கொலோசெயர் 4
Tamil Bible: Easy-to-Read Version
4 எஜமானர்களே! உங்கள் வேலைக்காரர்களுக்கு நீதியும் செம்மையுமானதைச் செய்யுங்கள். பரலோகத்தில் உங்களுக்கு ஒரு எஜமானர் இருக்கிறார் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
கிறிஸ்தவர்களுக்குப் போதித்த கருத்துக்கள்
2 தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது, மனதைத் தயார் நிலையில் வைத்திருங்கள். மேலும் தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். 3 எங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். தேவனுடைய செய்தியை நாங்கள் மக்களிடம் பரப்பிட வாய்ப்பு அளிக்குமாறு அவரை வேண்டுங்கள். கிறிஸ்துவைப் பற்றி தேவன் வெளிப்படுத்தியிருக்கிற இரகசிய உண்மையை நாங்கள் பிரச்சாரம் செய்ய பிரார்த்தனை செய்யுங்கள். இதனைப் பிரச்சாரம் செய்ததால் நான் சிறையில் இருக்கிறேன். 4 இந்த உண்மையை நான் மக்களிடம் தெளிவுபடுத்த முடியும். இதுவே நான் செய்ய வேண்டியதாகும்.
5 கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களோடு சேர்ந்து வாழும்போது எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதில் ஞானமுடையவர்களாக இருங்கள். உங்களால் முடிந்தவரை நல்வழியில் உங்கள் காலத்தைச் செலவு செய்யுங்கள். 6 நீங்கள் பேசும்போது கருணையுடனும், ஞானத்துடனும் இருங்கள். பிறகு, உங்களால் எவருக்கும் பதில் சொல்ல இயலும்.
பவுலோடிருந்த மக்களைப் பற்றிய செய்தி
7 தீகிக்கு கிறிஸ்துவுக்குள் என் அன்பான சகோதரன். கர்த்தருக்குள் அவன் நம்பிக்கைக்கு உரிய ஊழியன். என்னோடு பணியாற்றும் கர்த்தரின் வேலையாள். என் வாழ்வில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற எல்லாவற்றையும் அவன் உங்களுக்குக் கூறுவான். 8 அதற்காகத் தான் அவனையும் அனுப்புகிறேன். நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். உங்களை உற்சாகப்படுத்த அவனை அனுப்புகிறேன். 9 ஒநேசிமுவோடு அவனை அனுப்புகிறேன். ஒநேசிமுவும் கிறிஸ்துவுக்குள் எனது அன்பான நம்பிக்கைக்கு உரிய சகோதரன். அவன் உங்கள் கூட்டத்திலிருந்து வந்தவன். எங்களைப் பற்றிய செய்திகளை எல்லாம் தீகிக்குவும், ஒநேசிமுவும் உங்களிடம் கூறுவார்கள்.
10 அரிஸ்தர்க்கு தன் வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிக்கிறான். அவன் என்னோடு சிறையில் இருக்கிறான். பர்னபாவின் உறவினனான மாற்கும் வாழ்த்து கூறுகிறான். நான் ஏற்கெனவே சொன்ன தகவல்களின்படி இவன் வந்தால் வரவேற்றுக்கொள்ளுங்கள். 11 இயேசுவும் வாழ்த்து கூறுகிறான். (யுஸ்து என்பது அவனது மறு பெயர்) யூதர்களாகிய இவர்கள் தேவனுடைய இராஜ்யத்திற்காக என்னோடு பாடுபடுகிறார்கள். இவர்கள் எனக்கு ஆறுதலாக இருக்கிறார்கள்.
12 எப்பாப்பிராவும் வாழ்த்து கூறுகிறான். அவன் இயேசு கிறிஸ்துவின் ஊழியன். அவனும் உங்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன். அவன் எப்போதும் உங்களுக்காகவே பிரார்த்தனை செய்கிறான். நீங்கள் ஆன்மீக வாழ்வில் முழுமை பெறவும், தேவன் விரும்புகிறவைகளை நீங்கள் பெற வேண்டும் என்றும் அவன் பிரார்த்திக்கிறான். 13 அவன் உங்களுக்காகவும் லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும் கடுமையாகப் பாடுபட்டான் என அவனுக்காக நான் சான்றுரைக்கிறேன். 14 தேமாவும் நமது அன்பான நண்பனும் மருத்துவனுமான லூக்காவும் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்கள்.
15 லவோதிக்கேயாவில் உள்ள சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்து கூறுங்கள். நிம்பாவுக்கும் அவனது வீட்டில் கூடுகிற சபைக்கும் வாழ்த்து கூறுங்கள். 16 உங்களிடத்தில் இந்த கடிதம் வாசிக்கப்பட்ட பின்பு லவோதிக்கேயா சபைக்கும் வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள். நான் லவோதிக்கேயா சபைக்கு எழுதிய நிருபத்தையும் வாசியுங்கள். 17 அர்க்கிப்பைக் கண்டு, “கர்த்தர் நமக்குக் கொடுத்த பணியை முழுமையாய் செய்வதில் உறுதியாய் இரு” என்று சொல்லுங்கள்.
18 பவுலாகிய நானே என் கையால் எழுதி உங்களை வாழ்த்துகிறேன். நான் சிறையில் இருப்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். தேவனுடைய கிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.
2008 by Bible League International