எரேமியா 11
Tamil Bible: Easy-to-Read Version
உடன்படிக்கை உடைக்கப்படுகிறது
11 எரேமியாவிற்கு வந்த கர்த்தருடைய வார்த்தை இதுதான். 2 “எரேமியா, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேள். யூதாவின் ஜனங்களிடம் இவற்றைப்பற்றி கூறு. எருசலேமில் வாழ்ந்துக்கொண்டிருக்கிற ஜனங்களிடம் இவற்றைப்பற்றி கூறு. 3 இதைத்தான், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: ‘இந்த உடன்படிக்கைக்கு அடிபணியாத எந்தவொரு நபருக்கும் கெட்டவை ஏற்படும். 4 நான் உங்கள் முற்பிதாக்களோடு செய்துக்கொண்ட உடன்படிக்கையைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். நான் அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தபோது அவர்களோடு இந்த உடன்படிக்கையைச் செய்துக்கொண்டேன். எகிப்து பல துன்பங்களுக்குரிய இடமாக இருந்தது. அது இரும்பை இளகச் செய்யும் அளவிற்கு சூடான வாணலியைப்போன்று இருந்தது.’ அந்த ஜனங்களிடம், ‘எனக்குக் கீழ்ப்படியுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்றவற்றைச் செய்யுங்கள். நீங்கள் இவற்றைச் செய்தால் நீங்கள் என்னுடைய ஜனங்களாகவும், நான் உங்களது தேவனாகவும் இருப்பேன்’ என்று சொன்னேன்.
5 “நான் உங்களது முற்பிதாக்களுக்குச் செய்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காகவே இதனைச் செய்தேன். மிகவும் செழிப்பான பாலும் தேனும் ஓடுகிற பூமியைத் தருவதாக நான் அவர்களுக்கு உறுதி செய்தேன். நீங்கள் இன்று அத்தகைய நாட்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள்.”
நான் (எரேமியா) “ஆமென் கர்த்தாவே” என்றேன்.
6 கர்த்தர் என்னிடம், “எரேமியா எருசலேமின் தெருக்களிலும், யூதாவின் நகரங்களிலும் இச்செய்தியைப் பிரச்சாரம் செய் என்று சொன்னார். அவர், ‘இந்த உடன்படிக்கையின் வார்த்தையை கவனியுங்கள். அதன் சட்டங்களுக்கு அடிபணியுங்கள். 7 உங்களது முற்பிதாக்களுக்கு நான் அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தபோது, ஒரு எச்சரிக்கைக் கொடுத்தேன். இந்நாள்வரை நான் அவர்களை மீண்டும், மீண்டும், எச்சரிக்கை செய்தேன், எனக்கு கீழ்ப்படியுமாறு நான் அவர்களுக்குச் சொன்னேன். 8 ஆனால் உங்களது முற்பிதாக்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் பிடிவாதமாக இருந்து அவர்களது தீயமனம் விரும்புகிறபடி செய்தனர். அவர்கள் எனக்கு அடிபணியாவிட்டால் கெட்டவை ஏற்படும், என்று உடன்படிக்கைக் கூறுகிறது, எனவே, நான் அவர்களுக்கு அனைத்து கெட்டவற்றையும் ஏற்படும்படிச் செய்கிறேன். உடன்படிக்கைக்குக் கீழ்ப்படியும்படி நான் அவர்களுக்கு கட்டளையிட்டேன். ஆனால் அவர்கள் செய்யவில்லை.’”
9 கர்த்தர் என்னிடம், “எரேமியா! யூதாவின் ஜனங்களும் எருசலேமில் வாழ்கிற ஜனங்களும் இரகசியமாக திட்டங்கள் போடுகிறார்கள் என்று தெரியும். 10 அந்த ஜனங்கள் தம் முற்பிதாக்கள் செய்த அதே பாவங்களைச் செய்கிறார்கள். அவர்களின் முற்பிதாக்கள் எனது செய்தியை கேட்க மறுத்தனர். அவர்கள் அந்நிய தெய்வங்களை தொழுதுகொள்ளவும், பின்பற்றவும் செய்தனர். நான் அவர்களது முற்பிதாக்களோடு செய்த உடன்படிக்கையை இஸ்ரவேலின் குடும்பத்தாரும், யூதாவின் குடும்பத்தாரும், உடைத்துவிட்டனர்” என்று கூறினார்.
11 எனவே கர்த்தர், “யூதாவின் ஜனங்களுக்கு விரைவில் பயங்கரமான சில காரியங்கள் ஏற்படும்படி செய்வேன். அவர்களால் அவற்றிலிருந்து தப்பிக்க முடியாது. அவர்கள் வருத்தப்படுவார்கள். அவர்கள் என்னிடம் உதவிக்காக அழுவார்கள். ஆனால் நான் அவர்களை கவனிக்கமாட்டேன். 12 யூதாவில் உள்ள ஜனங்களும், எருசலேமில் உள்ள ஜனங்களும், தங்கள் விக்கிரகங்களிடம் போய் உதவிக்காக ஜெபிப்பார்கள். அந்த விக்கிரகங்களுக்கு முன் நறுமணப் பொருட்களை எரிக்கின்றனர். அந்தப் பயங்கரமான காலம் வரும்போது அந்த விக்கிரகங்களால் யூதாவின் ஜனங்களுக்கு உதவி செய்யமுடியாது.
13 “யூதாவின் ஜனங்களே! உங்களிடம் ஏராளமான விக்கிரகங்கள் உள்ளன, யூதாவில் உள்ள நகரங்களைப் போன்றே, உங்களிடம் பல விக்கிரகங்கள் உள்ளன. பொய்யான பாகால் தெய்வத்திற்கு நீங்கள் பல பலிபீடங்களை தொழுதுகொள்வதற்காகக் கட்டியிருக்கிறீர்கள். அவை எருசலேமிலுள்ள, தெருக்களின் எண்ணிக்கைபோன்று, அதிக எண்ணிக்கையாக உள்ளன என்று சொல்லுகிறார்.
14 “எரேமியா, யூதாவின் இந்த ஜனங்களுக்காக நீ ஜெபம் செய்யவேண்டாம். அவர்களுக்காக கெஞ்சவேண்டாம். அவர்களுக்காக ஜெபம் செய்யவேண்டாம். நான் கேட்கமாட்டேன். அந்த ஜனங்கள் துன்பப்படத் தொடங்குவார்கள். பிறகு அவர்கள் என்னை உதவிக்காக அழைப்பார்கள். ஆனால் நான் அவர்களை கவனிக்கமாட்டேன்.
15 “ஏன் எனது பிரியமானவள் (யூதா) எனது வீட்டில் (ஆலயத்தில்) இருக்கிறாள்?
அங்கே இருக்க அவளுக்கு உரிமை இல்லை.
அவள் பல தீய செயல்களைச் செய்திருக்கிறாள்.
யூதாவே, சிறப்பான வாக்குறுதிகளும் மிருகபலிகளும் உன்னை அழிவிலிருந்து காப்பாற்றும் என்று நினைக்கிறாயா?
எனக்குப் பலிகள் கொடுப்பதன் மூலம் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறாயா?”
16 கர்த்தர் உனக்கு ஒரு பெயரைக் கொடுத்தார்.
உன்னை அழைத்து, “பசுமையான ஒலிவமரம்.
பார்க்க அழகானது” என்றார்.
ஆனால் ஒரு பெரும் புயலுடன், கர்த்தர் அந்த மரத்தை நெருப்பில் தள்ளிவிடுவார்.
அதன் கிளைகள் எரிக்கப்படும்.
17 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் உன்னை நட்டுவைத்தார். அழிவு உனக்கு வருமென்று அவர் சொன்னார். ஏனென்றால், இஸ்ரவேலின் குடும்பமும், யூதாவின் குடும்பமும், கெட்ட செயல்களைச் செய்திருக்கின்றன. அவர்கள் பாகலுக்குப் பலிகளைக் கொடுத்தனர் அது அவருக்குக் கோபத்தை உண்டுப்பண்ணியது!
எரேமியாவிற்கு எதிராக தீய திட்டங்கள்
18 ஆனதோத்திலுள்ள மனிதர்கள் எனக்கு எதிராக திட்டங்கள் போடுவதை, கர்த்தர் எனக்குக் காட்டினார். அவர்கள் செய்துகொண்டிருந்த செயல்களை எனக்கு கர்த்தர் காட்டினார். எனவே நான், அவர்கள் எனக்கு எதிரானவர்கள் என்பதை அறிந்தேன். 19 அந்த ஜனங்கள் எனக்கு எதிராக இருந்தார்கள் என்று கர்த்தர் எனக்குக் காட்டுமுன் நான் அடிக்கப்படுவதற்காகக் கொண்டுப்போகப்படும் சாதுவான ஆட்டுக் குட்டியைப்போன்று இருந்தேன். அவர்கள் எனக்கு எதிரானவர்கள் என்பதை அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் என்னைப்பற்றி இவற்றைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள், “இந்த மரத்தையும், அதன் கனிகளையும் அழித்து, அவனைக் கொல்லலாம் வாருங்கள். பிறகு ஜனங்கள் அவனை மறப்பார்கள்.” 20 ஆனால் கர்த்தாவே! நீர் நியாயமான நீதிபதி, மனிதர்களின் மனதையும், இதயத்தையும், எப்படி சோதிக்க வேண்டும் என்பதை அறிவீர். என்னுடைய வாதங்களை நான் உமக்குச் சொல்வேன். நான் அவர்களுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுக்கும்படி உம்மை அனுமதிப்பேன்.
21 ஆனதோத்திலுள்ள மனிதர்கள் எரேமியாவைக் கொல்லத் திட்டம் போட்டனர். அந்த மனிதர்கள் எரேமியாவிடம் சொன்னார்கள், “கர்த்தருடைய நாமத்தால் தீர்க்கதரிசனம் சொல்லாதே. அல்லது நாங்கள் உன்னைக் கொல்வோம்” ஆனதோத்திலிருக்கும், மனிதர்களைப்பற்றி கர்த்தர் ஒரு முடிவு செய்தார். 22 சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “ஆனதோத்திலுள்ள மனிதர்களை நான் விரைவில் தண்டிப்பேன். அவர்களின் இளைஞர்கள் போரில் மரிப்பார்கள். அவர்களது மகன்களும் மகள்களும் பசியில் மரிப்பார்கள். 23 ஆனதோத் நகரத்தில் உள்ள எவரும் விடப்படுவதில்லை. எவரும் உயிர் வாழமாட்டார்கள். நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களுக்குத் தீயவை நேரும்படி நான் காரணமாவேன்” என்றார்.
2008 by Bible League International