Add parallel Print Page Options

16 கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களில் 70 முதிய தலைவர்களை என்னிடம் அழைத்து வா. இவர்கள் இஸ்ரவேலர்களின் தலைவர்களாயிருக்கிறார்கள். அவர்களை ஆசரிப்புக் கூடாரத்திற்குள் அழைத்து வா. அவர்கள் உன்னோடு நிற்கட்டும். 17 பிறகு நான் இறங்கி வந்து உன்னோடு பேசுவேன். இப்போது ஆவியானவர் உன்மேல் உள்ளார். ஆனால் அவர்களுக்கும் ஆவியை அளிப்பேன். பிறகு இந்த ஜனங்களைக் கவனித்துக்கொள்கிற பொறுப்பில் அவர்கள் உனக்கு உதவுவார்கள். இவ்வகையில் நீ மட்டும் தனியாக இவர்களுக்கான பொறுப்பை ஏற்க வேண்டியதிருக்காது.”

18 “இவற்றை ஜனங்களிடம் கூறு: நாளைக்காக உன்னைத் தயார் செய்துகொள்! நாளை நீங்கள் இறைச்சி உண்பீர்கள். நீங்கள் முறையிட்டபோது கர்த்தர் அதனைக் கேட்டார். ‘எங்களுக்கு உண்ண இறைச்சி வேண்டும், எகிப்து எங்களுக்கு நன்றாக இருந்தது!’ என்று நீங்கள் சொன்ன சொற்களை கர்த்தர் கேட்டார். எனவே, இப்போது கர்த்தர் உங்களுக்கு இறைச்சியைக் கொடுப்பார். 19 நீங்கள் ஒரு நாள் அல்லது, இரு நாள் அல்லது, ஐந்து நாள் அல்லது, பத்து நாள் அல்லது, இருபது நாட்களுக்கு மேலாக இறைச்சியை உண்பீர்கள்! 20 நீங்கள் இந்த மாதம் முழுவதும்கூட இறைச்சியை உண்பீர்கள். அது உங்களுக்குத் திகட்டும்வரைக்கும் உண்பீர்கள். நீங்கள் கர்த்தருக்கு எதிராக முறையிட்டதினால் இது உங்களுக்கு ஏற்படும். கர்த்தர் உங்களோடு வாழ்கிறார். உங்களது தேவைகளை அவர் அறிவார். ஆனால் நீங்கள் அழுதீர்கள்! அவரிடம் முறையிட்டீர்கள். நாங்கள் எகிப்தை விட்டு ஏன் வந்தோம்? என்று கூறுகிறீர்கள்” என்றார்.

21 மோசே, “கர்த்தாவே இங்கே 6,00,000 மனிதர்கள் உள்ளனர். ஆனால் நீர் ‘இவர்கள் ஒரு மாதத்திற்குப் போதுமானபடி உண்ண இறைச்சியைக் கொடுப்பேன்’ என்று கூறுகிறீர். 22 நாம் இங்குள்ள அத்தனை ஆடுகளையும், மாடுகளையும் கொன்றாலும் கூட அது போதுமானதாக இராது. கடலில் உள்ள அத்தனை மீன்களையும் பிடித்தாலும்கூட அவை போதுமானதாக இராது” என்றான்.

23 ஆனால் கர்த்தர் மோசேயிடம், “கர்த்தருடைய வல்லமையைக் குறைவாக எடை போடாதே! நான் சொன்னபடி என்னால் செய்யமுடியுமா? என்பதை இப்போது காண்பாய்” என்றார்.

24 எனவே, ஜனங்களோடு பேச மோசே வெளியே சென்றான். கர்த்தர் சொன்னவற்றையெல்லாம் மோசே ஜனங்களிடம் கூறினான். பின் 70 முதிய இஸ்ரவேல் தலைவர்களைக் கூட்டி அழைத்து வந்தான். ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றி நிற்குமாறு அவர்களிடம் கூறினான். 25 பிறகு கர்த்தர் மேகத்தில் இறங்கி வந்து மோசேயோடு பேசினார். மோசேயின் மேல் ஆவியானவர் இருந்தார். அதே ஆவியை 70 முதிய தலைவர்கள் மேலும் கர்த்தர் வைத்தார். அவர்கள்மேல் ஆவி வந்ததும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். ஆனால் அவர்கள் அந்த நேரத்தில் மட்டுமே அவ்வாறு நடந்துகொண்டனர்.

26 அப்போது எல்தாத், மேதாத் எனும் இரு முதிய தலைவர்கள் மட்டும் கூடாரத்திற்கு வெளியே போகவில்லை. அவர்களின் பெயர் முதிய தலைவர்களின் பட்டியலில் இருந்தது. எனினும் அவர்கள் கூடாரத்திற்குள்ளேயே இருந்துவிட்டனர். எனினும் அவர்கள் மீதும் ஆவி வந்தது. அவர்கள் கூடாரத்திற்குள்ளிருந்தே தீர்க்கதரிசனம் சொன்னார்கள். 27 ஒரு இளைஞன் மோசேயிடம் ஓடிப்போய், “எல்தாத்தும், மேதாத்தும் கூடாரத்திற்குள் தீர்க்கதரிசனம் கூறுகிறார்கள்” என்றான்.

28 நூனின் மகனாகிய யோசுவா மோசேயிடம், “மோசே ஐயா, நீங்கள் அவர்களைத் தடுக்கவேண்டும்” என்றான். (யோசுவா தன் சிறு வயதிலிருந்தே மோசேயிடம் உதவியாளனாக இருந்தான்.)

29 ஆனால் மோசே, “நான் இப்போது தலைவன் இல்லை என்று ஜனங்கள் நினைத்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறாயா? கர்த்தரின் ஜனங்கள் அனைவரும் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் என்று நான் விரும்புகிறேன்! அவர்கள் அனைவர் மேலும் கர்த்தர் தன் பரிசுத்த ஆவியை வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றான். 30 பிறகு மோசேயும் இஸ்ரவேல் தலைவர்களும் கூடாரத்திற்குள் சென்றனர்.

Read full chapter