை நீர் வெறுக்கிறீர்.
6 பொய் கூறும் ஜனங்களை நீர் அழிக்கிறீர்.
பிறரைத் தாக்குவதற்காக இரகசியமாகத் திட்டமிடுவோரை கர்த்தர் வெறுக்கிறார்.
7 கர்த்தாவே, உமது மிகுந்த இரக்கத்தினால் நான் உமது ஆலயத்திற்கு வருவேன்.
உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கித் தலை தாழ்த்தி அச்சத்தோடும், மரியாதையோடும் உம்மை வணங்குவேன்.
8 கர்த்தாவே, சரியான வாழ்க்கை வாழ உமது வழியைக்காட்டும்.
ஜனங்கள் எனது குறைகளைத் தேடுகிறார்கள்.
எனவே நான் எவ்வாறு வாழ நீர் விரும்புகிறீரோ, அவ்வழியை எனக்குக் காட்டும்.
9 அந்த ஜனங்கள் உண்மை பேசுவதில்லை அவர்கள் உண்மையைப் புரட்டும் பொய்யர்கள்.
அவர்கள் வாய்கள் திறந்த கல்லறைகளைப் போன்றவை.
அவர்கள் பிறரிடம் நயமான மொழிகளைச் சொல்வார்கள்.
ஆனால், அவர்கள் கண்ணியில் சிக்கவைப்பதற்காகவே அவ்வாறு செய்வார்கள்.
10 தேவனே, அவர்களைத் தண்டியும்.
அவர்கள் தங்கள் வலையிலேயே விழட்டும்.
அந்த ஜனங்கள் உமக்கெதிராகத் திரும்புகிறார்கள்.
எனவே அவர்களின் எண்ணிக்கையற்ற குற்றங்களுக்காக அவர்களைத் தண்டியும்.
11 ஆனால் தேவனை நம்பும் ஜனங்கள் களிகூரட்டும்.
என்றென்றும் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும்.
தேவனே, உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களைப் பாதுகாத்து, பெலனைத் தாரும்.
12 கர்த்தாவே, நல்லோருக்கு நீர் நன்மை செய்தால்
அவர்களைக் காக்கும் பெருங்கேடகமாவீர்.
2008 by Bible League International