எண்ணாகமம் 22
Tamil Bible: Easy-to-Read Version
பிலேயாமும் மோவாபின் அரசனும்
22 பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் மோவாபிலுள்ள யோர்தான் பள்ளத்தாக்குக்குப் பயணம் செய்தனர். எரிகோவின் அருகிலுள்ள யோர்தானுக்கு இக்கரையில் தங்கள் முகாம்களை அமைத்தனர்.
2-3 சிப்போரின் மகனான பாலாக் எமோரியர்களுக்கு இஸ்ரவேல் ஜனங்கள் செய்த எல்லாவற்றையும் அறிந்திருந்தான். அதினால் மோவாபின் அரசன் மிகவும் பயந்தான். ஏனென்றால் இஸ்ரவேலரின் எண்ணிக்கை மிகுதியானது. மோவாப் உண்மையில் கலங்கிப்போனான்.
4 மீதியானின் தலைவர்களிடம் மோவாபின் அரசன், “பசுவானது ஒரு நிலத்தின் புல்லை மேய்ந்துபோடுவது போல, இஸ்ரவேல் ஜனங்களின் கூட்டம் நம்மைச் சுற்றிலும் உள்ளவற்றை அழித்துப்போடும்” என்றான்.
அந்த நேரத்தில் சிப்போரின் மகனான பாலாக் மோவாபின் அரசனாக இருந்தான். 5 அவன் பேயோரின் மகனான பிலேயாமை அழைத்துவர சிலரை அனுப்பினான். பிலேயாம் ஐபிராத்து ஆற்றின் அருகிலுள்ள பெத்தூரில் இருந்தான். அவனது ஜனங்களும் அங்கேயே வாழ்ந்தனர். பாலாக்,
“எகிப்திலிருந்து புதிய ஜனங்கள் கூட்டம் வந்திருக்கிறது. முழு நாட்டையும் ஆக்கிரமித்துக்கொள்வது போன்று அவர்கள் எண்ணிக்கையில் மிகுதியாக இருக்கின்றனர். எங்களை அடுத்து அவர்கள் கூடாரங்களை அமைத்துக்கொண்டு முகாமிட்டிருக்கிறார்கள். 6 நீ வந்து எனக்கு உதவிசெய். எங்களைவிட அவர்கள் பலமிக்கவர்களாக உள்ளனர். உனக்குப் பெரும் வல்லமை உண்டு என்பதை நான் அறிவேன். நீ ஒருவனை ஆசீர்வதித்தால் அவனுக்கு நன்மைகள் ஏற்படும். நீ ஒருவனுக்கு எதிராகப் பேசினால் அவனுக்குத் தீமை ஏற்படும். எனவே நீ வந்து அவர்களுக்கு எதிராகப் பேசு. ஒரு வேளை அதனால் நான் இவர்களைத் தோற்கடித்துவிடலாம். பின் அவர்களை இந்நாட்டைவிட்டுத் துரத்திவிடலாம்” என்று செய்தி அனுப்பினான்.
7 மோவாப் மற்றும் மீதியானின் மூப்பர்கள் பிலேயாமிடம் பேசச் சென்றார்கள். அவனது சேவைக்குப் பரிசுக் கொடுக்கப் பணமும் கொண்டு சென்றார்கள். அவர்கள் அங்கு பாலாக் சொன்னதைச் சொன்னார்கள்.
8 பிலேயாம் அவர்களிடம், “இரவு இங்கே தங்கியிருங்கள். நான் கர்த்தரோடு பேசி அவர் எனக்குச் சொல்லும் பதிலைக் கூறுவேன்” என்றான். எனவே அன்று இரவு மோவாபின் தலைவர்கள் பிலேயாமோடு அங்கே தங்கியிருந்தனர்.
9 தேவன் வந்து பிலேயாமிடம், “உன்னோடு இருக்கும் இவர்கள் யார்?” என்று கேட்டார்.
10 தேவனிடம் பிலேயாம், “இவர்கள் மோவாபின் அரசனும் சிப்போரின் மகனுமான பாலாக் அனுப்பிய தலைவர்கள். அவன் ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறான். 11 எகிப்திலிருந்து ஒரு புது ஜனங்கள் கூட்டம் இங்கே வந்திருக்கிறது. அவர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு முழுவதும் நிறைந்துவிட்டனர். அவர்களுக்கு எதிராக நீ வந்து பேசவேண்டும். பிறகு என்னால் அவர்களோடுச் சண்டையிட்டு அவர்களைத் தோற்கடித்து விரட்ட முடியும் என்று கருதுகிறான்” என்றான்.
12 ஆனால் தேவன் பிலேயாமிடம், “அவர்களோடு போக வேண்டாம். அந்த ஜனங்களுக்கு எதிராகப் பேசவேண்டாம். அவர்கள் எனது ஜனங்கள்” என்று கூறினார்.
13 மறுநாள் காலையில் எழுந்து பிலேயாம், பாலக்கின் தலைவர்களிடம், “உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள். உங்களோடு வர கர்த்தர் என்னை அனுமதிக்கவில்லை” என்றான்.
14 எனவே மோவாபின் தலைவர்கள் பாலாக்கிடம் திரும்பினார்கள், “எங்களோடு வர பிலேயாம் மறுத்துவிட்டான்” என்றனர்.
15 எனவே பாலாக் வேறு சில தலைவர்களை பிலேயாமிடம் அனுப்பினான். இந்த முறை அவன் போன முறையைவிட மிகுதியான ஆட்களை அனுப்பினான். இவர்கள் முன்பு சென்றவர்களைவிட முக்கியமானவர்கள். 16 இவர்கள் பிலேயாமிடம் போய், “சிப்போரின் மகனான பாலாக் சொன்னது இதுதான்: நீர் எங்களிடம் வர தடைப்பட வேண்டாம். 17 நான் கேட்டுக்கொண்டபடி நீ செய்தால் உனக்கு மிகுதியாகப் பணம் கொடுப்பேன். எனக்காக இங்கு வந்து இந்த ஜனங்களுக்கு எதிராகப் பேசு” என்று சொல்லச் சொன்னார் என்றனர்.
18 பிலேயாம் பாலாக்கின் அதிகாரிகளிடம், “என் தேவனாகிய கர்த்தருக்கு நான் அடிபணிய வேண்டும். அவரது ஆணைக்கு எதிராக நான் எதையும் செய்ய முடியாது. சிறியதோ பெரியதோ கர்த்தருடைய ஆணையில்லாமல் நான் எதையும் செய்யமாட்டேன். பாலாக் அரசன் ஒரு அழகான மாளிகையுடன் தங்கமும் வெள்ளியும் நிறைத்துக் கொடுப்பதாக இருந்தாலும் கர்த்தருடைய கட்டளைக்கு எதிராக நான் ஒன்றும் செய்யமாட்டேன். 19 ஆனாலும் நீங்களும் இன்று இரவு இங்கே தங்குங்கள்; இரவு நேரத்தில் கர்த்தர் என்ன சொல்கிறார் என்பதையும் அறிந்துகொள்வேன்” என்றான்.
20 அன்று இரவு தேவன் பிலேயாமை நோக்கி, “மீண்டும் தங்களோடு வரும்படி உன்னை அழைக்க அந்த மனிதர்கள் வந்திருக்கிறார்கள். நீ அவர்களோடு போகலாம். ஆனால் நான் சொல்வதை மட்டுமே நீ செய்ய வேண்டும்” என்றார்.
பிலேயாமும் அவனது கழுதையும்
21 மறுநாள் காலை பிலேயாம் எழுந்து தன் கழுதையைத் தயார் செய்துகொண்டு மோவாபின் தலைவர்களோடு சென்றான். 22 பிலேயாம் தனது கழுதைமேல் சவாரி செய்தான். அவனோடு இரு வேலைக்காரர்களும் இருந்தனர். பிலேயாம் பயணம் செய்யும்போது, தேவன் கோபங்கொண்டார். எனவே கர்த்தருடைய தூதன் சாலையில் பிலேயாமின் முன்னால் நின்றான். தேவதூதன் பிலேயாமைத் தடுத்து நிறுத்தப் போனான்.
23 பிலேயாமின் கழுதை கர்த்தருடைய தூதன் சாலையில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தது. அத்தேவதூதன் தன் கையில் வாள் ஒன்றை வைத்திருந்தான். எனவே கழுதை சாலையிலிருந்து திரும்பி வயலில் இறங்கியது. பிலேயாமால் தேவதூதனைக் காணமுடியவில்லை; எனவே அவன் கழுதை மீது மிகுந்த கோபங்கொண்டான். அவன் கழுதையை அடித்து சாலைக்குத் திரும்புமாறு கட்டாயப்படுத்தினான்.
24 பிறகு கர்த்தருடைய தூதன் சாலை குறுகலாகும் இடத்தில் நின்றான். இது இரண்டு திராட்சைத் தோட்டங்களுக்கு நடுவே உள்ள இடம். சாலையின் இரு பக்கங்களிலும் சுவர்கள் இருந்தன. 25 மீண்டும் அந்தக் கழுதை கர்த்தருடைய தூதனைப் பார்த்தது. எனவே ஒரு சுவரை ஒட்டி நெருக்கமாகச் சென்றது. இதனால் பிலேயாமின் கால் சுவரோடு தேய்த்து உரசியது. ஆகையால் பிலேயாம் மீண்டும் கழுதையை அடித்தான்.
26 பிறகு கர்த்தருடைய தூதன் இன்னொரு இடத்தில் நின்றான். இது சாலை குறுகலாகும் இன்னொரு இடம். தேவதூதனைச் சுற்றிக்கொண்டு செல்ல சாலையில் போதுமான இடம் இல்லை. அந்தக் கழுதையால் இடது பக்கமோ வலது பக்கமோ திரும்ப முடியவில்லை. 27 கழுதை கர்த்தருடைய தூதனைப் பார்த்தது. எனவே, கழுதை பிலேயாம் தன்மேல் இருக்கும்போதே தரையில் படுத்துவிட்டது. இதனால் பிலேயாமுக்கு கழுதை மேல் மிகுந்த கோபம் வந்தது. எனவே அதனைத் தனது கைத்தடியால் அடித்தான்.
28 பிறகு கர்த்தர் கழுதையைப் பேசுமாறு செய்தார். அது பிலேயாமிடம், “என் மீது ஏன் கோபம் கொள்கிறீர்! நான் உமக்கு என்ன செய்துவிட்டேன்? என்னை மூன்று முறை அடித்துவிட்டீரே!” என்றது.
29 பிலேயாம் கழுதையிடம், “என்னை நீ முட்டாளாக்குகின்றாய். இப்போது என் கையில் ஒரு வாள் இருந்தால் இந்த வேளையிலேயே உன்னைக் கொன்றுவிடுவேன்!” என்று பதில் சொன்னான்.
30 ஆனால் கழுதையோ பிலேயாமிடம், “பாரும்! நான் உமக்குச் சொந்தமான கழுதை! பல ஆண்டுகளாக என்மீது சவாரிசெய்து வருகிறீர். நான் இதற்கு முன்னால் இதுபோல் நடந்துகொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியும்!” என்றது.
இதற்குப் பிலேயாம், “இது உண்மைதான்” என்றான்.
31 பிறகு தேவன் பிலேயாமின் கண்களைத் திறந்து தூதனைப் பார்க்கும்படிச் செய்தார். கர்த்தருடைய தூதன் சாலையின் மேல் நின்றுகொண்டிருந்தான். அவன் தனது கையில் வாளை ஏந்தியிருந்தான். பிலேயாம் தரையில் பணிந்து வணங்கினான்.
32 பிறகு கர்த்தருடைய தூதன் பிலேயாமிடம், “ஏன் மூன்று முறை கழுதையை அடித்தாய்? நான்தான் உன்னைத் தடுத்து நிறுத்துவதற்காக வந்தேன். ஏனெனில் எனக்கு முன்பாக உனது போக்கு சீர்கெட்டதாய் இருக்கிறது. 33 ஆனால் சரியான நேரத்தில் கழுதை என்னைப் பார்த்து என்னிடமிருந்து திரும்பிவிட்டது. இது மூன்றுமுறை நடைபெற்றது. கழுதை அவ்வாறு திரும்பாமல் இருந்திருந்தால் நான் அப்பொழுதே உன்னைக் கொன்றிருப்பேன். நான் உன் கழுதையை உயிர் பிழைக்க வைத்திருப்பேன்” என்றார்.
34 பிறகு பிலேயாம் கர்த்தருடைய தூதனிடம், “நான் பாவம் செய்திருக்கிறேன். நீர் சாலையில் நின்றுக்கொண்டிருந்ததை நான் அறிந்துகொள்ளவில்லை. நான் குற்றம் செய்திருந்தால் நான் திரும்பி வீட்டிற்குப் போகிறேன்” என்றான்.
35 பிறகு கர்த்தருடைய தூதன் பிலேயாமிடம், “இல்லை! நீ இந்த மனிதர்களோடு செல்லலாம். ஆனால் கவனமாக இரு. நான் எதைச் சொல்லச் சொல்லுகிறேனோ அதையே சொல்லவேண்டும்” என்றார். எனவே பிலேயாம் பாலாக் அனுப்பிய மனிதர்களோடு சென்றான்.
36 பிலேயாம் வருவதைப் பற்றி பாலாக் கேள்விப்பட்டான். எனவே பாலாக் அவனைச் சந்திப்பதற்குப் புறப்பட்டு ஆர்னோன் ஆற்றின் அருகிலுள்ள மோவாப்பின் நகரத்திற்குப் போனான். இது நாட்டின் வட எல்லையில் இருந்தது. 37 பாலாக் பிலேயாமை பார்த்தான். அவன் இவனிடம், “நான் வரச்சொல்லி முன்பே கேட்டேனே. அப்போது ஏன் வரவில்லை? இது மிக மிக முக்கியமானது என்று சொல்லி இருந்தேன். நீர் ஏன் என்னிடம் வரவில்லை? நான் உமக்கு மரியாதைத் தராமல் போய்விடுவேனா?” என்றான்.
38 பிலேயாம் அவனிடம் “நான் இப்போது இங்கே இருக்கிறேன். ஆனால் நீர் கேட்டபடி என்னால் உதவ முடியாமல் போகலாம். தேவனாகிய கர்த்தர் என்னிடம் எதைச் சொல்லச் சொல்கிறாரோ அதனையே நான் சொல்வேன்” என்றான்.
39 பிலேயாம் பாலாக்குடன் கீரியாத் ஊசோத்திற்குச் சென்றான். 40 பாலாக் சில ஆடுகளையும் மாடுகளையும் பலியாகக் கொடுத்தான். அவன் கொஞ்சம் இறைச்சியைப் பிலேயாமுக்கும் தன்னோடு இருந்த சில தலைவர்களுக்கும் கொடுத்தான்.
41 மறுநாள் காலையில் பாலாக் பிலேயாமை பமோத்பால் நகரத்தின் மேடுகளுக்கு அழைத்துச் சென்றான். அங்கிருந்து இஸ்ரவேல் பாளையங்களின் ஒரு பகுதியை அவர்களால் காண முடிந்தது.
2008 by Bible League International