ஓசியா 12
Tamil Bible: Easy-to-Read Version
கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதிராக இருக்கிறார்
12 எப்பிராயீம் தனது காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறான். இஸ்ரவேல் நாள் முழுவதும் “காற்றைத் துரத்திக்கொண்டிருக்கிறான்.” ஜனங்கள் மேலும் மேலும் பொய்களைச் சொல்கிறார்கள். அவர்கள் மேலும் மேலும் களவு செய்கிறார்கள். அவர்கள் அசீரியாவோடு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டார்கள். அவர்கள் தங்கள் ஒலிவ எண்ணெயை எகிப்துக்கு எடுத்துச் சென்றுக்கொண்டிருக்கிறார்கள்.
2 கர்த்தர் கூறுகிறார், “என்னிடம் இஸ்ரவேலுக்கு எதிராக ஒரு வாக்குவாதம் உண்டு. யாக்கோபு தான் செய்த செயலுக்காக தண்டிக்கப்படவேண்டும். அவன் செய்த தீயவற்றுக்காக அவன் தண்டிக்கப்படவேண்டும். 3 யாக்போபு இன்னும் தன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தன் சகோதரனோடு தந்திரம் செய்யத் தொடங்கினான். யாக்கோபு ஒரு பலமான இளைஞனாக இருந்தான். அந்தக் காலத்தில் அவன் தேவனோடு போராடினான். 4 யாக்கோபு தேவனுடைய தூதனோடு போராடி வென்றான். அவன் உதவி கேட்டுக் கதறினான். அது பெத்தேலில் நடந்தது. அந்த இடத்தில் அவன் நம்மோடு பேசினான். 5 ஆம், யேகோவா படைகளின் தேவன். அவரது பெயர் யேகோவா (கர்த்தர்). 6 எனவே, உனது தேவனிடம் திரும்பி வா. அவருக்கு விசுவாசமாக இரு. நல்லவற்றைச் செய்! நீ எப்பொழுதும் உன் தேவனிடம் நம்பிக்கையாய் இரு!
7 “யாக்கோபு ஓர் உண்மையான வியாபாரி. அவன் தன் நண்பனைக்கூட ஏமாற்றுகிறான். அவனது தராசும் கள்ளத்தராசு. 8 எப்பிராயீம் சொன்னான் ‘நான் செல்வந்தன்! நான் உண்மையான செல்வத்தைக் கண்டுபிடித்துள்ளேன்! எனது குற்றங்களை யாரும் கண்டுகொள்ள முடியாது. யாரும் எனது பாவங்களைத் தெரிந்து கொள்ளமாட்டான்.’
9 “ஆனால் நீ எகிப்து தேசத்திலிருந்த நாள் முதல், நான் உன் தேவனாகிய கர்த்தராயிருந்திருக்கிறேன், நான் உன்னைப் பண்டிகை நாட்களைப் போன்று (ஆசாரிப்பு கூடார நாட்களைப் போல்) கூடாரங்களில் தங்கச் செய்வேன். 10 நான் தீர்க்கதரிசிகளோடு பேசினேன். நான் அவர்களுக்குப் பல தரிசனங்களைக் கொடுத்தேன். எனது பாடங்களை உனக்குக் கற்பிக்கப் பல வழிகளைத் தீர்க்கதரிசிகளுக்குக் கொடுத்தேன். 11 ஆனால் கீலேயாத் ஜனங்கள் பாவம் செய்தார்கள். அந்த இடத்தில் ஏராளமான பயங்கர விக்கிரகங்கள் இருக்கின்றன. ஜனங்கள் கில்காலில் காளைகளுக்குப் பலிகளைக் கொடுக்கிறார்கள். அந்த ஜனங்களுக்கு ஏராளமான பலிபீடங்கள் இருக்கின்றன. வயல் வரப்புகளில் உள்ள கல் குவியல்களைப் போன்று வரிசை வரிசையாகப் பலிபீடங்கள் இருக்கின்றன.
12 “யாக்கோபு ஆராம் நாட்டுக்கு ஓடிப்போனான். அந்த இடத்தில் இஸ்ரவேல் ஒரு மனைவிக்காக வேலை செய்தான். இன்னொரு மனைவிக்காக அவன் ஆடு மேய்த்தான். 13 ஆனால் கர்த்தர் தீர்க்கதரிசியை உபயோகித்து இஸ்ரவேலை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தார். கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியைப் பயன்படுத்தி இஸ்ரவேலைப் பத்திரமாகப் பாதுகாத்தார். 14 ஆனால் எப்பிராயீம் கர்த்தருடைய மிகுந்த கோபத்துக்குக் காரணமாக இருந்தான். எப்பிராயீம் பலரைக் கொன்றான். எனவே அவன் தன் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படுவான். அவனது ஆண்டவர் (கர்த்தர்) அவன் அவமானம் அடையும்படிச் செய்வார்.”
2008 by Bible League International