உபாகமம் 8
Tamil Bible: Easy-to-Read Version
கர்த்தரை நினை
8 “நான் இன்று கொடுக்கின்ற எல்லாக் கட்டளைகளையும் நீங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். ஏனென்றால், அப்போதுதான் நீங்கள் வாழ்ந்து வளர்ந்து உயர்ந்ததொரு சமுதாயமாக வரமுடியும். கர்த்தர் உங்கள் முற்பிதாக்களிடம் சொன்னதுபோல் நீங்கள் சுதந்திரமான தேசத்தைப் பெறமுடியும். 2 இந்தப் பாலைவனத்தில் கடந்துவந்த 40 ஆண்டு காலத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை நடத்தி வந்த எல்லா வழிகளையும் பற்றி நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். கர்த்தர் உங்களை சோதித்துக்கொண்டிருந்தார். உங்களைத் தாழ்மையானவர்களாக்க அவர் விரும்பினார். உங்கள் மனதில் உள்ள எண்ணங்களை அறிய அவர் ஆசைப்பட்டார். அவரது கட்டளைகளை நீங்கள் ஒழுங்காகப் பின்பற்றுகிறீர்களா என்பதை அவர் அறிய விரும்பினார். 3 கர்த்தர் உங்களைத் தாழ்மையாக்கி உங்களைப் பசியால் வருத்தி, பின் நீங்களும் உங்கள் முற்பிதாக்களும் இதுவரை பார்க்காத, “மன்னா” என்னும் உணவை உண்ணச் செய்தார். தேவன் ஏன் இப்படிச் செய்தார்? ஏனென்றால் மனிதன் வெறும் அப்பத்தைத் தின்பதால் மட்டும் உயிர்வாழ்ந்திட முடியாது. அவர்கள் கர்த்தர் கூறியதைக் கேட்பதினாலேயே வாழலாம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என தேவன் விரும்பினார். 4 கடந்த 40 ஆண்டுகளில் உங்களது ஆடைகள் பழைமையடைந்து போகவிடவில்லை. உங்களது கால்கள் வீக்கமடைந்துவிடவில்லை. (ஏனென்றால் கர்த்தர் உங்களைப் பாதுகாத்தார்.) 5 உங்களுக்காக உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்த எல்லாவற்றையும் நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். ஒரு தந்தை தன் மகனுக்கு கற்றுக்கொடுத்து அவனைத் திருத்துவதுபோல் தேவன் உங்களுக்கு விளக்கினார்.
6 “அத்தகைய உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். அவற்றைப் பின்பற்றி அவரை மதிக்கவேண்டும். 7 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஒரு நல்ல தேசத்திலே வசிக்க அழைத்துக்கொண்டு வருகிறார். அங்கு பள்ளத்தாக்குகளிலிருந்தும் மலைகளிலிருந்தும் புறப்படுகின்ற ஆறுகளும், ஊற்றுகளும், ஏரிகளும் தண்ணீர்வளம் நிறைந்தது. 8 அந்த நிலம் கோதுமையையும், பார்லியையும், திராட்சைக் கொடிகளையும், அத்தி மரங்களையும், மாதுளஞ் செடிகளையும் விளைவிக்கும் வளமான நிலம். அது ஒலிவ மரங்களையும், எண்ணெய், தேன் ஆகியவற்றையும் கொடுக்கவல்ல நிலமாகும். 9 அங்கே நீங்கள் தாராளமாக உண்டு வாழலாம். உங்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் கிடைக்கும். அது, பாறைகள் இரும்பாக இருக்கும் தேசமாக உள்ளது. அங்குள்ள மலைகளிலிருந்து செம்பு உலோகத்தை நீங்கள் வெட்டி எடுக்கலாம், 10 அங்கு நீங்கள் உண்ண விரும்புகின்ற எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். இத்தகைய வளம் நிறைந்த, நீங்கள் திருப்தியுடன் மகிழ்வாய் வாழக் கூடிய இந்த நிலத்தை உங்களுக்குத் தந்த உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் பாராட்டிப் போற்றுவீர்கள்.
கர்த்தர் செய்தவற்றை மறந்துவிடாதே
11 “எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் மறந்துவிடாதீர்கள்! கவனமாக இருங்கள். நான் இன்று உங்களுக்குத் தந்த தேவனது கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும், கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். 12 பின், நீங்கள் தாராளமான திருப்தியான உணவை உண்ணலாம். வசதியான வீடுகளை நீங்கள் கட்டி அவைகளை அனுபவித்து வாழலாம். 13 உங்களது ஆடு, மாடு, வெள்ளாடுகள் பெருகி வளார்ச்சியடையும். பொன்னும், வெள்ளியும் மிகுதியாகப் பெறலாம். நீங்கள் எல்லாவற்றையும் தாராளமாக அடையலாம்! 14 இவற்றையெல்லாம் அனுபவிக்கும்போது நீங்கள் கர்வம் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது, நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். ஆனால் கர்த்தர் உங்களை விடுவித்து அங்கிருந்து வெளியேற்றி இங்கு அழைத்து வந்தார். 15 மிகப்பெரிய பயங்கரமான பாலைவனத்தின் வழியாகக் கொள்ளிவாய் பாம்புகளும், கொடிய தேள்களும் நிறைந்த அந்தப் பாலைவனத்தில் வறண்ட நிலமாகத் தண்ணீரே இல்லாத கொடிய பாலைவனமாக இருந்தது. ஆனால், கர்த்தர் அங்கே பாறைகளுக்கு அப்பால் இருந்து உங்களுக்குத் தண்ணீரைத் தந்தார். 16 அந்தப் பாலைவனத்தில் உங்கள் முற்பிதாக்களும் பார்த்திராத ‘மன்னா’ என்னும் உணவை உங்களுக்கு உண்ணக் கொடுத்தார். கர்த்தர் உங்களைச் சோதித்தார். ஏன்? ஏனென்றால், முடிவில் எல்லாம் உங்களுக்கு நன்றாய் நடக்கும்படிக்கு தேவன் உங்களைப் பணியச் செய்தார். 17 ‘எனது சொந்த ஆற்றலினாலும், திறமையினாலுமே எல்லா வகையான இந்த வசதிகளைப் பெற்றேன்’ என்று ஒருநாளும் உனக்குள் சொல்லிவிடாதே. எச்சரிக்கையாய் இரு! 18 உங்கள் தேவனாகிய கர்த்தரையே நினைப்பீர்களாக! அவரே உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தமது உடன்படிக்கையை நிறைவேற்றும் பொருட்டு, இந்நாளில் உங்களுக்கு இருக்கின்றச் செல்வங்களை, நீங்கள் ஏற்படுத்திக்கொள்வதற்கான ஆற்றலைத் தந்தார்.
19 “உங்கள் தேவனாகிய கர்த்தரை என்றைக்கும் மறந்துவிடாதீர்கள். மற்ற பொய்த் தெய்வங்களை ஒருபோதும் பின்பற்றிவிடாதீர்கள். அவற்றைத் தொழுதுகொள்ளவோ, சேவிக்கவோ வேண்டாம். நீங்கள் அவ்வாறு செய்தால் நான் இன்று உங்களை எச்சரிக்கின்றேன், நீங்கள் கண்டிப்பாக அழிந்துவிடுவீர்கள்! 20 கர்த்தர் உங்களுக்காக உங்கள் எதிரிகளை அழித்தார். ஆனால் நீங்களோ அவர்களின் பிற பொய்த் தெய்வங்களைப் பின்பற்றினால், உங்களையும் அவர்களைப் போன்றே அழித்துவிடுவார். ஏனென்றால் நீங்கள் தேவனாகிய கர்த்தருக்கு செவிகொடுப்பதை நிறுத்திவிட்டீர்கள்!
2008 by Bible League International