எஸ்றா 7
Tamil Bible: Easy-to-Read Version
எஸ்றா எருசலேமிற்கு வருகிறான்
7 பெர்சியாவின் அரசனான அர்தசஷ்டா அரசாளும் காலத்தில், இவையெல்லாம் நடந்து முடிந்த பிறகு, செராயாவின் மகன் எஸ்றா, பாபிலோனில் இருந்து எருசலேமுக்கு வந்தான். இந்த செராயா அசரியாவின் மகன், அசரியா இல்க்கியாவின் மகன், 2 இல்க்கியா சல்லூமின் மகன், சல்லூம் சாதோக்கின் மகன், சாதோக் அகிதூபின் மகன், 3 அகிதூப் அமரியாவின் மகன், அமரியா அசரியாவின் மகன், அசரியா மெராயோதின் மகன், 4 மெராயோத் சேராகியாவின் மகன்,சேராகியா ஊசியின் மகன், ஊசி புக்கியின் மகன். 5 புக்கி அபிசுவாவின் மகன், அபிசுவா பினெகாசின் மகன், பினெகாசு எலெயாசாரின் மகன், எலெயாசார் தலைமை ஆசாரியனான ஆரோனின் மகன். 6 எஸ்றா எருசலேமிற்குப் பாபிலோனில் இருந்து வந்தான். எஸ்றா ஒரு போதகன். அவனுக்கு மோசேயின் சட்டங்கள் நன்றாகத் தெரியும். மோசேயின் சட்டங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரால் கொடுக்கப்பட்டவை. அரசனான அர்தசஷ்டா எஸ்றா கேட்ட எல்லாவற்றையும் கொடுத்தான். ஏனென்றால், கர்த்தர் எஸ்றாவோடு இருந்தார். 7 ஏராளமானவர்கள் எஸ்றாவோடு வந்தனர். அவர்கள் ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாயில் காவலர்கள், ஆலயப் பணியாளர்கள் ஆவார்கள். இந்த இஸ்ரவேல் ஜனங்கள் எருசலேமிற்கு அரசன் அர்தசஷ்டாவின் ஏழாவது ஆட்சியாண்டில் வந்தனர். 8 அர்தசஷ்டாவின் ஏழாவது ஆட்சியாண்டின் ஐந்தாவது மாதத்தில் எஸ்றா எருசலேமிற்கு வந்தான். 9 எஸ்றாவும் அவனது குழுவும் முதல் மாதத்தின் முதல் நாளில் பாபிலோனை விட்டு நீங்கினார்கள். அவன் எருசலேமிற்கு ஐந்தாம் மாதத்தின் முதல் நாளில் வந்துசேர்ந்தான். தேவனாகிய கர்த்தர் எஸ்றாவோடு இருந்தார். 10 எஸ்றா எப்பொழுதும் கர்த்தருடையச் சட்டத்திற்குக் கீழ்ப்படிவதிலும் கற்பதிலும் கவனம் செலுத்திவந்தான். எஸ்றா இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தருடைய கட்டளைகளையும் விதிகளையும் கற்றுத்தர விரும்பினான். அச்சட்டங்களைப் பின்பற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவவும் விரும்பினான்.
அர்தசஷ்டா எஸ்றாவிற்கு எழுதிய கடிதம்
11 எஸ்றா ஒரு ஆசாரியனும், போதிக்கிறவனுமாய் இருந்தான். இஸ்ரவேலர்களுக்குக் கர்த்தர் கொடுத்த கட்டளைகளைப் பற்றியும், சட்டங்களைப் பற்றியும் அதிகம் தெரிந்து வைத்திருந்தான். அர்தசஷ்டா அரசன் ஆசாரியனான எஸ்றாவிற்குக் கொடுத்த கடிதத்தின் செய்தி இதுதான்:
12 அர்தசஷ்டா அரசனிடமிருந்து, ஆசாரியனும், பரலோகத்தின் தேவனுடைய சட்டங்களின் போதகனுமான எஸ்றாவுக்கு, வாழ்த்துக்கள்!
13 நான் பின்வருமாறு கட்டளையிடுகிறேன். எந்த ஒரு மனிதனோ, ஆசாரியனோ, அல்லது அரசாங்கத்திற்குள் வாழும் லேவியர்களில் யாராயினும், எஸ்றாவோடு எருசலேம் போக விரும்பினால், போகலாம்.
14 எஸ்றா, நானும் எனது 7 ஆலோசகர்களும் உன்னை அனுப்புகிறோம். நீ யூதாவிற்கும் எருசலேமிற்கும் போக வேண்டும். உங்கள் தேவனுடைய சட்டங்களுக்கு உங்கள் ஜனங்கள் எவ்வாறு கீழ்ப்படிகிறார்கள் என்பதைப் பார். உன்னோடு அந்தச் சட்டங்கள் உள்ளன.
15 நானும் எனது ஆலோசகர்களும் பொன்னும், வெள்ளியும் இஸ்ரவேலின் தேவனுக்குக் கொடுக்கிறோம். தேவன் எருசலேமில் வசிக்கிறார். இந்தப் பொன்னையும் வெள்ளியையும் நீ எடுத்துச் செல்லவேண்டும். 16 பாபிலோனிய எல்லைக்குட்பட்ட அனைத்து இடங்களுக்கும் நீ போகவேண்டும். உங்கள் ஜனங்களிடமிருந்து அன்பளிப்புகளைச் சேகரியுங்கள், ஆசாரியர்களிடமிருந்தும், லேவியர்களிடமிருந்தும் அன்பளிப்புகளைச் சேகரியுங்கள். இவை எருசலேமில் உள்ள அவர்களுடைய தேவனுடைய ஆலயத்திற்கு உரியவை.
17 இப்பணத்தால் காளைகள், ஆட்டுக் குட்டிகள், ஆட்டுக்கடாக்கள் ஆகியவற்றை வாங்குங்கள். தானியக் காணிக்கைகளையும், பானங்களின் காணிக்கைகளையும் வாங்கி மற்ற பலிகளோடுக் கொடுங்கள். எருசலேமில் உள்ள உங்கள் தேவனுடைய ஆலயப் பலிபீடத்தில் அவற்றைப் பலியிடுங்கள். 18 இதில் மிச்சமுள்ள பொன்னையும் வெள்ளியையும், நீயும் மற்ற யூதர்களும் உங்கள் விருப்பம் போல் செய்யலாம். உங்கள் தேவனுக்கு விருப்பமானபடி அவற்றைச் செலவு செய்யலாம். 19 இவை எல்லாவற்றையும் எருசலேமின் தேவனிடத்தில் எடுத்துச் செல்லுங்கள். இவை அனைத்தும் உங்கள் தேவனுடைய ஆலயத்தில் ஆராதனைக்கு உரியவை. 20 உங்கள் தேவனுடைய ஆலயத்திற்குத் தேவையான வேறு எதையும் நீங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். உனக்குத் தேவையான எதையும் வாங்கிக் கொள்ள அரண்மனை கருவூலத்திலுள்ள பணத்தைப் பயன்படுத்தலாம்.
21 இப்போது, அரசனாகிய அர்தசஷ்டா, இந்த கட்டளையைத் தருகிறேன்: ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியில், அரசப் பணத்தை வைத்து இருப்பவர்களுக்கு ஒரு கட்டளை இடுகிறேன். எஸ்றா கேட்பவற்றைக் கொடுங்கள். எஸ்றா ஒரு ஆசாரியன், அதோடு பரலோகத்தின் தேவனுடைய சட்டங்களைக் கற்பிக்கும் போதகன். இதனை விரைவாகவும் முழுமையாகவும் செய்க. 22 எஸ்றாவிற்கு இவற்றைக் கொடுங்கள்: 100 தாலந்து வெள்ளி, 100 கலக் கோதுமை, 100 கலம் திராட்சை ரசம், 100 கலம் எண்ணெய் வேறு ஏதாவது கேட்டாலும் கொடுங்கள். தேவையான உப்பையும் கொடுங்கள். 23 எஸ்றா அடையவேண்டுமென்று பரலோகத்தின் தேவன் கட்டளையிட்ட எதையும், நீங்கள் எஸ்றாவிற்கு விரைவாகவும், முழுவதுமாகவும் கொடுக்கவேண்டும். இதனை பரலேகத்தின் தேவனுடைய ஆலயத்திற்காகச் செய்யுங்கள். எனது அரசின் மீதோ, என் மகன்களின் மீதோ தேவன் கோபமுறுவதை நான் விரும்பவில்லை.
24 ஆலயத்தில் உள்ள ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாயில் காவலர்கள், ஆலயப் பணியாளர்கள், மற்றும் தேவனுடைய ஆலயத்தில் உள்ள மற்ற வேலைக்காரர்கள் ஆகியவர்களை வரிசெலுத்த வைப்பது சட்ட விரோதமானது (சட்டத்திற்குப் புறம்பானது) என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். அவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை. அரசனைக் கௌரவப்படுத்தும் பொருட்டு பணம் தரத் தேவையில்லை. எந்த விதமான திறையும் செலுத்த வேண்டியதில்லை. 25 எஸ்றா, நீ தேவன் கொடுத்த ஞானத்தைப் பயன்படுத்திப் பொதுத்துறை நீதிபதிகளையும், மத நீதிபதிகளையும் தேர்ந்தெடுக்கிற அதிகாரத்தை உனக்குத் தருகிறேன். இவர்கள் ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் புறத்தில் வாழுகின்ற ஜனங்களுக்கு நீதிபதிகளாக இருப்பார்கள். அவர்கள் உங்கள் தேவனுடைய சட்டங்களைத் தெரிந்த அனைவருக்கும் நியாயம் தீர்க்கவேண்டும். எவருக்காவது அந்தச் சட்டங்கள் தெரியாமல் இருந்தால் அவர்களுக்கு இந்த நீதிபதிகள் அவற்றைக் கற்பிக்கவேண்டும். 26 எவராவது உங்கள் தேவனுடைய சட்டங்களுக்கோ, அரசரின் சட்டங்களுக்கோ கீழ்ப்படியாமல் இருந்தால், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்களின் குற்றங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு மரணதண்டனை, நாடு கடத்துதல், சொத்து பறிமுதல், சிறையிடுதல் போன்றவைத் தரப்படும்.
எஸ்றா தேவனைத் துதிக்கிறான்
27 கர்த்தர் ஆசீர்வதிக்கப்பட்டவர், நமது முற்பிதாக்களின் தேவன் ஆசீர்வதிக்கப்பட்டவர். எருசலேமில் கர்த்தருடைய ஆலயத்தைப் பெருமைப்படுத்தும் எண்ணத்தை அரசனின் மனத்தில் உருவாக்கியவர் தேவன். 28 என் மீது கர்த்தர் தனது மெய்யான அன்பை அரசனின் முன்பும், ஆலோசகர்கள் முன்பும் காட்டினார். தேவனாகிய கர்த்தர் என்னோடு இருந்தார், எனவே நான் தையரியமாக இருந்தேன். எருசலேமிற்கு என்னோடு வர இஸ்ரவேல் தலைவர்களை நான் கூட்டினேன்.
2008 by Bible League International