எரேமியா 26
Tamil Bible: Easy-to-Read Version
ஆலயத்தில் எரேமியாவின் பாடம்
26 யூதாவின் அரசனாக யோயாக்கீம் வந்த முதலாம் ஆட்சி ஆண்டில் கர்த்தரிடமிருந்து இந்த வார்த்தை வந்தது. யோயாக்கீம் யோசியாவின் மகனாக இருந்தான். 2 கர்த்தர், “எரேமியா, கர்த்தருடைய ஆலயப் பிரகாரத்தில் எழுந்து நில். கர்த்தருடைய ஆலயத்திற்குத் தொழுதுகொள்ள வரும் யூதாவின் ஜனங்கள் அனைவரிடமும் இந்த வார்த்தையைக் கூறு. நான் சொல்லச் சொன்ன எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொல். எனது வார்த்தையில் எந்தப் பகுதியையும் விட்டுவிடாதே. 3 ஒருவேளை எனது வார்த்தையை அவர்கள் கேட்டு அதற்கு அடிபணியலாம். ஒருவேளை அவர்கள் தமது தீயவாழ்வை நிறுத்தலாம். அவர்கள் மாறினால், பிறகு நான் அவர்களைத் தண்டிப்பதற்காக வைத்திருக்கும் திட்டங்களையும் மாற்றுவேன். அந்த ஜனங்கள் ஏற்கனவே செய்த தீயச்செயல்களுக்காகத்தான் நான் அவர்களைத் தண்டிக்க வேண்டும் எனத் திட்டமிட்டேன். 4 நீ அவர்களிடம் சொல்லுவாய், ‘இதுதான் கர்த்தர் சொன்னது: நான் உங்களிடம் எனது போதனைகளைக் கொடுத்தேன். நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து, என் போதனைகளைப் பின்பற்றவேண்டும். 5 எனது ஊழியக்காரர்கள் சொல்லுகிறவற்றை நீங்கள் கேட்க வேண்டும் (தீர்க்கதரிசிகள் எனது ஊழியக்காரர்கள்). நான் தீர்க்கதரிசிகளை மீண்டும் மீண்டும் உங்களிடம் அனுப்பியிருக்கிறேன். ஆனால் நீங்கள் அவர்களை கவனிக்கவில்லை. 6 நீங்கள் எனக்குக் கீழ்ப்படியாவிட்டால், பிறகு நான் எருசலேமிலுள்ள என் ஆலயத்தை, சீலோவிலுள்ள எனது பரிசுத்தக் கூடாரத்தைப் போன்றுச் செய்வேன். உலகம் முழுவதிலும் உள்ள ஜனங்கள், மற்ற நகரங்களுக்குக் கேடுகள் ஏற்படும்படி வேண்டும்போது எருசலேமை நினைத்துக்கொள்வார்கள்’” என்றார்.
7 ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் மற்றும் அனைத்து ஜனங்களும் எரேமியா கர்த்தருடைய ஆலயத்தில் இவ்வார்த்தைகளைச் சொல்வதைக் கேட்டனர். 8 கர்த்தர் கட்டளை இட்டிருந்தபடி ஜனங்களிடம் சொல்ல வேண்டியவற்றையெல்லாம் எரேமியா சொல்லிமுடித்தான். பிறகு ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் அனைத்து ஜனங்களும் எரேமியாவைப் பிடித்தனர். அவர்கள் “இத்தகைய பயங்கரமானவற்றை நீ சொன்னதற்காக மரிக்க வேண்டும்” என்றனர். 9 “கர்த்தருடைய நாமத்தால் இத்தகைய பயங்கரமானவற்றைச் சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும். இவ்வாலயம் சீலோவிலுள்ளதைப்போன்று அழிக்கப்படும் என்று சொல்ல எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும். இந்த ஜனங்களும் வாழாதபடி எருசலேம் வனாந்தரமாகிவிடும் என்று எப்படி தைரியமாக சொல்வாய்?” என்றனர். ஜனங்கள் எல்லோரும் கர்த்தருடைய ஆலயத்தில் எரேமியாவைச் சுற்றிக்கூடினார்கள்.
10 இங்கு நடந்த அனைத்தையும் யூதாவை ஆள்பவர்கள் கேள்விப்பட்டனர். எனவே, அவர்கள் அரசனின் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றனர். அங்கே அவர்கள் புதிய வாயிலின் முகப்பில் தங்கள் இடத்தில் அமர்ந்தனர். புதிய வாசல் கர்த்தருடைய ஆலயத்திற்குள் வழிநடத்தும் வாசல். 11 பிறகு ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் ஆள்வோர்களிடமும் ஜனங்களிடமும் பேசினார்கள். அவர்கள், “எரேமியா கொல்லப்படவேண்டும். அவன் எருசலேமைப்பற்றி கெட்டவற்றைக் கூறினான். அவன் சொன்னவற்றையெல்லாம் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்” என்றனர்.
12 பிறகு எரேமியா, யூதாவின் ஆள்வோர்களிடமும் மற்ற ஜனங்களிடமும் பேசினான். அவன், சொன்னான், “இவ்வாலயம் மற்றும் நகரைப்பற்றி இவற்றைச் சொல்ல என்னை கர்த்தர் அனுப்பினார். நீங்கள் கேட்ட அனைத்தும் கர்த்தரிடமிருந்து வந்தது. 13 ஜனங்களே, உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்! நல்லவற்றைச் செய்யத் தொடங்குங்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்தால், கர்த்தர் தமது மனதை மாற்றுவார். உங்களுக்குச் சொன்ன தீயச் செயல்களை கர்த்தர் செய்யமாட்டார். 14 என்னைப் பொறுத்தவரை, நான் உங்கள் அதிகாரத்தில் இருக்கிறேன். நீங்கள் உங்களுக்குத் தோன்றினபடி நல்லது என்று எதை எண்ணுகிறீர்களோ அதை எனக்குச் செய்யுங்கள். 15 ஆனால் நீங்கள் என்னைக் கொன்றால், ஒன்றை உறுதியாக வைத்துக்கொள்ளுங்கள். ஒரு அப்பாவி மனிதனைக் கொன்ற குற்றம் உங்களைச் சேரும். நீங்கள் இந்த நகரத்தையும் இதில் வாழும் ஜனங்களையும் குற்றமுடையவர்களாக ஆக்குகிறீர்கள். உண்மையாகவே கர்த்தர் என்னை உங்களிடம் அனுப்பினார். உண்மையாகவே நீங்கள் கேட்ட செய்திகள் எல்லாம் கர்த்தருடையவை.”
16 பிறகு, ஆள்வோர்களும் அனைத்து ஜனங்களும் பேசினார்கள். அந்த ஜனங்கள் ஆசாரியர்களிடமும் தீர்க்கதரிசிகளிடமும் பேசினார்கள். “எரேமியா கொல்லப்படக் கூடாது. எரேமியா சொன்னவை எல்லாம் நமது தேவனாகிய கர்த்தரிடமிருந்து வந்தது.”
17 பிறகு, சில மூப்பர்கள் (தலைவர்கள்) எழுந்து, அனைத்து ஜனங்களிடமும் பேசினார்கள். 18 அவர்கள், “மொரேசா நகரிலிருந்து மீகா என்னும் தீர்க்கதரிசி வந்தான். யூதாவின் அரசனாக எசேக்கியா இருந்த காலத்தில், மீகா தீர்க்கதரிசியாக இருந்தான். யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் மீகா இச்செய்திகளைக் கூறினான். ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“‘சீயோன் அழிக்கப்படும்.
அது உழப்பட்ட வயல்போன்று ஆகும்.
எருசலேம் பாறைகளின் குவியலாகும்.
ஆலயம் இருக்கிற குன்றானது புதர்கள் மூடின ஒரு காலி குன்றாகும்.’ (A)
19 “எசேக்கியா யூதாவின் அரசனாக இருந்தான். எசேக்கியா மீகாவைக் கொல்லவில்லை. யூதாவிலுள்ள எந்த ஜனங்களும் மீகாவைக் கொல்லவில்லை. எசேக்கியா கர்த்தரை மதித்தான் என்பது உங்களுக்குத் தெரியும். அவன் கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்ய விரும்பினான். யூதாவிற்குத் தீமை செய்வேன் என்று கர்த்தர் கூறியிருந்தார். ஆனால் எசேக்கியா கர்த்தரிடம் ஜெபித்தான். கர்த்தர் அவரது மனதை மாற்றிக்கொண்டார். கர்த்தர் அந்தத் தீமைகளைச் செய்யவில்லை. நாம் எரேமியாவைத் தாக்கினால் நமக்கு நாமே பல தொல்லைகளை வரவழைத்துக்கொண்டவர்களாவோம். அத்தொல்லைகளுக்கு நாமே காரணம் ஆவோம்.”
20 கடந்த காலத்தில், கர்த்தருடைய வார்த்தையைப் பிரச்சாரம் செய்ய இன்னொரு மனிதன் இருந்தான். அவனது பெயர் உரியா. அவன் செமாயாவின் மகன். உரியா கீரியாத்யாரீம் என்ற ஊரைச் சேர்ந்தவன். எரேமியா செய்ததுபோன்றே அவனும் இந்நகரத்திற்கும் தேசத்திற்கும் எதிராக தீர்க்கதரிசனம் கூறினான். 21 உரியா பிரச்சாரம் செய்வதை யோயாக்கீம் அரசனும் அவனது படை அதிகாரிகளும் யூதாவின் தலைவர்களும் கேட்டனர். அவர்கள் கோபம் கொண்டனர். யோயாக்கீம் அரசன் உரியாவைக் கொல்ல விரும்பினான். ஆனால் உரியா யோயாக்கீம் தன்னைக் கொல்ல விரும்புவதைப்பற்றி அறிந்தான். உரியா பயந்தான். எனவே எகிப்து நாட்டிற்குத் தப்பித்து ஓடினான். 22 ஆனால், யோயாக்கீம் அரசன் எகிப்துக்கு எல்நாத்தானையும் இன்னும் சிலரையும் அனுப்பினான். எல்நாத்தான் அக்போர் என்ற பெயர் உள்ளவனின் மகன். 23 அவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்தனர். பிறகு, அவர்கள் உரியாவை அரசன் யோயாக்கீமிடம் கொண்டுபோனார்கள். உரியா பட்டயத்தால் கொல்லப்படவேண்டும் என்று யோயாக்கீம் அரசன் கட்டளையிட்டான். உரியாவின் உடல் ஏழை ஜனங்கள் புதைக்கப்படுகிற சுடுகாட்டில் வீசப்பட்டது.
24 ஒரு முக்கியமான மனிதன் அகீக்காம் என்ற பெயருடன் இருந்தான். அவன் சாப்பானுடைய மகன். அகீக்காம் எரேமியாவிற்கு உதவியாக இருந்தான். ஆசாரியர்களாலும் தீர்க்கதரிசிகளாலும் எரேமியா கொல்லப்படாமல், அகீக்காம் அவனைக் காப்பாற்றினான்.
2008 by Bible League International